Friday, October 06, 2006

என் புத்தக உலகம் - 1

பல மாதங்களுக்கு முன் வலைப்பதிவில் தொடர்ந்து பலர் தாம் படித்த புத்தகங்களைப் பற்றியும், தம் வீட்டு நூலகத்தில் இருக்கும் புத்தகங்களைப் பற்றியும் எழுதியிருந்தார்கள். அப்பொழுது என்னால் எழுத முடியவில்லை, இப்ப எழுதப் போறேன்! நான் புத்தகங்களுடனேயே வளர்ந்தவள். புத்தகங்களின் மீது அதீத மதிப்பும் பாசமும் வைத்திருந்தவரால் வளர்க்கப்பட்டவள். அப்பா பல்கலைக் கழக நூலகராக இருந்தார். ஒவ்வொரு வாரமும் நல்ல கதை புத்தகங்களை வீட்டுக்குக் கொண்டுவருவார். நானும் அதை ஒரு வாரத்தில் படித்து முடித்துவிடுவேன். சில நாட்கள் பள்ளி முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் நூலகத்திற்குச் செல்வேன். அங்கே வேலை செய்பவர்கள் என்னைப் பார்த்ததும் நான் அப்பாவைத்தான் பார்க்க வந்திருக்கிறேன் என்று நினைத்து, "அப்பா அவர் அறையில் தான் இருக்கிறார்" என்று சொல்லுவார்கள். நானோ, நேராக அப்பாவின் அறைக்கு பக்கத்து அறைக்குச் செல்வேன். அங்கே தான் சிறுவர் புத்தகங்களை குமிந்து கிடக்கும். அங்கேயே அமர்ந்து எனக்குப் பிடித்த புத்தகத்தை எடுத்து படித்துவிட்டு பின் வீட்டுக்கு வந்துவிடுவேன், அப்பாவைக்கூட பார்க்காமல்! நான் நூலகத்தில் தான் இருக்கிறேன் என்று தெரிந்தாலும், அப்பாவும் என்னை வந்து பார்க்கமாட்டார்! Like father, like daughter...

எழுத நிறைய விசயம் இருக்கிறது என்பதால் தொடர் பதிவாக எழுதுகிறேன்.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் முதன் முதலாக படிக்கத் தொடங்கியது 'Enid Blyton' கதைகளை. (புகழ் பெற்ற ப்ரிட்டிஷ் எழுத்தாளர், 700 கதை புத்தகங்கள், 40 மொழிகளில் வெளிவந்திருக்கின்றன)

image hosting by keepmyfile.com image hosting by keepmyfile.com

Enid Blyton கதைகள் என்றாலே சிறுவர்களைக் கவரும் வேடிக்கை, விறுவிறுப்பு, திகில் அம்சங்கள் நிறைந்தவை . இந்தக் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது "Famous Five" என்கிற தொடர் கதைகள். 4 சிறுவர்கள், மற்றும் ஒரு நாய். இந்த ஐவரின் அனுபவங்களைப் பற்றிய கதைகள் இன்றும் என் நினைவில் அழியாமல் நிற்கின்றன! புத்தகம் படிப்பது, மற்றும் தன்னைச் சுற்றி இருக்கும் உலகத்தை ஆராய்ந்து கண்டறிதல் போன்ற மகிழ்ச்சியான அனுபவங்கள் குழந்தைகளுக்கு ஏற்படவேண்டும் என்கிற உந்துதலினாலேயே எனிட் ப்ளைட்டன் இந்த அற்புதமான கதைப் புத்தகங்களைப் படைத்தார். அவருடைய கதைகளைப் படிக்கும்போது குழந்தைகளின் கற்பனா சக்தி விழித்துக்கொள்ளும். கதையின் ஒரு அங்கமாகவே குழந்தைகள் மாறிவிடுவார்கள்.

கொஞ்சம் வளர்ந்து உயர்நிலைப்பள்ளி வந்ததும், மற்றுமொரு அருமையான கதைபுத்தகம் எனக்கு அறிமுகமாயிற்று. "TinTin" என்கிற கதாபாத்திரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைகள்! இந்தக் கதைகளின் சிறப்பே அதன் சித்திரங்கள். கதையைப் படிக்கவே வேண்டாம். அந்தச் சித்திரங்களே பேசும்!

image hosting by keepmyfile.com image hosting by keepmyfile.com


அவ்வளவு நுணுக்கமான விவரங்களுடன் அந்தச் சித்திரங்களை தீட்டியவர் 'Herge' என்பவர். அவரே இந்தக் கதைகளின் கதாசிரியரும் கூட! பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர். Tintin என்கிற இளைஞன் ஒரு பத்திரிக்கையாளன். அவனுடைய செல்ல நாய்க்குட்டி "Snowy". கதாசிரியர் Herge, தன் காலகட்டத்தில் நடந்த இரண்டாம் உலகப் போர், சந்திரனில் மனிதன் சென்றிறங்குதல், ரஷ்ய மறுமலர்ச்சி போன்ற நிகழ்வுகளை இந்தக் கதைகளில் புகுத்தியிருப்பார். அனைத்து Tintin கதைகளிலும் ஒரு மர்மம் இருக்கும். கதையின் முடிவில் அது கட்டவிழ்க்கப்படும். கதையினூடே நகைச்சுவை அங்கங்கே பொறுத்தமாகத் தூவப்பட்டிருக்கும். Tintin உடன் வரும் துணை கதாபாத்திரங்களும் சிறப்பும் தனித்துவமும் வாய்ந்தவை. மணிக்கணக்காக Tintin கதைகளைப் படித்துவிட்டு, பின்னர் அந்தக் கதைகளில் வரும் காட்சிகளை நினைத்து பைத்தியம் போல் சிரித்துக்கொண்டிருப்பேன். இந்தக் கதைகளைப் பற்றிய ஒரு குற்றச் சாட்டு உள்ளது. ஐரோப்பியர்களைத் தவிர மற்ற நாட்டவர்கள் வில்லன்களாகவோ, அப்பிராணிகளாகவோ தான் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இதெல்லாம் அந்த வயதில் எனக்குத் தெரியவில்லை. பின்னால் படித்துத் தெரிந்துகொண்டேன்.

Tintin கதைகளைப் படித்த நாட்களிலேயே, Asterix and Obelix என்ற கதைபுத்தகங்களையும் (33 கதைப்புத்தகங்கள், 100 மொழிகளில் வெளிவந்துள்ளன)நூலகத்தில் கண்டெடுத்தேன். Rene Goscinny இதன் கதாசிரியர். Albert Uderzo இதன் ஓவியர். இந்தக் கதைகளின் சித்திரங்களும் மிகவும் பிரசித்திப் பெற்றவை. Asterix என்கிற வீரனும் அவனது நன்பன் Obelix என்பவனும், ஒரு அமைதியான கிராமத்தில் வாழ்கிறார்கள்.
image hosting by keepmyfile.com

ஜூலியஸ் சீஸரால் கைப்பற்றமுடியாத ஒரே கிராமம் அதுதான்! காரணம், அந்த கிராமத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஒரு மந்திரக் கூழை அருந்துகிறார்கள். அது அவர்களுக்கு பெரும் உடல் சக்தியை அளிக்கிறது. அந்தச் சக்தியை வைத்துக்கொண்டு அவ்வப்போது அவர்களின் கிராமத்தை கைப்பற்றுவதற்காக முயலும் ரோமானியர்களை பந்தாடுகிறார்கள். ரோமானியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே நடக்கும் சண்டை சச்சரவுகள் தான் கதையின் கரு. இந்தக் கதைகளில் சுவாரசியமான விசயம் என்னவென்றால், ஒவ்வொரு கதையின் முதல் காட்சியிலும், ஒரு ரம்மியமான காலைப்பொழுதில் அந்தக் கிராமம் விழித்தெழுவதைக் காணலாம். நடுவில் போர், சண்டை இதெல்லாம் வரும். கடைசி காட்சியில் எபோழுதும் அந்த கிராமத்தில் ஒரு பெரிய விருந்து நடக்கும். எல்லாரும் மாமிசத்தையும், மதுவையும் வெளுத்துவாங்கிக் கொண்டிருப்பார்கள். தூரத்தில் ஒரு மரத்தடியில் ஒருவனைக் கட்டிப்போட்டு, அவன் வாயில் துணியை அடைத்திருப்பார்கள். அவன் அந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒரு இசைக் கலைஞன். எந்த ஒரு நிகழ்வின் போதும், "நான் இப்போது பாட்டு பாடுகிறேன்" என்று சத்தமாக அபஸ்வரமாகப் பாடத் தொடங்கிவிடுவான். அதைத் தடுப்பதற்கே அவனை அப்படி கட்டிப்போடுவார்கள் அந்த கடைசி விருந்து காட்சியில். எல்லா கதைகளிலும் இப்படித்தான்.

இந்தக் காமிக்ஸ் கதைகள் எல்லாம் படித்துச் சலித்தபோது எனக்கு 15 வயது. அடுத்து என்ன இருக்கிறது என்று நூலகத்தைக் குடைந்தபோது, Mills & Boon வெளியீடுகளான Romance கதைப் புத்தகங்கள் கண்ணில் பட்டன... பிடித்தது சனி!!!

தொடரும்...

8 comments:

Sivabalan said...

நல்லா எழுதியுள்ளீர்கள்..தொடருங்கள்..

சில பேரின் வீட்டு நூலகங்களைப் பற்றி இந்தப் பதிவில் இருக்கிற்து. விரும்பினால் நீங்க்ளும் உங்கள் இந்த பதிவில் இனைத்துக்கொள்ளலாம்.

http://sivabalanblog.blogspot.com/2006/07/blog-post_28.html

நன்றி.

இளங்கோ-டிசே said...

ம்...கொடுத்து வைத்த மகள் :-).
....
எனக்கும் Tintin கதைப்புத்தகங்கள் மிகப்பிடித்த புத்தகங்கள். வேறு புத்தங்களை பண்டமாற்று செய்து Tintin புத்தகங்களை சிறுவயதில் சேகரித்திருக்கின்றேன்.

/இந்தக் கதைகளின் சிறப்பே அதன் சித்திரங்கள். கதையைப் படிக்கவே வேண்டாம். அந்தச் சித்திரங்களே பேசும்!/
இதனால்தான் இந்தக்கதைகள் என்னை அதிகம் வசீகரித்தது என்று நினைக்கின்றேன்.

SathyaPriyan said...

Asterix யும், Obelix யும் பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாது. குறிப்பா Obelix. சின்ன வயதில் மட்டும் இல்லை, இப்பொழுதும் நான் படித்து ரசிக்கும் புத்தகம் அது. நீங்கள் முழுவதும் படித்து இருக்கிறீர்களா?

விருபா - Viruba said...

\\எழுத நிறைய விசயம் இருக்கிறது என்பதால் தொடர் பதிவாக எழுதுகிறேன்\\ ..... வாழ்த்துக்கள்.

வாசித்தலை நேசிக்கும் உங்களுக்கு இரண்டு இணையதளங்களை அறிமுகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

1. http://www.librarything.com இதில் உங்களுக்குப் பிடித்த 200 ஆங்கில நூல்களை உங்கள் நூலகப் பட்டியலாக சேர்த்துக்கொள்ள முடியும். அந்நூல்களுக்கு உங்களுடைய விமர்சனங்களையும் பதிவு செய்ய முடியும். உங்களுக்குப் பிடித்த நூல்களை பட்டியலிட்ட ஒத்த கருத்துடைய நபர்களை அறியலாம். சுமார் 48 தளங்களில் உள்ள நூல்களை நீங்கள் இங்கே பட்டியலிடலாம்.

2.http://www.viruba.com இது எங்களுடைய தளம். தமிழ்ப்புத்தகங்களுக்கான தகவல் தளம். இதில் இதுவரை 703 தமிழ்ப்புத்தகங்களைப் பற்றிய தகவல்களைத் தந்துள்ளோம். இங்குகூட நீங்கள் படித்த புத்தகத்திற்கு விமர்சனம் எழுதலாம்.

Radha Sriram said...

Thara,

M&B...saniyan pudikaadha(padikaadha)girls iruppangala.....it is like an elective in yr graduation course .. .....naan physics book kulla laam vachu padichiruken andha karumatha!!!! hmmm adhellam oru kaalam....(sorry for thanglish)

adhu sari eppadi Nancy Drew illama...M&B kku poneenga....double promotion??

Radha

தாரா said...

சிவபாலன்:

உங்கள் நூலகப் பதிவைப் படித்தேன். என் பதிவையும் அதில் விரைவில் சேர்க்கிறேன்.

டிசே:

நீங்களும் டின்டின் கதைகளின் ரசிகர் என்பதில் எனக்கு மகிழ்ச்சி!

சத்யப்பிரியன்: 33 புத்தகங்களில் கிட்டத்தட்ட 20 புத்தகங்கள் படித்திருக்கிறேன். நீங்கள்?

விருபா: அருமையான இரண்டு இணையதளங்களை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி!

ராதா: Nancy Drew கதைகளையும் ஒன்றிரண்டு படித்திருக்கிறேன். Mills & Boons அளவு ஈர்க்கப்படவில்லை.

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

தாரா.

வவ்வால் said...

வணக்கம் தாரா,

புத்தக புழு, இல்லை அனகொன்டா போல இருக்கே! நாங்க எல்லாம் இலவசமா படிக்க கடன் வாங்கியே ஒரு நூலகம் உருவாக்குற ஜாதி! உங்க கிட்ட எதுனா எனக்கு புரியராப்போல பொஸ்தவம் இருந்தா கைமாத்தா கொடுங்க ஹே..ஹே ...ஹே.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் படிப்பதற்காக நூலகங்களில் திருடியதாக பெருமையாக ஒரு முறை ஆனந்த விகடனில் எழுதியுள்ளார். நான் திருடும் அளவிற்கு போகவில்லை கைமாத்து மட்டும் தான்!

SathyaPriyan said...

//
சத்யப்பிரியன்: 33 புத்தகங்களில் கிட்டத்தட்ட 20 புத்தகங்கள் படித்திருக்கிறேன். நீங்கள்?
//

நானும் 20-25 புத்தகங்கள் படித்திருப்பேன்.