கடந்த ஆண்டு பால்டிமோரில் நடந்த FeTNA விழாவில் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனின்(சாகித்தய அகாடமி விருது பெற்றவர்) எழுத்துப் பட்டறை நடந்தது. எழுதுவதில் மிகவும் ஆர்வம் கொண்ட நான், இந்தப் பட்டறைக்குச் செல்ல வேண்டுமென்று மிகவும் ஆவலாக இருந்தேன். ஆனால் விழா ஒருங்கிணைப்பு வேலைகளினால் என் ஆசை நிறைவேறவில்லை. விழா முடிந்த பின் அடுத்த சில நாட்களில், வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை வாசிங்டன் டிசி பகுதி தமிழ்க் குடும்பங்கள் தங்கள் வீட்டில் தங்க வைத்து கவனித்துக் கொண்டார்கள். சந்தடி சாக்கில் பிரபஞ்சன் அவர்களை எங்கள் வீட்டுக்கு இரவு விருந்துக்குத் தள்ளிக் கொண்டு வந்தார் என் கணவர். எனக்குத் தலை கால் புரியவில்லை. எங்கள் அபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்த பிரபஞ்சன், "அப்பாடா, இதுதான் நம்ம ஊர் வீடு மாதிரி சின்னதா அழகா இருக்கு. அமெரிக்காவில் இருக்கிற பெரிய வீடுகளைப் பார்த்தாலே பயமா இருக்கு. ஒரு அறையில் இருந்து இன்னோரு அறைக்கு போவதற்குள்ளயே நடுவில் தொலைந்து போய்விடுகிறோம்" என்று சிரித்துக் கொண்டே சொன்னார். "உங்களுடைய எழுத்துப் பட்டறையை தவற விட்டது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது" என்று நான்
சொன்னவுடன், "அது என்ன பிரமாதம்? இப்பவே இங்கேயே உங்களுக்கு ஒரு எழுத்துப் பட்டறை வைத்துவிடலாமா?" என்றார். ஆஹா! என் வீட்டு வரவேற்ப்பறையில் எனக்கே எனக்கென்று பிரபஞ்சனின் எழுத்துப் பட்டறை! இது நான் செய்த பாக்கியம் அல்லவா?
உச்சி குளிர்ந்த நான், ஆர்வத்துடன் பல கேள்விகளை அவரிடம் கேட்டேன். "என்னால் கட்டுரைகள் சரளமாக எழுத முடிகிறது. ஒரு நிகழ்வை விவரித்து எழுத முடிகிறது, ஆனால் சிறு கதை எழுதுவது மட்டும் சிக்கலாக இருக்கிறது. அதற்கு வேறு வகையில் சிந்திக்க வேண்டுமா? கதையின் ப்ளாட்டை எப்படி தேர்வு செய்வது?" என்று கேட்டேன். அதற்கு அவர், "சிறு கதை எழுவது
ரொம்ப சுலபம். அதற்கு மூன்று விதிகளை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். 1) கதையின் முக்கிய கதாபாத்திரத்திற்கு(protagonist) ஒரு சூழ்நிலை அல்லது ஒரு சிக்கலை உருவாக்க வேண்டும். இதுதான் கதையின் ப்ளாட். 2) அதனால் ஏற்படும் பிரச்சினைகளை விவரிக்க வேண்டும். 3) அந்த கதாபாத்திரம் எப்படி அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கான்கிறது என்று முடிக்க வேண்டும். எல்லா கதைகளுக்கு இந்த infrastructure பொருந்தும்" என்றார். "எந்த மாதிரியான ப்ளாட்டை உருவாக்குவது என்று தான் குழப்பமாக இருக்கிறது" என்றேன். அதற்கு அவர், "எதை வேண்டுமானாலும்
ப்ளாட்டாக வைத்துக் கொள்ளலாம். இப்போது உங்கள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது?" என்று கேட்டார். "இப்போது எங்க வீட்டுக்கு நீங்க வந்திருக்கிங்க. உங்களுக்கு விருந்தளித்து,
நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். அது தான் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது." என்றேன். "சரி. இதையே ப்ளாட்டாக வைத்துக் கொள்ளலாமே! நீங்க தான் Protagonist. உங்களுடைய சூழ் நிலை - உங்கள் வீட்டுக்கு ஒருவர் விருந்துக்கு வருகிறார். பிரச்சினை - அவருக்கு நீங்க விருந்து சமைக்க வேண்டும். முடிவு - உங்களுடைய விருந்தோம்பல் எப்படி அமைந்தது என்பது. இந்த ப்ளாட்டை வைத்து ஒரு கதை எழுதி எனக்கு அனுப்புங்கள்" என்றார். ஓ! கதை எழுதுவது இவ்வளவு சுலபமோ என்று தோன்றியது.
மேலும் அவர், "சிறு கதை என்பதால் கதா பாத்திரங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும், ஒவ்வொருவரும் கதைக்கு முக்கியமானவர்களாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பொருளை விவரித்தாலும் அதற்கு கதையோடு ஒட்டிய முக்கியத்துவம் இருக்க வேண்டும். ஒரு அறையின் சுவரில் ஒரு துப்பாக்கி மாட்டியிருந்தது என்று கதையில் சொல்லியிருந்தால், அந்தக் கதை முடிவதற்குள் அந்தத் துப்பாக்கி வெடிக்க வேண்டும் என்று ஒரு பிரபல ரஷ்ய எழுத்தாளர் கூறியிருப்பதாகச் சொன்னார். கேட்கக் கேட்க எனக்கு ஆர்வம் பெருகியது. நான் ஏற்கனவே எழுதி வைத்திருந்த இரண்டு சிறு கதைகளை அவரிடம் காட்டினேன். படித்து விட்டு ஒன்றை நன்றாக இருக்கிறதென்று பாராட்டினார். மற்றொன்றை சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும், அதை தான் எடுத்துச் செல்வதாகவும் சொன்னார். "எழுதுவது ஒரு சுகமான அனுபவம். தொடர்ந்து எழுதுங்கள்." என்று சொல்லி விடை பெற்றார்.
போகுமும் அவர் எழுதிய 'பெண்மை வெல்க' புத்தகத்தில் கையெழுத்திட்டு எனக்குப் பரிசாக அளித்தார். அவர் சென்ற பல நாட்களுக்குப் பிறகும் அந்தப் பிரமிப்பிலேயே இருந்த நான், ஒரு வார இறுதியில் 'பெண்மை வெல்க' படிக்கத் தொடங்கினேன். இதிகாசங்கள் பெண்களை பத்தினித் தெய்வங்களாகப் பதிவு செய்திருந்தாலும், அவர்களுக்கென்று ஒரு மனமும், அதற்கு ஒரு மறு பக்கமும் இருக்கிறது என்று என் கண்ணத்தில் அறைந்து புரிய வைத்த புத்தகம் அது. அதை படித்த சூட்டுடன் சில சிறு கதைகள் எழுத முயற்சி செய்தேன். பிரபஞ்சன் எனக்குச் சொல்லிக் கொடுத்த அந்த விதி முறைகளைப் பயன் படுத்திப் பார்த்தேன். ஏனோ என்னால் ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்க முடியவில்லை. நான் உருவாக்கிய கதாபாத்திரங்கள் எல்லாம் என்னுடைய குணாதிசயங்களைக் கொண்டு என் உணர்வுகளைப் பிரதிபலிப்பவைகளாகவே இருந்தனவே தவிர, முற்றிலும் என்னில் இருந்து வேறு பட்ட ஒரு மூன்றாவது நபரை கற்பனை செய்து அந்த நபராக இருந்து யோசித்து ஒரு கதையை எழுத முடியவில்லை. அப்பறம் தான் புரிந்தது எனக்கும் fiction என்பதற்கும் ரொம்ப தூரம் என்று. நான் உணர்ந்து அனுபவித்த விடயங்களைப் பற்றி மட்டுமே இப்போதைக்கு எழுத முடிவு செய்துள்ளேன். ஆனால் என்றாவது ஒரு நல்ல கதையை எழுதி பிரபஞ்சனின் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என்று ஆசை இருக்கிறது.
4 comments:
/*வரவேற்ப்பறையில்*/
வரவேற்பறை எழுத்துபிழையா? எனக்கே கொஞ்சம் தமிழ்தான் தெரியும் இல்லை வரவேப்பறைதானா? அப்புறம்
அவரு தமிழ்நாட்டில் அமெரிக்க தமிழர் பத்தி பிரமாதமா சொன்னாராம். அதையும் பத்தி கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.
Best of luck. கதைகளை எழுதி இங்கே வெளியிட்டால் நிறைய விமர்சனங்கள் கிடைக்கும். மேற்கொண்டு கதைகளை செம்மைப்படுத்த அவை உதவலாம்.
உங்க கதையை இங்க போடுங்களேன் தாரா
உங்க பதிவிலே ஆரம்பத்திலே எம் எஸ் பற்றி எழுதினப்போ வந்ததுதான். நீண்ட நாட்கள் பிறகு எட்டிப் பார்த்தால்... அம்மாடி... இப்படி அருவியாக கொட்டியிருக்கே என்று சந்தோஷமாக இருக்கு. அதோடில்லாமல் இங்கு பதிந்திருக்கும் பின்னூட்டங்களையும் சேர்த்து படித்தால் ஏதோ ஒரு அருமையான அரட்டைக் கச்சேரியில் நுழைந்து வெளியே வந்த மாதிரி இருக்கு :-)
Post a Comment