Saturday, January 19, 2008

மயிலாடுதுறையிலிருந்து தாரா - 5

முந்தைய தொடர் பதிவு: மீண்டும் சென்னையிலிருந்து தாரா - 4

பொங்கலுக்கு மயிலாடுதுறை வருகிறேனென்று மாமியாரிடம் முன்னமே சொல்லியிருந்தேன். பொங்கலுக்கு முன் தினம் மாலை மயிலாடுதுறை வந்துவிட்டேன். என் கணவர் பிறந்து வளர்ந்த ஊர் அது. எல்லாருக்குமே தம் பூர்வீக மண்ணின் மீது பற்று இருக்கத்தான் செய்யும். ஆனால் என் கணவர் ஒரு படி மேலே போய், மயிலாடுதுறை தான் உலகத்திலேயே சிறந்த இடம் என்பார்!

வாசிங்டன் டிசியில் எங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை, வாசிங்டன் நகருக்கு ஒரு 'மினி' சுற்றுலா அழைத்துச் செல்வது கணவரின் வழக்கம். அதுபோல், என்னை மயிலாடுதுறையில் மினி சுற்றுலா அழைத்துச் சென்றார். மயிலாடுதுறை மேம்பாலம், மணிக்கூண்டு, கடைத்தெரு என்று வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன். தான் ஆறாவது படிக்கும் போது முதல் முதலாக பரோட்டா வாங்கிச் சாப்பிட்ட 'ஜெய்' பரோட்டா கடையைக் காட்டினார். அப்போது ஒரு பரோட்டா 35 பைசாவம்!

கடைத்தெருவின் நடுவே நின்று, "இது தான் என் ராஜாங்கம்! இங்கே உனக்கு என்ன வேண்டும், கேள்" என்றார். "எனக்கு சூடா பட்டாணியும் வறுத்த கடலையும் வேண்டும்" என்றேன். உடனே ஒரு கடைக்குச் சென்று வாங்கி வந்தார். கடையின் பெயர் மறந்துவிட்டது, ஆனால் அது அங்கே பிரபலமான கடையாம். நிறைய நகைக் கடைகள் வரிசையாக இருக்கின்றன. 'சீமாட்டி' துணிக்கடையில் சென்னைக்கு இணையாகத் துணிகள் அருமையாகக் கிடைக்கின்றன.
கணவரின் பாட்டி, சித்தி, மாமா என்று எல்லாருமே 5 நிமிட நடையில் இருந்தார்கள். எல்லோரையும் பார்த்து பொங்கலன்று ஆசீர்வாதம் வாங்கியதில், நிறைய 'கலெக்ஷன்' கிடைத்தது. அடுத்த கட்ட ஷாப்பிங் செய்ய உதவியாக இருக்குமென்று பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டேன் :-)

வாசிங்டன் டிசியில் என்னுடைய சமையல் நண்பர்கள் வட்டாரத்தில் பிரபலம். என் சமையல் திறனை மாமியாருக்கு எப்படி நிரூபிக்கலாம் என்று யோசித்தேன். சரி, ஏதாவது சிறப்பு உணவு செய்து அசத்தலாம் என்று சமையலறைக்குச் சென்று நோட்டமிட்டேன். முதலில் அங்கே கத்தி இல்லை. அரிவாள் மனை தான் இருந்தது. எனக்கு அதில் காய்கறி வெட்டி பழக்கம் இல்லை. மேலும், அரிசி எங்கே இருக்கு, பருப்பு எங்கே இருக்கு, உப்பு எங்கே இருக்கு என்று ஒவ்வொன்றாக மாமியாரை கேட்டு கேட்டு நான் சமைப்பதற்குள் அவரே வெறுத்துப் போய்விடுவார் என்பதால், "உங்களுக்கு சமைத்துப் போடனும்னு ஆசைதான், ஆனால் உங்கள் சமையல் முன் என் சமையல் கால் தூசி. உங்க கையால் இப்படி பிரமாதமான உணவைச் சாப்பிட எனக்கு இதைவிட்டால் அப்பறம் எப்ப வாய்ப்பு கிடைக்கும்?" என்று மாமியாரின் தலையில் இரு கூடை ஐஸ்சை கொட்டிவிட்டு சமையலறையிலிருந்து நழுவினேன்! அடுத்த இரண்டு நாட்களில் 'அவனுக்குப் அது பிடிக்கும் அவனுக்குப் இது பிடிக்கும். இதெல்லாம் அமெரிக்காவில் சாப்பிட முடியாது, பாவம்' என்று மாமியார் கணவருக்கு பிடித்த உணவு வகைகளை வரிசையாகச் செய்து போட்டார். நான் மனதிற்குள் குமைந்தேன்...எனக்குக் கூடத் தான் இதெல்லாம் நன்றாகச் செய்யத் தெரியும். யாராவது என் மாமியாரிடம் சொல்லுங்களேன்?! :-)

மயிலாடுதுறை வாழ்க்கை நன்றாகத் தானிருந்தது. சின்ன, அமைதியான ஊர். எல்லாமே தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். கடைத்தெரு கலகலப்பாக இருக்கிறது. கொஞ்ச நாட்களாக புடவைக் கட்டி, மல்லிகைப் பூ வைத்து, நெற்றியில் பெரியவர்கள் ஆசீர்வதித்து இட்டுவிட்ட விபூதி குங்குமத்துடன் நடமாடுகையில் எனக்கே என்னைப் பார்த்து வித்தியாசமாக இருந்தது. ஆனால் அது பிடித்திருந்தது.

சென்னை, திருச்சி, மயிலாடுதுறை என்று இதுவரை உள்ளூரிலேயே குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருந்த நான், நாளை கன்னியா குமரி மற்றும் கேரளா செல்கிறேன். சென்று வந்தபின் அந்தப் பயணத்தைப் பற்றி எழுதுகிறேன்.

தொடரும்...

15 comments:

ஆயில்யன் said...

//மயிலாடுதுறை வாழ்க்கை நன்றாகத் தானிருந்தது. சின்ன, அமைதியான ஊர். எல்லாமே தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்//

:))))


innum konjam sollunga

naanum enjoy pannikitu irukkan oorla :-)

முத்துலெட்சுமி said...

எல்லாமே தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.. //

ஆமாங்க எங்க அம்மாவை நடத்தி மட்டும் கூட்டிட்டு போகவே முடியாது.. தேரை நகத்தற மாதிரி தான் .. ஒவ்வொரு வீட்டிலா ஆளூங்க பிடிச்சிக்குவாங்க.. எங்க டவுனுக்கா கோயிலுக்கா.. எப்படி இருக்கீங்கன்னு நலம் விசாரிப்பா இருக்கும்.. இப்ப இப்ப டிவிக்குள்ள போயிடாறாங்க கொஞ்ச பேரு.. ஆனாலும் பயம் தான் நடந்து போனா போய் சேரவேண்டிய இடத்துக்கு ரொம்ப நாளாகும்... :) பொங்கலுக்கு மாயவரம் சந்தோஷமா கொண்டாடி இருக்கீங்க போல..

மதி said...

"ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது"ன்னு ஒரு பழஞ்சொல் இருக்கு தெரியுங்களா.உங்க பதிவை படிச்ச உடன் ஒரு முறை எங்க ஊருக்குப் போய் விட்டு வந்த மாதிரி இருந்தது.

தாரா said...

முத்துலட்சுமி,

நீங்கள் சொல்வது மிகவும் சரி. எனக்கும் அந்த அனுபவம் இருந்தது. தெருவில் பார்க்கும் ஒவ்வொருவரும், "எப்ப வந்தீங்க? எப்படி இருக்கீங்க?" என்று விசாரித்ததோடு நிற்காமல், "எங்க வீட்டுக்கு வந்துட்டு போங்க" என்று கூட்டிக்கொண்டும் போனார்கள்! ஒருவர் வீட்டில் காபி, அடுத்த வீட்டில் காபி வேண்டாம் என்று மறுத்ததால் மால்ட்டோவா, அதற்கடுத்த வீட்டில் பழரசம் என்று தொடர்ச்சியாக அவர்களுடைய அன்பை வயிற்றுக்குள் வைத்துத் தினித்ததில், வயிறு கலங்கிவிட்டது!

இந்த கவனிப்பெல்லாம் இன்னும் சில நாட்களுக்குத்தான் என்று நினைத்தால் மனம் கலங்குகிறது...

தாரா.

தாரா said...

நன்றி ஆயில்யன் & மதி.

cheena (சீனா) said...

அயல் நாடு சென்றுவிட்டு எப்போதாவது தமிழகம் வந்தால் - இருக்கும் விடுமுறைக்குள், அனைத்து உறவினர்களையும் பார்த்து விட வேண்டும், தேவையானவற்றை எல்லாம் வாங்கிவிட வேண்டும், நேர்த்திக்கடன்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் etc etc etc. மிகவும் கடினமான காரியம் தான். இருப்பினும் மகிழ்வுடன் இருக்கலாம்

மு. சுந்தரமூர்த்தி said...

//தெருவில் பார்க்கும் ஒவ்வொருவரும், "எப்ப வந்தீங்க? எப்படி இருக்கீங்க?" என்று விசாரித்ததோடு நிற்காமல், "எங்க வீட்டுக்கு வந்துட்டு போங்க" என்று கூட்டிக்கொண்டும் போனார்கள்! //

அதுக்காக ரொம்ப நாள் அங்கேயே இருக்காதிங்க. பத்து நாள் ஆனப்புறம் "எப்ப திரும்பி போறீங்கன்னு" கேட்டு மண்டைய காய வைப்பாங்க. மயிலாடுதுறைல எப்படின்னு தெரியல. எங்க ஊர்ல இதுதான் நடைமுறை.

அபி அப்பா said...

'சொர்க்கமே என்றாலும் அது எங்க ஊர் போல வருமா"ன்னு பாட தோனுது! நீங்க எங்க ஊர் மருமகளா! அபி அம்மாவும் உங்க ஊர் தான்! நானும் நம்ம யுனிவர்சிட்டி தான்!!! ஹை ஹை!!ரொம்ப சந்தோஷம்ங்க!!!

அபி அப்பா said...

"ஏண்டா திரும்பி போறே"ன்னு கேட்டுதான் எங்க ஊர் பழக்கம்ங்க சுந்தரமூர்த்தி அவர்களே!! பழக இனிமையானவர்கள்!

Anonymous said...

ம்ம்ம்ம்ம் ....

மணிக்கூண்டுசார்ந்த கடைத்தெருக்களும்
பஸ்ஸ்டாண்டில் எங்கள் 21A-வும்
செங்கோட்டையழைத்து எங்களை
சென்னைக்கனுப்பி வைக்கும் ஜங்ஷனும்
ஊரில் சிரஸில் மணிமகுடமாய்
மயூரநாதரோடு அபயாம்பிகையும்
லாகடமும் கடைமுழுக்குத்திருவிழாவும்
பாலக்கரையும் பரிமளரங்கநாதரும்
பூம்புகார்சாலையில் வள்ளலாரும்
நான்படித்த டிபிடியாரும்
முனிசிபல் மேனிலைப்பள்ளியும்
மன்னம்பந்தல் ஏவிஸியும்
கச்சேரி ரோடும் பியர்லஸும் ....
அரைமணி பயணித்தால்
பச்சைவிரித்து வரவேற்கும்
எங்கள் கீழையூரும் .....

வரளுகின்றேன் அவையில்லா வெறுமையால் ...

அன்புடன்
முத்து

Krithika said...

nala padivu, welcome to our place kanyakumari !!! here is couple of
Sightseeing at Kanyakumari.

Vivekananda Rock Memorial
Vattakottai (Circular Fort)
Situated 6 km from Kanyakumari.
Suchindram Thanumalayan temple 13 kms from Kanyakumari.
Udayagiri Fort :Situated 34km from Kanyakumari
Padmanabhapuram Palace Near Thukalay
Thirparapoo Falls: Near Kulasekaram
MATHUR HANGING BRIDGE :
ST. XAVIER’S CHURCH Kottar
PEER MOHAMMED DARGHA thuckalay

For more Sightseeing check here
http://www.kanyakumari.org.in
http://kanyakumari.nic.in/
http://en.wikipedia.org/wiki/Kanyakumari_District

Krithika - Houston.

Krithika said...

Nice Travel log. Welcome to my home town Kanyakumari, couple of sightseeing place at kanyakmari district.

Vattakottai (Circular Fort) : 6 km from Kanyakumari
Suchindram Thanumalayan temple 13 kms from Kanyakumari
Udayagiri Fort 34km from Kanyakumari
Padmanabhapuram Palace Near to thuckalay
Mathoor Hanging Bridge Mathoor near to Thiruvattar
St. Xavier Church at Kottar
Peer Mohamed Oliyullah Durha at Thuckalay
Tirparappu Water Falls near kulasekaram
Maruthuva Malai

For more places and information check at

http://www.kanyakumari.org.in/
http://kanyakumari.nic.in/
http://en.wikipedia.org/wiki/Kanyakumari_District

Have a Good time over there.

Krithika - Houston,TX.

வவ்வால் said...

தாரா,

உங்க ஊர் பார்க்கும் அனுபவம் நன்றாக வந்துள்ளது!

அங்கே இரண்டு பேருந்து நிலையங்கள் வைத்து அலைய வைப்பது, காரைக்கால், நாகப்பட்டினம் , திருவாரூர் செல்ல புதிய பேருந்து நிலையத்தில் ஏர் ஓட்டும் அளவுக்கு சேறும் சகதியும் இருப்பது எல்லாம் பார்த்து ரொம்ப டென்சன் ஆகி இருப்பிங்களே! :-))

அப்படியே மாயவரத்தில் பொது கக்கூஸ்கள் எப்படி இருக்குனு ஒரு பார்வை பார்த்து கருத்து சொல்லி இருக்கலாம், ஏன்னா nri மருமகள்கள் வந்து போகும் இடத்தில் சுத்தமாக வைத்திருக்க வேண்டாமா? :-))

Vassan said...

வணக்கம்.

சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்தவர் என தலைப்பில் எழுதியுள்ளீர்கள். 20 மைல் தொலைவிலிருக்கும் மயிலாடுதுறையை இதுவரை சுற்றி பார்த்ததில்லையா !!

// இந்த கவனிப்பெல்லாம் இன்னும் சில நாட்களுக்குத்தான் என்று நினைத்தால் மனம் கலங்குகிறது...

தாரா.//


டுபாயா மற்றும் சேனிக்கு நான் சொல்லிவிடுகிறேன், நீங்கள் அங்கேயே இருங்கள் :)

இதுமட்டுமில்லாமல்,

சம்பாதிக்கத்தான் அமேரிக்கா ன்னு ஒரு தடவை எழுதியிருந்தீர்கள். இப்போது அமேரிக்க பங்கு சந்தை பட் பணால் என ஆகிக் கொண்டுள்ளது, பொருளாதாரம் சாகக் கிடக்கிறது..

Anonymous said...

//இரண்டு நாட்களில் 'அவனுக்குப் அது பிடிக்கும் அவனுக்குப் இது பிடிக்கும். இதெல்லாம் அமெரிக்காவில் சாப்பிட முடியாது, பாவம்' என்று மாமியார் கணவருக்கு பிடித்த உணவு வகைகளை வரிசையாகச் செய்து போட்டார். நான் மனதிற்குள் குமைந்தேன்...எனக்குக் கூடத் தான் இதெல்லாம் நன்றாகச் செய்யத் தெரியும். யாராவது என் மாமியாரிடம் சொல்லுங்களேன்?! :-)//

அம்மணி, மே மாசம் ஊருக்கு போரேனுங்க, கட்டாயம் உங்க மாமியார் கைல உங்க சமயல் பத்தி சொல்லுரேனுங்க...டி.சி வந்தப்ப செஞ்சி போட்டீங்களே அந்த உருளை கிழங்கு காரகறி...குறிப்பா அத சொல்லோனுமுங்க...

அல்ஃபரட்டாவிலிருந்து அரசூரான்.