Tuesday, May 22, 2007

அசின், விஜய் - இவர்களுக்கு பிடித்த சாப்பாடு

சமீபத்தில் வாசிங்டனில் 'பெரியார்' திரைப்படம் வெளியிடப்பட்டது. நான் வெளியூர் சென்றிருந்ததால் பார்க்கமுடியவில்லை. பார்த்தவர்களிடம் பேசியதிலிருந்து படம் ஓரளவிற்கு நன்றாக இருந்தது என்று தெரியவருகிறது. பெரியாரின் சுயமரியாதை மற்றும் பெண் முன்னெற்றக் கருத்துக்களை பெருமளவு மதிக்கிறேன் நான். இந்த நவீன காலத்தில் கூட பெண்களைப் பற்றி ஒரு முற்போக்கான கருத்தைச் சொல்லிவிட்டால் அது சர்ச்சையிலும், சண்டையிலும், துடப்பக்கட்டைத் தூக்குவதிலும் கொண்டு போய் நிறுத்துகிறது! ஆனால் கிட்டத் தட்ட 100 வருடங்களுக்கு முன்பே பெண் முன்னேற்றத்தைப் பற்றி அதிரடியான முற்போக்கான கருத்துக்களை துணிவுடன் சொல்லியவர் பெரியார். அவருடைய கருத்துக்கள் சரியான முறையில் நம் சமூதாயத்தில் சென்றடைந்திருந்தால், இன்று பெண்களின் சுயமரியாதைக்கும் சமூக முன்னேற்றதிற்கும் பஞ்சமே இருந்திருக்காது. எத்தனைப் பெரியார் வந்தால் என்ன? எத்தனை பெரியார் திரைப்படம் வந்தால் என்ன? நாங்கள் மாறமாட்டோம் என்று பல பெண்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் இன்று.

தமிழ்ச் சினிமா உலகம் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் அசின், விஜய் இவர்களின் பேட்டியைப் பார்த்தேன். சினிமா என்பது ஒரு தனி உலகம். நடிப்பு என்பது ஒரு பெரும் கலை. இதனைப் பற்றியெல்லாம் கேட்க எத்தனையோ கேள்விகள் இருக்க, அசினிடம், விஜய்க்கு பிடித்த சாப்பாடு என்ன? அவருக்குப் பிடித்த நடிகர் யார்? விஜய்யுடைய தாயார் சமைக்கும் உணவுகளில் என்ன நன்றாக இருக்கும் - இப்படிப்பட்டக் கேள்விகள் கேட்கப்பட்டது. அதே போல் விஜய்யிடம், அசினுக்குப் பிடித்த விசயங்களைப் பற்றிக் கேட்கப்பட்டது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், அசின் விஜய்யிற்குப் பிடித்த ஐட்டங்களை, பிரியாணியில் தொடங்கி டாண் டாண் என்று குஷியாக பதில் சொன்னார். விஜய் அசினுக்குப் பிடித்த ஐட்டங்களைச் சொல்லும் போது ஏதோ ஒன்றும் தெரியாத மாதிரி யோசித்து, தயங்கி....அடா அடா என்ன ஒரு நடிப்பு! சட்டென்று சொல்லிவிட்டால் 'ஹீரோ இமேஜ்' குறைந்துவிடுமே?!

மற்றொரு முறை 'நான் அவனில்லை' திரைப்படத்தைப் பற்றிய ஒரு பேட்டியில், அப்படத்தின் கதாநாயகிகள் சினேகா, நமிதா, மாளவிகா மூவரும் மாறி மாறி கதாநாயன் ஜீவாவைப் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அந்தக் கதாநாயகிகளைப் பற்றி ஜீவன் எதுவுமே சொல்லவில்லை. சொல்வதற்கு எதுவுமே இல்லை என்பதுதான் உண்மையோ?

பத்மப்ரியா என்ற ஒரு நடிகையிடம் "நீங்கள் ஏன் General Electrics வேலையை விட்டுவிட்டு நடிக்க வந்துவிட்டீர்கள்?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் "சினிமா, நடிப்பு ஆகியவற்றின் மேல் எனக்குள்ள ஆர்வம் காரணமாக நான் நடிப்புத் துறைக்கு வந்தேன்" என்று சொன்னார். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த துறையில் இருக்கவேண்டுமென்பது தான் என் விருப்பமும் கூட, அனால் பத்மப்ரியா போன்ற இளம் பெண்களுக்கு எத்தனை நாள் சினிமா சோறு போடும்? இளமையும் அழகும் இருக்கும் வரை தானே? பெண்களுக்கு ஒரு நிலையான வேலை அவசியம் தேவை. General Electrics போன்ற ஒரு நிறுவன வேலையை உதறித்தள்ளிவிட்டு ஒரு பெண் சினிமாத் துறையை நாடுவது, அவரது எதிர்காலத்திற்கு நல்லதா என்று தெரியவில்லை. அப்படி சினிமாத் துறைக்கு ஆர்வத்துடன் வந்தவர், அங்கே என்ன செய்தார்? 'தவமாய் தவமிருந்து' படத்தில் நன்றாக நடித்திருந்தார். ஆனால் 'பட்டியல்' படத்தில் அவர் ஆடிய ஒரு ஆட்டத்தைப் பார்த்து அதிர்ந்து போனேன் நான். அப்படி ஆடுவதற்காகவா ஒரு நிலையான வேலையை விட்டு வந்தார்? வருத்தமாக இருக்கிறது.

பல நடிகைகள், ரஜினி சார் இப்படி, ரஜினி சார் அப்படி, கமல் சார் ஒரு legend, கமல் சாரோடு நடிப்பது என் வாழ்க்கையில் லட்சியம் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ரஜினியோ, கமலோ எந்த ஒரு நடிகையப் பற்றியாவது உயர்வாகப் பேசியிருக்கிறார்களா? அந்த நடிகையோடு நடிப்பது தன் வாழ்க்கையின் லட்சியம் என்று சொல்லியிருக்கிறார்களா? ரஜினி, கமல் மேல் எந்தத் தவறும் இல்லை. அப்படி சொல்லும் அளவு நம் நடிகைகள் இன்று இல்லை என்பது தான் உண்மை.

மற்றொரு நடிகை - எனக்குப் பெயர் ஞாபகம் இல்லை. "நான் தூங்கும் போது என்னுடைய teddy bear ஐ கட்டிப்பிடித்துக்கொண்டு தான் தூங்குவேன்" என்று சொன்னார். தன் கரடி பொம்மையைத் தாண்டி, சுற்றி நடக்கும் துயரங்களை, அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களை இந்த நடிகை என்றைக்காவது பார்க்க நேருமா?

ஒட்டுமொத்த மக்களின் பார்வையும் தம்மீது விழும் அளவு ஒரு சக்திவாய்ந்த துறையில் இருக்கும் பெண்கள், எப்படியெல்லாம் தம்மை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறலாம்?! அதைவிட்டுவிட்டு பணமும் புகழும் வந்தவுடன் குடி, போதை மருந்து போன்ற கெட்ட பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வது, தற்கொலை செய்துகொள்வது என்று தம்மைத் தாமே அழித்துக்கொள்கிறார்கள்.

தொடக்கத்திற்கே மீண்டும் போகிறேன். அசின் - விஜய் பேட்டியின் நோக்கம் தான் என்ன? அசின் விஜய்யைப் பற்றியோ, விஜய் அசினைப் பற்றியோ விபரங்களைத் தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறார்கள்?. இல்லை, அவர்களைப் பற்றிய சொந்த விவரங்களை தெரிந்துகொண்டு நாம் தான் என்ன செய்யப் போகிறோம்? பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை தினத்தன்று பண்டிகைகளின் வரலாற்றைவிட, நடிகர் நடிகைகளின் வரலாறுகள் தான் நமக்கு அதிகம் புகட்டப்படுகிறது. இவர்கள் என்ன சாதித்துவிட்டார்கள் நாம் நம் பொன்னான நேரத்தை செலவு செய்து பத்திரிக்கையிலும், தொலைக்காட்சியிலும் தினமும் இவர்களைப்பற்றியே படித்தும், பார்த்தும் கொண்டிருக்க?

Robert Frost இன் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது
The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

சினிமாவும் தொலைக்காட்சியும் கொடுக்கும் புகழிலும், பணத்திலும் பெண்கள் மூழ்கி தாம் யார் என்பதை மறந்துவிடுகிறார்கள். அவர்களுடைய சுயமரியாதை, promises, miles எல்லாமே அடிபட்டுபோய்விடுகிறது.

7 comments:

ரமா said...

நல்ல பதிவு!

Mazhaipriyan said...

Nicely said.
Of course, we are going to see the same things again at the next ' Sirappu Nigalchi '.
Can't help it as long as people are obsessed with Cinema and actors.
Let's walk skipping these non-senses as we have miles to go...
- Rajasekar

oliver said...

சினிமா நடிகை நடிகர்கள் பேட்டிலாம் ஒண்ணுவிடாம பாத்து ஏன் டென்சனாவனும் :)

Thara said...

ரமா, மழைப்ரியன், ஆலிவர் - மிக்க நன்றி

ஆலிவர் - இந்தப் பேட்டியெல்லாம் பாக்க வேண்டாமென்று நினைத்தாலும், வீட்டில் உள்ளவர்கள் பார்க்கும் போது நன் கண்களிலும் பட்டுத் தொலைகிறதே?! :-)

நன்றி,
தாரா.

Thara said...

ஒன்றைக் குறிப்பிட மறந்துவிட்டேன். சில வாரங்களுக்கு முன் www.abcnews.com இணையதளத்தில் வழக்கம் போல் செய்திகள் படித்தேன். அன்று தான் அபிஷேக் ஐஸ்வர்யா ராய் திருமணம் நடந்த நாள் போலும். அதைப் பற்றிய செய்தியில், "The celebrity obsessed Indian media" என்கிற வாக்கியத்தைப் படித்தபோது மிகவும் வருத்தமாக இருந்தது.

தாரா.

SathyaPriyan said...

//
"The celebrity obsessed Indian media" என்கிற வாக்கியத்தைப் படித்தபோது மிகவும் வருத்தமாக இருந்தது.
//
இதில் வருத்தப் படுவதற்கு ஒன்றும் இல்லை தாரா. அமெரிக்கர்கள் ராக் ஸ்டார்களை தலையில் தூக்கி வைத்து ஆடவில்லையா? ஐரோப்பியர்கள் கால் பந்து வீரர்களை தலையில் தூக்கி வைத்து ஆட வில்லையா?
"Hero Worship" என்பது எல்லோரிடத்திலும் உண்டு. புரட்சியாளர்கள் கூட அதை செய்து இருக்கிறார்கள்.

அது போலத்தான் நமக்கு சினிமா காரர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள்.

தனிப்பட்ட, சமூக பிரச்சனைகள் பல உள்ள நமது இந்திய சமூகத்தில் மக்களை ஒரு மூன்று மணி நேரம் கவலை மறக்க செய்கிறார்கள் அல்லவா? அது ஒரு காரணமாக இருக்கலாம்.

புத்தக உலகம் தொடரை ஏன் நிறுத்தி விட்டீர்கள்?

மற்றபடி பதிவிற்கு No comments :-)

Thara said...

கருத்துக்கு நன்றி சத்யப்ரியன்,

//தனிப்பட்ட, சமூக பிரச்சனைகள் பல உள்ள நமது இந்திய சமூகத்தில்//

இந்த காரணத்தினால் தான், அமெரிக்கர்களைப் போலவோ ஐரோப்பியர்களைப் போலவோ நாமும் இருக்கக்கூடாது என்கிறேன். நமக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்.

நேரமின்மை காரணமாக புத்தகத் தொடர் எழுதமுடியாமல் நின்றுவிட்டது. கட்டாயம் மீண்டும் எழுதுகிறேன்.

நன்றி,
தாரா.