'அபியும் நானும்' ஒரு அற்புதமான படம் என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். ஆனால், வழக்கமான வெட்டு குத்து, மசாலா படங்களுக்கிடையே 'அபியும் நானும்' கண்டிப்பாக மனதிற்கு இதமான, ஒரு மாறுபட்ட திரைப்படம். இரண்டரை மணி நேரம் நன்றாகப் பொழுது போயிற்று. விவேக், வடிவேலு போன்றவர்கள் இல்லாமலேயே பல இடங்களில் மனம் விட்டு சிரிக்க முடிந்தது.
இதில் பிரகாஷ்ராஜின் 'மூட்' (mood) இருக்கிறதே, அதுதான் அலாதி! அதை நாம் முதலில் உள்வாங்கிக்கொண்டு, அதனை பின் தொடர்ந்தால், சுவையாக, ரசிக்கும்படி இருக்கின்றது. தன் மகளுடனேயே வாழ்க்கையின் அத்தனை மணித்துளிகளையும் கழித்துவிடத் துடிக்கும் ஒரு முட்டாள்தனமான பாசமான தந்தை பிரகாஷ்ராஜ். அப்பாவின் அன்பு வளையித்துனுள்ளேயே வளரும் மகள், வேகமாக வளர்ந்து அடுத்தடுத்த கட்டத்திற்கு தாவும் போது, அந்த வேகத்தையும் வலியையும் தாக்குபிடிக்க முடியாமல் திண்டாடும் தந்தையாக பிரகாஷ் ராஜ் அருமையாக நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜைப் போலில்லாமல் அன்பும் கண்டிப்புமான ஒரு யதார்த்தமான அம்மாவாக ஐஸ்வர்யாவின் நடிப்பையும் பாராட்டவேண்டும். ரொம்பவும் பாச மழை பொழிந்து உருக்கமாக பேசுகின்ற வசனமெல்லாம் இல்லை. நகைச்சுவையோடு கூடிய யதார்த்தமான காட்சிகளால் பின்னப்பட்டிருக்கிறது 'அபியும் நானும்'.
தன் குழைந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக நேர்முகத் தேர்வுக்கு பிரகாஷ்ராஜ் இரவு பகலாக புத்தகங்களை வைத்து படிப்பது, நீண்ட தேர்முக வரிசையில் அப்பாக்களெல்லாம் மாங்கு மாங்கென்று படித்துக்கொண்டே நிற்பது போன்ற மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.
பிச்சைகாரராக இருந்து, அபியின் கருணையால் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக மாறும் குமரவேல் திரை உலகுக்கு ஒரு நல்ல அறிமுகம். அவர் ஏற்கனவே சில படங்களில் நடித்து இருந்தாலும் இந்த படத்தின் மூலம் அவர் வளர வாய்ப்புகள் அதிகம். அவருக்கும் பிரகாஷ்ராஜுக்கும் நடக்கும் உரையாடல்கள் சுவையானவை!
பிரகாஷ்ராஜின் சின்னச் சின்ன அதிர்ச்சிகளும், ஏமாற்றங்களும், சுதாரித்தல்களுமே இந்தப் படத்தின் கதை! மகள் திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை ஒரு சர்தார்ஜி என்பதை பிரகாஷ்ராஜ் அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகும் காட்சி நல்ல காமெடி. 'என் கனவில் கூட என் மாப்பிள்ளைக்கு டர்பன் கட்டிப் பார்த்ததில்லைடா' என்று நண்பனிடம் சொல்கிறார். இறுதியில் திருமணத்தின் போது அதே நண்பனிடம், 'என் பொண்ணு கல்யாணத்தில மாண்டலின் ஸ்ரீனிவாஸ் கச்சேரி வைக்க ஆசைப்பட்டேன் தெரியுமா?' என்பார். பின்னனியில் பஞ்சாபி பாங்ரா இசை முழங்க அனைவரும் அதிரடியாக ஆடிக்கொண்டிருப்பார்கள். உங்களால் சிரிக்காமல் இருக்கவே முடியாது :-)
அன்பான தந்தையான பிரகாஷ்ராஜ், மகளைப் பிரிந்து வேதனைப்படும் பிரகாஷ்ராஜ், இறுதியில் பக்குவமானவராக மாறும் பிரகாஷ்ராஜ் - இவர்களையெல்லாம் விட, மாப்பிள்ளை தன் வீட்டுக்கு வந்ததிலிருந்து சிடுசிடுப்பும் கடுகடுப்புமாக வளையவரும் பிரகாஷ்ராஜ் தான் என் மனதைக் கவர்ந்தார்!
சர்தார்ஜி மாப்பிள்ளைக்காக சப்பாத்தி, ராஜ்மா என்று வீட்டில் விருந்து அமர்க்களப்பட, 'எனக்கு இட்லி சாம்பார் வேணும்' என்று மனைவியிடம் அடம்பிடிப்பது...
எல்லாரும் மாப்பிள்ளையின் இண்டர்வியூவை தொலைகாட்சியில் பார்த்துகொண்டிருக்க, பொறாமை தாங்காமல், 'போன் எதுவும் வந்ததா?' என்றும், 'கொஞ்சம் டீ போடேன்' என்றும் சம்பந்தமேயில்லாமல் எல்லார் கவனத்தையும் கலைக்க முயல்வது...
துணிக்கடையில் இந்தி பாடல் ஒலிக்க, 'ஏன்? தமிழ் பாட்டு போடமாட்டீங்களா?' என்று கடைக்காரரிடம் சிடுசிடுப்பது...
மகளுக்கு மாப்பிள்ளை தேர்ந்தெடுத்த புடவை பிடித்துவிட, அந்தக் கடுப்பில் 'லுங்கி இருக்கா?' என்று சத்தமாக மீண்டும் கடைக்காரரிடம் கேட்பது...
இதெல்லாம் நல்ல ரசிக்கும்படியான நகைச்சுவை காட்சிகள் :-)
மற்றொரு குறை எனக்குத் தோன்றியது என்னவென்றால், அபி தேர்ந்தெடுத்த மாப்பிள்ளையை பிரகாஷ்ரஜுக்கும் பிடிக்கவேண்டும் என்பதற்காக, அவர் பிரதமந்திரியின் அபிமான ஆலோசகர் என்றும், ஒரு பாதிக்கப்பட்ட சமூகத்தையே தத்தெடுத்து காப்பாற்றிக்கொண்டிருக்கும் ஒரு உன்னதமானவர் என்றும் அவரை ஒரு தியாகி ரீதியில் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் அப்படியெல்லாம் இல்லாமல், சாதாரணமாக படித்து வேலையில் இருக்கும் ஒருவராக இருந்திருந்தால்?! அப்படியிருந்தாலும் பெண்ணுக்காக விட்டுக்கொடுத்து தானே ஆகவேண்டும்?
மகளின் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் கலங்கி போய் உட்கார்ந்திருக்கிறார்கள் பிரகாஷ்ராஜும் மனைவி ஐஸ்வர்யாவும். அப்போது பிரகாஷ்ராஜ் சொல்லுவார் - "நீ என்னை காதலிச்சப்ப, எனக்காக உங்க வீட்டை எதிர்த்தப்ப நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். எனக்காக இத்தனை வருஷமா உன் அம்மா அப்பாகிட்ட பேசாம இருந்தப்ப ரொம்ப கர்வப்பட்டேன். ஆனால் இப்பதான் புரியுது...அவங்களும் என்னை மாதிரி தானே கலங்கிப்போய் தனிமரமா உட்கார்ந்திருப்பாங்க?! அபி கல்யாணத்துக்கு அவங்களையும் கூப்பிடலாமா?"
படத்தின் ஆரம்பக்காட்சிகளில் சிறு பிள்ளைத்தனமான, முட்டாள்தனமாக இருந்த இவர், மகளின் திருமணத்தின் போது ஒரு பண்பட்ட மனிதராக மாறுவதை இந்தக் காட்சியில் அருமையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் இராதாமோகன்.
ஒரு குழந்தை வளர்ந்து பெரியவளாகி காதலித்து திருமணம் செய்துகொள்வதை எத்தனையோ படங்களில் பார்த்திருக்கிறோம். ஒரு தந்தை வளர்ந்து படிப்படியாக பக்குவமடைவதை இந்தப் படத்தில் தான் நான் பார்க்கிறேன். தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன், மொழி, இப்பொழுது அபியும் நானும் இப்படி குடும்பத்தோடு சென்று பார்க்ககூடிய நல்ல திரைப் படங்களை உருவாக்கும் இயக்குனர் இராதாமோகனுக்கு என் பாராட்டுக்கள்.