இந்தப் பதிவில் எழுதியிருப்பவை என்னுடைய கருத்துக்கள் அல்ல. நியூஜெர்சியில் வசிக்கும் என் உறவிணர் மின் அஞ்சல் மூலம் என்னிடம் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் இவை. அவர் வலைப்பதிவர் அல்ல. தன் கருத்துக்களுக்கு எதிர்வினைகளை அவர் அறிந்துகொள்ள விரும்பியதால் அவருடைய ஆங்கில மின் அஞ்சலை மொழிபெயர்த்து(சிரமப்பட்டு :-)) என் பதிவில் தந்திருக்கிறேன். இனி தொடர்ந்து படியுங்கள்...
ஒரு சமூக சீர்திருத்தவாதியின் வெற்றி, சமூகத்தின் மீதான அவருடைய தாக்கத்தைக் கொண்டும், சமூகம் எந்த அளவு அந்த சீர்திருத்தவாதியின் கனவுகளைப் பிரதிபலிக்கின்றது என்பதன் அடிப்படையிலும் மதிப்பிடப்படுகின்றது. தமிழ் சமுதாயத்தை, பெரியாரின் முயற்சிகளும் கொள்கைளும் எவ்வாறு சீர்திருத்தியிருக்கின்றன என்பதைப் பற்றி சற்று அலசிப்பார்போம்.
மதமும், மூடநம்பிக்கையும்
மற்ற எல்லாவற்றையும் விட மதக் கட்டுப்பாடுகளையும், மூட நம்பிக்கைகளையுமே பெரியார் அதிகமாக எதிர்த்தார். ஆனால், இன்று பத்திரிக்கைகள், தொலைகாட்சிகளை ஒரு பார்வை பார்த்தாலே போதும், மூட நம்பிக்கைகள் இன்னும் உயிருடன் தலைவிரித்து ஆடுகின்றன என்று. ஜாதகம், வாஸ்து, விரதம், மதச் சடங்குகள் இவற்றைப் பற்றி எழுதாத பத்திரிக்கைகளே இருக்க முடியாது. தமிழர் வீட்டில் திருமணமாக இருந்தாலும் சரி, சாவாக இருந்தாலும் சரி, அந்தந்த சாதி மதச் சடங்குகளோடு கோலாகலமாக நடந்தேறுகிறது.
தனது கடவுள் மறுப்புக் கொள்கைக்கு பெரியாரே எதிர்பார்க்காத ஒரு விளைவு ஏற்பட்டது. அவரது அரசியல் வாரிசுகளான அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர், கடவுளை மறுத்தார்கள், ஆனால் தாமே கடவுளாக உருவெடுத்தார்கள். இந்த அரசியல் தலைவர்கள், கட்சித் தொண்டர்களால் கடவுளாகப் போற்றப்பட்டு பூஜிக்கப்படும்போது, அதுவே பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைக்கு முரணாக அமைகிறதே?! இந்தத் தலைவர்களைத் தட்டிக் கேட்பவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அரசியல் தலைவர்களுக்காக தீக்குளிப்பது, தற்கொலை செய்துகொள்வது போன்ற வெட்கக்கேடு தமிழ்நாட்டில் தான் அதிகம் நடக்கிறது.
வெற்றுப் புகழ்ச்சி & தனிமனித வழிபாடு (Sycophancy & Personality Cult)
தமிழ் நாட்டில் மட்டும் தான் அரசியல் தலைவர்கள் "புரட்சித் தலைவர்", "கலைஞர்", "பேராசிரியர்", "நாவலர்", "மக்கள் கலைஞர்" போன்ற அலங்காரப் பட்டங்களால் அழைக்கப்படுகிறார்கள். பெரியார் சுயமரியாதை அனைவருக்கும் முக்கியம் என்று எவ்வளவோ வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் அரசியல் உலகத்தில் சுயமரியாதை என்பதனைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. உயர் காவல் அதிகாரிகள், கமிஷனர், DGP போன்றவர்கள் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க கட்சித் தொண்டர்களுடன் வரிசையில் நிற்கிறார்கள். ஜனநாயக முறைகள் பின் தள்ளப்பட்டு, தலைவர்களின் குடும்பத்தார் கட்சிப் பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள். கட்சித் தொண்டர்களே இத்தகைய முடிவுகளை ஊக்குவிக்கிறார்கள். கணிமொழி என்றுமே கட்சித் தொண்டராக இருந்ததில்லை. ஆனால் அவரை விட தகுதியானவர்களையும், பத்து வருடங்களாக கட்சியில் தொண்டாற்றிக்கொண்டிருப்பவர்களையும் புறக்கனித்துவிட்டு, அவருக்கு எம்.பி பதவி அளிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டு அரசியலில் சினிமா நடிகர்களின் பங்கு மிக மோசமான தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு நடிகரும் தனக்கு எல்லையே இல்லை என்பது போல் நடந்துகொள்கிறார்கள். நாளைய முதலமைச்சர் தாம் தான் என்ற நினைப்பை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது, பெரியாரின் பகுத்தறிவு/சுயமரியாதைக் கொள்கைகளுக்கு என்னவாயிற்று? அவை எங்கேயாவது ஒரு இடத்திலாவது வேறூன்றியிருக்கிறதா? அப்படி வேறூன்றியிருந்தாலும், எப்படி அவ்வளவு எளிதாக பிடுங்கியெறியப்பட்டது? அதுவும் அவருடைய சீடர்களாலேயே?!
பிராமண எதிர்ப்பு, தீண்டாமை, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம்
தீண்டாமையை நிலைநிறுத்துவதிலும், தலித் அடக்குமுறையிலும் பிராமணர்களின் பங்கும் மனு சாஸ்திரத்தின் பங்கும் மறுக்கமுடியாதது. இதில் முக்கியமான ஒன்றை நாம் நினைவில் கொள்ளவேண்டும். தலித்துகள் மட்டுமே சாதிப் பிரிவுகளின் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். மற்ற பிராமணர் அல்லாதவர்கள் தம் சாதியின் சமூக நிலையினால் பாதுகாக்கப்பட்டே இருக்கின்றனர். தலித் விடுதலை, தீண்டாமை ஒழித்தல் இவற்றின் வெற்றியை காந்தி, நேரு, அம்பேத்கார் போன்றோறின் சுதந்திரப் போராட்டத்தின் விளைவாகவே நாம் பார்க்கவேண்டும். தீண்டாமை முற்றிலும் வேர் அறுக்கப்படவில்லை என்றாலும், அந்த மனிதாபிமானமற்ற செயலைத் தடுக்க சட்ட ரீதியான முயற்சிகள் எடுத்ததற்கு நம் சுதந்திரப் போராட்டத் தலைவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும், முக்கியமாக மஹாத்மாவுக்கு.
ஆனால், அரசியல் தளத்தில், பிராமணர்களின் ஆதிக்கத்தை ஒழித்தல் என்பதனை ஒரு சாதனையாக ஏற்றுக்கொள்ள முடியாது. இன்றும் தலித்துகள், OBC/MBC என்ற சமூகப் பிரிவினரால் ஒடுக்கப்படுகின்றனர். OBC பிரிவினைச் சேர்ந்த யாதவர்களையும், பட்டேல்களையும் தலித்துகளை அதிகமாக ஒடுக்குபவர்களாக அடையாளம் கண்டு புரட்சி செய்திருக்கிறார் மாயாவதி. இன்றும் தலித்துகள் பல கிராமங்களில் தேர்தலில் போட்டியிட முடியாது, ஏன்? தம்ளர்களில் தண்ணீர் குடிக்கக் கூட முடியாது. இந்தக் கிராமங்களில் OBC/MBC பிரிவினரின் ஆதிக்கமே இருந்து வருகிறது.
பெரியாரின் பிராமண எதிர்ப்பை, ஜெர்மானியர்கள் யூதர்களின் மீது காட்டிய எதிர்ப்பிற்கு (anti-semitic) ஒப்பிடலாம். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும் தம் சாதியை போற்றிப் பாதுகாக்கவும், தம் சாதிப் பெருமைகளை வெட்கமில்லாமல் பறைசாற்றிக்கொள்வதிலும் ஈடுபடும் போது, தன் இனத்தை பாதுகாத்துக்கொள்வதில் பிராமணர்கள் மட்டுமே குறிப்பாக பரிகாசமும், கண்டனமும் செய்யப்படுகிறார்கள். பிற உயர் சாதியினர் தம் எண்ணிக்கையின் அடிப்படையில் சலுகைகள் கேட்கின்றார்கள். சமயச் சார்பற்று செயல்பட வேண்டிய அரசு அதிகாரிகளும், மந்திரிகளும் தம் சாதிச் சான்றிதழைக் காட்டி பறைசாற்றுகிறார்கள். ராதிகா செல்வி போன்றவர்கள் சாதியின் அடிப்படையில் காபினெட் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். யாரால்? சாதிப் பிரிவினைக்கு எதிராகப் போராடிய பெரியாரின் சீடர்களால்!
இன்று தமிழ்நாட்டு அரசியலில் சாதிக் கட்சிகள் ஊடுருவிக்கொண்டிருக்கின்றன. தமிழனின் வாழ்க்கையில் எல்லா அம்சத்திலும் சாதி ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. திருமணத்திற்கு வரன் கேட்டு வரும் விளம்பரங்களில் நன்கு படித்தவர்கள் கூட, தம் சாதியிலேயே மனமகன்/மனமகள் கேட்கிறார்கள். சில விளம்பரங்களில், சாதி உட்பிரிவு கூட வலியுறுத்தப்படுகிறது.
"பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால், முதலில் பார்ப்பானை அடி" என்று பெரியார் சொல்லியது இன வெறுப்பை உமிழும் சொற்கள். அமெரிக்காவில் இத்தகைய பேச்சுக்கு வெறுப்பைத் தூண்டிவிட்டதற்காக சட்ட ரீதியான கண்டனம் உண்டு. இந்திய சட்டம் இன்னும் கடுமையானது. இப்படி பேசும் ஒரு நபரை "சமூக ஒற்றுமையக் குலைக்கும்" குற்றத்திற்காக கைது செய்யலாம். சிறு சிறு முன்னேற்றங்களுக்கும், சாதிப் பாகுபாடு பற்றிய குறைந்தபட்ச விழிப்புணர்ச்சிக்கும் பெரியாரைப் பாராட்டலாமே தவிர, அவர் வெற்றி கண்டார் என்று சொல்வது ஒரு வரலாற்றுத் தவறு. தமிழ்ச் சமுதாயம் கடந்த கால கட்டங்களை விட இன்று பல மடங்கு சாதிப் பிரிவினால் விரிசல் அடைந்து காணப்படுகிறது. இதில் என்ன கொடுமை என்றால், இந்த நிலைக்குக் காரணமே, தம்மை பெரியாரின் வழி வந்தவர்கள் என்று மார் தட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகளால் தான்.
கலப்புத் திருமணங்கள் இன்றும் கிராமங்களில் அரியதாகத்தான் இருக்கின்றன. அப்படியே கலப்புத் திருமணங்கள் நடந்தாலும், அவற்றால் மிகப் பெரிய சாதி சண்டைகள் ஏற்படுகின்றன. OBC/MBC பிரிவினரைச் சார்ந்த எத்தனைப் பேர் தலித்துகளுடன் கலப்புத் திருமணங்களுக்கு தயாராக இருக்கின்றனர்? தலித்துகளை ஒடுக்கியதற்காக பிராமணர்கள் கொடுங்கோலர்களாக நீண்ட காலமாக சித்தரிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் 60 ஆண்டுகள் சுதந்திரத்திற்கு பிறகும், தலித் வரலாற்றில் பிராமணர்கள் மட்டும் தான் வில்லன்களா? Outlook பத்திரிக்கையின் சமீபத்திய கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டில் பிராமணர் மக்கள் தொகை 1% தான். மீதம் இருக்கும் 99% பேரும், எல்லா பிரச்சினைகளுக்கும் அந்த 1% தான் காரணம் என்று சொன்னால் எப்படி?
பெண் விடுதலை
இதில் வெற்றியும் தோல்வியும் கலந்திருக்கிறது. சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம், பரம்பரை சொத்தில் சரி பாதி பங்கு போன்றவைகளைத் தவிர பெண்கள் சம்பந்தப்பட்ட எந்த சாதனையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இன்றும் இந்தியப் பெண்களின் நிலை பரிதாபத்திற்கு உரியதாக இருக்கிறது. மெகா தொடர்கள் பெண்களை மிகத் தவறாக சித்தரிக்கின்றன. இந்த மெகா தொடர்களில், பெரியாரின் வழி வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் தொலைகாட்சியில்! பெண்கள் அழுமூஞ்சிகளாகவும் வில்லிகளாகவுமே அதிகம் இந்தத் தொடர்களில் தோன்றுகிறார்கள். ஒரு தொடரில், குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு மனைவி தானே பெண் பார்த்து தன் கணவனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கிறாள். இத்தகைய கதைகள் தான் "குடும்ப" தொடர்களாகக் கருதப்படுகின்றன.
"தாலி" அடிமைத்தனத்தின் சின்னம் என்பதற்காக தி.க வினர் செய்துகொள்ளும் தாலி கட்டாத திருமணங்கள் மற்றொரு பொலித்தனம். சிலப்பதிகாரத்தில் இந்தத் தாலியைப் பற்றி தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் சிலப்பதிகாரத்தை மட்டும் தமிழின் தலை சிறந்த இலக்கியங்களில் ஒன்று என்று போற்றப்படுகிறதே? ஏன் இந்த முரண்பாடு?
ஆண்கள், முக்கியமாக கணவன்மார்கள், பெண்களை அடித்துத் துன்புறுத்துவது இன்றும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. பெண்களைப் பற்றிய முற்போக்கு முயற்சிகளுக்கோ, ஏன் பெச்சுக்களுக்குக் கூட மதிப்பு கிடையாது. நடிகை குஷ்பூ, திருமணத்திற்கு முன் உடல் உறவு வைத்துக்கொண்டால், தகுந்த பாதுகாப்பு முறையைக் கையாள வேண்டும் என்று சொன்னதற்கு எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்டார் என்பதை இங்கு நினைவுகூறவேன்டும். மு.கருனாநிதியின் மகள் கணிமொழி குஷ்பூவின் கருத்துச் சுதந்திரத்தை ஆதரித்துப் பேசியபோது, பெரியாரின் கொள்கைகளை பெரிதும் மதிக்கும் மு.கருனாநிதி, "எண்ணம் என்பவது ஏப்பம் அல்ல, வெளியிடுவதற்கு" என்று கிண்டல் செய்தார். மனைவி இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்துகொள்வது சட்டதிற்கு எதிரானது. ஆனால் மு.கருனாநிதி பகிரங்கமாகவே இரண்டு மனைவிகளுடன் வாழ்கிறார். இதுதான் பெரியாரின் வழி வந்தப் பெருமையா?
கவர்ச்சியாக உடையனிந்து தங்களை தவறு செய்யத் தூண்டுவதற்காக தமிழ் சினிமா கதாநாயகர்கள், வழக்கமாக கதாநாயகிகளைத் தான் சாடும் அதே சமையத்தில் காமிரா, அந்த கதாநாயகியின் உடல் அங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கும்.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். நான் மீண்டும் வலியுறுத்துகிறேன், பெரியார் சமூக ஏற்றத் தாழ்வுகளை சீர் திருத்த பெரும் முயற்சிகளை எடுத்தார். சிலவற்றில் ஓரளவு வெற்றியும் கண்டார். ஆனால் அவருடைய நம்பிக்கைகள் பலவற்றை அவருடைய தொண்டர்கள் குழி தோண்டி புதைத்துவிட்டார்கள் என்றால் அது மிகை அல்ல.
6 comments:
உங்க பதிவில் மறுமொழி மட்டுறுத்தல் இருக்கா, இருந்தா நான் சொன்னா எல்லாம் நீங்க போட மாட்டிங்க, உங்க செயல்பாடு எப்படி இருக்கும்னு பதிவை படிக்கும் போதே தெரிஞ்சுடுச்சு, மேலும் இதில் அடுத்தவங்க கருத்தை கேட்கணும்னு சொல்றதுலாம் சும்மா பேச்சுக்கு தானே :-))
இங்கு எழுப்பப்பட்டிருக்கும் பல கேள்விகள் பொருளுள்ளதாகவே இருக்கின்றன. பெரியாரின் பெயரைச் சொல்லிச் சொல்லி, அவருடைய நிழலில் தங்களது வாழ்க்கையையும், குடும்பங்களையும் தற்காலத் தலைவர்கள் வளமையாக்கிக்கொண்டார்கள் என்பது உண்மையிலும் உண்மையே. அதாவது, தற்காலத் தலைவர்கள் சிலர், தங்களது மேம்பாட்டிற்காக பெரியாரின் பெயரைச் சொல்லிக்கொண்டு திரிகிறார்களே தவிர, பெரியார் சொன்னபடி நடப்பதில்லை.
//நடிகை குஷ்பூ, திருமணத்திற்கு முன் உடல் உறவு வைத்துக்கொண்டால், தகுந்த பாதுகாப்பு முறையைக் கையாள வேண்டும் என்று சொன்னதற்கு எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்டார் என்பதை இங்கு நினைவுகூறவேன்டும்.//
அப்படியல்ல. "திருமணத்திற்கு முன்பாக உடலுறவு கொல்லாத பெண்கள் யாராவது இங்கு இருக்கிறார்களா?" என்று கேட்டு ஒட்டுமொத்த பெண்ணினத்தையே "தன்னைப் போன்றவர்களாக" குஷ்பு விளித்துவிட்டார். அதுதான் தவறு.
தாரா,
நீங்கள் "பெரியார்" பெயரிட்டு ஒரு இடுகையை இட்டிருப்பது மாற்றமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. நண்பரின் கருத்துக்களை என்றில்லை, உங்களின் கருத்துக்களைக்கூட இடலாம்.
மற்றபடி உங்கள் நண்பரின் கருத்துக்களில் பெரியார் சீடர்கள் பற்றிய எண்ணங்களில் சில இடங்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் பெரியாரைப் பற்றிய அவரின் கருத்துக்கள் மிக மிக மேலோட்டமான ஒன்று. நாம் நம்மிடம், நாமிருக்கும் சூழ்நிலைகள் பற்றி மட்டுமே அளவீடுகள் கொண்டு சமூகத்தை மதிப்பிடுவது போல் உள்ளது. நிறவெறிக்கெதிரான எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகு அமெரிக்கா இன்றொரு சமத்துவ முகத்தைச் சட்டங்களில் கொண்டுவந்திருக்கிறது.
ஆனால் நாமோ இன்றும் "அயங்கார் சாதியில் பிறக்கப் புண்ணியம் பண்ணியிருக்கணும்" என்று படித்த கொழுத்திகள் எடுத்துவிட்டுக்கொண்டிருக்கவும் கண்டுகளித்துக்கொண்டிருக்கும் ஆட்டுமந்தைக் கூட்டங்களாகத்தானிருக்கிறோம்.
இணையத்தில் தேமா, புளிமா இலக்கண இலக்கியம் கற்றுக்கொண்டும், கற்பித்துக்கொண்டேவும் 'வடமா, தென்மா" பட்டியல்கள் தயாரிப்பதில் தொடங்கி, சாமியார் ஒருவன் கொலைக்குற்றத்தில் உள்ளே தள்ளப்பட்டால், "இவரெல்லாம் ஒரு துறவியா? பார்க்கப் போகிறவர்களை நிறத்தை வைத்து அவா நம்மவாளான்னு கேட்டுக்கொண்டிருந்தவர்தான்" என யாரும் விமர்சனம் வைக்கும்போது ஓடோடிவந்து "சும்மா ஒருத்தர் ஏதாவது தப்புன்னு செய்துட்டா ஒட்டுமொத்தமா தாக்கக் கிளம்பிர்றாங்கன்னு" சங்கராச்சாரிகளுக்கு வக்காலத்து வாங்குவது வரை செய்யமுடிந்த பிறவி அறிவாளிகள்(ஆண், பெண்) இருப்பதெல்லாம் உங்க நண்பருக்குத் தெரியுமா?தெரியாதா?
இந்த லட்சணத்திலே சாதிவெறியிலே சில சாதிகளுக்கு மட்டும் விலக்குகள் அளிக்கவேண்டிய நிலையில் உங்கள் நண்பர் ஏன் இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு விலக்கு அவர் அளித்திருப்பதால் இவ்விடுகைக்கு வேண்டியவரை ஆதரவுகள் பெருகினாலும் பெருகும். அப்போதும் அது ஆச்சரியமாயிருக்கப்போவதில்லை:))
உடலில் விழுந்த சாணியைக் காட்டி திசை திருப்பி நமது பொருட்களை திருடுவதை சுட்டியிருக்கிறீர்கள், ஆனால் உடல் சுத்தம் முக்கியம், திருடு போனதை பிறகு மீட்டுக் கொள்ளலாம் என எண்ணுபவர்கள் பலர் உண்டு இங்கே.
உங்கள் உறவினர் கூறவந்தக் கருத்து ஒரு சாதியினருக்கு மட்டும் அவர் வாங்கிய வக்காலத்தால் திசை மாறுகிறது,அழுத்தம் இழக்கிறது.
நிச்சயமாக பெரியாரின் சீடர்கள் ,அவர்களுக்கு அரசு அதிகாரங்கள் கிடைத்தபோதும், அவரது நிலைப்பாட்டை மேலெடுத்துச் செல்லவில்லை; தங்கள் வளர்ச்சிக்கு உதவியாக்கிக் கொண்டார்கள் என்பதுவரை யாருக்கும் கருத்து மாற்றம் இருக்கப் போவதில்லை.
//ஆனால் 60 ஆண்டுகள் சுதந்திரத்திற்கு பிறகும், தலித் வரலாற்றில் பிராமணர்கள் மட்டும் தான் வில்லன்களா? Outlook பத்திரிக்கையின் சமீபத்திய கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டில் பிராமணர் மக்கள் தொகை 1% தான். மீதம் இருக்கும் 99% பேரும், எல்லா பிரச்சினைகளுக்கும் அந்த 1% தான் காரணம் என்று சொன்னால் எப்படி?//
ஒரு குடம் நிறைய பால் இருப்பினும் அது தயிராக ஒரு சொட்டு புறைதயிர் போதுமே திரிந்துவிடும்
நான் சாதி குறிப்பிடுகிறேன் என்று தவறாக நினைக்காதீர்கள். ஒரு ஊறைக்கெடுக்க ஒரு வேலாலன் போதும் என்று கிராமங்களில் பழமொழியே உண்டு. ஏனெனில் இப்போது பிராமனர்கள் கிராமங்களில் இல்லை
///இவர்கள் வாரிசு எல்லாம் எத்தனைக்காலமாக படிக்காமல் அதே தொழிலையே செய்துக்கொண்டு இருக்காங்க காரணம் என்ன, அவங்க தலை எழுத்தா , எல்லாம் உங்களைப்போலவங்க அவங்களை அடக்கி அடிமையா வைத்து இருந்தது தான், அரசியல் ரீதியாக அவங்களுக்கும் எதுவாச்சம் செய்யனும்னா இப்படி ஒதுக்கீடு கொடுக்கணும், அதுவும் பிடிக்காதே உங்களுக்கு.//////
இட ஒதுக்கீடு இதே முறையில் தொடர்ந்தால் இன்னும் 1000 வருடமானாலும், மலம் அள்ளுபவர்களின் சந்ததிகள் படித்து நல்ல வேலையில் சேர முடியாது. மீண்டும் மீண்டும் 'கிரிமி லேயர்' மக்களின் வாரிசுகளே இட ஒதுக்கீட்டு சலுகைகளை வெக்கமில்லாமல் அனுபவக்கின்றனர். தாழ்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளின் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு சேர வேண்டிய இடங்களை, நடுத்தர மற்றும் பணக்கார வகுப்பை சேர்ந்த மாணவர்களே அனுபவக்கின்றனர். சந்தேகம் இருந்தால் அண்ணா பல்கலை கழக நுழைவுத் தேர்வு பட்டியலில் இடம் பெறும் மாணவர்களின் பின்புலத்தை ஆரய்ந்து பாருங்கள். இட ஒதுக்கீட்டில் கிரீமி- லேயர்களை நீக்காவிட்டால், நீதி கிடைக்காது. வெறும் பேச்சும், வாக்குவாதுமும்தான் தொடரும்.
இட ஒதுக்கீடு ஒரு தலைமுறைக்கு மட்டும்தான் என்றாலே பாதி நியாயம் கிடைக்கும். அரசு பள்ளிகளில் படிப்பவர்களிக்கே சலுகை என்றும் கொண்டுவரலாம்...
Post a Comment