Monday, October 23, 2006

என் புத்தக உலகம் - 3

சென்ற பதிவின் தொடர்ச்சி

சிறு வயதில் எனக்கு தமிழ்ப் புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பு அதிகம் கிடைக்கவில்லை. கல்லூரி நாட்களில் குமுதம், ஆனந்த விகடனில் வரும் தொடர்களை ஆர்வத்துடன் படித்திருக்கிறேன். அடுத்த வாரம் பத்திரிக்கை வருவதற்குள் மண்டை வெடித்துவிடும் போல் இருக்கும். சுஜாதாவின் "பிரிவோம் சந்திப்போம்" எனக்கு மிகவும் பிடித்த கதை!

Image hosted by LetMeHost.com
முன் பாதி கதை திருநல்வேலியில், இரண்டாம் பாதி நியூயார்க்கில்! Irving Wallace, John Grisham, Sydney Sheldon போன்ற ஆங்கில நாவலாசிரியர்கள், அவர்கள் கதையில் சம்பவங்கள் எந்த ஊரில் நிகழ்கிறதோ, அங்கேயே சென்று தங்கி சுற்றுச் சூழலை நன்றாக ஆராய்ந்து கதையை எழுதுவார்கள். அதேபோல் சுஜாதா அந்த காலத்திலேயே நியூயார்க் நகர வாழ்க்கையை அருமையாக விவரித்திருப்பார். முக்கியமாக அப்பாவி தமிழ்நாட்டு கதாநாயகன் திருநல்வேலியிலிருந்து நியூயார்க் வந்து இறங்கி JFK விமான நிலையத்தில் செய்வதறியாமல் தடுமாறும் காட்சி ரொம்ப தத்ரூபமாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும். அமெரிக்கா வாழ் தமிழர்களின் வாழ்க்கையையும் யதார்த்தமாக சொல்லியிருப்பார். மற்றபடி வேறு தமிழ் புத்தகங்கள் நான் அப்போது படிக்கவில்லை.

கல்லூரி முடித்தபின் சென்னையில் பயிற்சி, அமெரிக்கா பயணம், வேலை தேடுதல், திருமணம், குடும்பப் பொறுப்பு என்று நான்கைந்து ஆண்டுகள் பறந்தன. என் கணவர் தமிழ்ப் புத்தகங்கள் நிறைய படிப்பார். அவ்வப்போது வெளியிடப்படும் புத்தகங்களை பட்டியல் போட்டு தன் தம்பிக்கு அனுப்பி, சென்னையில் அவற்றை வாங்கி அனுப்பச்சொல்வார். ஆனால் ஒரு முறை கூட நான் அந்தப் புத்தகங்களை எடுத்துப் பார்த்ததில்லை. ஒரு நாள் சன் தொலைகாட்சியில் வைரமுத்து எழுதிய "கள்ளிக் காட்டு இதிகாசம்" புத்தக வெளியீட்டு விழாவை பார்க்க நேரிட்டது. அதில் கலைஞர், பாரதிராஜா போன்ற பலர் அந்தப் புத்தகத்தை மாய்ந்து மாய்ந்து பாராட்டிப் பேசினார்கள். பாரதிராஜா பேசும்போது, "இப்படி ஒரு கதையை இவனால் மட்டும் தான் எழுதமுடியும்! என்னால் மட்டும் தான் திரைப்படம் எடுக்கமுடியும்! அவனால்(இளையராஜா) மட்டும் தான் இசையமைக்க முடியும்! என்று உணர்ச்சிகரமாகப் பேசினார். அட! இந்தக் கதை பாரதிராஜா திரைப்படம் பார்ப்பது போல் இருக்கும் போலிருக்கு! படிக்க வேண்டுமே?! என்கிற ஆர்வம் என்னைத் தொற்றிக்கொண்டது.

கணவரின் தம்பி மூலம் "கள்ளிக் காட்டு இதிகாசம்" என் வீட்டிற்கு வந்திறங்கியது. ஒரு விடுமுறை நாளில் மதிய நேரத்தில் புத்தகத்தை எடுத்துப் பிரித்தேன். எத்தனைப் பக்கங்கள் இருந்தன என்று நினைவில்லை. தினமும் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்து ஒரு வாரத்தில் முடித்துவிடலாம் என்று திட்டம் போட்டு படிக்கத் தொடங்கினேன். புத்தகத்தை கீழே வைக்கும் போது பின்னிரவு ஒரு மணி! முழு கதையையும் அன்றே படித்து முடித்துவிட்டேன்! அப்படி நான் ஒரே மூச்சாகப் படித்து முடிப்பதற்கு அது ஒரு விறுவிறுப்பான காதல் கதையோ, திகிலான மர்ம நாவலோ அல்ல! அது ஒரு ஏழைக் குடியானவனின் சோகக் கதை! கதாநாயகன் - அறுபது வயது கிழவன்... கதையில் களம் - வறண்ட கள்ளிக் காடு! இவற்றை வைத்து ஒரு இதிகாசத்தைப் படைக்கமுடியுமா? முடியுமென்று நிரூபித்திருக்கிறார் வைரமுத்து!

Image hosted by LetMeHost.com

பேயத் தேவர் என்கிற கிழவன் மண்ணையே மருந்தாகவும் கடவுளாகவும் நினைத்து வாழும் ஒரு ஏழை விவசாயி. வைகை நதிக் கரையின் ஓரம் இருக்கிறது அவன் வாழும் கிராமம். திடீரென்று ஒரு நாள் சர்க்காரிடம் இருந்து ஆணை வருகிறது - இன்னும் சில நாட்களில் வைகை அணைக்கட்டு திறந்துவிடப்படும் என்றும், அருகில் இருக்கும் கிராம மக்கள் எல்லாம் இடைத்தைக் காலி செய்துவிட்டு மேடான பகுதிகளுக்குச் சென்றுவிடவேண்டுமென்றும். துடிதுடித்துப் போகிறார் பேயத்தேவர். சர்க்காரிடம் சென்று பேசுகிறார். மேலிடத்தில் முறையிடுகிறார். போராட்டம் நடத்துகிறார். அவருடைய அனைத்து முயற்சிகளும் தோல்வியடைகின்றன. ஊரைக் காலி செய்யும் நாளும் நெருங்குகிறது. ஒவ்வொரு குடும்பமாக ஊரை விட்டு வெளியேறுகின்றார்கள். கடைசி நாள் வரை தான் நம்பிய மண் தன்னைக் கைவிடாது என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். கடைசி நாளன்று அணைகட்டிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டு நிலப்பகுதிகளை விழுங்கிக்கொண்டே வருகிறது! வேறு வழியின்றி பேயத்தேவர் குடும்பத்தாருடன் தானும் தன் மனைவியும் ஆசை ஆசையாகக் கட்டிய மண் வீட்டைக் காலி செய்துவிட்டுச் செல்கிறார். சற்றுத் தொலைவு சென்றதும், தன் வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்ட சில பூர்வீகப் பொருட்களின் நினைவு வர, அவற்றை எடுத்து வருவதற்காக மீண்டும் வீட்டிற்குச் செல்கிறார். வெள்ள நீர் நிலை அதிகமாகிவிட, அவர் வீட்டின் உள்ளேயே நீரில் மூழ்கி இறந்துவிடுகிறார். அவர் நம்பிய மண்ணே அவரை உள்ளே இழுத்துக்கொள்கிறது!

கதையைப் படித்து முடித்தவுடன் துக்கம் தொண்டையை அடைத்தது! சிட்னி ஷெல்டனின் கதாநாயகிக்காக கண்ணீர் விட்டது போலவே பேயத்தேவருக்காகவும் கண்ணீர் விட்டேன். தெய்வங்களை வைத்து இதிகாசம் எழுத அன்று எத்தனையோ பேர் இருந்தார்கள். மனிதர்களைப் பற்றிய இதிகாசம் எழுத எத்தனைப் பேர் இருக்கிறார்கள்? ஒரு விவசாய நாட்டில் ஒரு விவசாயியின் கதையை எத்தனைப் பள்ளிகளில் பாடமாகப் படிக்கிறார்கள்? இப்படி மனதில் பல கேள்விகள்!

இதுவரை நான் படித்த கதைப் புத்தகங்களெல்லாமே - புனைவு! யதார்த்த, நிஜ வாக்கையிலிருந்து மிகவும் விலகியிருந்த கதைகள் அவை. கற்பனை உலகிலேயே இருந்த என்னை, சுடும் நிஜத்திற்கு அருகில் கொண்டு சென்றது "கள்ளிக் காட்டு இதிகாசம்".

அடுத்து நான் படித்த மற்றொரு தமிழ்ப் புத்தகம் என்னை நிஜத்தையே தொட வைத்தது!

தொடரும்...

6 comments:

SathyaPriyan said...

அருமையாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

Thara said...

நன்றி சத்யப்ப்ரியன்!

தாரா.

icarus prakash said...

அருமையான பதிவு.

பிரிவோம் சந்திப்போம் என்னைத் தவிர எல்லோருக்கும் பிடித்திருக்கிறது :-)

தொடர்ந்து எழுதுங்கள்.

Thara said...

நன்றி ப்ரகாஷ்! பிரிவோம் சந்திப்போம் உங்களுக்குப் பிடிக்காமல் போனதற்கு ஏதாவது முக்கிய காரணம் உள்ளதா? தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

தாரா.

icarus prakash said...

தாரா : 'விறுவிறுப்பான' கதைகள் மட்டுமே படித்த / பிடித்த காலத்தில், பிரிவோம் சந்திப்போம் கதையின் சென்டிமெண்ட் அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

மறுபரிசீலனை செய்ய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை :-). அதுதான் காரணம்.

நிர்மல் said...

நல்ல பதிவு