Monday, May 21, 2007

அன்னையர் தினத்தன்று என்னை அசத்திய ஒரு அன்னை

மே மாதம் 11 ஆம் தேதி நான், கணவர் மற்றும் ஒரு நண்பர் குடும்பம் Tennessee யில் உள்ள Smoky Mountains சென்றிருந்தோம். மே 13 ஞாயிறு அன்று காலை நல்ல இளம் வெயில், வெளியில் உலாவ அருமையான நாள். Laurel Falls என்கிற நீர்வீழ்ச்சியைச் சென்று பார்க்க திட்டமிட்டோம். நீர்வீழ்ச்சிக்கு அருகே கார் செல்லாது என்றும், காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு 1.3 மைல்கள் நடந்து மலை மேல் ஏறிச்செல்ல வேண்டும் என்று அறிந்தோம். கணவரும் நண்பர்களும் "ஆஹா! hiking போல் ஜாலியாக போகலாம்" என்று குதூகலத்துடன் டென்னிள் ஷூ அனிந்துகொண்டு
கிளம்பினார்கள். நானோ, போக 1.3 மைல்கள் வர 1.3 மைல்கள் - மொத்தம் 2.6 மைல்கள் நடக்கவேண்டுமா என்று தயக்கத்துடன் பின் வாங்கினேன். "நான் காரில் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன், நீங்கள் போய்வாருங்கள்" என்று சொன்னேன். அவர்கள் விடவில்லை. "மெதுவாக நடக்கலாம், வாங்க" என்று வற்புறுத்தி அழைத்துத் சென்றார்கள்.

மலை ஏறத் தொடங்கினோம். மக்கள் நடந்து செல்வதற்காகவே அந்த ஒற்றை அடிப் பாதையை அமைத்திருந்தார்கள். மிகவும் செங்குத்தாக இல்லாமல், லேசான மேடாக பாதை மேலே சென்றதால் நடப்பதற்கு சுலபமாக இருந்தது. இரண்டு பக்கமும் பச்சை பசேலென்று மரங்கள், நடுவே ஒடும் அருவி...இயற்கை வளம் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. அவ்வப்போது வழியில் இருந்த பாறைகளில் அமர்ந்து சற்று இளைபாறிவிட்டு தொடர்ந்து நடந்தோம். அமெரிக்காவில் வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் வசிக்கும் வெள்ளைகாரர்ளுக்கு தோழமை உணர்வு அதிகம்.
நடைபாதை வழியில் எதிரே தென்பட்டவர்களெல்லாம் முகம் மலர சிரித்து "Hi" சொல்லிச் சென்றார்கள். சிலர் "You are not very far from the falls. It's very pretty up there" என்று சொல்லி எங்கள் ஆர்வத்தை அதிகரித்துவிட்டுச் சென்றனர்.
மேலே செல்லச் செல்ல, அருவியின் சப்தத்தையும் சாரலையும் உணரமுடிந்தது. பாதையும் கரடு முரடாக மாறியது. வழியில் ஒரு பெண்மணி தென்பட்டார். வெள்ளைக்காரர். 40 வயதிருக்கும். ஒரு சக்கர நாற்காலியைப் பிடித்துக்கொண்டு பாதையின் ஓரத்தில் நின்றிருந்தார். சக்கர நாற்காலியில் ஒரு சிறுமி - 8 வயதிருக்கும். அழுதுகொண்டிருந்தாள். அந்தப் பெண்மணி அவளைச் சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார். அருகில் சென்று ஏதாவது உதவி தேவையா என்று கேட்போது அந்தப் பெண்மணி நிலவரத்தைச் சொன்னார். அன்று அன்னையர் தினம் என்பதால் தன் நான்கு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு Laurel நீர்வீழ்ச்சியைப் பார்க்க வந்திருக்கிறார். தன் இரண்டாவது குழைந்தையான அந்தச் சிறுமிக்கு கால் ஊனம். சக்கர நாற்காலியில் அவளை வைத்து தள்ளிக்கொண்டு அவ்வளவு தூரம் வந்துவிட்டார். அனால் அந்தக் குறிப்பிட்ட இடத்திற்கு மேல் பாதை கரடு முரடாக மாறிவிட்டதால் சக்கர நாற்காலியை அவரால் தள்ள முடியவில்லை. அந்தச் சக்கர நாற்காலியின் எடை 350 பவுண்டுகளாம்!!! அடேயப்பா!! வாயடைத்துப் போனேன். தனி ஆளாக இவ்வளவு தூரம் எப்படி தள்ளிக்கொண்டு வந்தார்? கூட ஆண் துணை யாரும் இல்லை. கணவர் வரவில்லையா, விவாகரத்தாகிவிட்டதா, இறந்துவிட்டாரா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் ஒரு ஆண் துணை அந்த நேரத்தில் இல்லை என்பது எந்த வகையிலும் அந்தப் பெண்மணியை பாதித்தாகத் தெரியவில்லை.

என் கணவரும் நண்பரும் சக்கர நாற்காலியைத் தள்ள முற்பட, பாறைகளின் இடுக்கில் சக்கரம் சிக்கி நகர மறுத்தது. அருவிக்கு இன்னும் 5 நிமிட நடைதான் பாக்கி இருந்தது. என் கணவர், "நான் வேண்டுமானால் குழந்தையை தூக்கிக்கொண்டு போகட்டுமா?" என்று கேட்டார். அந்தப் பெண்மணியும் மகளிடம், "Do you want this uncle to give you a piggy back?" என்று கேட்டார். அந்தச் சிறுமி என் கணவரைப் பார்த்து மிரண்டு :-) "No" என்று மறுத்துவிட்டாள். அவ்வளவு தூரம் நீர்வீழ்ச்சியைப் பார்க்கவேண்டுமென்று அயாராது ஆவலுடன் வந்திருக்கும் அம்மாவுக்கும் மகளுக்கும் எப்படியாவது உதவவேண்டுமே என்று நாங்கள் தவிக்க, அந்தப் பெண்மணியோ புன்னைகையுடன், "எங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். நாங்கள் இங்கேயே காத்திருக்கிறோம். என்னுடைய மற்ற மூன்று குழந்தைகளும் நீர்வீழ்ச்சிக்கருகே இருப்பார்கள், அவர்களிடன் இந்தக் காமிராவைக் கொடுத்து நிறைய புகைப்படங்கள் எடுக்கச் சொல்லுங்கள்" என்று சொல்லி காமிராவைக் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு நாங்கள் மேலே நடந்தோம். சில அடிகள் நடந்தபின் நான் திரும்பிப் பார்த்தேன். வெயிலின் சூடு தாங்கமுடியாமல் வியர்த்து ஊத்தும் மகளுக்கு தன்னையே குடையாக்கி நிழல் கொடுத்துக்கொண்டிருந்தார்.

அருவிக்கு வந்தோம். அங்கிருந்த சிறு கூட்டத்தில் அந்தப் பெண்மணியின் மூன்று குழந்தகளையும் கண்டுபிடித்தோம். மகனுக்கு 10 வயதிருக்கும். அவனுடைய தங்கைகள் இரட்டையர்கள். 6 வயதிருக்கும். தேவதைகள் போல் இருந்தார்கள். அவர்களிடம் காமிராவைக்கொடுத்து அம்மா சொன்ன செய்தியைச் சொன்னோம். சற்று நேரம் நீரில் விளையாடிவிட்டு அவர்கள் தன் அம்மாவைப் பார்க்கச் சென்றுவிட்டார்கள்.

நீர்வீழ்ச்சிக்கு எதிரே இருந்த பாறையில் அமர்ந்தேன். சக்கர நாற்காலியுடன் பாதையின் ஓரத்தில் காத்திருக்கும் அந்த பாசமான அன்னை என் மனதை நிறைத்தாள். நான்கு சிறு குழந்தைகளை, அதிலும் ஒரு ஊனமான குழந்தையை அழைத்துக்கொண்டு, கணமான ஒரு சக்கர நாற்காலியையும் தள்ளிக்கொண்டு அன்னையர் தினத்தன்று ஒரு நீர்வீழ்ச்சியை தன் குழந்தைகளுக்குக் காட்டவேண்டுமென்று வந்திருக்கும் அந்தப் பெண்மணிக்கு எவ்வளவு மன உறுதி இருக்கவேண்டும்?! அவரைப் பார்த்து வளரும் அந்தக் குழந்தைகளும் அதே மன உறுதியைக் கற்றுக்கொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

அருவி கொட்டிக்கொண்டிருந்தது. ஏதேதோ கவிதைகள் ஞாபகம் வந்தது.

இயற்கை அன்னை!
சந்திரனும் சூரியனும் அவளின் கண்கள்
காற்று அவளின் சுவாசம்
வானவில் அவளின் புன்னகை
இடியும் மின்னலும் அவளின் கோபம்
பூக்கள் அவளின் அழகு
மேகங்கள் அவளின் கணவு


இதில் இரண்டு வரிகளைச் சேர்க்கத் தோன்றியது...

பாறை அவளின் மன உறுதி!
அருவி அவளின் அன்பு!


புகைப்படமேல்லாம் எடுத்துக்கொண்டு நாங்கள் மீண்டும் கார் நிறுத்திய இடத்திற்கு நடையைக்கட்டினோம். வழியில் அந்தப் பெண்மணியைக் காணவில்லை. கீழே இறங்கிச்சென்றிருப்பார்கள் போலும். எங்களுடன் வந்த நண்பரின் மனைவி "பாத்தீங்களா? இன்று அன்னையர் தினம் என்று தெரியாமல் போய்விட்டது! இந்தக் கணவன்மார்களும் தெரியாதது போல் நடித்துவிட்டார்கள். ஒரு பரிசு, ஒரு வாழ்த்து ஒன்னும் காணோமே?" என்று குறைப்பட்டுக்கொண்டார். எனக்கு எந்தக் குறையும் மனதில் ஏற்படவில்லை. நடப்பதற்கு பயந்துகொண்டு காரில் புத்தகம் படித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க நினைத்த நான் எங்கே? மேலே அருவி அருகே நான் பார்த்த அந்தப் பெண்மணி எங்கே? அன்னையர் தின வாழ்த்துக்கும், பரிசுக்கும் அவருக்குத்தான் தகுதி உண்டு!.

2 comments:

Anonymous said...

beautiful presentation....manathirkul antha

paapaavai ninaithal romba feel aaguthu

mrs.rajkumar

Anonymous said...

heart touching story all the mums should read this. i would like to have a mum like her.