வெள்ளி, டிசம்பர் 28, சென்னை மெரீனா கடற்கரை, காலை 7 மணி
ரம்மியமான காலைப்பொழுது...தங்க நிறத்தில் சூரிய ஒளியில் கடல் தகதகத்துக்கொண்டிருந்தது. தூரத்தில் மீன் பிடிக்கும் படகுகள் ஓவியம் போல் தெரிந்தன. கடற்கரை சாலையில் நிறைய கார்கள், ரெண்டு சக்கர வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. உற்சாகமாக பலர் நடைபயில்கிறார்கள். சிலர் உடற்பயிற்சி செய்கிறார்கள். புடவை கட்டி டென்னிஸ் ஷ¥ அனிந்து வாக்கிங் செல்லும் பெண்களைப் பார்க்கப் பெருமையாக இருந்தது. தண்ணீருக்கு அருகே போகலாம் என்று உடன் வந்த தம்பிகளிடம் சொன்னேன். வேண்டாம் இங்கேயே நடக்கலாம் என்றார்கள். நான் அவர்களிடமிருந்து விலகி, கடலை நோக்கி நடந்தேன். சூரியனின் ஒளியில் படகுகளின் அழகை ரசித்துக்கொண்டே நடந்து போய் கடல் நீரில் காலை நனைத்தேன். சிலீரென்று சுகமாக இருந்தது. கடலோரத்திலேயே தண்ணீரில் காலை நனைத்தபடியே நடந்தேன். இடது புறம் கடல். வலது பக்கம் ஆங்காங்கே மனிதக் கழிவுகள். இதற்குமேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை. சொன்னால் நான் கலர் கண்ணாடி போட்டிருக்கிறேன் என்பார்கள். நீங்க வந்து கழிப்பறை கட்டிக்கொடுங்கள் என்பார்கள். ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன். சென்னை வாசிகள் சுகாதாரமான காற்றை சுவாசிக்கவோ, உடற்பயிற்சி செய்யவோ மெரீனா கடற்கரைக்கு வராமல் இருப்பது நல்லது. எனக்கு மனம் கனத்தது. நான் நேசித்த சென்னையா இது?!
மெரீனாவிலிருந்து அருகே உள்ள சரவணபவன் உணவகத்தில் காலை சிற்றுண்டி சாப்பிட்டோம். அந்த மாதிரி ஒரு மெது வடையை நான் என் வாழ்நாளில் சுவைத்ததே கிடையாது!!! அவ்வளவு சுவையாக மொறுமொறுவென்று இருந்தது. சரவணபவன் பற்றி தம்பிகள் நிறைய நல்ல விசயங்கள் சொன்னார்கள். அங்கே பறிமாறுபவர்கள் நன்றாகப் பயிற்சி பெற்றவர்களாம். 'டிப்ஸ்' கொடுத்தால் வாங்கமாட்டார்களாம். தண்ணீரைக் கொட்டுவது, சாம்பாரைச் சிந்துவது போன்ற எந்த தவறும் அங்கே நடக்காதாம். உயர் தர AC உணவகங்களுக்கு மட்டுமே நாடிப் போகும் வி.ஐ.பி க்கள் விரும்பிச் செல்லும் ஒரே நடுத்தர உணவகம் சரவணபவன் தானாம்! கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. ஒரே ஒரு குறை. கீழே இருக்கும் படம் சரவணபவனில் மேசையில் வைக்கும் பேப்பர். அதில் எல்லாமே ஆங்கிலத்தில் இருப்பதையும், மருந்துக்குக்கூட தமிழில் எதுவும் இல்லை என்பதையும் பார்க்கலாம். மெனு அட்டையை நான் பார்க்கவில்லை. ஒரு வேளை அதில் தமிழில் இருந்திருக்கலாம்.
சென்னையில் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. பல இடங்களில்பாதைகளை ஒரு வழிப் (one way) பாதையாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் எங்கு போனாலும் போக்குவரத்து நெரிசல். இன்று வைக்கோவுக்கு எடைக்கு எடை வெள்ளி வழங்கும் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது போலும். சாலைகலெங்கும் வைக்கோவின் போஸ்டர்கள். சேது சமுத்திர நாயகன், தமிழர்களின் முகவரி, வாலிபப் பெரியார், நாளைய தமிழகம், மறுமலர்ச்சி நாயகன் என்று வைக்கொவின் புகழ் பாடும் வாசகங்கள் எங்கே பார்த்தாலும்! புடவைக் கடைகள், நகைகடைகளின் பானர்கள் பிரம்மாண்டமாக நகரத்தின் எல்லா முக்கிய இடங்களிலும் காணப்படுகின்றன.
புத்தகக் கண்காட்சியைப் பற்றி ஒன்றிரண்டு பானர்கள் பார்த்தேன். சென்னை சங்கமத்தைப் பற்றிய எந்த அறிகுறியும் காணப்படவில்லை.
சனி, டிசம்பர் 29, விழுப்புரம்
விழுப்புரம் அருகில் உள்ள சித்தனங்கூருக்கு இன்று பயணம். அமெரிக்காவில் பிலடெல்பியா(philadelphia) நகரில் Phil Mock என்று ஒரு அமெரிக்கர், ஒரு சேவை அமைப்பை நடத்துகிறார். இந்த அமைப்பின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல ஏழை, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் கல்விப் பயன் பெறுகிறார்கள். ஒவ்வொரு குழந்தையின் கல்விக்கும் ஒரு sponsor இருப்பார்கள். வருடம் இரண்டு முறை தமிழகம் வரும் Phil, இந்தக் குழந்தைகளுக்காக முகாம்கள் நடத்துகிறார். இந்த முறை சித்தனங்கூரில் உள்ள ஒரு பள்ளியில் முகாம் நடந்துகொண்டிருந்தது. அந்த முகாமுக்கு நானும் என் கணவரும் சென்றிருந்தோம்.
சென்னையை விட்டு வெளியேரி கார் NH 45 நெடுஞ்சாலையை எடுத்ததும் 'அப்பாடா' என்றிருந்தது. அருமையாக இருக்கிறது இந்த நெடுஞ்சாலை. இரண்டு பக்கமும் பச்சை பசேலென்று மரங்கள். வழியில் காரை நிறுத்தி இளநீர் குடித்தொம். வழியில் நடிகர் விஜயகாந்தின் பொறியியல் கல்லூரியைக் கணவர் காட்டினார். மேல்மருவத்தூரைக் கடக்கையில் எங்கெங்கும் சிவப்பு வண்ணம், வேப்ப இலை கட்டிய பேருந்துகள்.
சித்தனங்கூரில் உள்ள பள்ளியில் நுழைந்தோம். தென்னந்தோப்புக்குள் இருந்தது அந்தப் பள்ளி. உள்ளே ஒரு அறையில் கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து சாம்பார் சாதத்தைக் கையில் பிசைந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார் Phil. எங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். மதிய உணவு நேரம் என்பதால் குழந்தைகள் மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். Phil தாத்தா என்றும், Phil மாமா என்று அவரை அன்புடன் அழைக்கும் அந்தக் குழந்தைகளில் பலர் தலித் குழந்தைகள். அவர்களிடம் பேச்சுக்கொடுத்தபோது, உற்சாகமாக அந்த முகாமில் நடக்கும் வகுப்புகளைப் பற்றியும் பயிற்சிகளைப் பற்றியும் எங்களுக்குச் சொன்னார்கள். அவர்களைச் சிறு குழுக்களாகப் பிரித்து "ஒரு நல்ல கிராமம் எப்படி இருக்க வேண்டும்?" "ஒரு நல்ல தாய் எப்படி இருக்க வேண்டும்?" போன்ற தலைப்புகளைக் கொடுத்து ஒரு குழுவாகக் குழந்தைகளை கலந்தாலோசிக்கச் செய்து பின்னர் அவர்களது எண்ணங்களை கேட்டறிகிறார்கள். அவர்களுக்கு இசை பயிற்சியும் உண்டு.தனக்குத் தமிழ் தெரியாததை ஒரு ஊனமாகக் கருதி, தீவிரமாகத் தமிழ் கற்றுக்கொண்டிருக்கிறார் Phil. 'இலை' க்கும் 'இல்லை' க்குமான உச்சரிப்பைத் தன்னால் பிரித்துப்பார்கவே முடியவில்லையென்றும், தமிழ் பேசுவதற்காக தன் நாக்கினால் ஒரு ஜிம்னாஸ்டிக்ஸ் நிகழ்ச்சியே நடத்தவேண்டியிருக்கிறது என்றும் சொன்னார். அவருக்கும் 60 வயதிருக்கும். அவர் நினைத்திருந்தால் வயதான காலத்தில் அமெரிக்க அரசாங்கம் கொடுக்கும் ஒய்வு ஊதியத்தில் நிம்மதியாக வசதியாக இருக்கலாம். ஆனால், ஏழைக் குழந்தைகளுக்கு, அதுவும் தமிழ்நாட்டில் வந்து அவர் செய்யும் சேவையை என்னவென்று சொல்வது? ராயப்பன் என்கிற தலித் இளைஞனை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் Phil. நாங்கள் Phil இடம் விடைபெற்று சென்னை திரும்புகையில் விழுப்புரம் வரை அந்த இளைஞனும் எங்களுடன் காரில் வந்தார். ரொம்பத் துடிப்பான இளைஞர். அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைக் கல்லூரியில் மூன்று வருடங்கள் இசை படித்தவர். வீணை இசையில் கில்லாடி. சொந்தமாக வீணை வாங்கக் கூட வசதியில்லாத இவருக்கு Phil தான் வீணை வாங்கிக்கொடுத்தாராம். அவரை பாடச்சொல்லிக் கேட்டபோது, 'நான் தேடும் செவ்வந்திப் பூவிது' என்கிறப் பாடலைப் பாடினார். அப்படி ஒரு கணீரென்ற குரல். இசையில் பெரிதாகச் சாதிக்கவேண்டும் என்கிற தவிப்பு அவரிடம் தெரிந்தது. சாதிக்கவேண்டுமென்றால் சென்னையில் போய் உட்காரவேண்டும், ஆனால் அங்கே போய் எங்கே தங்குவதென்று தெரியவில்லை. இப்போது அங்கங்கே பாட்டு வகுப்பு நடத்தி சம்பாதித்து பெற்றோர்களை காப்பாற்றிக்கொண்டிருக்கிறேன். பொழப்பை விட்டுவிட்டு சென்னை போகவும் முடியாது. வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பில்லாத சூழ்நிலைக்கைதியாக இருக்கிறேன் என்று அவர் சொன்னபோது தொண்டையில் ஏதொ அடைத்தது. தூர்தர்ஷனில் விண்ணப்பம் செய்திருப்பதாகச் சொன்னார். "கற்றது தமிழ்" படத்தில் இளையராஜா பாடிய பாட்டு பாடுங்கள் என்றபோது, அந்தப் பாட்டு கேட்டதில்லை, என்னிடம் காசெட் ப்ளேயர் இல்லை என்றார். வடலூரில் இருக்கும் அவருடைய வீட்டு முகவரியை எழுதி வாங்கிக்கொண்டேன். ஒரு நல்ல காசெட் ப்ளேயர் வாங்கி அவருக்கு அனுப்பவேண்டும்.
சென்னைக்குள் தாம்பரத்தில் நுழைந்தபோது மாலை மணி ஐந்து. வேளச்சேரியில் நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றடைந்தபோது மணி எட்டு!!!. கத்திப்பாறைக்கருகில் பாலம் கட்டுவதால் போக்குவரத்து நெரிசல்! மெதுவாக கணவரிடம், "நாளைக்கு நான் திருச்சி போய்விடட்டுமா? எனக்குச் சென்னை சரிப்பட்டு வரலை" என்றேன்.
தொடரும்...
3 comments:
phil பற்றிய தகவலுக்கு நன்றி தாரா.
மெரினா......
வருத்தமாக இருக்கிறது.(-:
தாரா , சென்னை அயல் நாட்டு விமானத் தளத்தினைப் பற்றியும், சென்னை மெரினா கடற்கரை பற்றியும் எழுதப் பட்ட தங்களின் கருத்துக்களோடு ஒத்துப் போக மனம் மறுக்கிறது. ம்ம்ம்ம்
போக்குவரத்து நெரிசல் உண்மை.
//சூரியனின் ஒளியில் படகுகளின் அழகை ரசித்துக்கொண்டே நடந்து போய் கடல் நீரில் காலை நனைத்தேன். சிலீரென்று சுகமாக இருந்தது. கடலோரத்திலேயே தண்ணீரில் காலை நனைத்தபடியே நடந்தேன். இடது புறம் கடல். வலது பக்கம் ஆங்காங்கே மனிதக் கழிவுகள். இதற்குமேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை. சொன்னால் நான் கலர் கண்ணாடி போட்டிருக்கிறேன் என்பார்கள். நீங்க வந்து கழிப்பறை கட்டிக்கொடுங்கள் என்பார்கள். ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன். சென்னை வாசிகள் சுகாதாரமான காற்றை சுவாசிக்கவோ, உடற்பயிற்சி செய்யவோ மெரீனா கடற்கரைக்கு வராமல் இருப்பது நல்லது.//
சரியாக சொன்னீர்கள் தாரா... i dont understand why these ppl get angry when nri-s point out some genuine problems about india...i felt the same way when i went to chennai last time...
Post a Comment