அமெரிக்காவில் நடக்கும் பரதநாட்டிய அரங்கேற்றங்களைப் பற்றிய என்னுடைய ஆதங்கத்தினை முன்பு அரங்கேற்ற அலம்பல் - 3 என்ற பதிவில் எழுதியிருக்கிறேன். சென்ற சனிக்கிழமை நான் பார்த்த ஒரு அரங்கேற்றம், என் ஆதங்கத்தினையும், மாற்றங்களும் புதுமைகளும் சீக்கிரம் நிகழவேண்டும் என்கிற என் அவசரத்தையும் ஆறுதல்படுத்தியது!
நடனமாடியப் பெண் ஒரு கிறிஸ்துவர் மற்றும் இலங்கைத் தமிழர்.
தொடக்கத்தில் கடவுள் வாழ்த்தின் போது சிவனையும் கிறிஸ்த்துவையும் வணங்கி நடனமாடினாள். சிலுவைக் குறியிட்டுக்கொண்டாள்! "Amen" என்றும் சொன்னாள்! இது எனக்குப் புதுமையாகப் பட்டது. பிற மதங்களுக்கும் பரதநாட்டியம் "customize" செய்யப்படலாம் என்பது ஒரு நல்ல முன்னேற்றம்!
பிறகு மணியான, ஆழமான கருத்துக்களைக்கொண்ட ஒன்பது திருக்குறள்களுக்கு அழகாக நடனமாடினாள்! பக்கவாட்டில் உள்ள ஒரு பெரிய திரையில் ஒவ்வொரு திருக்குறளும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்புடனும், அதன் பொருளை உணர்த்தும் சித்திரங்களுடனும் காட்டப்பட்டது!
அடுத்து வந்தது "சாற்றி வளர்த்திடுவாய் நம் சங்க இலக்கியப் பெருமையெல்லாம்" என்று சங்க இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் நினைவுகூறும் ஒரு சிறப்பு நடனம். ஒளவையார், தொல்காப்பியர், பெரியாழ்வார், இளங்கோவடிகள், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், கம்பர், திருவள்ளுவர் போன்ற சங்ககாலச் சான்றோர்களையெல்லாம் ஒரு விநாடி கண்முன் நிறுத்தினாள்.
அடுத்த நடனம் "துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?" என்ற பாரதிதாசனின் இனிமையான பாடலுக்கு. இது என் அப்பாவுக்கும் மிகவும் பிடித்த பாடல்! சிறு வயதில் அவர் இந்தப் பாடலை அடிக்கடி பாடி நான் கேட்டிருப்பதால் எனக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். அதிலும் "அன்பிலா நெஞ்சில் தமிழிற் பாடி நீ, அல்லல் நீக்க மாட்டாயா? கண்ணே நீ, அல்லல் நீக்க மாட்டாயா?" என்கிற வரிகளில் இனிமைச் சொட்டும்!!! "ஓர் இரவு" என்கிற பழைய திரைப்படத்தில் பத்மினியின் சகோதரிகள் லலிதா, ராகினி இருவரில் யாரோ ஒருவர் இந்தப் பாடலுக்கு நடனமாடியிருப்பார். சரியாக ஞாபகம் இல்லை.
பாரதியாரையும் விட்டுவைக்கவில்லை இந்த அரங்கேற்றத்தில்! "என்று தனியும் இந்த சுதந்திர தாகம்? என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?" என்ற பாடலுக்கு இலங்கைத் தமிழர்களின் அடிமை வாழ்வையும் சுதந்திரத் தாகத்தையும் பிரதிபலிக்கும் நெஞ்சை உருக்கும் நடனம்!
அடுத்து சிலப்பதிகாரம் - கண்ணகியின் கதை! உணர்ச்சிப்புர்வமான நடனம். பாடலினூடே சிலப்பதிகாரத்தின் ஆங்கில சாராம்சம்!
பின்னர் "வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்" என்கிற குதூகலமானப் பாடலுக்குச் சுறுசுறுப்பான நடனம்!
இறுதியாக மங்களம் - "தமிழே வணக்கம்" என்கிற பாடல். தமிழுக்கு எவ்வளவு மரியாதை செய்யமுடியுமோ அவ்வளவு மரியாதையும் இந்த நிகழ்ச்சியில் செய்துவிட்டதாக எனக்குத் தோன்றியது!
தமிழை வணங்கினாள்! இறைவனைப் போற்றினாள்! திருக்குறளை ஆடினாள்!சங்க இலக்கியங்களை நினைவுக்கூர்ந்தாள்! பாரதியையும் பாரதிதாசனையும் மேடையேற்றினாள்! சுதந்திரத் தாகத்தை தன் அசைவுகளால் புரியவைத்தாள்!
தான் வாழும் சமுதாயத்தை, தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, தன்னுடைய உணர்வுகளை, தன் மதத்தை, தன் தாகங்களை பிரதிபலிக்க உதவாத ஒரு கலைவடிவம் ஒரு கலைஞனுக்கு எதற்கு? பரதநாட்டியம் என்கிற கலைவடிவத்தை அதன் அழகும் மரியாதையும் கொஞ்சமும் குறையாமல் அதன் கலாசார எல்லைக்குள் அதனை வளைத்து மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு சில கலைஞர்கள் உலகில் இருக்கிறார்கள், மேலும் இதுபோல் உருவாகி வருகிறார்கள் என்று நினைக்கையில் மனதிற்கு நிறைவாக இருக்கிறது!
பின்குறிப்பு: சில வருடங்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்மணி, "தமிழ் ஆர்வத்திலும் உணர்விலும், தமிழை வளர்க்கும் முயற்சியிலும் இந்தியத் தமிழர்களை விட இலங்கைத் தமிழர்கள் தான் முன்னனியில் இருக்கிறார்கள்" என்று சொன்னார். அப்போது சற்று கோபம் வந்தது. இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியைப் பார்த்தபிறகு, அவர் அன்று சொன்னது உண்மைதான் என்று அரை மனதுடன் ஒப்புக்கொள்ளத் தோன்றுகிறது!
12 comments:
நல்ல அருமையான கட்டுரை. நிகழ்ச்சியை நேரே பார்த்தது போல இருக்குது.
//தொடக்கத்தில் கடவுள் வாழ்த்தின் போது சிவனையும் கிறிஸ்த்துவையும் வணங்கி நடனமாடினாள். சிலுவைக் குறியிட்டுக்கொண்டாள்! "Amen" என்றும் சொன்னாள்!//
நல்ல முயற்சி. நானும் இவ் வழக்கத்தை இன்றுதான் கேள்விப்படுகிறேன்.
//தான் வாழும் சமுதாயத்தை, தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, தன்னுடைய உணர்வுகளை, தன் மதத்தை, தன் தாகங்களை பிரதிபலிக்க உதவாத ஒரு கலைவடிவம் ஒரு கலைஞனுக்கு எதற்கு?//
அருமையாகச் சொன்னீர்கள். ஆனால் இன்று நாம் மேலைத்தேச மோகத்தால் நமது பாரம்பரியக் கலைகளை அழியவிட்டுவிடுவோமோ எனும் அச்சம் தலைதூக்குகிறது.
அருமையான நிகழ்ச்சியைப் பார்த்திருக்கீங்க.
அந்தப் பொண்ணும், கற்பித்த ஆசிரியரும் நல்லா இருக்கணும்.
சிறந்த பதிவு.
மத நல்லிணக்கமும் தமிழின் சிறப்பும் மிகுந்து வெளிப்படுமாறு நிகழ்ச்சி அமைக்கப் பட்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கான நிரல் அமைத்தவர்களும் பாடல்களைத் தேர்வு செய்தவர்களும் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்
நிகழ்ச்சிகள் இவ்வாறு அமைக்கப்படுமாயின் அது பரதநாட்டியத்தையும் பிரபலப் படுத்தும்.
//"தமிழ் ஆர்வத்திலும் உணர்விலும், தமிழை வளர்க்கும் முயற்சியிலும் இந்தியத் தமிழர்களை விட இலங்கைத் தமிழர்கள் தான் முன்னனியில் இருக்கிறார்கள்" என்று சொன்னார் //
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வடக்கே இருந்து கூட்டம் கூட்டமா ஆளுக வருவாங்க. கோபுரத்துக்கு பக்கத்துல கடை வசிருக்கிற ஆளு அதே கோவிலுக்கு எத்தனை தடவை ( அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவரா இருந்தாலும்) போயிருப்பாருன்னு நினைக்கிறீங்க..??
நம்ம அம்மா நமக்காக பண்ற நல்ல விஷயங்களை எல்லாம் எத்த்னை முறை அவங்க பக்கத்துல இருக்கும்போது சொல்லி இருக்கிறோம்..??
எதையும் அவ்ளோ சுலபமா பொதுமைப்படுத்தறது கஷ்டம் தாரா.
முடிவுக்கு வர்றதுக்கு நிறைய உதாரணங்கள் வேண்டும்.
நல்ல பதிவு. அழகாக விபரமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
புலத்தில் அரங்கேறும் பரதநாட்டியங்களைப் பார்த்து நானும் வருந்தியிருக்கிறேன்.
உங்களது இந்தப் பதிவு மனதில் ஒரு வித திருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
நன்றி.
வெற்றி, துளசி அக்கா, ஓகை, சுந்தர், சந்திரவதனா - பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!!!
தாரா
தாரா!
பல கிருஸ்தவர்கள்;தாம் சமயத்தால் மாறுபட்டிருந்தபோதும்; தம் கலை கலாச்சாரம்; தமிழ் என்பதை ஒப்புக் கொள்வதால்;வரும் நல்விளைவே இது;மிக மகிழ்ச்சி!!
சிலர் பியனோ கற்பதால் ,மேலைநாட்டோர் ஆகலாம்; என ஆசைப்படுவோரும் உண்டு.
தமிழகத்தில் ; திருச்சி"கலைக் காவேரி"- கலாகேந்திராவுக்கு நிகரான ஓர் பாரம்பரியக் கலாகூடம்;அதை நிர்வகிப்பவர்கள் கத்தோலிக்கப் பாதிரியார்கள்.
பல மாற்றுச் சமயத்தவர்கள்; இசைகற்பது,நடனம் கற்பதென,இப்போ மாற்றம் உண்டு.
இலங்கையில் சிங்களப் பெண்கள்கூட பரதம் கற்று அரங்கேறுவதை, வீரகேசரியில் படித்தேன்.
வரவேற்போம்.
யோகன் பாரிஸ்
தாரா, நடிகை ஷோபனா, இப்படி புது முயற்சிகள் செய்கிறார் என்று நினைக்கிறேன்.
ஜான் - நன்றி!
உஷா - சில மாதங்களுக்கு முன் ஷோபனாவின் நடன நிகழ்ச்சி ஒன்றினை வாசிங்டனில் பார்த்துவிட்டு இந்தப் பதிவை எழுதினேன்:
http://siragugal.blogspot.com/2005/10/redefined.html
தாரா
அடடா, நீங்க எழுதியதுதான்! லிங்கைப் பிடித்து படிக்க ஆரம்பித்ததும் நினைவு வந்துவிட்டது.
ம்..கட்டுரை அந்தமாதிரி இருக்கு..
வார்த்தைகளால் ஒரு மேடையமைத்து அரங்கேற்றத்தை கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள்...உங்களின் இந்த பதிவுக்கு பின்னூட்டம் இட தோணிச்சு.அதோட மற்றவைகளை படிக்கும் ஆர்வமும் அதிகமாச்சு...ஏனையவற்றையும் படித்து விட்டு பின்னூட்டம் இடுகின்றேன்
Thara, amazing explanation and review. I didn't know you are this good in expressing your view so well that too in Tamil. I cannot call myself your best friend, because you really give me lot of surprises. But I can say one thing, a big percentage of people who are not outspoken, have proven to be great writers.
Post a Comment