Monday, October 09, 2006

என் புத்தக உலகம் - 2

சென்ற பதிவின் தொடர்ச்சி

Mills & Boon படிக்கத் தொடங்குவதற்கு முன் மற்றொரு கதைபுத்தகத்தைப் பற்றி சொல்ல மறந்துவிட்டேன். "Phantom" கதைகள் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்.

Photography Web Site Templates


"Phantom" என்கிற மர்ம மனிதன் காட்டில் வாழ்கிறான். நகரத்தினுள் நடக்கும் கொலை, கொள்ளை, அட்டூழியங்களைப் பற்றி தன் ஒற்றர்கள் மூலம் அறிகிறான். நகரத்தினுள் மாறுவேடத்தில் சென்று தவறு செய்பவர்களைப் பிடித்து தண்டிக்கிறான். அவனுடைய காட்டு வாழ்க்கை படிக்க சுவையாக இருக்கும். அப்பா கதை சொல்லுவதில் மிகவும் கெட்டிக்காரர். இந்த Phantom கதை புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு sound effects எல்லாம் கொடுத்து அவர் கதை சொல்லத் தொடங்கினார் என்றால், அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகளெல்லாம் கதை கேட்க வந்துவிடுவார்கள். அப்பா சொல்லும் கதையை சுற்றி உட்கார்ந்து திகிலுடன் கேட்டுக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்து தத்தம் பிள்ளைகளுக்கு அழைப்பு வரும் "வந்து சாப்பிட்டுவிட்டு போ" என்றும் "வந்து வீட்டுப்பாடத்தைச் செய்து முடி" என்றும். யாரும் அசைய மாட்டார்கள்!

சரி...இப்ப Mills & Boon காலக் கட்டத்திற்கு வருவோம். நான் 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். முதன் முதல் என் வகுப்புத் தோழி ஒரு M & B புத்தகத்தைக் கொடுத்தாள். அதை நான் படிப்பதைப் பார்த்த அப்பா, "அது நல்ல புத்தகம் இல்லை. நீ இனிமே அதை படிக்கவேண்டாம்" என்று கண்டித்தார். நான் அப்பாவுக்குத் தெரியாமல் மேலும் சில M & B கதைகளைப் படித்தேன்! எல்லாமே காதல் கதைகள்.

Photography Web Site Templates


ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டே முக்கியக் கதாபாத்திரங்களைச் சுற்றிதான் கதை. ஆண்கள் எப்போது உயர்ந்த அந்தஸ்த்துடையவர்களாக, உயரமான கம்பீரமாக, ஆளுமை மிக்கவர்களாக இருப்பார்கள். பெண் கதாபாத்திரங்கள் இத்தகைய ஆணுக்காக ஏங்கிப் பரிதவிப்பவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் ஒரு மோதலில் இவர்களின் சந்திப்பு நேரும். பிறகு காதலில் முடியும். அந்தக் காதலுக்கு சில சோதனைகள் வரும். அந்த ஆணுக்கு மற்றொரு காதலி இருப்பாள், அல்லது அந்தப் பெண்ணுக்கு ஒரு பழைய காதலன் இருப்பான். இறுதியில் மகிழ்ச்சியான முடிவாகத்தான் இருக்கும். எல்லா M & B கதைகளுமே இதே மாதிரிதான். 10 கதைகள் படித்த பிறகு சலித்துவிட்டது.

அதன் பிறகு அடுத்த கட்டமாக Sydney Sheldon, Irving Wallace போன்றவர்களின் நாவல்களைப் படிக்கத் தொடங்கினேன். மீண்டும் அப்பா எச்சரிக்கை விடுத்தார் "இவை உன் வயதிற்கு மீறிய புத்தகங்கள்" என்று! ஆனால் நானோ அப்பா இல்லாத நேரத்தில் அவருடைய புத்தக அலமாரியிலிருந்து நாவல்களை எடுத்துப் படித்தேன். இப்ப என்னுடைய இந்தப் பதிவை அப்பா படிக்கும்போது "அடப் பாவி மகளே! இப்படியெல்லாம் செய்தியா?!" என்று நினைத்துக்கொள்வார்! என் வயதிற்கு மீறிய புத்தகங்கள் என்பது உண்மையாக இருந்தாலும், அருமையான கதைகள் அவை. Sydney Sheldon னின் "The Rage of Angels" கதை படித்துவிட்டு கதாநாயகி ஜென்னிபருக்காக தேம்பித் தேம்பி அழுதிருக்கிறேன்.

இதுவரை நான் படித்த கதைகளிலே என்னை பிரமிக்க வைத்தது Irving Wallace இன் "The Second Lady". அமெரிக்காவின் First Lady என்றழைக்கப்படும் அமெரிக்க அதிபரின் மனைவியைப் போலவே தோற்றமுடைய ஒரு பெண் ரஷ்யாவில் இருக்கிறாள். அவளைக் கண்டெடுத்த ரஷ்ய KGB உளவாளிகள், அமெரிக்க அதிபரின் மனைவியைக் கடத்தி ஒளித்து வைத்துவிட்டு, இந்த ரஷ்யப் பெண்ணை தயார் செய்து வெள்ளை மாளிகைக்கு அனுப்புகிறார்கள், அமெரிக்க ரகசியங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள. யாருக்குமே இந்த ஆள் மாறாட்டம் தெரியவில்லை. ஆனால் அமெரிக்க அதிபர் மனைவி பற்றிய சுயசரிதை எழுதுவதற்காக அவருடனேயே பல மாதங்கள் பயனித்து வந்த ஒரு எழுத்தாளனுக்கு மட்டும் சந்தேகம் வருகிறது. உண்மையைக் கண்டுபிடிக்க முயல்கிறான். இறுதியில் அது போலி first lady என்று கண்டுபிடித்தும் விடுகிறான். அதை நிரூபிக்கும் முன், இரண்டு first ladyக்களில் ஒருவர் ஒரு விபத்தில் இறந்துவிட, எஞ்சி இருப்பவர் உண்மையான first ladyயா அல்லது போலியா என்று தெரியாமலேயே கதை முடிந்துவிடுகிறது. கதை படித்து முடித்து பல நாட்களாக எனக்கு மனம் ஆறவேயில்லை, கடைசி வரை எந்த first lady அது என்றுத் தெரியாமல் போய்விட்டதே என்று!
அப்பா மேல் ஒரு சின்ன வருத்தம். சிறு வயதில் எனக்கு நல்லத் தமிழ்ப் புத்தகங்களை அறிமுகப்படுத்தத் தவறிவிட்டார். நான் படித்தவை எல்லாமே ஆங்கிலக் கதைப்புத்தகங்கள் தான். ஆனால் அம்புலிமாமாவைத் தவிர அப்போதெல்லாம்சிறுவர்களுக்காக நல்லத் தமிழ்க் கதை புத்தகங்கள் இருந்ததா என்று தெரியவில்லை.

பள்ளி இறுதியாண்டு படிக்கும் போது புனைவுக்கதைகளில் உள்ள ஆர்வம் தேயத்தொடங்கி அறிவுத் தாகம் எடுத்தது. இந்தக் கதைப் புத்தகங்களினால் என் ஆங்கில அறிவு செம்மைப்பட்டதென்னவோ உண்மைதான். ஆனால் இந்தப் புத்தகங்களினால், நான் ஒரு அமைதியான சப்தமில்லாத உலகத்தில் மூழ்கி அடைபட்டுவிட்டேன்! என் வயதை ஒத்தசிறுமிகள் தெருவில் விளையாடுகையில் நான் ஓரமாக உட்கார்ந்து கதைப் படித்துக்கொண்டிருப்பேன். சுற்றி நடப்பது என்னவென்றே தெரியாமல் அந்த அமைதியான உலகத்தினுள் சென்றுவிடுவேன். சாப்பிடும் போதும் இடது கையில் கதைப் புத்தகம் இருக்கும். அம்மா அப்பாவுடன் வேறொருவர் வீட்டுக்குச் சென்றாலும், அங்கே ஏதாவது புத்தகங்கள்கிடைத்தால் அவ்வளவுதான். இதனால் நான் பேசும் நேரம் மிகவும் குறைந்துவிட்டது. பின்னர் கல்லூரி நாட்களிலும், அமெரிக்கா வந்த புதிதிலும் இது எனக்கு ஒரு பெரிய பின்னடைவாக இருந்தது. பிறகு பேசுவது ஒன்றையேவாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்ட ஒருவரை திருமணம் செய்துகொண்டேன்! ஒரு நண்பர் கூட சொன்னார், "நீங்கள் பேசுபவரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை...பேச்சையே திருமணம் செய்கொண்டீர்கள்" என்று. என்னுடைய அமைதியான உலகம் உடைந்தது. சற்றே வெளியில் எட்டிப்பார்த்தேன்...

திருமணத்திற்குப் பிறகு என்னுடைய புத்தக வாசிப்பு வேறு திசையில் திரும்பியது.

தொடரும்...

6 comments:

Boston Bala said...

தொடருங்கள்... ஆர்வமுடன் படித்து வருகிறேன்.

தாரா said...

பாலா, தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றி!

தாரா.

Thangamani said...

/பிறகு பேசுவது ஒன்றையேவாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்ட ஒருவரை திருமணம் செய்துகொண்டேன்! ஒரு நண்பர் கூட சொன்னார், "நீங்கள் பேசுபவரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை...பேச்சையே திருமணம் செய்கொண்டீர்கள்" என்று. //

:))


நன்றாக, எளிமையக படிக்க சுவைகுன்றமல் எழுதியிருக்கிறீர்கள்.

பொன்ஸ்~~Poorna said...

நல்லா எழுதுறீங்க.. அப்புறம் என்னாச்சு?

லக்ஷ்மி.... said...

If you need the copy of those books - http://www.antiqbook.com/boox/sola/books8000.shtml

ரவியா said...

sydney sH 's "other side of midnight" is my favorite.