Tuesday, January 01, 2008

சென்னையிலிருந்து தாரா - 1

ஐந்து வருடங்கள் கழித்து தமிழகம் வந்திருக்கிறேன். வந்து ஒரு வாரம் ஆகிறது. என் அனுபவங்களை தினம் ஒரு வலைப்பதிவாக எழுதவேண்டுமென்று விருப்பம். ஆனால் நேரமோ இணையத் தொடர்போ அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. என் வெளிப்பாட்டில் மகிழ்ச்சியும் இருக்கலாம், வருத்தமும் இருக்கலாம். ஆனால், வெளிநாட்டில் இருக்கிறோம் என்கிற திமிரோ அலட்டலோ கட்டாயம் இல்லை. நான் 26 வருடங்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தவள். இது போன்ற பயணங்கள் எனக்குத் தாய்நாட்டுடனான பந்தத்தினை வலுவாக்குமே தவிர, என்னை விலகிச் செல்லத் தூண்டாது என்று ஆழமாக நம்புகிறேன்.

செவ்வாய் டிசம்பர் 25 அமெரிக்க நேரம் இரவு மணி 10:00

லுப்தான்ஸா விமானம் அட்லாண்டிக் கடலின் மேல் பறந்துகொண்டிருக்கிறது. இந்தத் தொலை தூர விமானப் பயணத்தில் நேரத்தை கொல்வதற்காகவே ஒரு போர்ட்டபிள் டிவிடி ப்ளேயரை கொண்டுவந்திருந்தேன். அதில் எனக்குப் பிடித்த ஒரு திரைப்பட குறுந்தட்டைப் போட்டு ஆவலுடன் காதில் ஹெட் போனைப் பொருத்திக்கொண்டேன். ஆனால் விமானத்தின் இரைச்சலில், காதில் ஒன்றும் சரியாக விழவில்லை. சரி, வலைப்பதிவு எழுதலாமென்று, தலைக்கு மேலே உள்ள விளக்கை போட்டுக்கொண்டு, மடிக்கணிணியில் தட்டச்சு செய்யத் தொடங்குகிறேன்.

சென்னையின்பால் எனக்கு ஒரு அபரிமிதமான பிரியம் உண்டு. காரணம், அங்கே நல்ல நினைவுகளை நான் விட்டுச் சென்றேன். அவற்றை மீட்டெடுக்க மீண்டும் அங்கே செல்கிறேன்! "எப்போது திருச்சி வருவாய்?" என்று கேட்ட பெற்றோர்களிடமும், "நேராக மாயவரம் வந்துவிடு" என்று சொன்ன மாமியாரிடமும், "நான் ஒரு வாரம் சென்னையில் தான் இருக்கப்போகிறேன். நீங்களெல்லாம் சென்னை வந்துவிடுங்கள்" என்று சொல்லிவிட்டேன். சென்னையில் அங்கே போகனும் இங்கே போகனும், அதை வாங்கனும் இதை வாங்கனும் என்று அடுக்கிக்கொண்டே போன என்னிடம், "நீ ரொம்ப ஓவராக சென்னையைப் பற்றி கற்பனை செய்யாதே. ஏமாற்றமடைவாய்" என்று சொன்னார் கணவர். அதையும் மீறி மனம் கொள்ளா அவலுடன் சென்னை வந்திறங்கினேன்!

புதன் டிசம்பர் 26 இந்திய நேரம் பின்னிரவு மணி 12:30

சென்னை விமான நிலையம்...முதல் அதிர்ச்சி கழிப்பறைகள். எத்தனை வெளிநாட்டவர்கள் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்குகிறார்கள்?! அவர்கள் நம்ம ஊரைப்பற்றி என்ன நினைப்பார்கள்?! ஹலோ!!! தமிழக அரசாங்கமே! தமிழகச் சுற்றுலா துறையே! கொஞ்சம் முழிச்சிக்கோங்க! வெளிநாட்டவர்களை விடுங்கள். கழிப்பறைகள் சுத்தமாக இருக்கவேண்டுமென்பது ஒரு அடிப்படை எதிர்பார்ப்பு தானே? அடுத்து நம்மை வரவேற்கிறது இமிகிரேஷன் அதிகாரிகளின் இறுகிய முகங்கள். களைத்து வரும் பயணிகளுக்காக ஒரு புன்னகை, ஒரு "குட் மார்னிங்", ஒரு "Have a nice stay"...எதுவும் கிடையாது. இதற்காக ஒன்றும் பணம் செலவழிக்கவேண்டியதில்லையே?! நான் ஏதோ அமெரிக்கா போய்விட்டு வந்து அலட்டுகிறேன் என்று என்னைத் தவறாக நினைக்கவேண்டாம். என்னுடைய தமிழகம் எல்லாருக்கும் இனிக்க வேண்டும் என்கிற ஆதங்கத்தில் தான் எழுதுகிறேன். இதெல்லாம் புதிதல்ல. அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். இருந்தாலும் பகிர்ந்துகொள்ள, பதியவைக்க ஆசை.
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும், சூடான சென்னைக் காற்றும் அன்பான உறவுகளும் வந்து அனைத்துக்கொண்டன...குளிரிலும் பனியிலும் உறைந்திருந்திருந்த வாசிங்டன் டிசி கண்களிருந்தும், நினைவிலிருந்தும் மறைந்தது. ஆஹா! இனி நான்கு வாரங்கள் அமெரிக்கா பக்கமே தலைவைத்துப் படுக்கக்கூடாதென்று குதுகலித்தது மனசு.

வியாழன் டிசம்பர் 27 சென்னை

இன்று ஒரு முக்கியமான வேலை இருந்தது. என் கணவருக்கு ஒரு மாதத்திற்கு முன் வலது கையில் மணிகட்டுக்கும் முழங்கைக்கும் மத்தியில் எலும்பு முறிவு ஏற்பட்டு, cast என்று சொல்லப்படும் கட்டு போட்டிருந்தார். அந்தக் கட்டைப் பிரித்துவிட்டு எலும்பு சேர்ந்திருக்கிறதா என்று பரிசோதனைச் செய்யவேண்டும். ஏற்கனவே இதற்கு நேரம் ஒதுக்கியிருந்த எலும்பு முறிவு மருத்துவரைப் பார்க்க அடையார் சென்றோம். அந்த மருத்துவர், x-ray எடுப்பதற்காக அங்கிருந்து வேறொரு லேபுக்கு அனுப்பினார். அங்கிருந்து x-ray எடுத்துக்கொண்டு மீண்டும் மருத்துவரிடம் வந்தோம். x-ray பார்த்துவிட்டு எலும்பு இன்னும் முழுமையாகச் சேரவில்லையென்றும், இன்னும் 3 வாரங்களுக்கு fore arm splint என்று சொல்லப்படும் ஒரு வகை கட்டு கையில் போடவேண்டும் என்றார். சரி போட்டு விடுங்கள் என்றால், அந்த வகை கட்டு தன்னிடம் இல்லையென்றும், மலர் மருத்துவமனை அல்லது தேவகி மருத்துவமனை சென்று கேட்டுப்பாருங்கள் என்றார். மலர் மருத்துவமனை சென்றோம். அங்கே அந்த splint இல்லை என்றார்கள். ஒரு தொலைபேசி எண்ணைக்கொடுத்து, அவருடன் தொடர்பு கொள்ளுங்கள் அவர் விட்டுக்கு வந்து உங்கள் கையை அளவெடுத்துவிட்டு இரண்டு நாட்களில் அந்த அளவில் splint செய்து தருவார் என்றார்கள். இரண்டு நாட்கள் கையை இப்படி கட்டு போடாமல் வைத்திருக்கலாமா என்று கேட்டால், அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இருக்காது என்று சொன்னார்கள்!!!

அடுத்து தேவகி மருத்துவமனைக்குச் சென்றோம். splint எல்லாம் இங்கே இல்லை சார். இங்கே இருக்கும்னு யார் சொன்னாங்க? என்றார்கள். Physio Therapy, Pharmacy, Lift போன்ற அறிவிப்பு பலகைகளெல்லாம் ஆங்கிலத்திலேயே இருந்தன. மிகுந்த மன வேதனையுடன் இதனைச் சொல்கிறேன்...அங்கே ஒரு சுகாதாரமான சூழ்நிலையே இல்லை. தேவகி மருத்துவமனைக்கு என்னவாயிற்று? தேவகி மருத்துவமனையின் மகப்பேரு மருத்துவர்கள் மிகுந்த திறமை வாய்ந்தவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால்?!!!

பல இடங்களில் ஏறி இறங்கியும் splint கிடைக்காததால் மலர் மருத்துவமனை சிபாரிசு செய்தவரைத் தொடர்பு கொண்டோம். அவர் வீட்டுக்கு வந்து, நல்ல வேளை கணவரின் கை அளவிலேயே அவரிடம் ஒரு splint இருந்தது. அதை கணவருக்குப் போட்டுவிட்டார். ஆக, காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்த splint அலைச்சல், மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இது நடந்தது Medical Mecca அல்லது Indian Mecca of Health Care என்று அழைக்கப்படும் சென்னையில்!!!

சற்று அசுவாசத்திற்குப் பிறகு, டி.நகரில் உள்ள ஆர்.எம்.கே.வி, குமரன் சில்க்ஸ் போன்ற துணிக்கடைகளுக்குச் சென்றேன். சிரித்த முகத்துடன் வரவேற்பு! எந்த மாதிரி உங்களுக்கு வேண்டும் என்று அன்புடன் விசாரித்து வழி காட்டுகிறார்கள். பொறுமையாக துணிகளை எடுத்துக்காட்டுகிறார்கள். பாராட்டப்படவேண்டிய விசயம்.

இரவு உணவு உறவிணர்களுடன் 'காரைக்குடி' உணவகத்தில்!. இந்த உணவகம் பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும். இது ஒரு உயர் தர அசைவ மற்றும் சைவ உணவகம். சுத்தமான செட்டினாட்டு உணவு. செட்டி நாட்டுப் பாரம்பரியத்தின் படி, எவர்சில்வர் தட்டில் வாழை இலை வைத்துப் பறிமாறுகிறார்கள். தண்ணீர் 'லோட்டா' வில். பித்தளைப் பாத்திரங்கள். செட்டினாட்டு பாணியில் மரத் தூண்கள். எனக்கு அங்கே மிகவும் பிடித்தது சுவர்களை அலங்கரித்த பெரிய படங்கள் - ஜல்லிக் கட்டு காட்சி, பெரிய பாத்திரங்கள் வைத்து சமைக்கும் காட்சி போன்ற படங்கள். இந்த மாதிரிப் படங்கள் வெளியே கிடைக்குமாவென்றுத் தெரியவில்லை. தேடிப்பிடித்து என் வீட்டுச் சமையல் அறையில் மாட்ட வேண்டும். உணவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். "சுவை" என்பதன் உண்மையான அர்த்தம் இந்த உணவகத்திலே தெரியும்!!! அழிந்து போய்க்கொண்டிருக்கும் பாரம்பரியங்களைக் காப்பாற்ற இது போன்ற உணவகங்களும் கருவிகளாக இருக்கின்றன!

இன்றைய பொழுது முடிந்தது. நாளை காலை 6 மணிக்கு மெரீனா கடற்கரைக்குச் சென்று காலார நடந்து வரலாம் என்று சித்தியின் பிள்ளைகள் சொல்ல, குதூகலத்துடன் சரியென்று சொல்லி தூங்கச் சென்றேன்.

மறு நாள் காலை கடற்கரையில்?!

தொடரும்...

15 comments:

வவ்வால் said...

//சென்னை விமான நிலையம்...முதல் அதிர்ச்சி கழிப்பறைகள். எத்தனை வெளிநாட்டவர்கள் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்குகிறார்கள்?! அவர்கள் நம்ம ஊரைப்பற்றி என்ன நினைப்பார்கள்?! ஹலோ!!! தமிழக அரசாங்கமே! தமிழகச் சுற்றுலா துறையே! கொஞ்சம் முழிச்சிக்கோங்க! வெளிநாட்டவர்களை விடுங்கள். கழிப்பறைகள் சுத்தமாக இருக்கவேண்டுமென்பது ஒரு அடிப்படை எதிர்பார்ப்பு தானே?//

26 வருஷம் இங்கே இருந்துட்டு போன ஆளு தானே நீங்க, இங்கே இருந்து போகும் போது இதே விமான நிலையம், கழிப்பறை எல்லாம் பார்க்காமலாப்போனிங்க. இதே விமான நிலையம் வழியா தானே வெளிநாட்டுக்கு போனிங்க , அப்போவும் இப்படித்தானே கக்கூஸ் இருந்து இருக்கும்,அப்போலாம் இந்த நாத்தம் தெரியாம போச்சா? அப்போ உங்களுக்கு இந்த அடிப்படை சுத்தமாக இருக்கணும்னு ஏன் தோன்றவில்லை, சும்மா வெளிநாட்டில் இருந்து வந்திருக்கோம்னு சீன் காட்ட இப்படிலாம் எழுதனுமா?

இந்தியாவை விட்டு போகும் போதும் நாறிக்கொண்டு இருந்த கழிப்பறை இப்போதும் நாறிக்கிட்டு இருக்குனு கூட சொல்ல தெரியலை, என்னமோ முதல் அதிர்ச்சியாம்?

//Physio Therapy, Pharmacy, Lift போன்ற அறிவிப்பு பலகைகளெல்லாம் ஆங்கிலத்திலேயே இருந்தன. மிகுந்த மன வேதனையுடன் இதனைச் சொல்கிறேன்...அங்கே ஒரு சுகாதாரமான சூழ்நிலையே இல்லை. தேவகி மருத்துவமனைக்கு என்னவாயிற்று?//

இங்கே அரசு மருத்துவமனைக்கு என்னாச்சுனு கேட்க ஆள் இல்லை. காசு கொடுத்து வைத்தியம் செய்துக்கொள்ள போகும் மருத்துவமனைக்கு என்னாச்சுனு ஆர்வமாக கேட்க வந்துட்டிங்களே? சேவை நல்லா இல்லைனா அங்கே யாரும் போகாம இருக்கப்போறாங்க, அதை விட்டு அந்த தனியார் மருத்துவமனைக்கு என்னாச்சு என்று ரொம்ப கவலைப்படுறிங்களே, உங்களுக்கு எல்லாம் இந்தியாவில் இருக்கும் 100 சொச்சம் கோடி மக்கள் பத்தி என்ன தெரிய போகுது!

தாரா said...

வவ்வால் அவர்களே,

டென்ஷன் ஆகாதீங்க. இந்தப் பதிவைப் போடும்போதே எனக்குத் தெரியும், நான் 'சீன்' காட்டுவதாகப் பல பேர் என்னைத் தவறாக நினைப்பார்கள் என்று. நீங்க சொல்ற மாதிரி இதே விமான நிலையத்தில் இதே கழிப்பறைகளை நான் இங்கிருக்கும் போதே பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போது என்னிடம் வலைப்பதிவு இல்லை, என் வருத்தத்தைப் பகிர்ந்துகொள்ள. மற்றொரு காரணம், அப்போதிருந்த மனநிலை வேறு. சுற்றுப்புற சுகாதாரத்தின் அவசியமும் முக்கியத்துவமும் எனக்கு அமெரிக்கா சென்ற பின்னரே உரைத்தது.

மேலும், தேவகி மருத்துவமனைக்கு நான் சென்று நேரில் பார்த்ததால் அதனைப் பற்றி எழுதியிருக்கிறேன். அரசு மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் அதனைப் பற்றியும் எழுதியிருப்பேன். நான் பார்த்ததைத் தானே எழுத முடியும்?!
இதுக்கே இப்படிச் டென்ஷன் ஆனீங்கன்னா, நான் கடற்கரையைப் பற்றி எழுதப்போவதற்கு என்ன சொல்லப் போறீங்களோ?!

நன்றி,
தாரா.

dondu(#11168674346665545885) said...

நீங்கள் சென்ற காரைக்குடி உணவகம் சென்னையில் எங்கு இருக்கிறது? தகவல் தெரிந்து கொள்ளவே கேட்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

தாரா,

// மற்றொரு காரணம், அப்போதிருந்த மனநிலை வேறு. //

அமெரிக்கவாசம் உங்களின் பார்வையை மாற்றியுள்ளது. அவ்வளவே.

உங்களின் பார்வை மாறியுள்ளதால் மச்சானை தம்பி என்று அழைக்க முயல்கிறீர்கள். இது உங்கள் பார்வையின் குற்றமே தவிர மச்சானின் குற்றம் அல்ல. மச்சான் மச்சானாகவே இருக்கிறார். :-)))

அவர் அப்படித்தான் இன்னும் இருப்பார்.

*****

// சுற்றுப்புற சுகாதாரத்தின் அவசியமும் முக்கியத்துவமும் எனக்கு அமெரிக்கா சென்ற பின்னரே உரைத்தது. //

இங்குள்ள சராசரி மனிதனுக்கும் அது "உரைக்கும்" பட்சத்தில் மாற்றம் ஏற்பட வழியுண்டு.

உங்களுக்கு உரைத்த அந்த விசயம் இவர்களுக்கும் உரைக்க என்ன செய்யலாம். அத்தனை பேரையும் 5 வருடத்திற்கு அமெரிக்கா அனுப்பி வைக்கலாமா?

***

சுகாதார பழக்கவழக்கங்கள் மற்றும் Civic Sense சமாச்சாரங்கள் சிறுவயதில் இருந்து கற்றுக் கொடுக்கப்படவேண்டும். அதே சமயம் கற்றவற்றை கடைபிடிக்கத் தோதான சூழலும் வேண்டும்.

***

ஜெர்சி சிட்டியிலும் சரி எடிசனிலும்(நியூ ஜெர்சி) சரி இந்தியர்கள் அந்த வணிகத் தெருக்களை வைத்து இருக்கும் சுகதாரம் படு கேவலமாக இருக்கும். ரோட்டில் பான் துப்புதல், குப்பை போடுதல் ... என்று எல்லா இந்திய அடையாளங்களும் இருக்கும். எனவே அமெரிக்காவில் வாழும் எல்லா இந்தியர்களும் ரோட்டில் குப்பை போடாதா நல்லவர்கள் என்று சொல்ல வேண்டாம்.

இந்தியர்கள் அதிகமாக வாழும் பகுதியில் "வெள்ளையர்கள்" வீடு வாங்க யோசிப்பது உங்களுக்கு தெரிந்த விசயம்.

நல்லவைகள் கற்றுக் கொடுக்கப்பட்டு, வாய்ப்பும் இருந்தால் மாற்றங்கள் ஏற்பட சாத்தியக் கூறுகள் அதிகம்.

***

வாரா வாரம் இந்தியாவில் அப்படியே இருக்கும் விசயங்களை, உங்களின் கலர் கண்ணாடி கொண்டு பார்க்காமல் , அப்படியே பாருங்கள். பதிவு செய்வதுடன் உங்களால் முடிந்த மாற்றத்தை கொண்டுவர முயலுங்கள்.


நீங்கள் சொன்ன அந்த கழிப்பறையை சுத்தப்படுத்துபவனின் சிரமங்கள், அவன் சம்பளம்..என்று ஆராய்ந்து ஒரு கழிப்பறையை தத்து எடுத்து உங்களின் எண்ணப்படி ஒன்றை நடத்த முயற்சிக்கலாம்.

**

இந்தியாவில் கக்கூசுக்குத்தான் நன்கொடைகளும் தர்மகர்த்தாக்களும் தேவை.

**

நீங்கள் மெரிக்க தமிழ் சங்க நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்துகொள்வதால் இந்தக் கேள்வி.

சிவக்குமாரையும் மற்ற திரை நட்சத்திரங்களையும் அழைத்து உங்களின் நேரத்தை அங்கே சந்தோசமாகக்கழிக்கிறீர்கள். இங்கே இறங்கியவுடன் கக்கூசில் இருந்து ஆரம்பித்துவிடுகிறீர்கள்.

அங்கே வந்த நடிகர் சிவக்குமாரிடம் இந்தியக் கக்கூஸ் எப்படி இருக்கிறது என்று கேட்டீர்களா? அல்லது இங்குள்ள ஒரு கக்கூஸ் கழுவுவனை அமெரிக்காவிற்கு அழைத்து அங்கேயுள்ள சுகாதாரம் பற்றிப்பாடம் எடுத்தீர்களா?


***

எல்லா NRI அல்லது அயல்நாட்டு இந்திய வம்சாவழியினரும் இங்கே வந்தவுடன் இதையே ஆரம்பிக்கிறார்கள். நொள்ளை சொல்வது தவறு இல்லை. உங்களுக்கு உரிமை இருக்கலாம்.

ஆனால், அமெரிக்காவில் இருக்கும் போது தமிழ்ச்சங்கத்திற்கு நடிகரை அழைப்பது இந்தியாவந்தவுடன் சுத்தம் /கக்கூஸ் பற்றிப் புலம்புவது என்பது முரண்.

தாரா said...

பலூன் மாமா,

நீங்களும் டென்ஷன் அகிட்டீங்களா? என் பதிவை நல்லா படிச்சுப்பாருங்க. நான் மச்சானைத் தம்பி என்று அழைக்க வரவில்லை. மச்சான் இப்படி இருக்கிறாரே என்று வருத்தப்படுகிறேன். அவ்வளவுதான். விமான நிலைய கழிப்பறை கூட சுத்தமாக இல்லையே என்பது என்னுடைய அதிர்ச்சி தான். நான் இந்தியர்களையோ இந்திய அரசாங்கத்தையோ குறை சொல்லவில்லை. குறை என் பார்வையில் என்றே வைத்துக்கொள்ளுங்களேன். ஆனால் விமான நிலைய கழிப்பறை சுத்தமாக இல்லை என்கிற உண்மையை உங்களால் மறுக்க முடியுமா? நீங்க தான் மச்சான் இப்படியே தான் இருப்பார் என்று சொல்லிவிட்டீர்களே?! அப்பறம் இந்திய அரசாங்கமோ, அமெரிக்க தமிழ்ச் சங்கங்களோ, பெட்னா அழைக்கும் நடிகர்களோ மட்டும் என்ன செய்ய முடியும்?!

நன்றி,
தாரா.

தாரா said...

Dondu,

நான் சென்ற காரைக்குடி உணவகம் ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கிறது. மைலாப்பூர், பெசண்ட் நகரிலும் கூட இருக்கிறதென்று கேள்விப்பட்டேன்.

அறிவன் /#11802717200764379909/ said...

வவ்வால்,
வெளிநாடு சென்று திரும்புகிற சிலர் நம்நாட்டில் பார்க்கின்ற நிகழ்வுகள் அவலமாகத்தான் தெரியும்.காரணம் வெளிநாடு செல்லும் முன்னர் நமது பார்வைகள்-சமூகம்,அரசியல்,ஆட்சி,சாலை,கழிப்பறை- ஆகிய அனைத்தையும் பற்றி நமது நாட்டு ஊடகங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு கருத்துடனோ (நமது அரசியல்)அல்லது கருத்தே இல்லாமலோதான் (நமது சாலைகள்,கழிப்பிடங்கள்) இருக்கிறோம்.
ஆனால் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பும் போதுதான் நம் நாட்டின் அவலநிலை முகத்தில் அறைகிறது.
அந்த அவலநிலை மனிதர்கள்,அமைப்புகள் மற்றும் அரசின் மெத்தனத்தையும்,taken for granted தனத்தையும் மிகு வெளிப்படையாக அறிவிப்பதால் கிடைக்கும் ஆயாசமே அவர்களில் வெளிப்பாடுகள்.
இதற்காக this is sucking india,i don't like it you know என்ற பீலா விடும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்தான் நீங்கள் சொல்லும் சீன் காட்டும் பேர்வழிகள்.
என்னைப் போன்ற பலர்,நம் நாட்டிலும் சேவைகள்,அமைப்புகள் சீராக செயல்பட வாய்ப்பு இருக்கும் போதும் , அவ்வாறு செயல்பட விரும்பாத தன்மையையும்,அதைப் பற்றிய எந்த சுரணையும் இல்லாத ஒரு அரசும்-இங்கு கடந்த 30 ஆண்டுகளாக ஆளும் எல்லா அரசுளையும் சேர்த்துதான் சொல்கிறேன் - இருப்பதைக் காணும் வேதனைதான் அது.
ஒரு சாதாரண எடுத்துக் காட்டு-சென்னை விமான நிலைய டாக்ஸிகளின் நிலை மற்றும் விமான நிலைய டாக்ஸி குழுமம் செய்யும் அராஜகம்.
விமானநிலையத்திற்குள் தனியார் கால் டாக்ஸிகள் வந்து சேவை செய்யக்கூடாது என அவர்கள் செய்யும் அடாவடித்தனம்,மீறி வரும் தனியார் ஓட்டுனர்களை அவமதிக்கும்,நிந்திக்கும் கீழ்த்தர வசவுகள்,பயணிகள் ஏதேனும் குறுக்கிட்டுச் சொன்னால் அவர்களுக்கும் சேர்த்து நடைபெறும் அர்ச்சனைகள்....சரி விமானநிலைய குழும வண்டிகளையே அமர்த்திக் கொள்ளலாமெனில்,கிட்டத்திட்ட அமரர் ஊர்தி நிலையில்,இருக்கைகள் கிழிந்து,முடை நாற்றமாடித்துக் கொண்டு இருக்கும் அவை இருக்கும் நிலை,இந்த நாடகத்தை ஓரக் கண்ணால் கண்டும் காணாமல் இருக்கும் காவல் துறை..இவையெல்லாம் பார்க்கும் போது நம் நாட்டின் நாடாண்மையைக்-governance- கண்டு எழும் கோபமே அந்த வெளிப்பாடு.
பொருளாதாரத்தில்,பரப்பளவில்,உலகின் பார்வையில் இந்தியாவை விடக் கீழ்நிலையில் இருக்கும் நாடுகளே,நம்மை விட மேலான சேவை,கட்டமைப்பு வசதிகளை அளிக்கும் போது,இந்தியாவில் அது முடியவில்லை என்பது,நிச்சயம் ஒரு குறைபாடுதான்.
எனது இந்த முதல் பதிவே மேற்சொன்ன நோக்கில் அமைந்த பதிவுதான்.
http://sangappalagai.blogspot.com/2007/08/blog-post_12.html

பூக்குட்டி said...

சீன் காட்டியதுபோல சொல்லதேவையில்லை. அமெரிக்க பாதிப்பு அதிகமாக தெரிந்தாலும் அவர் கருத்தில் முற்றிலும் உண்மை இருக்கிறது.. அதை மறுக்க இயலாது. கழிவறை என்பது நம் அடிப்படை சுகாதாரம் சம்மந்தப்பட்ட விடயம். இதுகூட நம்மவர்களுக்கு சுகாதாராமாக வைக்க தெரியவில்ல அல்லது சோம்பேறிதனம். எங்கே போய் முட்டிக்கொள்வது..?

கக்கூஸ் போய்விட்டு கையை சோப்பு போட்டு கழுவாத எத்தைனையோ சுத்தகாரர்கள் உண்டு. அத்தனைக்கும் அவர்கள் படித்தவர்கள் நாகரீகம் தெரிந்தவர்களாகவே நினைக்கும்படி பேச்சு பேசுவார்கள்.

John Peter Benedict said...

ஒரு சில ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்தியா (தமிழகம்) திரும்பும் அரை குறை NRI-க்கள் பீத்தும் அதே பீத்தைத்தான் நீங்களும் பீத்தியிருக்கிறீர்கள். எடுத்தவன் புதிதாக இருந்தாலும் எடுத்தது என்னவோ அதே வாந்திதான் -:) உங்கள் பார்வையும் இப்படி இருந்துவிட்டதறிந்து வருந்துகிறேன். தமிழகத்தை அமெரிக்காவின் 51வது மாநிலமாக நினைத்துவிட்டீர்கள் போலும்! இந்தியா வேறு அமெரிக்கா வேறு என்பதை நீங்கள் விரைவில் உணர்ந்துகொள்ள எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள். தாயகப் பயணத்தை நல்ல பயனுள்ள வழியில் செலவழித்துவிட்டு வாருங்கள். தமிழ்ச் சங்க பொங்கல் விழாவிற்கு வந்துவிடுவீர்கள் தானே?

தாரா said...

ஜான், எனக்குப் புரியவில்லை...

நான் என்ன பீத்தியிருக்கிறேன்? அமெரிக்காவைப் பற்றி நான் எதுவுமே சொல்லவில்லையே? தமிழ்நாட்டையும் அமெரிக்காவையும் நான் எங்குமே ஒப்பிடவில்லையே? உண்மைகள் சுடத்தான் செய்யும்.

நான் பொங்கல் மாமியார் வீட்டில் கொண்டாடப் போகிறேன். அதனால் உங்கள் பொங்கல் விழாவிற்கு வாசிங்டனில் இருக்கமாட்டேன் :-)

நன்றி,
தாரா.

cheena (சீனா) said...

அமெரிக்காவிலிருந்து வரும் ஒருவர் அவரது பார்வையில் சென்னையைப் பற்றி எழுதி இருக்கிறார். அதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. எனினும் இந்த வலை அரசியல் எனக்குப் புரிய வில்லை.

இந்த ஆட்டைக்கு நான் வர்லே

வவ்வால் said...

//அமெரிக்காவிலிருந்து வரும் ஒருவர் அவரது பார்வையில் சென்னையைப் பற்றி எழுதி இருக்கிறார். அதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. எனினும் இந்த வலை அரசியல் எனக்குப் புரிய வில்லை.//

அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்த ஒருவாரா என்பது தான் இங்கு கேள்வியே, எனவே இதில் என்ன வலை அரசியல் கண்டீர்?

வெறுமனே 5 ஆண்டுகள் மட்டும் அங்கே இருந்து விட்டு , பின்னர் இங்கே எல்லாம் ஏன் இப்படி தாறு மாறாக இருக்குனு கேட்டா "ரொம்ப புதுசா"கேட்பதால் தான் அப்படி கேட்க வேணியது ஆச்சு.

ஏற்கனவே இப்படி தானே இருக்குனு சொல்றோம்,அதோடு தானே இங்கே 100கோடிக்கும் மேல் வாழ்கிறோம்,(அந்த 100 கோடியில் ஒருவராக வாழ்ந்தவர் தானே இவரும்) ஆனால் 5 ஆண்டுகள் அயல் நாடு போய்விட்டு வந்ததும் , "முதல்" அதிர்ச்சியாக சொல்வதை தான் மிகையான ஒன்றாக சொன்னோம்!

மற்றப்படி அசிங்கம் அசிங்கமாகவே தான் இருக்கு அது மாறனும் என்பது தான் அனைவரின் ஆசையும், ஆனால் சும்மா கொஞ்ச நாள் வேறு எங்கோ போய்விட்டு வந்து ரொம்ப புதுசா இதைப்பார்ப்பது போல சொன்னால் எப்படி?

I think now you got my(our) point!

இப்போ சீனா தான் ஏதோ வலைஅரசியலுக்கு விதைப்போடுவது போல தெரிகிறது(உங்க சொந்தமா ,ஊர்க்காரரா, இல்லை எதுவும் முன் ஜென்ம பந்தமா தாரா?)

இப்போ நானும் வலை அரசியலை ஆரம்ப்பிக்கிறேன்! :-))
(என்னங்கையா இது எதுனா சொன்னா தானாவே அரசியல், அவியல்னு வேப்பிலை அடிக்க கிளம்பிடுறிங்களே)

Priya said...

Hello,

I am writing in English as I am not familiar of posting in Tamil. I totally agree with the author on ariport cleanliness. She has expressed all my concerns from my viewpoint. It is not even as neat as a theare in Chennai. They have better restrooms.

Another point I would like to bring up about the airports, which I felt disappointed at was the queue maintenance. On our last trip to India, another plane had arrived just 30 minutes before us from UAE. The queue only lengthened and no additional officers came forward to split the work adn clearing the queue. Worse still, some queues never moved forward compared to the other queues. Imagine everyone tired from 20 hours of travel standing for an hour in the queue with kids crying.
They could have at least formed a single queue and assign the next person to the available officer. That way, the first come would get first service.
Overall, the work of the Chennai Airport authorities is very poor and careless about the travellers who use the airport.
They only concentrate on unnecessary decorations and unsuitable flooring. I could not move the cart with the check in luggages with my shoes on as the floor was too slipperry. A simple but clean carpet would do instead of sliperry marble floors.

-Priya

Anonymous said...

//அமெரிக்காவிலிருந்து வரும் ஒருவர் அவரது பார்வையில் சென்னையைப் பற்றி எழுதி இருக்கிறார். அதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை..//
I fully agree with you. I don't think Tara badmouthed.... Living abroad one hears lots of progress made in India. YOU imagine better conditions and yet when one enters after a gap of 5 years or so, the 'reality" strikes. She perhaps naarated on this basis.

Just because one lived here for 25 years doesn't mean they expect the conditions to remain forever like it...at least in places lie airport. First impression is the best impression after all!

முகமூடி said...

// நீங்கள் சொன்ன அந்த கழிப்பறையை சுத்தப்படுத்துபவனின் சிரமங்கள், அவன் சம்பளம்..என்று ஆராய்ந்து ஒரு கழிப்பறையை தத்து எடுத்து உங்களின் எண்ணப்படி ஒன்றை நடத்த முயற்சிக்கலாம் //

எர்ரம் எர்ரம்னா இல்ல குர்ரம்னுமாம் குதிரை.. அது மாதிரியே எந்த ப்ரச்னைனாலும் தனி ரூட்டுல ஆரம்பிச்சுடுவாங்கய்யா..... கண் தெரியவில்லை என்று டாக்டரிடம் போனால் 'அதெல்லாம் அப்பிடித்தான்யா இருக்கும்'னு சொல்லிட்டு வேணும்னா இத சாப்பிடுன்னு தலைவலிக்கு மாத்திரை தருகிறார் என்று வைப்போம், டாக்டருக்கு என்ன ப்ரச்னையோ என்ன சம்பளம் வாங்குறாரோ என்று சமூக அக்கரை இருப்பவர்கள் அதை அப்படியே சாப்பிடுவார்கள் போல...

எந்த நாட்டிலுமே அடிப்படை வேலையை செய்பவர்களுக்கு இருப்பதிலேயே அடிப்படையான சம்பளம்தான் தருகிறார்கள். அந்தந்த நாட்டு பொருளாதாரத்தை பொறுத்து அது அவனுக்கு சிரமமேற்படுத்தும் வேலைதான். ஆனால் ஏன் இந்திய விமான நிலைய கழிப்பறை மட்டும் இப்படி இருக்க வேண்டும். உலகில் இந்த தொழில் என்றில்லை எல்லா தொழிலிலுமே சிறுபான்மை தவிர்த்து அனைவருக்குமே தனது சம்பளம் குறித்தும் பணி குறித்தும் அங்கலாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. நீங்களோ நானோ ஒரு குறிப்பிட்ட சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டு வேலையில் சேர்ந்தால் அந்த வேலை ஒழுங்காக நடைபெறாவிட்டால் உடனே நமது பின்புலம், சம்பளம் எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்கிறார்களா அல்லது வேறு என்ன நடக்கும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். செய்யப்போகும் வேலை என்ன அதற்குறிய சம்பளம் என்ன என்று தெரிந்துதானே அவர் வேலைக்கு சேருகிறார்.

கழிப்பறை சுத்தம் செய்பவருக்கு கஷ்டம் என்றால் போய் நேரம் இருந்தால் அவர் கஷ்டம் களைய முயற்சியுங்கள். ஆனால் அவருக்கு சிரமங்கள் அதனால் அவர் வேலையை அவர் இஷ்டப்பட்டு முடிந்தால்தான் செய்வார் என்று வக்காலத்து வாங்காதீர்கள். (ஒரு தகவலுக்கு: எங்கள் ஏரியா குப்பை பொறுக்குபவர் தினமும் கடமையே கண்ணாக பணியாற்றுவார். சென்ற முறை இந்தியா சென்ற போது பொங்கல் சமயம் அவருக்கு 100 ரூ தந்தேன். வாங்க மறுத்துவிட்டார். மகனை நல்லபடியாக படிக்க வைத்து நல்ல வேலையில் இருக்கிறான். மகளுக்கு கல்யாணம் செய்து கொடுத்துவிட்டேன். அரசாங்கத்தில் தரும் சம்பளம் எனக்கும் மனைவிக்கும் போதுமானதாக இருக்கிறது என்றார். சாட்டையடியாக இருந்தது அவரின் சுயமரியாதை என்று பேன்ஸியாக எழுதலாம். ஆனால் வருடா வருடம் தரும் பொங்கல் பரிசு - இனாம் என்கிறார்கள் - என்ற நினைப்பிலேயே அந்த வருடமும் தர முயற்சித்ததாலும் அவர் அவ்வருடம் புதியவர், வித்தியாசமான கொள்கை கொண்டவர் என்றதாலும் சாட்டையெல்லாம் அடிக்கவில்லை. ஆனால் அவரிடம் பேசிக்கொண்டிருந்ததில் அவரின் வாழ்க்கையில் சில விஷயங்களை சொல்லி ஆச்சரியப்படுத்தினார். அவரிடம் இருந்து ஒரு விஷயத்தை அன்று கற்றுக்கொண்டேன்)

மேலும் விமான நிலைய கழிப்பறையை பொதுமக்களில் ஒருவர் தத்து எடுக்க வேண்டும் என்றால் அந்த வேலையை செய்வதற்காகவும் சேர்த்து வரி வசூலிக்கும் அரசாங்கமும் விமான நிலைய குழுமமும் வேறு என்ன அதைவிட முக்கிய விஷயத்தில் புடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். எங்கும் இல்லாத விஷயமாக பார்வையாளர்கள் விமான நிலையத்தின் உள்ளே செல்பவர்களுக்கு என்று 60ரூ கட்டணம் வசூலிக்கிறார்கள். தினமும் நூற்றுக்கணக்கானோர் அதை வாங்கி உள்ளே செல்கிறார்கள். அந்த டிக்கட்டை சரிபார்ப்பவர்கள் மத்திய அரசில் சம்பளம் வாங்கும் CISF பாதுகாப்பு படையினர்... ஆக அந்த வசூல் பணம் டிக்கட் விற்பனையாளர் சம்பளம் தவிர்த்து எதற்குத்தான் உபயோகப்படுகிறது?

அதுமட்டுமல்ல.. அடுத்த முறை விமான நிலையத்தில் இறங்கியவுடன், "இந்த கழிப்பறையை நான் தத்து எடுத்துக்கொள்கிறேன்" என்று விமான நிலைய ஆணையரிடம் சென்று கல்வெட்டு பேசிப்பார்க்கட்டும்... வந்துட்டான்யா எல்லாம் தெரிஞ்ச NRI டோமரு என்ற பாணியில் பதில் இருக்கிறதா அல்லது ஒரு கழிப்பறையை உடனே பட்டா போட்டு கொடுக்கிறார்களா என்பதை தெரிவித்தால் வசதிப்பட்டவர்கள் தத்து எடுக்க வசதிப்படும். நான் அப்பொழுதும் வரி வசூலிக்கும் நாய்கள் இதை ஏன் சரியாக செய்வதில்லை என்று குறை மட்டுமே சொல்வேனே தவிர தத்து எல்லாம் எடுக்க மாட்டேன்.