Monday, February 27, 2006

எங்கிருந்தாலும் வாழ்க!

நேற்று முன் தினம் 9 வருடங்களாக என் பாசத்திற்குரியதாக இருந்த ஒரு ஜீவனைப் பிரிய நேரிட்டது!
இந்த அந்நிய மன்னில் எனக்கே எனக்கென்று கிடைத்த முதல் சொத்து அவன்! பனியோ மழையோ வெயிலோ புயலோ, எனக்காக வெளியே எத்தனை நேரமானாலும் காத்துக்கிடப்பான்...
நான் எங்கு வெளியே போனாலும் என்னை பத்திரமாக அழைத்துக்கொண்டுச் செல்வான்...
அவன் எங்கே எந்தக் கூட்டத்தில் நின்றாலும், அவனுடைய உடைந்த மூக்கு அவனை எனக்கு அடையாளம் காட்டிவிடும்...
இரண்டு வருடங்களுக்கு முன் அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனபோது கூட சிறு முக்கல் முனகல்களோடு வீட்டில் ஒரு ஓரமாக முடங்கிக் கிடந்தான்...
அவனுக்கு எவ்வளவோ செலவு செய்தும், அவனைக் காப்பாற்ற முடியவில்லை...

அந்த ஜீவன் என்னுடைய பச்சை நிற மாஸ்டா 626 கார்! 9 வருடங்களுக்கு முன் வாங்கியது. அப்போதே 50,000 மைல்கள் ஓடியிருந்தது. அலபாமா வீதிகளில் பெருமையுடன் ஓட்டிக்கொண்டிருந்தேன். திருமணத்திற்குப் பிறகு நானும் என் கணவரும் அந்தக் காரில் டிவி, கம்யூட்டர், மெத்தைகள், சமையல் பாத்திரங்கள் என்று எவ்வளவு திணிக்கமுடியுமோ திணித்து 730 மைல்கள் பயணித்து வாசிங்டன் டிசிக்கு வந்தோம். லேசாக ப்ரேக் அடித்தாலும், பின்னாலிருந்து பொருட்கள் முன்னால் வந்து விழும்! அதன் பிறகு, எத்தனையோ ஊர்களுக்கு அந்தக் காரில் பயணைத்திருக்கிறோம். பின் வந்த நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக மக்கர் செய்யத் தொடங்கியது. வேறு புதுக் கார் வாங்கினோம். ஆனாலும், அந்தப் பழைய காரும் அவ்வப்போது ஆத்திர அவசரத்திற்கு கைக்கொடுத்தது. பிறகு, அதன் அழகான பச்சை நிறம் மங்கி, துறுப்பிடித்து குஷ்டம் வந்ததுபோல் ஆகிவிட்டது. அதற்கப்புறமும் அதை வெளியே ஒட்டுவதற்கு எனக்கு வெக்கமாக இருந்தது. அதனால் கடந்த ஒரு வருடமாக கராஜில் முடங்கிக் கிடந்தது. கடைசி முயற்சியாக அதை ஓடவைக்கலாம் என்று சென்ற வாரம் மெக்கானிக் கடைக்கு எடுத்துச் சென்றேன். இனி அந்தக் காருக்கு பணம் செலவு செய்வது அர்த்தமற்றது என்று கைவிரித்துவிட்டார்கள்! எனவே, என் பாசத்துக்குரிய பச்சை நிற மாஸ்டா 626 காரை Salvation Army க்கு நன்கொடையாக அளித்துவிட்டேன்! கடைசியாக அதனை கார் நிறுத்தத் தளத்தில் அனாதையாக விட்டுவிட்டு வந்தபோது, துக்கம் தொண்டையை அடைத்தது! அதனை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து விற்றுவிடுவார்களாமே? நினக்கவே வேதனையாக இருக்கிறது. எங்கிருந்தாலும், எந்த உருவத்தில் இருந்தாலும், என் பச்சை நிறக் கார் வாழ்க!

4 comments:

SnackDragon said...

கவலைப்படாதீங்க உங்க கார் எங்க இருந்தாலும் நல்லா இருக்கும். கடைசியா என்ன மைலேஜ்?

தாரா said...

வணக்கம் கார்த்திக்,

கடைசியா 180,000 ஓடியிருந்தது.

நன்றி,
தாரா.

இளங்கோ-டிசே said...

அடியோஸ் அமிகோ என்று நண்பனுக்கு பிரியாவிடை கொடுக்கவேண்டியிருந்தாலும், கஷ்டந்தான்.
...
//அலபாமா வீதிகளில் பெருமையுடன் ஓட்டிக்கொண்டிருந்தேன்//
sweet home அலபாமா படத்துக்கும் உங்கள் காரோட்டத்துக்கும் ஏதேனும் தொடர்புண்டா :-)?

தாரா said...

டிசே,

அந்தப் படத்தை நானும் பார்த்தேன். படத்திற்கும் என் காரோட்டதிற்கும் தொடர்பில்லாவிட்டாலும், நான் முதன் முதலில் அமெரிக்காவில் வாழ்க்கையைத் தொடங்கிய இடம் என்பதால் அலபாமாவுக்கும் எனக்கும் நிறைய தொடர்புண்டு :-)

நன்றி,
தாரா.