Tuesday, January 01, 2008

திருச்சியிலிருந்து தாரா - 3

முந்தைய பதிவுகள்:

சென்னையிலிருந்து தாரா - 1
சென்னையிலிருந்து தாரா - 2

சென்னையிலிருந்து தப்பி திருச்சி வந்ததும் அக்கடா என்றிருந்தது. சென்னையைப் போல் திருச்சி பரபரப்பாக இல்லை. நிறைய இடங்களில் புதிய சாலை போடும் வேலை நடந்துகொண்டிருந்தது. அமைச்சர் கே.என் நேரு திருச்சியை மேம்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இருப்பதாக அப்பா சொன்னார். எப்போது திருச்சி வந்தாலும் மலைக்கோட்டை கோவிலுக்கு மேலே ஏறிச் செல்வது வழக்கம். அந்தி சாயும் நேரத்தில் அந்த விபூதி குங்கும வாசனை, 'டிங் டிங்' என்ற கோவில் மணியோசை, புடைவையைப் படபடக்க வைக்கும் தென்றல் காற்று, மேலிருந்து கீழே பார்க்கும் போது மினுமினுக்கும் திருச்சி மாநகரம் - இதெல்லாம் ஒரு ரம்மியமாக சூழ்நிலையாக இருக்கும். ஆனால் 5 வருடங்களுக்கு முன்பே மலைக்கோட்டை ஏறும் போது தஸ்புஸ் என்று மூச்சு வாங்கியது. இந்த முறை கட்டாயம் ஏற முடியாதென்று முடிவு செய்து, மலைக்கொட்டையை ஒரு ஏக்கப் பார்வை பார்த்ததுடன் நிறுத்திக்கொண்டேன். தெப்பக்குளம் அருகில் உள்ள கடைத்தெரு எப்போதும் போல் ஜகஜோதியாக இருந்தது. 'சாரதாஸ்' கடையை பிரம்மாண்டமாக விரிவுபடுத்தியிருக்கிறார்கள். ஒரு தெரு முழுவதுமே சாரதாஸ் கடை தான்! திருச்சியில் புகழ்பெற்ற மங்கள் & மங்கள் பாத்திரக்கடைக்குப் போட்டியாக சென்னை ரத்தினா ஸ்டோர்ஸை அங்கே தொடங்கியிருக்கிறார்கள். கூடிய சீக்கிரம் திருச்சியும் சென்னைபோல் கூட்டமுன் நெரிசலுமாக மாறப்போவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன!

இரண்டு நாட்கள் அம்மா அப்பாவுடன் அமைதியாகப் பொழுதை ஓட்டினேன். அதற்கப் பிறகு சும்மா உட்கார்ந்திருக்கிறோமே என்று மனம் உறுத்த, ஒரு சிறிய அறிவுப்பூர்வமான பயணம் சென்று வந்தேன். திருச்சியில் திருவள்ளுவர் தவச்சாலை என்று ஒரு இடம் நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு இளங்குமரனார் என்று ஒரு தமிழ் அறிஞர் பெட்னா விழாவுக்கு வந்திருந்தார். 80 வயதாகும் இவர், தமிழில், முக்கியமாக திருக்குறளில் பல ஆராய்ச்சிகள் செய்து சாதனைகள் புரிந்துள்ளார். 1963 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு கையினால் விருது வாங்கியிருக்கிறார். திருச்சியிலிருந்து கரூர் செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் பயணித்தால், அல்லூர் தாண்டி இடது புறம் இருக்கிறது அவர் தோற்றுவித்து நடத்தும் இந்தத் திருவள்ளுவர் தவச்சாலை. அது ஒரு பழைய மாடிவீடு. உள்ளே நுழைந்தபோது, தனியாக உட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தார் ஐயா இளங்குமரனார். அந்த வீட்டில் ஒரு அராய்ச்சியகம், நூலகம், ஆலயம் என்று மூன்று பகுதிகள் இருக்கின்றன. நூலகத்தில் கிட்டத்தட்ட 17,000 அரிய தமிழ்ப் புத்தகங்கள் - சங்க இலக்கியங்கள், திருக்குறள் மொழிபெயர்ப்புகள் உட்பட இருக்கின்றன. கடந்த பல ஆண்டுகளில் ஐயா பார்த்துப் பார்த்து இந்த நூல்களைச் சேகரித்திருக்கிறார். தமிழ் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் இங்கே வந்து இந்தப் புத்தகங்களை அங்கேயே படித்துவிட்டு குறிப்பெடுத்துக்கொள்கிறார்கள். மாடியில் ஆராய்ச்சிக்கூடம். அங்கே இருப்பவற்றைப் பார்த்து வாய்பிளந்தேன் நான். ஒரு பெரிய அறையின் இடது புறமும் வலது புறமும் ஐயா வாங்கிய விருதுகளும், கேடயங்களும் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அறையின் நீள வாக்கில் போடப்பட்டிருந்த நீண்ட மேஜைகளில் தமிழ் அறிஞ்சர்களின் புகைப்படங்கள், திருக்குறளை மொழிபெயர்த்தவர்களின் புகைப்படங்கள் அழகாக ஒட்டப்பட்டிருந்தன. பாரதியார், தேவநேயப் பாவாணர் போன்றவர்களின் கையெழுத்திப் பிரதிகள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. எப்பேற்பட்ட சேமிப்புகள் இவை!!! கோடி ரூபாய் கொடுத்தாலும் இவை வெளியே எங்கேயும் கிடைக்காது. ஆராய்ச்சிக்கூடத்தை விட்டு வெளியேறி கீழே வந்தால், வீட்டின் பக்கவாட்டில் ஒரு சிறிய ஆலயம். உள்ளே திருவள்ளுவரின் சிறிய உருவச் சிலை. காவிரி ஓடும் பூமியில் திருவள்ளுவருக்கு இப்படியொரு தவச்சாலையை அமைத்து சுயநலமில்லாத தமிழ்ச் சேவை செய்துகொண்டிருக்கும் இளங்குமரனார் ஐயாவை என்னவென்று சொல்வது? விவரிக்க வார்த்தைகள் இல்லை என்னிடம்!

இந்தச் தவச்சாலை ஒரு பொக்கிஷம்! என்னுடைய ஆசை என்னவென்றால், தமிழக அரசு அல்லது சுற்றுலாத் துறை இந்த தவச்சாலையைத் தத்தெடுத்துக்கொண்டு, அதனை செம்மைப்படுத்த வேண்டும். திருச்சியில் உள்ள சுற்றுலா தளங்களின் பட்டியலில் இந்தச் தவச்சாலையும் இடம்பெறவேண்டும். தற்போது அங்கே இருக்கும் அரிய புத்தகங்களெல்லாம் பழுப்பு நிற அட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. இப்போது பல நவீன புத்தக பாதுகாப்பு முறைகள் வந்துவிட்டன. அந்த உதவிகள் அங்கே வழங்கப்படவேண்டும். இந்தப் புத்தகங்களைப் போலவே ஐயா இளங்குமரனாரும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். இவருக்குப் பின் இந்தத் தவச்சாலையும் பொக்கிஷங்களும் யாருடையப் பொறுப்பில் விடப்படும் என்று அவரிடம் கேட்க நினைத்துக் கேட்காமல் வந்துவிட்டேன்.

5 comments:

Me said...

சுமார் 22 வருடங்கள் திருச்சியில் வாழ்ந்திருந்தும் அல்லூரில் இருக்கும் திருவள்ளுவர் தவச்சாலையை பற்றி அறியாமல் இருந்ததிற்கு வெட்கப் படுகிறேன். அடுத்தமுறை திருச்சி செல்லும்போது அல்லூர் செல்வது நிச்சயம்.

Anonymous said...

சகோதரி உங்கள் எழுத்து ஊரின் நினைவை ஏற்படுத்துகிறது தொடர்ந்து எழுதுங்கள் அப்படியே மாலை நேரம் காவேரி பாலத்தில் நின்று கண்ணை மூடி திறந்து மலைகோட்டையையும் சிறிரங்கத்தயும் ஓடும் காவேரி ஆற்றின் ரீங்காரதை பார்க்காமல் தவரவிட்டுவிடாதிர்கள்

தமிழ் சசி | Tamil SASI said...

என்னுடைய ஆசை என்னவென்றால், தமிழக அரசு அல்லது சுற்றுலாத் துறை இந்த தவச்சாலையைத் தத்தெடுத்துக்கொண்டு, அதனை செம்மைப்படுத்த வேண்டும்

*****

தமிழக சுற்றுலா துறை கையிலெடுத்து நன்றாக பராமரிக்கப்படும் இடங்களை விட பாழாகிப் போன இடங்கள் தான் அதிகம். இதைப் போன்ற இடங்களை இத் துறையில் ஆர்வம் உள்ள சிலர் ஏற்று தொடர்ந்து நடத்துவது தான் சரியாக இருக்கும்

உங்கள் பயண அனுபவங்கள் சுவையாக உள்ளன

seethag said...

தாரா எனக்கு அந்த வீணை கற்ற இளஙரின் முகவரி தர இயலுமா?

என்னுடய மின்னஞ்சலுக்கு அனுப்புவீர்களா?

cheena (சீனா) said...

திருச்சியை பற்றியும், இளங்குமரனார் பற்றியும் எழுதிய தகவல்கள் அருமை. அவருக்குப் பின் ..... யாராவது வருவார்கள் அல்லது அரசுடமையாக்கப்படும்.