Tuesday, December 05, 2006

தீபா மேத்தாவின் Water - திரைப்பட கண்ணோட்டம்

Image Hosting By: ImageMozilla.com
விதவைக் கோலம்! அது அத்தனை கோடூரமானதாக இல்லை இன்றையப் பெண்களுக்கு. மொட்டையடிப்பது, வெள்ளைப் புடவை உடுத்துவது, பூவும் பொட்டும் இழப்பது இதெல்லாம் இன்னமும் வழக்கத்தில் இருந்தாலும், பெரும்பாலும் நகரங்களிலும், படித்தவர்கள் வட்டத்திலும் குறைந்திருக்கிறது.

ஆனால் 50, 60 ஆண்டுகளுக்கு முன்னால் மன ரீதியாக மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் பெண்களைச் சிதைத்துச் சித்திரவதை செய்த கோலம் அது! இதை பல தமிழ்த் திரைப்படங்களில் நான் பார்த்திருந்தாலும், தீபா மேத்தாவின் "Water" என்கிற திரைப்படம் இந்தியாவில் விதவைகளின் அவலங்களை ஒரு மாறுபட்ட கோணத்திலிருந்து பார்க்கவைத்தது. இப்படியும் இருப்பார்களா? என்று என்னை மனம் பதைக்க வைத்தது. கசப்பான, ஆனால் சொல்லப்பட வேண்டிய கதை இது. "Water" என்கிற தலைப்பு திரைப்படத்திற்கு மிகவும் பொருத்தம். தண்ணீரும் இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரம்! எல்லா காட்சிகளிலும் கங்கை ஆற்று நீர் தான் நிரம்பியிருக்கிறது. துக்கம், பாவம், சந்தோஷம் எல்லாவற்றுக்குமே அங்கே தண்ணீர் தான் வடிகால். ஆற்றங்கரை, படிகட்டுகள், சடங்குகள், சன்னியாசிகள், உலரும் துணிகள், வேத ஓதல்கள் என்று வாரணாசியை (RSS, BJP எதிர்ப்புகளால், உண்மையில் படபிடிப்பு இலங்கையில் நடந்தது!)அப்படியே உயிருடன் கண் முன் நிறுத்திருப்பது ஒளிப்பதிவாளரின் திறமையைக் காட்டுகிறது. "விதவைகள் எல்லாவற்றையும் துறந்து புனிதத் தன்மையுடன் இருக்க வேண்டும். புனிதத் தன்மையுடன் இருக்கும் மனைவி சுவர்க்கத்திற்குச் செல்வாள், இல்லையேல் சாத்தானின் கருவில் மீண்டும் பிறப்பாள்" என்று 2000 ஆண்டுகளுக்கு முன் சொன்ன மனு நீதியை இன்னமும் பின்பற்றி, சமூகம், கலாசாரம், கல்வி என்று எல்லாவற்றிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்ட விதவைகளின் நிலையைச் சாடும் ஒரு உணர்ச்சிபூர்வமான திரைப்படம் இது. அறிவு, அறியாமை இரண்டுமே உள்ள ஒரு சமுதாயத்தில், உலகத்திலேயே மிகவும் பழமையான மதமான இந்து மதத்தின் இருண்ட அதிர்ச்சியூட்டும் கோட்பாடுகள் ஏற்படுத்திய பாதிப்பு அருமையாக வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.

ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நேரும் தருவாயை தன் கதையின் பின் புலமாக வைத்து திரைப்படத்தை உருவாக்குவது தீபா மேத்தாவின் தனித்துவம். தன்னுடைய "Earth" படத்தில் இந்தியா - பாக்கிஸ்தான் பிரிவை கதையின் களமாக கையாண்டிருப்பார். "Water" படத்தில் இன்னும் சற்று பின்னோக்கி சென்றிருக்கிறார். 1938 ஆம் ஆண்டு. காந்தியக் கொள்கைகள் மக்கள் மத்தியில் மெல்லப் பரவத் தொடங்கிய காலம் அது.

வாரணாசி! இந்து மதத்தின் பிரதான புன்னிய பூமி! பாவங்களை கங்கையில் கழுவும் இடம்! ஆனால் அங்கே பாவங்களின் மொத்த உருவமாய் விதவைகளின் சரணாலையங்கள்!

Image Hosting By: ImageMozilla.com

திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியில், "சுய்யா" என்கிற 8 வயது சிறுமியிடம் அவளது தந்தை "உன் கணவர் இறந்துவிட்டாரம்மா...இன்றிலிருந்து நீ ஒரு விதவை" என்கிறார். அந்தச் சிறுமி "எத்தனை நாட்களுக்கு அப்பா?" என்று விவரம் புரியாமல் அப்பாவியாகக் கேட்கிறாள். "வாழ் நாள் முழுவதும்" என்கிற பதிலை தன் மகளிடம் சொல்ல முடியாமல் மெளனமாகிறார் தந்தை! இந்தப் படத்தில் வரும் வசனங்கள் மிகக் குறைவு. எல்லாமே இரண்டு மூன்று வரிகள் தான், ஆனால் நெஞ்சில் ஈட்டியாக இறங்கும் வார்த்தைகள்.

சுய்யாவின் தலை மழிக்கப்படுகிறது, வெள்ளைச் சேலை அணிவிக்கப்படுகிறது. விதவைகள் ஆசிரமத்தில் வலுக்கட்டாயமாக ஒப்படைக்கப்படுகிறாள். அந்த ஆசிரமத்தின் மூடிய கதவுகளுக்குப் பின் ஒரு இருண்ட உலகம் விரிகிறது...அங்கே இருப்பவர்களெல்லாம் நடுத்தர வயது மற்றும் முதிய விதவைகள். மழிக்கப்பட்ட தலைகள், வெறித்த பார்வைகள், பசித்த வயிறுகள், வெள்ளைப் புடவை போர்த்திய இளைத்த உடல்கள் - கடவுளைத் தவிர வாழ்க்கையில் மற்ற அனைத்து நம்பிக்கைகளும் அற்றுப் போன ஜீவன்கள். ஒரு வேளைச் சாப்பாடு, விதியை நினைத்து ஆண்டவனிடம் புலம்பல், நிம்மதியற்ற உறக்கம் - இதுவே அவர்களது அன்றாட வாழ்க்கை. இவற்றிற்கு மத்தியில் ஒரு துறுதுறுப்பான 8 வயது சிறுமியை வாழ் நாள் முழுவதும் இருக்கவேண்டுமென்றால் அது எத்தனை பெரிய கொடுமை? . வீட்டுக்குப் போகவேண்டும் என்று அழும் சுய்யாவிடம் ஆசிரமத்தின் தலைவி சொல்கிறாள், "கணவன் இறக்கும் போதே மனைவி பாதி இறந்துவிடுகிறாள். பாதி உயிர் போன ஒரு பெண்ணுக்கு எப்படி வலியும், துயரமும் இருக்க முடியும்?" என்று. "அவளுக்கு மீதி பாதி உயிர் இருக்கிறதே?" என்கிறாள் சுய்யா. தன் வயதிற்கும், உணர்வுக்கும் கொஞ்சமும் சம்மந்தமில்லாத இந்த வாழ்க்கையில் தன்னை இணைத்துக்கொள்ளத் தெரியாமல் திண்டாடும் சிறுமிக்கு 'கல்யாணி' என்கிற அழகான இளம் விதவையின் நட்பு கிடைக்கிறது. சகுந்தலா என்ற மற்றொரு நடுத்தர வயது விதவையின் அன்பும் கிடைக்கிறது. அமைதியான, அழுத்தமான, ஆழ்ந்த நம்பிக்கைகளை உடைய விதவை சகுந்தலாவாக வரும் சீமா பிஸ்வாஸின் நடிப்பு அபாரம். கல்யாணி துரதிர்ஷ்டவசமாக அழகாக இருக்கிறாள். அவளுக்கு மட்டும் மழிக்கப்படாத நீண்ட கரிய கூந்தல் இருக்கிறது. இதற்கான காரணம் தெரியவரும் போது அதிர்ச்சி ஏற்படுகிறது. அவளது வாழ்க்கையில் சற்று கொடூரம் கூடுதல்! இரவில் அவள் கங்கை ஆற்றைக் கடந்து படகில் அழைத்துச் செல்லப் படுகிறாள் தன் உடலை விற்று அந்த விதவை ஆசிரமத்திற்கு பணம் சம்பாதிக்க! ஆனால் தன் விதியை அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக ஏற்றுக்கொள்கிறாள், கீதையில் "தான் இருக்கும் அழுக்கு நீரில் படாமல் மலர்ந்திருக்கும் தாமரையைப் போல் வாழ வேண்டும்" என்று கிருஷ்ணர் சொல்லியிருப்பதைப் போல.

ஒரு முறை "ஆண்களுக்கான விதவை ஆசிரமம் எங்கே இருக்கிறது?" என்று சுய்யா அப்பாவியாக வினவ, மற்றப் பெண்களெல்லாம் பதைபதைத்து, "அபச்சாரம்! என்ன கேள்வி இது?", "வாயைக் கழுவு" என்று அவளைக் கண்டிக்கிறார்கள். பெண்களின் மூளை எப்படி மதத்தால் சலவை செய்யப்பட்டிருந்தது என்பதை இந்தக் காட்சி எடுத்துக்காட்டுகிறது.

Image Hosting By: ImageMozilla.com

கல்யாணியை சந்திக்க நேரிடும் நாராயண் என்ற இளைஞன், அவளைத் திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறான். கல்யாணியைப் பற்றி தன் அம்மாவிடம் அவன் சொன்னதும், அந்தத் தாய் அதிர்ச்சியடைகிறாள். "உன் அப்பா இதை ஒத்துக்கொள்வாரா?" என்று கேட்கிறாள். "அப்பா காந்தியக் கொள்கைகளின் பற்றாளர். நான் ஒரு விதவையைத் திருமணம் செய்துகொள்வதை அப்பா கட்டாயம் வரவேற்பார்" என்று நம்பிக்கையுடன் சொல்கிறான்.

கல்யாணியின் திருமண திட்டத்தைக் கேள்விப்பட்டதும், அவள் விடுதியை விட்டு சென்றுவிட்டால், விடுதிக்கு சம்பாத்தியம் இல்லாமல் போய்விடும் என்று அவளை ஒரு அறையில் அடைத்து வைக்கிறாள் விடுதியின் தலைவி. சகுந்தலா, ஒரு சன்னியாசியிடம் "விதவைகள் துன்புற வேண்டுமென்று நம் வேதத்தில் சொல்லியிருக்கிறதா?" என்று கேட்கிறாள். அந்தச் சன்னியாசி, "விதவைகளுக்காக மூன்று தீர்வுகளை நம் வேதம் சொல்கிறது, ஒன்று - கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறுதல், இரண்டு - கணவர் இறந்தவுடன் துறவியாக வாழ்வது, மூன்று - கணவரின் தம்பியை மணந்துகொள்வது" என்று சொல்கிறார்.

இவை தீர்வுகளா?! அல்ல! இன்னும், மேலும் இழிவான முட்டுக்கட்டைகள்!

தொடர்ந்து அந்தச் சன்னியாசி சகுந்தலாவிடம் "இப்போது புதிய சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள் விதவைகளின் மறுவாழ்வுக்காக" என்கிறார். சகுந்தலாவின் கண்களின் நம்பிக்கையும் தீர்க்கமும் தெரிகிறது. ஒரு முடிவுடன் வேகமாக விடுதிக்குச் சென்று, கல்யாணியின் அறைக்கதவை திறந்துவிட்டு "இங்கிருந்து வெளியே செல்!" என்று உத்தரவிடுகிறாள். கல்யாணி தன் காதலனிடம் செல்கிறாள். அவன் அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். படகில் சென்றுகொண்டிருக்கையில், "உன் அப்பாவின் பெயர் என்ன?" என்று கல்யாணி கேட்கிறாள். அவன் சொல்கிறான். சட்டென்று கல்யாணியின் முகம் மாறுகிறது. "படகைத் திருப்பு...நான் திரும்பிப் போகனும்" என்கிறாள். அவள் தன் அப்பாவிடமே படுத்திருக்கிறாள் என்பதை அவன் புரிந்துகொள்கிறான். கல்யாணி விதவை ஆசிரமத்திற்கே திரும்பிச் செல்கிறாள்.


நாராயண் தன் தந்தையிடம் வாதிடுகிறான். "உங்களை எவ்வளவு உயர்வாக நான் எண்ணியிருந்தேன்? நீங்கள் வெளி வேஷக்காரர் தானா?" என்று கேட்கிறான். "அவள் தேவதை அல்ல என்று உனக்குத் தெரிந்துவிட்டது. அவளை உன் ஆசை நாயகியாக வைத்துக்கொள். பிராமணர்கள் எந்தப் பெண்ணுடன் வேண்டுமானாலும் படுத்துக் கொள்ளலாம். அந்தப் பெண் அதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்று அப்பா சொல்கிறார்.

அன்றிரவு கல்யாணி கங்கை ஆற்றில் மூழ்கி தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறாள். மறு நாள் காலை கல்யாணியை அழைத்துச் செல்ல விடுதிக்கு வரும் நாராயணுக்கு அவளுடைய சாவுச் செய்திதான் கிடைக்கிறது. கல்யாணியின் உடலை கங்கைக் கரையில் தகனம் செய்கையில், "நாங்களெல்லாம் ஏன் இங்கே வந்தோம்? என்ன காரணம்?" என்று சகுந்தலா வேதனையுடன் வினவுகிறாள். நாராயண் சொல்கிறான் "ஒரு வாய் உணவு மிச்சம், நான்கு புடவைகள் மிச்சம், ஒரு படுக்கை மிச்சம், வீட்டில் ஒரு மூலை காலி. மதம் என்கிற வேஷத்தில், பணம் தான் எல்லாவற்றிர்க்கும் காரணம்". எண்ணங்களைப் புரட்டிப்போட்டு சிந்திக்க வைக்கும் பதில் இது! உண்மையில் அந்த விதவைகளின் வாழ்க்கையில் விளையாடியது மதமா? பணமா? கல்யாணியோ சகுந்தலாவோ ஜமீந்தார் வீட்டுப் பெண்களாக இருந்திருந்தால் இப்படி ஒரு விதவை ஆசிரமத்தில் விட்டிருப்பார்களா? விதவைகள் புணிதமாக, துறவியாக இருக்கவேண்டும் என்று சொல்லுகிறது இந்து மதம், அதற்கு முரண்பாடாக கல்யாணி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறாள். அதற்கு காரணம் மதத்தையும் விஞ்சிய பணம் தானே?

இறுதியில் உச்சக்கட்ட கொடுமை ஒன்று நடக்கிறது அந்த ஆசிரமத்தில். கல்யாணியின் மறைவிற்குப் பின் ஆசிரமத்திற்கு சம்பாத்தியம் நின்றுவிட்டதே?! வேறு இளமையான விதவைகள் அங்கே இல்லை. அதனால் 8 வயது சுய்யா விபச்சாரத்திற்காக கங்கை ஆற்றைக் கடந்து படகில் அழைத்துச் செல்லப்படுகிறாள். "எங்கே போகிறோம்?" என்று கேட்பவளுக்கு "நீ விளையாடுவதற்காக ஒரு இடத்திற்கு" என்று பதில் கிடைக்கிறது. ஒரு மங்கிய ஒளி உள்ள அறையில் சுய்யா விடப்படுகிறாள். படுக்கையில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரைப் பார்த்து சுய்யா "நான் விளையாட வந்திருக்கிறேன்" என்று வெகுளியாகச் சிரித்துக்கொண்டே சொல்லும் போது, மனம் உருகி கண் கலங்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்! அவள் வந்திருக்கும் வீடு நாராயணின் வீடு என்பதும், படுக்கையில் அமர்ந்திருக்கும் நபர் நாராயணின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

துவண்ட மலராக படகில் திரும்பி வரும் சுய்யாவைப் பார்த்து துடிதுடித்துப் போகிறாள் சகுந்தலா. சுய்யாவை அப்படியே அள்ளி எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்குச் செல்கிறாள். அங்கே சிறையிலிருந்து வெளியேறி அஹமதாபாதிலிருந்து ரயிலில் செல்லும் காந்திஜி ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் உரையாற்றுகிறார். அவருடைய கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மக்கள் அப்படியே அவருடன் கூட்டம் கூட்டமாக ரயிலேறிச் செல்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் சகுந்தலா, "சுய்யாவை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்! அவளை காந்திஜியிடம் ஒப்படைத்து விடுங்கள்" என்று கதறுகிறாள். அந்தக் கூட்டத்தில் இருக்கும் நாராயணிடம் சுய்யாவை ஒப்படைத்துவிட்டு, மீண்டும் ஆசிரமத்திற்குத் திரும்புகிறாள் சகுந்தலா. கல்யாணி, சுய்யா ஆகியோருக்காக தடைகளை உடைக்கும் மனோபலம் இருந்தும், தன்னுடைய விதிக்குப் பின்னால் ஒரு வலுவான ஆன்மீகக் காரணம் இருக்கிறது என்று ஆழ்ந்து நம்புகிற சகுந்தலா கதாபாத்திரம் இங்கே ஒளிர்கிறது. இத்தோடு திரைப்படம் முடிகிறது. இந்த முடிவில் சோகத்துடன் சற்று நம்பிக்கையும் கலந்திருக்கிறது. இந்தக் கொடுமைகளெல்லாம் மதத்தினாலா அல்லது மதத்தைப் பற்றிய தவறான புரிதலினாலா? என்பது என் கேள்வி.

இந்தத் திரைப்பட இயக்கத்திற்கு ஏற்பட்ட அத்தனை அரசியல் ரீதியான, மத ரீதியான தடைகளை எல்லாம் தாண்டி, போராடி சமூக அவலங்களை படம் பிடித்துக்காட்டிய தீபா மேத்தா, மிகுந்த பாராட்டுக்கு உரியவர்.

13 comments:

ramachandranusha(உஷா) said...

தாரா, கடைசியில் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில்- மதமோ அல்லது ஏதோ ஒன்றின் பெயரில் பெண்ணின் மீது அடக்குமுறை பிரஜோகிக்க வேண்டும். அவ்வளவே :-)
ஆனால் வெள்ளை சீலை மற்றும் கோவை வட்டாரங்களில் காவி நிற புடைவை அணிய வேண்டும் என்பது இன்றைக்கும் விதவைகளின் தலைவிதி. இதைத் தவிர விசேஷங்களில் முன்னால் நிற்க முடியாது மற்றப்படி பெரியதாய் வேறு சட்டதிட்டங்கள் இல்லை என்று நினைக்கிறேன்.
ஆனால் இன்னும் வட மாநிலங்களிலும், வங்காள கிராமங்களிலும் சில சமுதாயங்களில் தேவையான அளவு கண்டிப்பு உண்டு.
படம் பார்க்கவில்லையே தவிர, மற்ற விஷயங்கள் தெரியும். இந்த படம் எடுக்க, நம் இந்துத்வா ஆடிய கூத்துக்கள், இருபத்தி
ஒன்றாம் நூற்றாண்டில் இருக்கிறோமா என்ற சந்தேகத்தையும், மாறாத ஆண்களின் ஹிப்போகிரசி மனபான்மையையும் காட்டுகிறது.

தாரா said...

நன்றி உஷா. படத்தைக் கட்டாயம் பாருங்கள். நேரம் கிடைத்தால் உங்கள் கருத்தை எழுதுங்கள்.

தாரா.

Thekkikattan|தெகா said...

தாரா,

அருமையான நடை மற்றும் பட விமர்சனம். உண்மை சுடும் என்பது இந்த படம் பார்க்கும் பொழுது நிகழும் என எனக்குப் படுகிறது.

தருமி said...

படக்கதை கண்முன் நீண்டது; மனதிலும் தைத்தது. படம் பார்க்கவேண்டும் என்ற ஆவலும் வருகிறது.
நன்றி.

நாமக்கல் சிபி said...

//அவரைப் பார்த்து சுய்யா "நான் விளையாட வந்திருக்கிறேன்" என்று வெகுளியாகச் சிரித்துக்கொண்டே சொல்லும் போது//

:(

ப்ச். ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை இப்போது! பிறகு நிதானமாக எழுதுகிறேன்.

வெளிகண்ட நாதர் said...

இந்த படத்தின் என் எதிர்மறை கருத்துக்களை நீங்கள் இந்த பதிவில், "Water-பிராமண விதவைகள்!!" காணலாம்!

சின்னக்குட்டி said...

வணக்கம்..நல்லதொரு விமர்சனம்..நேற்று தான் கூகிள் வீடியோவில் பார்த்தன்..

இந்த வீடிய கிளிப்களை.. http://sinnakuddy1.blogspot.com என்ற இணைப்பில் பார்க்கலாம்

SnackDragon said...

Thara,
Nicely written. This was one of the movies I thought I will write, but never did :-)

ஜெயஸ்ரீ said...

நல்ல விமரிசனம் தாரா. நீங்கள் சொல்வதுபோல் மிகக் குறைவான வசனங்கள். காட்சியமைப்பும் நடிப்புமே நமக்குச் சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிவிடுகின்றன.

இந்தியாவில் ஒரு 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை விதவைகளின் நிலை மிக அவலமானது. மத ரீதியான கொடுமைகள் ஒரு புறம் என்றால் பொருளாதார ரீதியாக பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை. கணவனையிழந்தவள் தன் குடும்பத்திறகு ஒரு பாரமாகவே கருதப்பட்டாள்.வட இந்தியாவில் இத்தகைய கொடுமைகள் அதிகம். இன்னும் மதுரா, காசி போன்ற இடங்களில் இத்தகைய ஆசிரமங்கள் ஒன்றிரண்டு இருக்கின்றன.

அந்த சிறுமி சுய்யா வின் முகமும் துறுதுறுக்கும் விழிகளும் இன்னும் கண்ணிலேயே நிற்கிறது.

சகுந்தலாவாக நடித்த சீமா பிஸ்வாஸின் நடிப்பு அபாரம்.

//கல்யாணி, சுய்யா ஆகியோருக்காக தடைகளை உடைக்கும் மனோபலம் இருந்தும், தன்னுடைய விதிக்குப் பின்னால் ஒரு வலுவான ஆன்மீகக் காரணம் இருக்கிறது என்று ஆழ்ந்து நம்புகிற சகுந்தலா கதாபாத்திரம் இங்கே ஒளிர்கிறது. //

மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். சுய்யாவை காந்தியிடம் ஒப்படைத்தவள் தானும் என் போயிருக்ககூடாது என்ற கேள்வி எனக்கும் இருந்தது.

செல்வநாயகி said...

தாரா, அருமையான விமர்சனம். இன்னும் பார்க்கவில்லை. விரைவில் பார்க்க வேண்டும். தீபாமேத்தா நிச்சயம் பாராட்டுக்குரியவர்.

தாரா said...

தெக்கிட்டான், தருமி, நாமக்கல் சிபி, சின்னக்குட்டி, கார்த்திக், ஜெயஸ்ரீ, செல்வநாயகி - பின்னூட்டத்திற்கு நன்றி

தாரா

தாரா said...

வெளிகண்ட நாதர்,

உங்களுடைய எதிர் மறை கருத்துக்களைப் உங்கள் பதிவில் படித்தேன். சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். விரைவில் எழுதுகிறேன். நன்றி.

தாரா.

வெங்கட்ராமன் said...

நல்ல விமர்சனம்,
கண்டிப்பாக இந்தப் ப்டத்தை நான் பார்ப்பேன்.

பூங்காவில் தான் பதிவை படித்தேன்.
உங்களுக்கும் தமிழ்மனத்திற்கும் நன்றி.