இந்த வருடம் Thanksgiving விடுமுறைக்கு அலபாமாவில் உள்ள அக்கா வீட்டிற்குச் சென்றிருந்தேன். சில இனிய ஆச்சரியங்கள் எனக்காக காத்திருந்தன. அக்காவின் மூன்று பிள்ளைகளும் இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் தான் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்தார்கள். மூன்று மாத கல்லூரி வாழ்க்கை அவர்களிடம் சில சுவாரசியமான மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது.
இந்தியர்கள், இந்திய உடைகள் என்றாலே வெட்கப்பட்டு விலகிச் செல்லும் அக்கா மகன், தன் கல்லூரியில் 'பாங்ரா' நடனக் குழுவில் சேர்ந்து, பாங்ரா உடையனிந்து நடனம் ஆடியிருக்கிறான்!
காரில் தமிழ்ப் திரைப்படப் பாடல்கள் போட்டால் முகம் சுளித்து "Its boring! can you stop it?" என்று கேட்கும் அக்காவின் மகள்கள் raagaa.com இணையதளத்தில் தமிழ், இந்தி பாடல்களைக் கெட்கிறார்கள் இப்போது!!
என்ன ஆச்சரியம்?! வீட்டில் தலை தலையாக அடித்துக்கொண்டாலும் நம்ம ஊர் சமாசாரங்களில் ஆர்வம் காட்டாதவர்கள் எப்படி திடீரென்று மாறினார்கள்? எல்லாம் நண்பர்கள் தான் காரணம். அவர்களுடைய வகுப்பிலும் சரி, விடுதி அறையிலும் சரி, உடன் இருப்பவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள். இரண்டாவது பெண் படிக்கும் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில், "Penn Masala" என்ற இசைக்குழுவினர் இருக்கிறார்களாம். கல்லூரி வளாகங்களில் மிகவும் பிரபலமானவர்களாம். அவர்களுடைய இசைக் குறுந்தட்டைக் கேட்டேன். அருமையான குரல்கள்...ஆங்கிலப் பாடல்கள் தான்...ஆனால் திடீரென்று நடுவில் "அலைபாயுதே கண்ணா..." என்ற வரிகள் இனிமையான நுழைக்கப்பட்டிருந்தன! அக்கா பிள்ளைகளுடன் பேசியதிலிருந்து நம் இந்திய இளைஞர்கள் படிப்பில் மட்டுமன்றி, விளையாட்டு, கலை ஆகியவற்றிலும் சக்கை போடு போடுகிறார்கள் என்று தெரியவந்தது. கல்லூரியில் நுழைந்தவுடனேயே எல்லாவற்றுக்கும் க்ளப்(club) ஆரம்பித்துவிடுகிறார்கள். வார இறுதிகளில் மெஹந்தி, கர்பா, பாங்ரா, கஜல் என்று ஒரே குஜால் தானாம்!
இந்தியக் கலாசாரம் அமெரிக்காவில் ஊடுருவி பரவிக்கொண்டிருப்பதை நன்றாக உணரமுடிகிறது. ஹாலிவுட்டிலிருந்து வால் ஸ்ட்ரீட் வரை இந்திய
வாசனை! அமெரிக்காவிற்கு வருடா வருடம் வந்து குமியும் இளம் இந்தியர்கள் தங்கள் திறமைகளை இங்கே டண் கனக்கில் இறக்குமதி செய்வது மட்டுமல்லாமல், அமெரிக்காவின் கலாசார கட்டமைப்பையே மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். தம் கலாசார அடையாளத்தை இழக்காமல் மற்றொரு நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பை ஊடுருவுவதில் யூதர்களுக்கு அடுத்து இந்தியர்கள் தான் என்று MSNBC குறிப்பு ஒன்று கூறுகிறது. சினிமாவுக்கு ஒரு மனோஜ் நைட் ஷ்யாமளன், அரசியலுக்கு லூசியானா மாநில கவர்னராகப் போட்டியிட்ட பாபி ஜிந்தால்! ப்ளாக் பஸ்டர் விடியோ கடைகளில் 'லகான்', 'மான்சூன் வெட்டிங்', 'Bend it Like Beckham' போன்ற திரைப்படங்கள்! 'Macys', 'JcPenny' போன்ற அங்காடிகளில் இந்திய குர்தா வகை உடைகள் கட்டாயம் பார்க்கலாம். Giant, Safeway, Shoppers, Shopright போன்ற அமெரிக்கா grocery கடைகளில் Madras masala க்களும் sag paneer ரையும் காணலாம். சென்ற வாரம் எங்கள் அலுவலகத்தில் நடந்த ஒரு விருந்தில், buffet மேஜையில் பல வகை உணவு வகைகளை எல்லாம் தாண்டி கடைசியில் வைக்கப்பட்டிருந்த இந்திய உணவு வகைகளுக்காக வரிசையில் காத்திருந்த அமெரிக்கர்கள் நிறைய! Starbucks காபி கடையில் 'Chai' கிடைக்கிறது. ஊரில் மூலை முடுக்களில் எல்லாம் யோகா பயிற்சி நிலையங்கள்! MTV நிறுவனம் இப்போது புதிதாக MTV Desi என்கிற சானலை இந்தியர்களுக்காகவே தொடங்கியிருக்கிறது...
இதெல்லாம் பத்தாதென்று அமெரிக்க இசை மற்றும் நடன இலக்கணத்தையே மாற்றியிருக்கிறது நம் நாட்டு பஞ்சாபி பாங்ரா இசையும் நடனமும்!!! பாங்ரா எந்த அளவு ஊடுருவியிருக்கிறது என்று அறிந்தபோது வாயடைத்துப் போனேன்...
மன்ஹாட்டன், சியாட்டல், வாசிங்டன் டிசி போன்ற பெரிய நகரங்களில் உள்ள இரவு மையங்களில்(night club) 'Basement Bangra' என்றழைக்கப்படும் பாங்ரா நடன நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலம். Britney Spears, Rishi Rich, Juggy D, Jay Sean போன்ற பிரசித்தி பெற்ற இசைக் கலைஞர்கள், Pop, Rap, hip-hop போன்ற இசைகளில் பாங்ரா இசையும் கலந்து கட்டி கலக்குகிறார்களாம். Sopranos என்கிற புகழ் பெற்ற அமெரிக்க தொலைக்கட்சித் தொடரில் 'Meadow' என்கிற கதாபாத்திரம் பாங்ரா இசைக்கு ஆடுவதைப் போல் காட்சிகள் இருந்ததாம். அமெரிக்க நகரங்களில் உள்ள பல உடற்பயிற்சி மையங்களில், "பலே பலே", "ஹரெப்பா" என்ற சத்தத்தினூடே பாங்ரா இசைக்குத் தகுந்தார்போல் உடற்பயிற்சிகள் செய்கிறார்கள்.
இந்த கலாசார re-mix இந்தியாவில் அப்படியே எதிர்மாறாக நடந்துகொண்டிருக்கிறது - அதாவது மேலை நாட்டுக் கலாசாரம் அங்கே ஊடுருவிக்கொண்டிருக்கிறது. இந்த இரு திசை ஊடுருவல்கள் எது வரை போகும் என்று தெரியவில்லை. இந்தியா கலந்த அமெரிக்காவிற்கும், அமெரிக்கா கலந்த இந்தியாவிற்கும் கலாசார இடைவெளி குறைகிறதா? அல்லது தனித்துவம் வாய்ந்த இரு பெரும் கலாசாரங்கள் புதிதாக உருவாகிக்கொண்டிருக்கிறதா என்று புரியவில்லை. ஆனால் அலசிப்பார்க்க சுவாரசியமாக இருக்கிறது.
7 comments:
//இந்த கலாசார re-mix இந்தியாவில் அப்படியே எதிர்மாராக நடந்துகொண்டிருக்கிறது - அதாவது மேலை நாட்டுக் கலாசாரம் அங்கே ஊடுருவிக்கொண்டிருக்கிறது //
சூப்பர்...
அமெரிக்கா வரும் இந்தியர்களுக்கு கல்ச்சர் ஷாக் ஆகாமல் இருந்தால் சரி...:-)
அமெரிக்காவில் இந்தியக் கலாசாரத் தாக்கத்தைப் பற்றி நன்றாக விவரித்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.
பதிவைப் படிக்கையில் மனது பூரா வியாபித்திருந்தது நீங்கள் கடைசிப் பத்தியில் குறிப்பிட்டிருக்கும் பிரச்சினைதான்.
இங்கு நிலவும் இந்திய ஆதிக்கத்தை நினைத்து சந்தோஷப்படுவதைவிட நம்மூரில் தொலைந்துகொண்டிருக்கும் கலாசாரத்தைப் பற்றி நிறையவே கவலைப்படவேண்டும் என்று தோன்றுகிறது.
நன்றி.
அருமையான கட்டுரை....
நானும் அவதானித்திருக்கிறேன் இது போன்ற "இந்திய ஈர்ப்பு" விஷயங்களை...
நிறைய எழுதுங்கள் தாரா. வாழ்த்துக்கள்!
-IDAHO விலிருந்து ராஜ்.
அருமையான பதிவு.
மேற்கத்தியக் கலாச்சாரங்களில் சிக்கிய இந்தியர்கள் சிலர் இருப்பினும், முக்கால்வாசி மக்கள் இந்தியக் கலாச்சாரம் அழியாவண்ணம் தங்களதுப் பிள்ளைகளை வளர்க்கின்றனர்.
//எதிர்மாராக//
எதிர்மாறாக என்று இருக்கவேண்டும். தட்டச்சில் பிழை ஏற்படுவது சகஜம். நேரம் கிடைக்கும்போது திருத்துங்கள்.
நன்றி.
\"இந்த கலாசார re-mix இந்தியாவில் அப்படியே எதிர்மாராக நடந்துகொண்டிருக்கிறது - அதாவது மேலை நாட்டுக் கலாசாரம் அங்கே ஊடுருவிக்கொண்டிருக்கிறது. இந்த இரு திசை ஊடுருவல்கள் எது வரை போகும் என்று தெரியவில்லை\"
நூறு சதவீதம் உண்மை தாரா.
அருமையான கட்டுரை, பாராட்டுக்கள் தாரா!!!
மூக்கு சுந்தர், சுந்தர், ராஜ், ஜி, திவ்யா - பின்னூட்டதிற்கு நன்றி!
தாரா.
Post a Comment