Friday, July 10, 2009

தமிழகப் பயணம் 2009 பகுதி 1


ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழகப் பயணம். வாசிங்டன் டிசியிலிருந்து துபாய் சென்று, பின் அங்கிருந்து சென்னைக்கு மற்றொரு விமானம். பின் சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் செல்வதாகத் திட்டம். ஆனால் இது வழக்கமான மகிழ்ச்சிகரமானதொரு பயணம் அல்ல.

அப்பாவுக்கு கல்லீரலில்(liver) புற்று நோய். ஆறு மாதங்களே மருத்துவர் கொடுத்த கெடு! செய்தி இடியாய் வந்திறங்கிய அடுத்த வாரமே அடித்துப் பறந்துகொண்டு திருச்சி சென்றுவிட்டாள் அக்கா. ஆனால் நான் சற்று யோசிக்க வேண்டியிருந்தது.

திருமணமாகி பத்து ஆண்டுகள் கழித்து எனக்கு தாய்மைப் பருவம் அடையும் பாக்கியம் கிடைத்திருந்தது. இந்த நேரத்தில் நெடுந்தூர விமானப் பயணம் மேற்கொள்ளலாமா என்று மருத்துவரிடம் கேட்டபோது, 12 வாரங்களுக்கு மேல் செல்லலாம் என்றார். 14 வாரங்கள் வரை காத்திருந்து, நானும் விமானமேறி தமிழகத்திற்கு பயணமானேன்.

விமானத்தில் பொழுது போக புத்தகமோ மடிக்கணிணியோ தேவைப்படவில்லை. அப்பாவின் நினைவுகளே என்னை ஆட்கொண்டன.
நாமக்கல் அருகில் உள்ள காடிசெட்டிப்பட்டி என்கிற கிராமத்தில் ஒரு பெரிய வசதியான குடும்பத்தில் பிறந்த அப்பா, நினைத்திருந்தால் அப்படியே சொத்து பத்துடன் இருந்திருக்கலாம். ஆனால் படிக்கவேண்டும், வேலைக்குப் போகவேண்டும் என்கிற முடிவுடன் தாத்தாவின் விருப்பத்திற்கு எதிராக கிராமத்தை விட்டு வெளியே வந்து கல்லூரியில் சேர்ந்தார். அன்று மட்டும் அப்பா வெளியேறியிருக்கவில்லையென்றால், இன்று நான் ஏதாவது ஒரு கிராமத்தில் வாக்கப்பட்டு அரிசி இடித்துக்கொண்டிருந்திருப்பேன்! (அப்படி வாழும் பெண்கள் மற்றவர்களைவிட எந்த விதத்திலும் சளைத்தவர்களல்ல என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.).

என் வாழ்க்கையில் பொற்காலம் எது என்றால் அது என் பள்ளிப்பருவம் தான். அப்பாவின் அன்பிலும் கண்டிப்பிலும் நான் வளர்ந்த அந்த நாட்கள் இப்போது ஒரு சில புகைப்படங்களிலும் என் மனதின் ஒரு ஓரத்திலும் மட்டுமே சேகரிக்கப்பட்டிருக்கிறது. படிப்பில் என்றுமே அப்பா கண்டிப்பு காட்டியதில்லை, ஆனால் உயர்ந்த எண்ணங்களை என்னுள் விதைக்க முயற்சி செய்தார். நேரத்தின் முக்கியத்தை எனக்கு உணர்த்த படாத பாடு பட்டார். நான் 12ஆம் வகுப்பு முடித்தபின் கல்லூரி சேர்வதற்கு முன் சில மாதங்கள் வீட்டில் சும்மாதான் இருந்தேன். காலை வேகுநேரம் நான் தூங்குவதைப் பார்த்து அப்பா பதறுவார். நாள் முழுதும் வெட்டியாகவே பொழுதைக் கழிக்கும் என்னை என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பார். ஏதாவது தையல், கூடை பின்னுதல் போன்றவற்றைக் கற்றுகொள்ளேன் என்று கெஞ்சுவார். இதிலெல்லாம் எனக்கு சிறிதளவு கூட ஆர்வம் கிடையாது.

தட்டச்சு கற்றுக்கொள் என்று சொல்லி என்னை காலை 7 மணிக்கெல்லாம் எழுப்பி அவர் அறையில் உள்ள மேஜையின் மேல் இருந்த ஒரு பழைய Remington தட்டச்சு யந்திரத்தின் முன் உட்கார வைப்பார். நான் வேண்டா வெறுப்பாக தூக்கக் கலக்கத்துடன் "asdfgf ;lkjhj" என்று அடித்துக்கொண்டிருப்பேன். அப்பாமீது கோபமாக வரும். ஒரு மாதம் இப்படிச் சென்ற பிறகு, என்னை ஒரு டைப்பிங் இன்ஸ்டிட்யூட்டில் சேர்த்துவிட்டார். அது கல்லூரி வளாகம். சுற்றி டீ கடைகள். காலையில் மாணவர்களெல்லாம் அங்கே டீ குடித்துவிட்டு அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள். எனக்கு அங்கே செல்ல மிகவும் கூச்சமாக இருக்கும். விசில், கிண்டல் பேச்சுகள் இவற்றைத் தாண்டி நான் அங்கே சென்று ஒரு மாதம் தட்டச்சு பயின்று கொண்டிருந்தேன், அப்பாவைத் திட்டியபடியே. இன்று கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு 60 வார்த்தைகள் வரை என்னால் தட்டச்சு செய்ய முடியும். கணிணித் துறையில் இருக்கும் எனக்கு, இந்தத் திறமை ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. அதற்குக் காரணம் அன்று அப்பா அளித்த பயிற்சி தான்.

அப்பா ரொம்ப மிதமான மனிதர் என்றாலும், அவருக்குக் கோபம் வந்தால் கட்டுக்கடங்காமல் வரும். ஒரு முறை புது VCR ஒன்றை வாங்கி வந்தார். என்னை அழைத்து அதனை எப்படி தொலைக்காட்சியுடன் பொருத்தவேண்டும் என்று படித்து அதன்படி செய்யச் சொன்னார். நான் அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் அலட்சியமாக இருந்துவிட்டேன். இரண்டு நாட்கள் பார்த்தார். மூன்றாம் நாள் எனக்கு ஒரு 'டோஸ்' விட்டார் பாருங்கள், உடலெல்லாம் நடுங்கி தேம்பித் தேம்பி அழுது, அம்மா வந்து என்னை சமாதானம் செய்து... அன்று அப்பா அலுவலகத்திலிருந்து வருவதற்குள் அந்த VCRஐ சரியாகப் பொருத்திவிட்டு தான் மறுவேலை பார்த்தேன்.
மற்றொரு முறை, அப்பா அம்மா ஊரில் சில நாட்கள் இல்லாத சமையத்தில் அப்பாவின் அலுவலக ஊழியர் ஒருவர் எனக்கு முக்கியமான உதவிகள் சிலவற்றைச் செய்தார். அவர் ஒருமுறை வீட்டுக்கு வந்த போது, அப்பா என்னை அவரிடன் வந்து நன்றி சொல்லுமாறு சொன்னார். நான் 'நைட்டி' அனிந்திருந்ததால் வெளியே வரக் கூச்சப்பட்டுக்கொண்டு அப்புறமா அவரிடம் பேசிக்கொல்லலாம் என்று இருந்துவிட்டேன். அன்று இரவு உணவு சாப்பிட நான் மேசையில் அமர்ந்தபோது, அப்பா என் தட்டைத் தூக்கி வீசியெறிந்தார். "ஒருத்தருக்கு நன்றி சொல்லக்கூட உனக்கு மனம் வரவில்லை, இல்லையா?" என்று கேட்டார். நான் என் தவறை உணர்ந்து கூனிக்குறுகிப்போனேன்.
இவையெல்லாம் சிறிய உதாரணங்கள் தான். இதுபோல், எனக்குப் பிடிக்காமலேயே, எனக்குத் தெரியாமலேயே அப்பா என்னுள் விதைத்த வாழ்க்கைக்கு அவசியமான திறமைகளும், நல்லெண்ணங்களும் பல. அவை எல்லாவற்றின் பலனையும் நான் பின்னால் தான் புரிந்துகொண்டு அனுபவிக்கின்றேன்.

இப்படி அப்பாவைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கும் போதே, துபாய் நகரம் நெருங்கிவிட்டதாக விமானத்தில் அறிவிப்பு வந்தது. ஆர்வத்துடன் சன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல் மேடுகள். பாலைவனங்களை நான் சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன். இதுவே நேரில் பார்ப்பது முதன் முறை. மணல் பரப்பின் நடுவே திடீரென்று ஒரு கட்டிடக் குவியலாகத் தென்பட்டது துபாய் நகரம்.விமான நிலையமே ஒரு நகரம் பொல் தான் இருந்தது. வாசிங்டன் டல்லஸ் விமான நிலையத்தை விட பத்து மடங்காவது பெரியதாக இருக்கும்! நான் வந்திறங்கிய இடத்தில் இருந்து சென்னை செல்லும் எமிரேட்ஸ்(Emirates) விமானம் நிற்கும் இடத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு மைல் நடக்கவேண்டியிருந்தது. நடை பாதையின் நடுவே வரிசையாக பனை மரங்கள். அவை இயற்கையானவையா செயற்கையானவையா என்பதை கவனிக்கத் தவறிவிட்டேன். இரு புறங்களிலும் 'duty free' கடைகள். மேலும், Dunkin Donuts, Cosi, Burger King, Starbucks, McDonalds போன்ற உணவகங்களெல்லாம் இருந்தன. துபாய் விமான நிலையத்தில் வேலைப்பார்ப்பவர்கள் பெரும்பாலானோர் மலையாளிகள் மற்றும் தமிழர்கள்.

ஒரு மணி நேர காத்திருத்தலுக்குப் பின் எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை நோக்கிப் பயணம். மீண்டும் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன...


தொடரும்...

9 comments:

வடுவூர் குமார் said...

விமான நிலையத்தில் உள்ள மரங்கள் எல்லாம் செயற்கை தான் இல்லாவிட்டால் வாடிவிடுமே!!துபாய் 3 முனையமே ஒரு சின்ன நகரம் தான்.
வி சி ஆர் மாதிரி என் மகனிடம் டி வி டி ரெக்காடரை பண்ணுடா என்றேன்...ஹூம்! இன்னும் நிறைய அடி பட வேண்டியிருக்கு என்று நினைக்கிறேன். :-))

பேரரசன் said...

தங்கள் தந்தை விரைவில் குணமடைய இறைவன் அருள் புரியட்டும்...சகோதரி..


வாழ்த்துக்கள்...

பாலராஜன்கீதா said...

தங்கள் தந்தை நலம்பெற இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.

XIII said...

கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பின் சிறகு விரிக்கின்றீர்கள்.

தங்கள் தந்தை பற்றிய செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது.
நூலகத்தில் வேலை பார்த்தவர் நேரத்தை பொன் போல் போற்றியதில் வியப்பே இல்லை. அவரை கண்டு பல
முறை நான் வியந்திருக்கின்றேன். தங்கள் தந்தை ஒரு முன்மாதிரி மனிதர் என்பதில் சந்தேகம் கிடையாது.

அவர் விரைவில் குணமாகி முன்பு
போல் இருப்பார் என்று நான் திடமாக நம்புகிறேன்.

ரவியா said...

தங்கள் தந்தை நலம்பெற இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.

எம்.எம்.அப்துல்லா said...

உங்கள் தந்தை பூரண குணமடைய இறைவனை வேண்டுகின்றேன்.

இறைவனை மிஞ்சிய மருத்துவரும் இல்லை.பிராத்தனையை மிஞ்சிய மருந்தும் இல்லை. கவலை வேண்டாம் சகோதரி.

தாரா said...

Thanks for all the prayers for my father's recovery. It means a lot to me.

Thara.

துபாய் ராஜா said...

அப்பா ஆயுள்நீட்டிப்பு பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

தாங்களும் உடல்நலத்தை கருத்தாக கவனித்துகொள்ளுங்கள் சகோதரி.

யாத்ரீகன் said...

அவர் விரைவில் குணமாகி முன்பு
போல் இருக்க வேண்டுகிறேன்.. உங்கள் உடல்நலத்தை கவனித்துகொள்ளுங்கள்