நேற்றைய முன் தின 'காதலர் தினம்', ஒரு சில வாழ்த்துக்கள் தவிர வேறு எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி என்னைக் கடந்து சென்றது. 9 வருடங்களுக்கு முன்னால் சென்னையில் ஹாஸ்டலில் தங்கியிருந்த போது, என்னுடைய அறைத் தோழிகள் எல்லோருக்கும் 'காதலர் தின' வாழ்த்து அட்டைகள் வந்தது. அப்போது சினேகிதனாக இருந்த என் கணவரை தொலைபேசியில் அழைத்து, "எனக்கு உடனே ஒர் valentines day வாழ்த்து அட்டை அனுப்பு" என்று உத்தரவு போட்டேன். மாயவரத்துப் பட்டிக்காடான அவர், "அப்படின்னா என்ன?" என்றார்! அவருக்கு காதலர் தினமென்றால் என்ன என்பதை விளக்கி எங்கே எப்படி வாழ்த்து அட்டை வாங்கவேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொடுத்து, சிகப்பு ரோஜாக்கள் போட்ட வாழ்த்து அட்டை எனக்கு வந்து சேர்வதற்குள், காதலர் தின "த்ரில்l" எல்லாம் போய்விட்டது எனக்கு. அதற்குப் பிறகு காதலர் தினத்தைப் பற்றி அதிகம் சிந்தித்ததில்லை. 'காதலர் தினம்' போன்ற luxury க்கள் நம் நாட்டுக்குத் தேவையில்லை என்பது என் கருத்து. இருந்தாலும், இது நம் நாட்டுக் கலாசாரத்திற்கு எதிரானது என்று போராட்டம் நடத்துபவர்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.
மன்மதன் மலர் அம்பை எய்தினால் காதல் வயப்படுவார்கள் என்று சொன்னதும் நம் கலாசாரம் தானே? ரோமியோ ஜூலியட் ஜோடியைத் தோற்கடிக்கும் வகையில் லைலா-மஜ்னு, ஷாஹ்ஜஹான்-மும்தாஜ், அம்பிகாபதி-அமராவதி, தேவதாஸ்-பார்வதி போன்ற காதல் ஜோடிகளை உயர்வாகக் கொண்டாடியதும் நம் கலாசாரம் தானே? இவ்வளவு ஏன்? 'காமசூத்திரா' வை உலகத்திற்கு கொடுத்ததே நம் நாடுதானே? இப்படிப்பட்ட கலாசாரத்தை சிகப்பு ரோஜாக்களும், சிகப்பு பலூன்களும், சிகப்பு வாழ்த்து அட்டைகளும் என்ன செய்துவிட முடியும்? இவற்றையெல்லாம் ஒழித்துக்கட்டிவிட்டால் மட்டும் இளைஞர்கள் காதலிக்காமல் இருந்துவிடப்போவதில்லை. இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையிலேயே டேட்டிங், வாழ்த்து அட்டைகள், பார்ட்டி எல்லாமே ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. காதலர் தினத்தன்று சற்றுக் கூடுதல் ஆர்வத்துடனும், அதிகப்படியாகவும் நடக்கிறது. இதெல்லாம் சும்மா ஒரு நாள் கூத்துதான். இனி அடுத்த பிப்ரவரி வரை இதைப் பற்றி யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை. யோசித்துப் பார்த்தால், இது ஒரு மதச் சார்பற்ற கொண்டாட்டம்! காதலர் தினத்தை விட பல மடங்கு ஆபத்தான விசயங்கள் நம் கலாசாரத்தையும் சமுதாயத்தையும் சீரழித்து வருகின்றன. அவற்றில் கவனம் செலுத்தலாம் என்பது என் கருத்து.
ஒரு சிறிய வருத்தம் என்னவென்றால் மேலை நாட்டுக் கலாசாரத்தை காப்பியடிப்பவர்கள், அதில் உள்ள நல்ல விசயங்களை விட்டுவிடுகிறார்கள். நம்ம ஊரில் கொண்டாடப்படும் 'காதலர் தின' மும் இங்கு அமெரிக்காவில் கொண்டாடப்படும் 'Valentine's Day' யும் அடிப்படை ஒன்று தான் என்றாலும், ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. நம்ம ஊரில் கொண்டாடுவது காதலர்கள் மட்டுமே. அமெரிக்காவில் காதலர்கள் மட்டும் இன்றி குடும்பத்தினர், நண்பர்கள், குழந்தைகள் எல்லோருமே கொண்டாடுகிறார்கள். தன் மனதிற்கு பிடித்தவர்களுக்கு வாழுத்து அட்டையோ, பரிசோ கொடுக்கிறார்கள். அது அப்பாவாகவோ, அத்தையாகவோ, ஆசிரியராகவோ கூட இருக்கலாம். பள்ளிப் பருவத்திலேயே குழந்தைகளுக்கு பள்ளியில் 'Valentines Day' பார்ட்டிகள் நடக்கிறது. 'காதல்' என்பது பொதுவாக 'அன்பு' என்ற கருத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே விதைக்கிறார்கள். இது ஆரோக்கியமான விசயம் என்று நான் நினைக்கிறேன். மேலும் அமெரிக்காவில் பூக்கள் அதிகப்படியாக விற்பனையாகும் நாள் Valentines Day, அதற்கு அடுத்து Mother's Day. இந்தியாவில் அன்னையர் தினம் காதலர் தினம் போல் விமரிசையாகக் கொண்டாடப்படுவதில்லை. காதலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நம் இளைஞர்கள் தாய்மைக்கும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
காதலர் தினத்தை வைத்து மும்பய், சென்னை பொன்ற இடங்களில் நடந்த மார்க்கெட்டிங் வித்தைகளைப் பற்றி BBC South Asia வில் படித்தபோது வியப்பாக இருந்தது. ஒரு ice cream கம்பனி, மும்பய் கடற்கரையில் மிகப் பெரிய காதலர் தின வாழ்த்து அட்டையை நிறுத்துயிருந்ததாம்! மற்றொரு நிறுவனம், டைட்டானிக் கப்பல் போன்ற ராட்சத கப்பல் பொம்மையை எல்லா கல்லூரி வாசல்களிலும் கொண்டுவந்து நிறுத்த, காதல் ஜோடிகளெல்லாம் அந்தக் கப்பலில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்களாம்! நம்ம ஊரில் கொண்டாட்டங்கள் எல்லாமே மிகைப்படுத்தப்படுகின்றன. கும்பகோணம் மகாமகத்திற்கும், வருடாந்திர வினாயகர் சதுர்த்திக்கும், ஹோலி பண்டிகைக்கும் நடக்காத ஆர்ப்பாட்டமா காதலர் தினத்திற்கு நடக்கிறது?
3 comments:
வணக்கம் தாரா..
//கும்பகோணம் மகாமகத்திற்கும், வருடாந்திர வினாயகர் சதுர்த்திக்கும், ஹோலி பண்டிகைக்கும் நடக்காத ஆர்ப்பாட்டமா காதலர் தினத்திற்கு நடக்கிறது?//
மகிழ்வாய் இருக்கிறது தாங்கள் மேலே சொன்னவரிகளை நினைக்கையில்!
வாழ்த்துக்கள்.
இனி தொடந்து தங்களின் பதிவின் மீது என் கவனம் இருக்கும்.
சிவாஜி, பாலபாரதி,
பாராட்டுக்களுக்கு நன்றி!
தாரா.
அன்பின் தாரா,
இப்பொழுது தான் இதைக் கவனித்தேன்...
//மாயவரத்துப் பட்டிக்காடான
இந்த வார்த்தை பிரயோகத்தை.. மாயவரம் சிட்டியின் மண்ணின் மைந்தன் என்கிற முறையில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
:)
சீமாச்சு...
Post a Comment