Wednesday, August 03, 2005

அரங்கேற்ற அலம்பல் - 1

சென்ற மாதம் தான் என் அக்கா மகள்களின்(இரட்டையர்கள்) பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்து முடிந்தது. அக்காவுக்கு உதவியாக இருப்போமே என்று நான் ஒரு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு அக்கா வீட்டில் போய் இறங்கிவிட்டேன். நான் அங்கே சென்ற சில நிமிடங்களிலேயே என்னை ஓரம் கட்டிய அக்காவின் கணவர், "உங்க அக்கா எல்லா வேலைகளையும் அவளே தான் செய்வேன்னு எல்லாத்தையும் அவ தலை மேல போட்டுக்கிட்டா. யார் மேலயும் அவளுக்கு நம்பிக்கை இல்லை. யாருக்கும் எந்த வேலையும் கொடுக்க மாட்டேங்கறா. நீதான் அவகிட்ட பேசி சில வேலைகளை பொறுப்பெடுத்துக்கனும்" என்று கவலையோடு கேட்டுக்கொண்டார். எனக்கு முக்கியத்துவம் கிடைத்த மகிழ்ச்சியிலும், இங்கே வாசிங்டனில் பல விழாக்களில் கிடைத்த அனுபவமும் கொடுத்த மமதையில் நான் அவரிடம், "கவலைப்படாதீங்க, மேடை அலங்காரத்தை என் பொறுப்பில் விட்டுடுங்க....கலைக்கிபுடறேன்!" என்றேன். அன்றிரவே பேனா பேப்பர் சகிதம் அக்காவுடன் உட்கார்ந்து மேடை அலங்கார ஐடியாக்களை அள்ளி விட்டேன். ஒவ்வொரு ஐடியாவையும் பொறுமையாக கேட்ட அக்கா, ஒவ்வொன்றையும் அது சரியா வராது...இது சரியா வராது என்று சொல்லிக் கொண்டு வர, என்னுடைய உற்சாகம் காற்று இறங்கிய பலூன் போல் ஆனது. மேடை அலங்காரத்தை மறுபடியும் அக்காவிடமே விட்டுவிட்டு, வெளியே கடைகளுக்குப் போய் வாங்க வேண்டிய பொருட்களையாவது வாங்கலாம், அதில் ஒன்றும் குழப்பம் இருக்காது என்று நினைத்தேன். அக்காவிடன் ஷாப்பிங் லிஸ்ட்டை நான் கேட்க, அரை மனதுடன் என்னிடம் கொடுத்தாள். பெரும்பாலான பொருட்கள் Walmart இல் கிடைக்கும் என்பதால் முதலில் அங்கே சென்றேன். லிஸ்ட்டில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக எடுக்கும் போதும், ஒவ்வொரு சந்தேகம் என் மனதில் உதித்தது. இந்த அளவு சரியா? இந்த நிறம் சரியா? இவ்வளவு விலை போட்டிருக்கே? அக்காவுக்கு இரண்டு முறை போன் செய்து என் சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டேன். மூன்றாவது முறை போன் போட்டபோது, "இதுக்குதான் நானே எல்லாத்தையும் வாங்கிக்கறேன்னு சொன்னேன், கேட்டியா? இப்ப பார் நூறு தடவை போன் பன்னி என் வேலையை கெடுத்துகிட்டு இருக்க! நீ ஷாப்பிங் பன்னினது போதும், முதல்ல கிளம்பி வா. நான் அப்பறமா போய் வாங்கிக்கறேன்." என்று சத்தம் போட்டாள்! தொங்கிய முகத்துடன் வீட்டுக்கு வந்த என்னிடமிருந்து ஷாப்பிங் லிஸ்ட்டை அக்கா பிடுங்கி வைத்துக்கொண்டாள். அடுத்து என்ன பொறுப்பை எடுத்துகொள்வது என்று யோசித்தேன். ஒரு வாரத்துக்கு முன்பே பக்கவாத்திய இசைக்கலைஞர்கள் அக்கா வீட்டிற்கு வந்துவிட்டிருந்தனர். அவர்களை கவனித்துக்கொள்ளும் வேலையைச் செய்யலாம் என்று முடிவு செய்தேன். அன்று மாலை ஒத்திகை முடிந்து கலைப்புடன் வீட்டுக்கு வந்த இசைக்கலைஞர்களை அமரச்சொல்லிவிட்டு, சூடாக ஏலக்காய் டீ போட்டுக் கொண்டுபோய் அவர்களிடம் நீட்ட, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் அவர்கள். அதில் ஒருவர் "உங்களுக்குத் தெரியாதா? நாங்க டீ குடிக்கமாட்டோம்" என்றார். மற்றொருவர் "எனக்கு சக்கரைப் போடாமல் காபி வேனும்" என்றார். மற்றொருவர் "எனக்கு ஏதாவது ஜூஸ் கொடுங்கோ. ஐஸ் வேண்டாம்"...மற்றொருவர் "நேத்து உங்க சிஸ்டர் அருமையா பாயாஸம் பன்னியிருந்தா. அது ஒரு கப் கொடுங்களேன்"....எனக்குத் தலை சுற்றியது. ஆபத் பாந்தவர் போல் அங்கே வந்த என் அக்கா, "தள்ளுடி" என்று என்னை ஒதுக்கிவிட்டு, சர சரவென அவர்கள் கேட்டதைத் தயாரித்துக் கொடுத்தாள். அரங்கேற்ற நாள் வரை இதே போல் தான் - நானோ, மற்றவர்களோ எந்த வேலையையும் அக்காவின் தலையீடு இல்லாமல் செய்து முடிக்க முடியாமல் செயலிழந்து நிற்பதும், பின் அக்கா தலையிலேயே அந்த வேலை மீண்டும் விழுவதுமாக இருந்தது.

அரங்கேற்ற நாளும் வந்தது. நான் அமெரிக்கா வந்தபோது அக்காவின் மகள்களுக்கு 8 வயது. அப்போதே பரதநாட்டியம் கற்றுக்கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் அவர்கள் ஊரில் நடக்கும் விழாக்களில் அவர்களுடைய பரதநாட்டிய நிகழ்ச்சி இருக்கிறதென்று சொல்லி அக்கா ஆசையாக கூட்டிக்கொண்டு போவாள். அக்கா மகள்கள் இருவரும் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஒரே ஒரு நிமிடம் வந்து நடராஜர் சிலைக்கு பூ போட்டுவிட்டு போய்விடுவார்கள். அந்த ஒரு நிமிடத்திற்குள் அக்கா பன்னும் அலம்பல் இருக்கே! அவள் முகத்தில் பெருமிதம் வழியும். போட்டோ எடுக்கவும் வீடியோ எடுக்கவும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பாள். பிறகு சில வருடங்கள் கழித்து அந்த ஒரு நிமிடம் ஐந்து நிமிடங்களாகி ஒரு சிறு பகுதிக்கு மட்டும் நடனமாட வருவார்கள். அப்போதெல்லாம், அக்கா பெண்கள் அரங்கேற்றம் வரை வருவார்கள் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் அவர்கள் பல வார இறுதிகளைத் தொலைத்து, பொறுமை இழக்காமல் 10 வருடங்களாக சிரமப்பட்டு பரதநாட்டியம் கற்றுக்கொண்டதின் பலனை அரங்கேற்றதின் போது பார்க்கமுடிந்தது. ரொம்ப அழகாக ஆடினார்கள். முதல் நாட்டியத்தின் போதே என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அக்காவின் முகத்தைப் பார்த்தேன். 8 வயதில் தன் மகள்களின் அந்த ஒரு நிமிட மேடைத் தோற்றத்தின் போது இருந்த அதே பெருமிதம் அன்றும் அவள் முகத்தில்.

ஊருக்குக் கிளம்பும் நாளன்று மீண்டும் என்னை ஓரம் கட்டிய அக்காவின் கணவர், "உங்கக்கா இந்த முறை நம்ம எல்லாரையும் டம்மி பன்னிட்டா. கவலைப்படாதே, அடுத்த வருஷம் பசங்களோட graduation party இருக்கு. அதுல அவளை டம்மி பன்னிட்டு நம்ம எல்லா ஏற்பாட்டையும் செய்து ஜமாய்ச்சிடலாம்" என்றார். நான் மனதிற்குள் சிரித்துக்கொண்டேன். அக்கா இல்லாமல் அந்த வீட்டில் ஒரு துரும்பையும் அசைக்க முடியாது என்று நான் தான் பார்த்துவிட்டேனே.

அமெரிக்காவில் நடக்கும் அரங்கேற்றங்கள் பற்றி எனக்கு நிறைய கருத்துக்கள் இருக்கின்றன. அடுத்தப் பதிவில் அவற்றை எழுதுகிறேன்.

7 comments:

Anonymous said...

ஏங்க அரங்கேற்றங்களும் ஆடம்பரங்களும் தேவைதானா?

அரவிந்தன் said...

சரளமான நடை......சுவாரசியமான விஷயங்கள்!!!.....


அன்புடன்
அரவிந்தன்

SnackDragon said...

உங்க அக்காவுக்கு வாழ்த்துக்கள் தாரா. என்ன திடீர்னு லீவு எல்லாம் போட்டுட்டு.. சபாஷ் சரியான போட்டி. ஏதோ உதவி உபத்திரவம்னு யாரோ சொல்றா மாதிர் காதுல காக்குது :-) 'அசத்தல் அக்கா'வா இருக்காங்க.

Anonymous said...

/*சில நிமிடங்களிலேயே என்னை ஓரம் கட்டிய அக்காவின் கணவர்*/

துளசி கோபால் said...

தாரா, எப்படி இருக்கீங்க?

//அமெரிக்காவில் நடக்கும் அரங்கேற்றங்கள் பற்றி எனக்கு நிறைய கருத்துக்கள் இருக்கின்றன. அடுத்தப் பதிவில் அவற்றை எழுதுகிறேன்//

சட்புட்டுன்னு எழுதுங்க. ஆவலா இருக்கு!

என்றும் அன்புடன்,
துளசி.

Anonymous said...

/*நான் அங்கே சென்ற சில நிமிடங்களிலேயே என்னை ஓரம் கட்டிய அக்காவின் கணவர்*/

ரவியா said...

சரளமான நடை......