Wednesday, May 02, 2007

ஷில்பா & ரிச்சர்ட்

நான் ரிச்சர்ட் கியரின் பரம விசிறி. 57 வயதிலும் என்ன ஒரு வசீகரம்! என்ன ஒரு ஸ்டைல்! ஆனால், நாடு விட்டு நாடு வந்திருக்கும் போது மேடையில் சற்று கவனமாக நடந்திருக்கலாம். இந்தியாவிற்கு பல முறை வந்துபோகும் அவருக்கு, அமெரிக்கா போல் இந்தியாவில் ஒரு பொது இடத்தில் ஒரு பெண்ணை கட்டித் தழுவி முத்தம் கொடுப்பதெல்லாம் ஒத்துக்கொள்ளப்படாத ஒன்று என்று தெரியாமல் போனது ஆச்சரியமாக இருக்கிறது. சாதாரணமாக விடுமுறைக்கு ஒரு ஊருக்குப் போனாலே அந்த ஊரைப் பற்றி படித்து, ஆராய்ந்தோ, கேட்டோ தெரிந்துகொண்டு போவது அமெரிக்கர்களின் வழக்கம். இதுவே துபாய், குவைத் போன்ற நாடுகளாக இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறு. நம்ம ஆட்களும், ஒரு கண்டனம் தெரிவித்துவிட்டு அத்தோடு இதற்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கலாம், ஆனால் அதற்காக போராட்டம் நடத்தி, கைது செய்யும் அளவிற்குப் போவதெல்லாம் கொஞ்சம் அதிகம் என்று தோன்றுகிறது. ஒரு வேளை ஷில்பா ஷெட்டி ரிச்சர்ட் கியரை அறைந்திருந்தால் அவரைக் கைது செய்வதற்கு பதில் கொண்டாடி இருப்பார்களோ?

'Indian Law Made Easy' என்ற இணையதளத்தில் இப்படி படித்தேன்:
WHAT ARE OBCENE ACTS AND SONGS AN OFFENCE
The obscene act or song must cause annoyance. Though annoyance is an important ingredient of this offence, it being associated with mental condition has often to be inferred from proved facts. The essential elements are:
1) Does any obscene act in any public place,
2) Sings, recites or utters any obscene song ballads or words, in or near public place.
PUNISHMENT
Whoever causes annoyance to others shall be punished with an imprisonment, which may extend to three months, or with fine, or both.

இதில் இரண்டாவதாக பட்டியலிட்டிருக்கும் விசயத்தைக் கவனியுங்கள். சினிமா தியேட்டரும் ஒரு பொது இடம் தானே? தமிழ், இந்தி சினிமாக்களில் வராத அருவருப்பான பாடல் காட்சிகளா, அல்லது பாடல் வரிகளா? இதே ஷில்பா ஷெட்டி எத்தனை சினிமாக்களில் அருவருப்பான பாடல் காட்சிகளில் நடித்திருப்பார்? எத்தனை லட்சம் பேர் அதைப் பார்த்திருப்பார்கள்? அதில் அடிபடாத கலாசாரமும், கெளரவமும் அந்த ஐந்து நிமிட மேடை நிகழ்வில் தான் அடிபட்டுவிட்டதா? ஷில்பாவும் ரிச்சர்ட்டும் நடத்திய அந்த நிகழ்ச்சி, லாரி ஓட்டுனர்களுக்கான AIDS விழிப்புணர்வு நிகழ்ச்சி. தொடர்ந்து பல நாட்களாக சாலைகளிலேயே நேரத்தைச் செலவழிக்கும் லாரி ஓட்டுனர்கள் வழியில் உள்ள கிராமங்களில் இதற்காகவே தொழில் செய்யும் பெண்களுடன் உடல் உறவு வைத்துக்கொள்ளலாம், ஆனால் காண்டோம் உபயோகிக்க வேண்டும் என்று சொல்லும் அளவு வளர்ந்து விட்ட கலாசாரத்தை, விளையாட்டாக ஒரு நடிகர் ஒரு நடிகையைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்து அவமானப்படுத்திவிட முடியுமா?

மேலைநாட்டுக் கலாசாரம், உடைகள், மொழி, உணவு என்று எல்லாமே ஊடுருவிக்கொண்டிருக்கும் இந்தியாவில், இந்தியக் கலாசாரம் என்று இன்னமும் என்ன மிச்சமிருக்கிறது? உண்மையில் "கலாசாரம்" என்பதை எப்படி விவரிப்பது என்றோ எப்படி புரிந்துகொள்வதென்றோ எனக்குத் தெரியவில்லை.

No comments: