சாகும் வரை காதல் குறையாமலும், வாழ்க்கைத் துணையின் கடைசி மூச்சு வரை கூடவேயிருந்து அன்புடன் கவனித்துக்கொள்ளும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தலைவணங்கிவிட்டு இந்தப் பதிவை எழுதுகிறேன். இது சும்மா கிண்டலுக்குத் தான்.
ஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்ட ஆண் வேண்டும் என்பது அவளுடைய வயதைப் பொருத்து வெகுவாக மாறும். எப்படி?
22 வயது: வெள்ளைக்குதிரையில் ராஜகுமாரன் வேண்டும்! அது சாத்தியமில்லை என்று தெரிந்தும், அப்படியொருவனை கற்பனையிலும் கனவிலும் சந்திக்க முயல்வதை அவளால் தடுக்க முடியாது. ஆணழகனாக, புத்திசாலியாக, வசதியானவனாக, நகைச்சுவை உணர்வுள்ளவனாக, அவளை பூக்களாலும் பரிசு பொருட்களாலும் திக்குமுக்காடச் செய்யும் காதலனாக இருக்கவேண்டும்.
32 வயது: அவன் நல்லவனாக இருந்தால் போதும். காதலும் கவர்ச்சியும் இல்லாவிட்டாலும், நல்ல பழக்க வழக்கங்கள், நிரந்தரமான வேலை இவை அவசியம். இது இல்லாமல், சூப்பர் மார்க்கெட்டுக்கு தன்னுடன் கூடை தூக்கிக்கொண்டு வரவேண்டும், தான் வீட்டில் சமைத்த உணவில் த்ருப்தியடைய வேண்டும், வீட்டு வேலைகள் அவ்வப்போது செய்யவேண்டும். ஒட்டுமொத்தத்தில் ஒரு குடும்பப்பாங்கான ஆண் தேவைப்படுகிறான்.
42 வயது: ஏதோ ஒருவன் இருந்தால் போதும். சற்று தொப்பை இருந்தாலும் பரவாயில்லை. தலையில் கொஞ்சம் முடி இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பார்க்க கொஞ்சம் சுமாரா இருந்தால் போதும். வாரம் ஒரு முறை தன் முகத்தை சவரம் செய்தால் போதும். மாதம் ஒரு முறை அவளை வெளியில் அழைத்துச் சென்றால் போதும். அவள் பேசும் போது அவ்வப்போது புன்னகையும், அவ்வப்போது தலை அசைத்தலும் போதும்.
52 வயது: குறைந்தபட்சம் அவளுடன் அவன் ஒரே வீட்டில் இருந்தாலே போதும். அவள் பெயரை அவன் ஞாபகம் வைத்திருந்தால் மகிழ்ச்சியே. அவள் பேசும் போது தூங்கி விழாமல் இருந்தால் பரவாயில்லை. வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் படுக்கையிலிருந்து எழுந்து நடந்தால் நன்றாக இருக்கும்.
62 வயது: அவளை அடிக்கடி தொந்தரவு செய்யாமல் அவன் பாட்டுக்கு ஒரு ஓரமாக இருந்தால் நன்றாக இருக்கும். தன் பேரக்குழந்தைகளை பயந்து அழவைக்காமல், பாத்ரூம் எங்கிருக்கிறது, அவனுடைய பல் செட் எங்கிருக்கிறது என்று நினைவிருந்தால் போதும். அவளுடைய உதவியில்லாமல் அவனே எழுந்து உடை மாற்றிக்கொண்டால் நலம். அவனுடைய கொரட்டைச் சத்தம் கேட்காத ஒரு இடமாவது அந்த வீட்டில் இருப்பது மிகவும் அவசியம்.
72 வயது: இத்தனை வயது வரை அவள் உயிருடன் இருந்தால் ஆச்சரியம். அப்படியே இருந்துவிட்டால், அவன் சுவாசித்துக்கொண்டிருக்கிறான் என்று தெரிந்தாலே போதும்.
4 comments:
வாவ் தாரா, என்ன அருமை! வாழ்வின் எதார்த்தம் உங்கள் படைப்பில் அப்படியே எளிமையாக. வளர்க மென் மேலும்.
அன்புடன்,
தெகா.
//சூப்பர் மார்க்கெட்டுக்கு தன்னுடன் கூடை தூக்கிக்கொண்டு வரவேண்டும்,//
புரியுது புரியுது.. :-)
azhagana padappidippu
aana onnu missing
entha vayadhanalum "than solluvadhaik kettukkolla venum"
கார்த்திக்,
புரிந்ததை மனதிலேயே வைத்துக்கொள்ளுங்கள். போட்டுக்கொடுத்துவிடாதீர்கள் :-)
தாரா.
Post a Comment