Tuesday, August 09, 2005

அரங்கேற்ற அலம்பல் - 3

சென்ற பதிவின் தொடர்ச்சி...

பொருளாதாரத் தேவைக்காக நாட்டியம் கற்றுக்கொண்ட காலங்களெல்லாம் எப்போதோ போய்விட்டது. இப்போது சமூகத்தில் நாட்டியக் கலைஞர்களின் இடமும் வெகுவாக மாறிவிட்டது. குறிப்பாக அமெரிக்காவில் அரங்கேற்றம் என்பது ஒரு நாட்டிய career இன் தொடக்கமாகக் கொண்டாடப்படுவதில்லை. மாறாக, ஒரு நீண்ட நாட்டியப் பயிற்சியின் முடிவாகவே கருதப்படுகிறது. அரங்கேற்றத்தை இலகாக வைத்துத்தான் பயிற்சியே மேற்கொள்ளப்படுகிறது. 'அப்பாடா! அரங்கேற்றம் முடிந்தாகிவிட்டது! இனிமே படிப்பில் கவனம் செலுத்தவேண்டும்' என்றுதான் இங்கே பல பெற்றோர்களும் பிள்ளைகளும் நினைக்கிறார்கள். அரங்கேற்றத்திற்குப் பிறகும் தொடர்ந்து நாட்டியம் ஆடும் பெண்கள் மிகவும் குறைவு என்பது என் கருத்து. Ann Marie Gaston என்பவர், தன்னுடைய "Temple to Theater" என்கிற புத்தகத்தில் இப்படி சொல்லுகிறார். "...to many of the families, whose childern attend Bharata Natyam classes in this country, the purpose of the ritual, and even the meaning of the word 'Arangetram' is a mystery. This has unfortunately led to the redefinition of the Arangetram as being 'the termination of the learning phase,' a phase that was part time to begin with."

தொடர்ந்து பரதநாட்டியத்தைக் கற்றுக்கொள்வதும், ஆடுவதும் அவரவர்கள் விருப்பம். எனக்கு புரியாத சிலவற்றை கேள்விகளாக இங்கே முன் வைக்கிறேன். பரதநாட்டியத்தை கலாசாரத்தோடு போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் அதை ஒரு நாட்டியக் கலை வடிவமாக மட்டுமே பார்ப்பதுசாத்தியமா? பரதநாட்டியத்தின் முலம் இந்தியக் கலாசாரத்தின் வேர்களுடன் தொடர்பில் இருக்கமுடியுமென்பது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் இதுவே பரத நாட்டியம் கற்றுக்கொள்வதற்கான ஒரே காரணமாக இருப்பது சரியா? எல்லாக் கலைவடிவங்களும், அதன் பூர்வீகத்துடன் நெருங்கியத் தொடர்புடையதாகத் தான் இருக்கும். அதனால் தான் கலையையும் கலாசாரத்தையும் எளிதில் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. பரதநாட்டியம் கலாசாரத்தின் பிரதிபலிப்பாக மட்டும் இருக்கக் கூடாது. அந்தக் கலாசாரத்தையே சவால்விடும் தன்மை மிக்கதாகவும் இருக்கவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அது ஒரு பிரச்சாரம் போல் இருக்கிறது. இன்னும் எத்தனை நாட்கள் தான் கிருஷ்ணலீலைகளையும், தசாவதாரங்களையும், வள்ளித் திருமணத்தையும் பார்த்துக்கொண்டிருப்பது? இவையெல்லாம் முடிந்து போன கலாசார வரலாறுகள். பரதநாட்டியம்நம் நாட்டுக் கலாசாரச் சின்னம் என்றால், ஏன் நிகழ் கால கலாசாரத்தை பரதநாட்டியங்கள் பிரதிபலிப்பதில்லை? சமீபத்தில் நான் பார்த்த ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியில் ஒரு திருக்குறளுக்கு உதாரணமாக அன்னைத் தெரேஸாவைப் பிரதிபலித்திருந்தார்கள். இது போல் புதிய முயற்சிகளைப் பார்பது மிக அபூர்வமாக இருக்கிறதே, ஏன்? ஒரு அரங்கேற்றத்தில் 10 நடனங்கள் இருக்கிறதென்றால், 5 நடனங்களில் கிருஷ்ணரைப்பற்றியும் முருகரைப்பற்றியும் சொல்லிவிட்டு மீதி 5 நடனங்களிலாவது சமூக அக்கறையுடைய செய்திகளைச் சொல்லலாம் இல்லையா?

முடிவாக நான் சொல்ல விரும்புவது, அமெரிக்காவில் வாழும் தமிழர்கள், அரங்கெற்றத்தின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம், நம் குழந்தைகளை நம் கலாசாரத்துடன் தொடர்பில் வைத்துக்கொள்ள அரும்பாடுபடுகிறோம். அரங்கேற்றத்துடன் முடிந்துபோய்விடும் பரதநாட்டிய வகுப்புகள் இந்தப் பாடுபடலின் ஒரு பகுதி என்றால், அப்படியே இருக்கட்டும். ஆனால் அரங்கேற்றம் செய்துவிட்டால் மட்டும் சாதித்துவிட்டதாக அர்த்தம் கிடையாது. நம் மூதாதையர்களால் நமக்குக் கிடைத்த அந்த அரிய கலையை சமூகத்திற்கும், அடுத்த சந்ததியினருக்கும் ஒரு நல்ல வடிவில் எடுத்துச் செல்லுதல் தான் உண்மையான சாதனை. அதற்கான சிந்தனையைத் தூண்டிவிடும் நிகழ்ச்சியாக அரங்கேற்றங்கள் இருக்கவேண்டும்.

5 comments:

செல்வராஜ் (R.Selvaraj) said...

தாரா, நல்ல கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்கள். கிருஷ்ணனையும் முருகனையும் மட்டும் பாடுவதை விட்டுவிட்டுச் சமூகக் கருத்துக்களையும் பிற பாடுபொருள்களையும் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது நல்ல பார்வை. இந்த மாற்றம் வருவதற்கு நடன ஆசிரியர்கள் தான் உதவ வேண்டும். பெற்றோர்கள் வலியுறுத்த வேண்டும் என்றாலும் முதல் தலைமுறையாய் நடனம் கற்றுக் கொள்ளச் செல்பவர்களுக்கு அப்படி வலியுறுத்தும் ஆளுமை இல்லை.

அரங்கேற்றம் முடிந்துவிட்டால் சாதித்து விட்டதாக அர்த்தம் கிடையாது என்று நீங்கள் கூறினாலும், அதனைச் செய்யும் மாணவர்களைப் பொருத்தவரை அது பெரும் சாதனை தானே. அதன் பின்னும் தொடர்ந்து ஆடவேண்டும் என்றாலும் இந்நாளின் பள்ளி/பணியிடத்து வேலைகளில் அழுத்தங்களில் நடைமுறையில் அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

துளசி கோபால் said...

தாரா,

நல்ல பதிவு. மாற்றங்கள் வரணும். வரும். இதற்கு நல்ல நடன ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் நல்ல பாடல் எழுதி இசை அமைப்பவர்களும் பங்கு பெற்றால்தான் வெற்றி!

என்றும் அன்புடன்,
துளசி.

யாத்திரீகன் said...

செல்வராஜ் சொல்கின்ற மாதிரி.. கடினம் தான்... ஆனால் தாரா அவர்கள் சொல்ல வந்தது..பெற்றோர்களே இந்த எண்ணத்தை புகுத்துவதைத்தான் என்று நினைக்கின்றேன்... சரிதானா ??!

பின்னூட்டமிடாமல் படித்து வரும் வாசகன் நான்.. இன்று.. நீங்கள் எடுத்த கருத்து என்னை பின்னூட்டமிட வைத்தது.. :-)

அருமையான வலைப்பதிவுகள்.. தொடர்க..

Thara said...
This comment has been removed by a blog administrator.
Thara said...

செல்வராஜ், துளசி அக்கா, செந்தில் - நன்றி!

தாரா.