Thursday, April 28, 2005

அட! அமெரிக்காவிலும் பால்நிலை பாகுபாடு! (gender discrimination)



என்னுடைய மேலாலளர் நேற்று நடந்த கூட்டத்தில் "நம்முடைய அணிக்கு ஒரு புது பொறியாளரை நாளை தொலைபேசி மூலம் தேர்வு செய்ய இருக்கிறேன்" என்றார். உடன் வேலை பார்க்கும் இந்தியர் ஒருவர் "அவர் ஆணா, பெண்ணா?" என்று கேட்டார். மேலாளர் சிரித்துகொண்டே "எனக்குத் தெரியாது, இந்தக் கேள்வியை நீங்கள் கேட்பதும் சரியல்ல. அவர் ஆணா பெண்ணா, கருப்பரா, வெள்ளையரா, இந்தியரா, சீனரா என்பதைப் பார்த்து நாங்கள் தேர்வு செய்வதில்லை. We follow Equal Employment Opportunity policy" என்றார். உண்மைதான், ஒரு அமெரிக்கர் அந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தால், பெயரை வைத்து அவர் ஆணா பெண்ணா என்பதைக் கண்டுபிடித்து விடலாம். ஆனால் இந்திய மற்றும் சீனப் பெயர்களை வைத்து அதைக் கண்டுபிடிப்பது கடினம். அவர்கள் நேர்முகத் தேர்வுக்கு வரும்போதோ அல்லது அவர்களுடன் தொலைபேசியில் பேசும்போதோ தான் தெரிந்துகொள்ள முடிகிறது. அமெரிக்காவில் உள்ள விண்ணப்ப தாள்களிலும், Sex, Race போன்றவற்றை 'Optional Information' என்கிற பகுதியில் தான் கேட்கிறார்கள். விருப்பபட்டால் இந்தத் தகவல்களை பூர்த்தி செய்யலாம். கட்டாயம் எதுவும் கிடையாது. இது பாராட்டப்பட வேண்டிய விசயம் என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் இதெல்லாம் சும்மா கண் துடைப்பு என்கிறார் மேலாளரிடன் கேள்வி கேட்ட இந்தியர். "ஏனிப்படி சொல்கிறீர்கள்?" என்று கேட்டபோது, "வேலைக்கு ஆள் எடுக்கும் போது பாகுபாடின்றி எடுக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் வேலையில் இருப்பவர்களை எந்தவித பாகுபாடின்றி நடத்துகிறார்களா என்று யோசித்துப் பாருங்கள்" என்றார். நான் யோசித்துப் பார்த்ததில், எங்கள் அலுவலகத்தில் அப்படி ஒன்றும் பிரச்சினை இருப்பதாகத் தோன்றவில்லை. அதை அவரிடம் சொன்னபோது, "இந்த அலுவலகத்தை விடுங்கள். நீங்கள் கூகிளில் போய் 'gender discrimination law suits' என்று தேடிப் பாருங்கள், ஆச்சரியப்படுவீர்கள்" என்றார். மதிய உணவு இடைவேளையில் தேடியபோது, கூகிள் துப்பிய செய்திகளைப் படித்து ஆச்சரியப்பட்டுத் தான் போனேன்.

Walmart - உலகத்திலேயே மிகப் பெரிய Retail நிறுவனம் மற்றும் அமெரிக்கவிலேயே மிக அதிகமான பணியாளர்களைக் கொண்ட நிறுவனம். 2004 ஆம் ஆண்டில் Walmart இல் வேலை செய்யும் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஆறு பெண்கள் தாம் பால் நிலை பாகுபாட்டுக்கு(gender discrimination) உட்படுத்தப்பட்டதாக வழக்குத் தொடர்ந்தனர். அதே வேலையைச் செய்யும் ஆண்களைவிட பெண்களுக்கு குறைவாக சம்பளம் கொடுக்கப்பட்டது என்றும், பணியாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்களாக இருந்தபோதும், பதவி உயர்வுகள் ஆண்களுக்கே கொடுக்கப்பட்டது என்றும், மேலிடத்துப் பணியாளர்களில் 14 சதவிகிதம் மட்டுமே பெண்கள் என்பதும் இவர்களது வாதம். பெண்கள் பொதுவாக பதவி உயர்வுகளில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதும், சில வேலைகளுக்கு பெண்கள் தகுதியானவர்கள் அல்ல என்பதும் Walmart இன் எதிர் வாதம்.

Boeing - மேலே சொல்லியிருக்கும் அதே போன்ற ஒரு வழக்கை சமரசம் செய்வதற்கு Boeing நிறுவனம், 29,000 பெண் பணியாளர்களுக்கு $72 மில்லியன் நஷ்ட ஈடாக வழங்கியிருக்கிறது.

Morgan-Stanely - Wall Street நிறுவனமான Morgan Stanley இல் வழக்கமான பதவி உயர்வு, குறைந்த சம்பள குற்றச்சாட்டுக்களுடன், குழந்தைப் பேறு விடுமுறை (Maternity Leave) எடுக்கும் பெண்களுக்கு சம்பள உயர்வும், முக்கியப் பொறுப்புகளும் மறுக்கப்படுகின்றன என்றும், ஆண்கள் குழுவாக வெளியில் செல்லும் போது அந்தக் குழுவில் பெண்களை சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

Yale, United Airlines என்று இந்தப் பிரபல நிறுவனங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

வல்லரசான அமெரிக்காவிலேயே பெண்களுக்கு இந்த நிலையா என்று வியப்பாக இருந்தது. ஆனால் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும். பதவி உயர்வு, சம்பள உயர்வு இவையெல்லாம் பெண்களுக்கு அடிப்படைப் பிரச்சினைகள் கிடையாது. அடுத்தக்கட்ட பிரச்சினைகள் தான். அமெரிக்காவில் வாழும் பெண்கள் அடிப்படை பிரச்சினைகளை எப்போதோ தாண்டி வந்து அடுத்தக்கட்டத்து பிரச்சினைகளுக்காக போராடி வருகிறார்கள். தமிழ் நாட்டுப் பெண்கள் அடிப்படை பிரச்சினைகளான கல்வி, வேலைவாய்ப்பின்மை இவற்றிற்கே இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.நகரங்களில் வீட்டுக்கு வீடு பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். குடும்பத்தைக் காப்பாற்ற ஏதாவது ஒரு வேலை கிடைத்தாலே போதும் என்கிறநிலை இருக்கும்போது, அடுத்த கட்டமான பதவி உயர்வு, பால்நிலை பாகுபாடு பற்றியெல்லாம் அவர்கள் சிந்திப்பார்களா என்றுதெரியவில்லை. இந்தப் பெண்கள் பால்நிலை பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு வேலை வாய்ப்பும் பதவி உயர்வும் பொறுப்புகளும் மறுக்கப்படும் போது, எத்தனை ஆற்றல், எத்தனை சக்தி வீணாகப் போகிறது?

ஆனால் சும்மா சும்மா தமிழ் நாட்டில் பெண்களுக்கு அது இல்லை இது இல்லை என்று சொல்வதற்கு அலுப்பாக இருக்கிறது. பெண்களுக்குத் தேவையான சட்ட திட்டங்கள், பாதுகாப்புகள், உதவி அமைப்புகள் எல்லாமே இருக்கின்றன. இல்லாதது விழிப்புணர்ச்சி மட்டும் தான். பால்நிலை சமத்துவம்(gender equality) ஒரு சமூக நீதியாகவும் ஒரு நாட்டின் பலமாகவும் மாற தேவையானதெல்லாம் விழிப்புணர்ச்சி! விழிப்புணர்ச்சி! விழிப்புணர்ச்சி!

5 comments:

Badri Seshadri said...

பால்நிலை சமத்துவம் காண வெகு நாள்களாகலாம். ஆனால் இப்பொழுதிருக்கும் மோசமான சூழ்நிலை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு மாற முயற்சி செய்யவேண்டும்.

பெண்கள் அதிக அளவில் தொழில்முனைவோராகவும் தொழிலதிபர்களாகவும் மாறினால் வேலை செய்யுமிடத்தில் பெண்கள் நிலை நிறைய முன்னேற்றம் அடையும்.

பத்மா அர்விந்த் said...

தாரா
அமெரிக்காவில் வன்முறையும், பெண்களுக்கான சத்துவமும் வழங்கப்படுவதில்லை என்பது தெரிந்த் ஒன்று. ஒரே வச்தி என்ன என்றால், வழக்காடி தேவையான நீதியை பெறலாம்.glass ceiling சட்டம் வந்ததும் இதற்காகத்தான்.
இங்கே விழிப்புணர்ச்சி வந்து விட்டது, வளர்ந்து கொண்டும் இருக்கிறது. சில வருடங்கள் (10) முன்பு மிகவும் மோசமான நிலையில் நடத்தப்பட்டனர். 911 சுழற்றின்னல் உடனே உதவியும், gender descrimination கூடாது போன்ற வழக்குகள் உடனே விசாரிக்கப் படுவதும் நடக்கிறது. நீங்கள் சொன்ன நிறுவங்களில் இன பாகுபாடு மிக அதிகம். விசாரித்து பார்ங்கள் caucasian vs Hispanic நாளைய கூலி என்ன வென்று?
அமெரிக்க தலைநகரில் மக்களவையில் எத்தனை பெண்கள் என்றும், எததனை பேர் CEOkகளாகவும் இருக்கிறார் என்று பார்த்தால் மேலும் விவரம் புரியும். இந்தியா மற்றும் கீழை நாடுகளில் இன்னும் விழிப்புணர்வு முழு அளவில் வரவில்லை என்பதால் அதிகம் பேசப்படுகிறது

Narain Rajagopalan said...

//பால்நிலை சமத்துவம் காண வெகு நாள்களாகலாம். ஆனால் இப்பொழுதிருக்கும் மோசமான சூழ்நிலை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு மாற முயற்சி செய்யவேண்டும்.

பெண்கள் அதிக அளவில் தொழில்முனைவோராகவும் தொழிலதிபர்களாகவும் மாறினால் வேலை செய்யுமிடத்தில் பெண்கள் நிலை நிறைய முன்னேற்றம் அடையும்.//

அது :))))

-/பெயரிலி. said...

இது குறித்து நேற்று நியூ ஹம்ஸயரின் ஒரு தொலைக்காட்சியிலே ஒரு நிகழ்ச்சி; ஒரே வேலைக்கு ஆணுக்கு $1 என்றால் பெண்ணுக்கு $.76 என்பதாகச் செய்தியை முன்வைக்கிறார்கள். மூன்று பெண்கள் நிலைமை மோசம் என்கிறார்கள்; இரண்டு பெண்கள் முன்னைக்குப் பரவாயில்லை என்கிறார்கள். இது குறித்து சில புத்தகங்களும் எழுதப்பட்டுவிட்டன. பல்கலைகழக ஆசிரியர்களிலேயே இதே சம்பளபேதம் நிலவுகின்றது. ஆனால், இன்னொரு வாதம் மேலே சொல்லப்பட்ட வாதத்திலே வந்த ஒரு கறுப்பினப்பெண்ணிடமிருந்து வந்தது: வெள்ளைப்பெண்கள் வெள்ளை ஆணின் $1 தொழிலுக்கு தன் ஈடாக $.98 இனையும் சிறுபான்மையின ஆணொருவர் அதைவிடவும் குறைவாக எடுப்பதாகச் சொல்கிறார். முன்னைக்கு இப்போது முன்னேற்றமென்ற அளவிலே இன்னும் முன்நோக்கி நடக்கவேண்டுமென்பதே இப்போதைய நிலை.

-/பெயரிலி. said...

/பெண்கள் அதிக அளவில் தொழில்முனைவோராகவும் தொழிலதிபர்களாகவும் மாறினால் வேலை செய்யுமிடத்தில் பெண்கள் நிலை நிறைய முன்னேற்றம் அடையும்./
இது குறித்து, அண்மையிலே ஒரு பேராசிரியர் சொன்னது: ஆய்வுத்திட்டங்களுக்கு அரசுசார்நிதி வழங்கும்போது, பொதுவிலே சிறுபான்மையினரின் நிறுவனங்களையும் அந்த ஆய்வுத்திட்டத்திலே பங்காளர்களாகச் சேர்த்துக்கொள்ளவேண்டுமென்பது ஒரு விதி. அதனாலே, பெண்களே முழுக்க முழுக்க இயக்கும் நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் உருவாக்கின்றன. ஆனால், அதேநேரத்திலே, சிறுபான்மையோர் (குறிப்பாக, ஆசியாவினைச் சேர்ந்த பேராசிரியர்கள் -ஏற்கனவே அமெரிக்காவிலே அவர்களின் தொகைவீதத்துக்கு அதிகமாக அறிவியல் & தொழிநுட்ப ஆய்விலே வீதப்பட்டிருப்பதால்), வாய்ப்பினை இழக்கும் சந்தர்ப்பங்களுமுண்டு. ஆனால், இந்நிலை தவிர்க்கமுடியாததும் ஓரளவுக்கு நியாயமானதுங்கூட.