Wednesday, July 13, 2005

திருவாசகம் கற்றுகொடுத்த இளையராஜாவுக்கு நன்றி!

ஒரு நீஈஈஈஈஈஈஈஈண்ட இடைவெளிக்குப் பிறகு திருவாசகத்தை மீண்டும் கேட்டேன்...symphony இசை வடிவத்தில்!

இதற்கு முன் பள்ளியில் தமிழாசிரியை திருவாசகப் பாடல்களை பாடக் கேட்டிருக்கிறேன். அதற்குப் பிறகு 'திருவருட்செல்வர்' என்கிற திரைப்படத்தில் சிவாஜி மாணிக்கவாசகராக நடித்து, திருவாசகத்தை உருக உருக பாடியதைப் பார்த்திருக்கிறேன். என்னுடைய திருவாசக அறிவு இவ்வளவுதான்! கடந்த இரண்டு வருடங்களாக இளையராஜாவின் symphony முயற்சிப் பற்றி நிறைய காதில் விழுந்துகொண்டிருந்தது. சென்ற வார இறுதியில் எங்க ஊரில் நடந்த திருக்குறள் மாநாட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த திருவாசகம் இசைத்தட்டை வாங்கி வந்து கேட்டுத்தான் பார்க்கலாமே என்று அதை ஓடவிட்டேன்.

வழக்கமான பானியில் பக்திப் பாடல்களை எதிர்பார்த்தவர்களுக்கு இது ஒரு புதிய பயணமாக இருக்கும். முதல் முறை கேட்கும் போது எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. திருவாசகத்தை முன்பே படித்திராததால் வார்த்தைகள் புரியவில்லை. பின்னனி இசையும் என்னவோ ரொம்ப ஓங்கி இருந்ததாகப் பட்டது. தபலா, வயலின், புல்லாங்குழல் இல்லாத பக்திப் பாடல்களை உள் வாங்கிக் கொள்ளச் சற்று சிரமமாக இருந்தது. இவ்வளவு முயற்சி எடுத்து பெருஞ்செலவில் பதிவாக்கப்பட்ட இசையாச்சே, இதில் கட்டாயம் ஏதாவது விசயம் இருக்கவேண்டும். எனக்குப் புரியவில்லை என்பதற்காக இப்படியே விட்டுவிடக்கூடாது என்று தோன்றியது. அதனால் மறுவேலையாக அந்த இசைத்தட்டில் இருந்த ஆறு திருவாசகப் பாடல்களையும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் ஒரு முறைக்கு இரு முறை படித்துவிட்டு மீண்டும் இசைத்தட்டை ஓடவிட்டேன். இப்போது கொஞ்சம் பொருளும் விளங்கியது, இசையையும் சற்று பாராட்ட முடிந்தது. நல்ல வேளை இளையராஜா அவரே பாடியிருக்கிறார். அவருடைய தடித்த, கணீரென்ற குரல் திருவாசகத்திற்கு பொருத்தமாக இருந்தது. இரண்டு நாட்களாக என்னுடைய அலுவலகத்திலும் head phone வைத்துக்கொண்டு திருவாசகம் சிம்பனியைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக மனதில் பதிய ஆரம்பித்திருக்கிறது.

என் மனதைத் தொட்டது இரண்டு பாடல்கள் மட்டுமே என்றாலும், 6 பாடல்களைப் பற்றியும் என் கருத்தை எழுதுகிறேன்.

1. பூவார் சென்னிமன்னன் எம் புயங்கப் பெருமான் சிறியோமை
இந்தப் பாடல் மந்திரம் ஓதுவதைப் போலதான் இருந்தது. பின்னனி ஆர்கெஸ்ட்ராவும், கோரஸ¤ம் கூட அதே பானியில் தான் இருந்தது. இடை இடையே மேற்கத்திய இசை. அவ்வளவாக எனக்குப் பிடிக்கவில்லை.

2. பொல்லா வினையேன்! நின் பெருஞ்சீர் புகழுமாறு ஒன்றறியேன்! (என் மனதைத் தொட்ட பாடல் - 1)
Symphony orchestra வின் பிரம்மாண்டம் இந்தப் பாடலில் தான் தெரிகிறது. மாணிக்கவாசகர் இந்தப் பாடலை எழுதும் போது எந்த மன நிலையில் இருந்தார் என்பதை இளையராஜா புரிந்துகொண்டவர் போல உருகி உருகி பாடியிருக்கிறார். லேசாகக் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது. திருவாசகத்தில் இவ்வளவு அழகான தமிழ் வார்த்தைகளா? தெரியாமல் போய்விட்டதே. ஒரு கட்டத்தில் மாணிக்கவாசகர் தன்னை இந்தப் பிறவியிலிருந்து விடுவிக்குமாறு கடவுளைக் கெஞ்சுகிறார். ஒரு கட்டத்தில் தன் மீது கடவுள் காட்டும் கருணைக்கு நன்றி கூறுகிறார். ஒரே பாடலில் பல மன நிலைகள் அருமையாக கோர்க்கப்பட்டிருக்கிறது. இன்னொரு சிறப்பு ஒவ்வொரு முக்கியமான வரியையும் இளையராஜா பாடிய பிறகு, அதையே ஆங்கிலத்தில் Roy Harcourt பாடி ஒரு broadway musical effect ஐத் தருகிறார்! "எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன்" என்ற வரிகளுக்கு "so many forms I must wear, so many lives I must bear" என்று Roy உச்சஸ்தாயில் பாடுவது அருமை!

இந்தப் பாடலின் நடுவில் சிவபுராணத்தையும் புகுத்தியிருக்கிறார் இளையராஜா.
"நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!" என்கிற வரிகளைக் கேட்க்கும் போது கொஞ்சம் பரவசமாகத்தான் இருக்கிறது. இந்தப் பாடல் ஒரு Roller Coaster of emotions!

3 ஆவது பாடல் - ஏதோ ஒரு சினிமாப் பாடல் மெட்டு இது. எந்தப் பாடல் என்று எவ்வளவோ முயன்றும் நினைவுக்கு வரவில்லை. ஒன்றும் பிரமாதமாக இல்லை.

4 ஆவது பாடல் - ஒன்றும் விசேஷமாக இல்லை

5 ஆவது பாடல் - கும்மி பாட்டு மெட்டு போல் இருந்தது. பொருத்தமாகவே இல்லை.

6. புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்! பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்! (என் மனதைத் தொட்ட பாடல் - 2)
இந்தப் பாடல் எனக்குப் பிடித்து போய்விட்டதற்கு friendly ஆன மெட்டு ஒரு காரணம். இளையராஜாவின் 'தானனா தானா நானா"...super!!!ஆனால் பாடல் தொடங்குவதற்கு முன் "இதுதான் symphony ஆர்கெஸ்ட்ராவா? ரொம்ப நல்லா இருக்கே" என்று அவர் பேசியிருப்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. அதைத் தவிர்த்திருக்கலாம். அதே சமயம் பாடல்களை எப்படி தேர்ந்தெடுத்து மெட்டுக்குள் பொருத்தினார் என்பது அவருடைய அந்த சில வார்த்தைகளில் வெளிப்படுகிறது. இந்தப் பாடலின் வரிகளும் கருத்தும் மிகவும் அழகு. எனக்கு அரைகுறையாகப் புரிந்ததை சொல்கிறேன்.

புற்றில் வாழ்கிற பாம்பைக் கண்டு அஞ்சமாட்டேன், பொய் பேசுபவர்களைக் கண்டு அஞ்சமாட்டேன். உன்னைத் தவிர மற்றுமொரு தெய்வம் உண்டென்று நினைப்பவர்களைக் கண்டு அஞ்சுகிறேன்!

வன்புலால் வேலும் அஞ்சேன்(புரியலை..) வளையல் அணிந்தவர்களின் கடைக்கண் பார்வைக்கு அஞ்சமாட்டேன். உன் இனிய அருளைப் பருகாத அன்பில்லாதவர்களைக் கண்டு அஞ்சுகிறேன்!

நோய் வந்தாலும் அஞ்சமாட்டேன், பிறப்பு இறப்புக்கும் அஞ்சமாட்டேன். உன் அடி பணிந்து திருநீற்றை அணியாதவர்களைக்கண்டு அஞ்சுகிறேன்! இப்படி போகிறது பாட்டு.

இந்த இசைப் பயணத்தில் எனக்குப் புலப்பட்ட சில தாழ்மையான கருத்துக்கள்;

1. சினிமாப் பாடல்களின் சாயலோ அல்லது கிறிஸ்துவ ஸ்தோத்திரப் பாடல்களின் சாயலோ பெரும்பான்மையான பாடல்களில் தெரிகிறது. தவறில்லை. இருந்தாலும், மெட்டுக்களை இன்னும் கவனமாகத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

2. இந்தப் பாடல்களை இளையராஜா நம்ம ஊரிலேயே உள்ள ஒரு recording theater இல் பதிவு செய்திருக்கலாமோ? Symphony இசையப் பற்றி எனக்கு அதிகம் தெரியாததால், அந்த வித்தியாசத்தை என்னால் பாராட்ட முடியவில்லை. நம்ம ஊரு orchestra ஏன் சரிவராது? ஆனால் இளையராஜா ஹங்கேரி சென்று திருவாசகத்திற்கு symphony இசையமைத்ததால் தான் திருவாசகத்தின் மேல் சர்வதேச அளவில் வெளிச்சம் விழுந்திருக்கிறது என்பது புரிகிறது.

3. இரண்டாவது பாடலில் ஆங்கிலத்திலும் பாடியது போல மற்ற பாடல்களிலும் செய்திருக்கலாம்.

இது ஒரு விமர்சனம் என்பதை விட, ஒரு புதுமையான அனுபவம் என்று சொல்லலாம். என்னைப் போல் எத்தனை ஞான சூனியங்கள் இந்த இசை முயற்சியைப் புரிந்துகொள்வதற்காக திருவாசகத்தைப் படித்திருப்பார்கள்! அந்த மட்டில் இளையராஜாவுக்கு இது பெரும் வெற்றியே. திருவாசகத்தை உலகெங்கும் பரப்பவேண்டும் என்கிற அவரது உயர்ந்த நோக்கத்திற்கு தலை வணங்குகின்றேன். உ.வே சுவாமிநாத ஐயர் 200 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போயிருந்த தமிழ் இலக்கிய ஓலைச் சுவடிகளையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து அவற்றிற்கு புத்தக வடிவத்தைத் தந்தார். அது போலவே இன்று சீண்டப்படாமல் இருக்கும் திருவாசகம், தேவாரம், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களுக்கு இசை வடிவங்கள் கொடுத்து அவற்றை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல நமக்கு இளையராஜாக்கள் அவசியம் தேவைப்படுகிறார்கள்.

17 comments:

Manjula said...

சிவபுராணத்தின் நடுவில் வருவது தான் "பொல்லா வினையேன்". சிவபுராணத்தின் stanza-க்களில் அதுவும் ஒன்று.

Srikanth said...

தாரா,

நல்ல, நேர்மையான, அடக்கமான விமர்சனம்.

மூன்றாவது பாடல் 'மெட்டி ஒலி காற்றோடு' போல் இருப்பதாக நண்பன் ஒருவன் கூறினான்...may be...

ஆறாவது பாடல் குறித்து கருத்து வேறுபடுகிறேன். நல்ல, இனிமையான மெட்டு தான். இருந்தாலும் இக்காலத்திற்குப் பொருந்தாத கருத்து. இன்று, இருபத்தியோராம் நூற்றாண்டில் உட்கார்ந்து கொண்டு நான் மாணிக்க வாசகரை விமர்சிக்க மாட்டேன்; இருப்பினும் இன்றைய, மத நல்லிணக்கம் வலியுறுத்தப்படும் சூழலில், 'சிவபெருமானே, உன்னைத் தவிர வேறொரு கடவுள் உண்டென்று சொல்பவரைக்' கண்டு நான் அஞ்சுகிறேன் என்று சொல்லும் பாடலைத் தேர்வு செய்து (ஒரு மெட்டில் வார்த்தைகள் வந்தமர்ந்தன என்பதற்காக) இசையமைத்திருக்க வேண்டாம் என்பது என் கருத்து.

Thara said...

நன்றி ஸ்ரீகாந்த்,

நான் பாட்டைக் கேட்டேனே தவிர உங்களைப் போல் ஆழமாக சிந்திக்கவில்லை. நீங்க சொல்வது மிகவும் சரி. அந்த மாதிரி message இளைய தலைமுறைக்குத் தேவையில்லாத ஒன்று. தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

தாரா.

Anonymous said...

Tara,

adhu "thiruniraichelavar"illai "thiruvarutchelavar" nnu nyabagam!!!

Radha

Thara said...

ராதா,

திருத்திவிட்டேன். நன்றி.

தாரா.

முகமூடி said...

// இன்றைய, மத நல்லிணக்கம் வலியுறுத்தப்படும் சூழலில், 'சிவபெருமானே, உன்னைத் தவிர வேறொரு கடவுள் உண்டென்று சொல்பவரைக்' கண்டு நான் அஞ்சுகிறேன் என்று சொல்லும் பாடலைத் தேர்வு செய்து (ஒரு மெட்டில் வார்த்தைகள் வந்தமர்ந்தன என்பதற்காக) இசையமைத்திருக்க வேண்டாம் என்பது என் கருத்து. //

ஒரு கலைஞனுக்குத்தான் நம் நாட்டில் எவ்வளவு படைப்புச்சுதந்திரம்...

// ஒரு மெட்டில் வார்த்தைகள் வந்தமர்ந்தன என்பதற்காக // திருவாசகத்துக்கு "இந்த படப்பாடல்கள் அந்த மொழியில ஹிட்டு, அதனால அதே மாதிரி ம்யூசிக் போடுங்க" என்று தயாரிப்பாளர் வற்புறுத்தி இருக்க மாட்டார் என்று கருதுகிறேன்.. ஆகவே மெட்டு போட்டு அதற்கேற்றார்போல் திருவாசகத்திலிருந்து தெரிவுசெய்ய வேண்டிய அவசியம் இசையமப்பாளருக்கு இருந்திருக்காது என்று நம்புகிறேன்.. எனவே உங்கள் கருத்துக்கு எனது ஆட்சேபணையை இங்கு பதிகிறேன்...

// இன்றைய, மத நல்லிணக்கம் வலியுறுத்தப்படும் சூழலில் // ஆம்... இன்றைய சூழலில் இப்படிப்பட்ட பாட்டு வந்திருக்கக்கூடாதுதான்... திரு. வாலியோ , திரு. வைரமுத்துவோ என்றால் கூட தம் வரிகளை மாற்ற ஈகோவால் தயங்கலாம்.. ஆனால் மாணிக்கவாசகர்னு யாரோ புதுமுகம் போலருக்கே, அவரிடம் சுலபமாக வரிகளை மாற்றி வாங்கியிருக்கலாமே இளையராஜா...

G.Ragavan said...

வன்புலால் வேல் என்றால் பெண்களின் கண். வேல் குத்தி ஊறு செய்யும். வேல் உலோகத்தால் ஆனது. ஆனால் இந்த வேல் புலால் கொண்டு ஆனது. அதாவது கண். வன்மை என்பது செயலின் கொடுமையைக் குறிப்பது.

அருணகிரிநாதரும் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார் என்று எழுதியிருக்கிறார்.

புற்றில்வாழ் பாடலுக்கு இசையமைத்ததைத் தவறாகக் கொள்ளவே முடியாது. இறையருளைப் பெற்றவர்களுக்கு அந்த வரிகள் சாலப் பொருந்தும். அந்த வரியை இறையருள் பெற்ற ஒரு முஸ்லீமோ கிருத்துவரோ பாடினாலும் பொருத்தமாக இருக்கும். அந்த வரிகள் மதத்தைக் கடந்தவை. பழைய பாடல்களைப் புரிந்து கொள்ளும் பொழுது அப்படியே நுனிப்புல் மேயக் கூடாது.

Go.Ganesh said...

நான் இன்னும் கேட்கவில்லை கேட்டுவிட்டு பின்னூட்டுகிறேன்

Srikanth said...

// ஒரு மெட்டில் வார்த்தைகள் வந்தமர்ந்தன என்பதற்காக

முகமூடியாரே, நான் சொந்தக் கற்பனையில் இவ்வரிகளை எழுதவில்லை. பாட்டின் ஆரம்பத்தில் ராஜாவே சொன்னது தான் - 'இந்த மெட்டு நல்லா இருக்கே, இதுக்கு எந்த பாட்டு சரியா வரும்?' என்று கேட்டு விட்டு, ஒரு பாட்டை (வார்த்தைகள் அமரவில்லை என்பதற்காக) விலக்கி, இந்தப் பாட்டைத் தேர்வு செய்ததாகச் சொல்லியிருக்கிறார். அதைத்தான் குறிப்பிட்டேன்.

//புற்றில்வாழ் பாடலுக்கு இசையமைத்ததைத் தவறாகக் கொள்ளவே முடியாது. இறையருளைப் பெற்றவர்களுக்கு அந்த வரிகள் சாலப் பொருந்தும். அந்த வரியை இறையருள் பெற்ற ஒரு முஸ்லீமோ கிருத்துவரோ பாடினாலும் பொருத்தமாக இருக்கும்.

ராகவன், அந்த வரிகள் மதத்தைக் கடந்தவை என்று கொள்வது எப்படி? மறுபடியும் சொல்கிறேன் நான் மாணிக்க வாசகரை விமர்சிக்கவில்லை - அவர் எழுதிய காலமும் சூழலும் வேறு. ஆனால் இன்று, 'கற்றைவார் சடைஎம் அண்ணல்' என்ற வரிகளை இறைவனுக்கு உருவம் அளிப்பதை மறுக்கும் மதங்கள் (கிறித்துவம், இஸ்லாம்) எப்படி ஏற்கும்? ஒரு மனிதன், தான் கடவுளென்றறிவதை பல்வேறு குணாதிசியங்கள் கொண்டு விளக்கி 'இவரைத் தவிர வேறொரு கடவுள்' உண்டென்று சொல்பவரைக் கண்டு அஞ்சுகிறேன் என்று சொல்வதாகத் தான் எந்த ஆழத்திலும் பொருள் படுகிறது. பொதுவாக இறை நம்பிக்கை குறித்து எழுதப்பட்ட பாடலாக இல்லை இது - குறிப்பாக சைவ நம்பிக்கை குறித்து எழுதப்பட்டதே என்று எனக்குப் படுகிறது.

G.Ragavan said...

ஸ்ரீகாந்த், நீங்கள் திருவாசகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பைப் படிப்பது சரிவரும் என்று நினைக்கிறேன்.

மாணிக்கவாசகர் என்பவர் சிவனைப் பாடியிருக்கலாம். இதே வைணவர் பாடியிருந்தால் பரந்தாமா என்றிருப்பார். ஆனால் உணர்ச்சி ஒன்றுதான்.

சுகந்தி said...

தாரா,

நல்ல பதிவு. திருவாசகம் கேட்டு நானும் உங்களைப் போலவே உணர்ந்தேன்

Thara said...

உரையாடலுக்கு உதவியாக இருக்கும் என்று 6 ஆவது பாடலின் G.U Pope's ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கே போடுகிறேன்:

I. Heretics.

Not the sleek snake in anthill coil'd I dread;

nor feigned truth of men of lies,-
As I, in sooth, feel fear at night of those

who have not learnt the Lofty-One
To know; who near the Foot of the Brow-Ey'd,-

our Lord, crown'd with the braided-lock,-
Yet think there's other God. When these unlearn'd we see,-

AH ME! WE FEEL NO DREAD LIKE THIS! (4)

II. False teachers.

I shudder not, though evil yearnings rise;

nor fear, though sea of deeds o'erwhelm!
Beside His sacred Form, our Lord of lords,-

in which the Two no change discerned,
When name of other gods,- what'er they be,-

by lips profane is but pronounc'd:
If I see those, who loathe not such discourse,-

AH ME! WE FEEL NO DREAD LIKE THIS! (8)

III. The unloving.

I dread not mighty jav'lin, dripping gore;

nor glance of maids with jewell'd arms!
But those that will not sweetly taste His grace,-

Whose glance can melt the inmost soul,-
Who dances in the hallow'd court,- my Gem

unstain'd and pure,- nor praise His Name:-
Such men of loveless hearts when we behold,-

AH ME! WE FEEL NO DREAD LIKE THIS! (12)

IV. The unfeeling.

I dread not chatter vain of parrot-tongues;

nor fear their guileful wanton smile!
If, drawing nigh the Vethian's feet, Whose Form

the sacred ashes white displays,
Men's souls nor melt, nor weep they worshipping,

their eyes with gushing teardrops fill'd:
If these, of tender feeling void, we see,-

AH ME! WE FEEL NO DREAD LIKE THIS! (16)

V. The undevout.

I fear not, though diseases all should come;

nor dread I birth with death conjoin'd!
The crescent moon as ornament He wears,

yet men praise not His roseate Feet,
(Which Mal, though the firm ground He clave, saw not,)

nor join His worshippers devout!
If those that wear not ashes white we see,-

AH ME! WE FEEL NO DREAD LIKE THIS! (20)

VI. Not real worshippers.

I dread not angry flash of gleaming fires;

nor fear, though mountains on me roll !
His shoulders ashes wear, Lord of the Bull,

Sire, passing utterance of speech,-
Yet men praise not His lotus Feet, nor bow,

nor crown them with the full-blown flower!
If those hard hearts, that yield not to His power we see,-

AH ME! WE FEEL NO DREAD LIKE THIS! (24)

VII. Devoid of enthusiasm.

Not guilt unseemly that swift vengeance brings;

nor stroke of instant death I dread!
He dances in the beauteous court, and waves

'mid smoking clouds His fiery axe;
The cassia-wreath, all bright with jewell'd buds,

He wears, of beings First! Yet men
Praise not His Foot! If these, unmov'd by grace we see,-

AH ME! WE FEEL NO DREAD LIKE THIS! (28)

VIII. No high aspirations.

I fear not elephant to pillar chain'd;

nor tiger fiery-eyed I dread!
The Sire, whose crest sweet fragrance sheds,- His Feet

that heav'nly ones may not approach,-
Men praise not, nor with triumph haste

within His shrine to sweetly live !
If we behold these men of wisdom reft,-

AH ME! WE FEEL NO DREAD LIKE THIS! (32)

IX. False shame.

I fear not thunderbolt from out the cloud;

nor changing confidence of kings!
Our Lord of lords the very poison made

Ambrosia, by His gracious act;
He makes us His in way of righteousness;

yet men smear not the sacred ash!
If those who from His side shrink thus we see,-

AH ME! WE FEEL NO DREAD LIKE THIS! (36)

X. Men that worship not.

I dread not arrow that unswerving flies;

nor wrath of death's dread King, I fear !
Him Whose adornment is the mighty moon

men praise not, nor with hymns adore;
They ponder not eith souls subdued, while tears

from brighty beaming eyes pour forth.
These thankless men,- not men !- if we behold,-

AH ME! WE FEEL NO DREAD LIKE THIS! (40)

Srikanth said...

தாரா, ஆங்கில மொழிபெயர்ப்பை உள்ளிட்டதற்கு நன்றி.

ராகவன், மன்னிக்கவும். ஆங்கிலத்தில் மிக விசாலமான சிந்தனையோடு படித்த போதும், என்னால் நீங்கள் எட்டிய அர்த்தத்தை எட்ட இயலவில்லை.

//மாணிக்கவாசகர் என்பவர் சிவனைப் பாடியிருக்கலாம். இதே வைணவர் பாடியிருந்தால் பரந்தாமா என்றிருப்பார். ஆனால் உணர்ச்சி ஒன்றுதான்.

உண்மை தான் - ஆனால் அந்த உணர்ச்சி என்ன என்பது தான் எனக்கு கேள்வி. வைணவர் இதே போல் பாடியிருந்தால் - 'பாற்கடலில் துஞ்சும், நீல வண்ணன், சங்கு சக்கரம் ஏந்திய எம்பெருமானை'த் தொழாதவர்களைக் கண்டு நான் அஞ்சுகிறேன் என்று தான் பொருள் படும்.

ஐயா, நான் சிவபக்தன் தான். ஸ்ரீ ருத்ரம் பயின்று ஓதியவன். இருப்பினும், evangelism எந்த மொழி, மதம், ரூபத்தில் வந்தாலும் முகம் சுளிப்பவன்.

G.Ragavan said...

ஸ்ரீகாந்த் உங்கள் கேள்விக்கு விடை சொல்ல முடிந்த வரை முயல்கிறேன். புரிதலை ஆண்டவனிடத்திலே விட்டு விடுகிறேன்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது நல்லவர் விருப்பம். தான் ஒரு இன்பம் உய்த்தால் மற்றவர்களும் உய்க்க வேண்டுமென்று நினைப்பார்கள். அந்த வழிமுறை தெரியாதவர்களைக் கண்டு "அவரால் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் போய் விடுவார்களோ" என்று அஞ்சுவார்கள்.

எப்படியென்றால், நன்றாகப் படித்த பெற்றோர் படிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு விளையாட்டில் ஈடுபடும் குழந்தையைப் பார்த்து அஞ்சுவார்கள். அந்தக் குழந்தை விளையாட்டில் பெரிய ஆளாக வரலாம். பெற்றோர் பெரிய நிலைக்கு வந்தவர்கள். ஆனால் படிப்பால்.

இதுவும் அறியாமை என்றாலும் அன்பால் வருவது. ஆகையால் பிரச்சனையில்லை. ஒருவேளை உன்னை வணங்காதவர் யாரும் இருந்தால் அவர்களைக் கொல்வேன்...மாற்றுவேன் என்றெல்லாம் புலம்பவில்ல்லையே!

இதன் பொதுவான பொருள் : இறைவா உன்னை வணங்காதவரை நினைத்து அஞ்சுகிறேன்.

ஆண்டவரே என்று இந்து சொன்னால் அது செந்திலாண்டவன். கிருத்துவர் சொன்னால் அது யேசுவை. மயிலேறும் ராவுத்தனே என்றெல்லாம் தமிழில் ஏற்கனவே சொல்லி விட்டார்கள் ஸ்ரீகாந்த். எனக்குத் தெரிந்த வரையில் தமிழில் evangelist எழுத்துகள் மிகவும் அரிது. வைதாரையும் வாழ வைப்போன் என்று சொல்லித்தான் பாடியிருக்கிறார்கள்.

இதுக்கு மேல எனக்குச் சொல்லத் தெரியலை.

Santhosh Guru said...

திருவாசகத்தின் மூலம் மற்றும் உரை தமிழ் விக்கியில் இலவசமாக கிடைக்கிறது.

Anonymous said...

Thara
I am impressed with your review about the thiruvasagam. The comments were exactly the same as I would have written. I wish to see your active involvement in future too. My hearty congratulations to you. keep it up.
suki akka

லதா said...

'திருவருட்செல்வர்' என்கிற திரைப்படத்தில் சிவாஜி மாணிக்கவாசகராக நடித்து, திருவாசகத்தை உருக உருக பாடியதைப் பார்த்திருக்கிறேன்.

அன்புள்ள தாரா,

சிவாஜி அவர்கள் திருவருட் செல்வரில் திருநாவுக்கரசராகத்தானே (அப்பர்) நடித்திருந்தார் ?