Wednesday, February 06, 2008

வாசிங்டன் டிசியிலிருந்து தாரா - 8

முந்தைய தொடர் பதிவுகள்: சென்னையிலிருந்து தாரா - 1, சென்னையிலிருந்து தாரா - 2, திருச்சியிலிருந்து தாரா - 3, மீண்டும் சென்னையிலிருந்து தாரா - 4, மயிலாடுதுறையிலிருந்து தாரா - 5, கன்னியாகுமரியிலிருந்து தாரா - 6, கோவளம் கடற்கரையிலிருந்து தாரா - 7

நான் விமானம் ஏறும் நாள் வந்தது. என்னைவிட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தான் பதட்டம் அதிகமாக இருந்தது. எனக்குப் பிடித்த உணவு வகைகளில் விட்டுப்போன சிலவற்றை பரபரப்பாக சமைத்துக்கொண்டிருந்தார் அம்மா. நான் எடுத்துச் செல்லவேண்டிய பொடி, வடகம் வகைகளை கவலை தோய்ந்த முகத்துடன் 'பாக்' செய்துகொண்டிருந்தார் அப்பா. அவர்களை நிமிர்ந்துப் பார்ப்பதையே தவிர்த்து, என் பெட்டிகளில் துணிகளையும் பொருட்களையும் அடுக்கிக்கொண்டிருந்தேன் நான்.

விமான நிலையத்திற்கு அம்மா, அப்பா, மாமனார், சித்தியின் பிள்ளைகள், கணவரின் நண்பர்கள் என்று ஒரு பட்டாளமே வந்திருந்தது. அவர்களுக்கெல்லாம் கையசைத்துவிட்டு, திரும்பிப்பார்க்காமல் கூட்டத்தில் சென்று மறைந்தேன். இதயம் கனத்தது.

அதே லுப்தான்சா விமானம். ஆனால் அதன் மீது வரும்போது இருந்த வெறுப்பு இப்போது இல்லை. திரும்பிச் செல்கையில் எத்தனை கனத்த இதயங்களை தாங்கிக்கொண்டு பறக்கிறது?!

அமெரிக்க வாழ்க்கையை விரும்பி ஏற்றுக்கொண்டாலும், அது என்னுள் புகுத்திவிட்டிருந்த ஒரு 'கையாலாகாத்தனம்' வருத்ததை தந்தது. தூசி, சத்தம், அசுத்தம் ஆகியவற்றின் மீதான சகிப்புத்தன்மையை அமெரிக்க வாழ்க்கை என்னிடமிருந்து பிடுங்கி, என் நாட்டிற்கும் எனக்கும் ஒரு சிறு இடைவெளியை ஏற்படுத்திவிட்டது என்னுள் குற்ற உணர்ச்சியாக உறுத்திக்கொண்டிருக்கிறது. இந்த இடைவெளியை உடைத்தெறிய வேண்டுமானால், அடிக்கடி தமிழகம் போய்வந்துகொண்டிருக்க வேண்டும். அடுத்த ஜனவரியில் மீண்டும் போவதென்று முடிவு செய்தேன்.

தூக்கக் கலக்கமும் அயர்ச்சியுமாக வாசிங்டன் டிசி விமான நிலையத்தில் வந்திறங்கிய என்னையும் கணவரையும், ஒரு நண்பர் வந்து தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று சுடச் சுட சாப்பாடு போட்டார். வீட்டுக்கு வந்தபின் குளிர் சாதனப் பெட்டியைத் திறந்தால், அங்கே நாங்கள் வீட்டுச் சாவி கொடுத்திருந்த இன்னொரு நண்பர் பால், பழங்கள், தோசை மாவு, சாம்பார் எல்லாம் வைத்திருந்தார். மற்ற நண்பர்கள் சிலர் தொலைபேசியில் அழைத்து "நல்லபடியா வந்துவிட்டீர்களா? நம்ம ஊர் எப்படி இருக்கிறது?" என்று நலன் விசாரித்தார்கள். மனம் நெகிழ்ந்தது. இங்கே மட்டும் அன்புக்கு என்ன குறைச்சல்?

நினைத்தாலே இனிக்கும் அடுத்த ஜனவரி தமிழகப் பயணத்தின் கனவில் குளிர்காய்ந்துகொண்டே, அமெரிக்க வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் தொடங்கினேன்...ஒபாமாவா? ஹில்லரி க்ளிண்ட்டனா? என்று அமெரிக்க அரசியலைப் பற்றிய கவலையும் ஆர்வமும் தொடங்கிவிட்டது...

இந்தப் பயணத்தில் நிறைய புகைப்படங்கள் எடுத்தேன். அவற்றை தமிழகத்திலிருந்து வலையேற்ற முடியவில்லை. நீண்ட நேரம் எடுத்தது. அடுத்து வரும் பதிவுகளில் புகைப்படங்களைப் போடுகிறேன்.

தொடரும்...

6 comments:

Yogi said...

இந்தா இருக்கிற பெங்களூரிலிருந்து எப்படா எங்க ஊருக்குப் போவோம்னு ஆயிருது.... யுஎஸ்ஸிலிருந்தால்?? கஷ்டம் தான்.

எங்கயிருந்தாலும் எல்லோருக்கும் ஒரே நினைப்பு எப்போது பிறந்த மண்ணைப் பார்ப்போம் என்பது தான் :)

காட்டாறு said...

பத்திரமா வந்து சேர்ந்துட்டீங்க. ஓய்வு இனி தான் தேவை, இல்லையா? விடுமுறையென தாயகம் போய் வந்தாலும், வந்ததும் தானே ஓய்வு எடுக்க முடியும். :-)

//தூசி, சத்தம், அசுத்தம் ஆகியவற்றின் மீதான சகிப்புத்தன்மையை அமெரிக்க வாழ்க்கை என்னிடமிருந்து பிடுங்கி, என் நாட்டிற்கும் எனக்கும் ஒரு சிறு இடைவெளியை ஏற்படுத்திவிட்டது என்னுள் குற்ற உணர்ச்சியாக உறுத்திக்கொண்டிருக்கிறது.// நிதர்சனம் இல்லையா? மறுத்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை.

Anonymous said...

Very well written article. Once Kasi compared the life of an NRI in US as uprooted tree from another place. It is very difficult for us to get adjusted in another tree. when you are trying to transplant the uprooted tree in own country, it takes the same amount of time to adjust. You can't be here or there

துளசி கோபால் said...

//இங்கே மட்டும் அன்புக்கு என்ன குறைச்சல்?//

இது என்னவோ சத்தியமான உண்மைதான்.

அன்புக்கு மனம் விசாலமா இருந்தாப்போதும்.

நல்ல பயணக் கட்டுரை தாரா.

Mukundaraj said...

Thara,

Very good blogs. OC-la India tour poittu vantha maathiri irunthathu.
Keep writing.

ஜெயா said...

தாரா நீங்கள் தாரா பறவை போன்று இல்லாமல் சிட்டுக்குனுருவியாட்டம் பறந்து திரிவதை அழகாக பதிவு செய்வது அருமை... பிரிவு என்பது இலை உதிர் காலம் போன்றது கவலைப்பட வேண்டாம் நிச்சையம் வசந்தம் வரும்.....