Friday, February 11, 2005
4A சிதம்பரசாமி கோவில் தெரு
உலகத்தில் எந்த மூலைக்குப் போனாலும், எத்தனை வருடங்கள் ஆனாலும் என்னால் மறக்க முடியாத முகவரி இது. 23 வயது வரை சிதம்பரத்தில் அம்மா அப்பாவின் நிழலிலேயே வாழ்ந்துவிட்ட எனக்கு, யதார்த்த வாழ்க்கை¨யின் அத்தனை முகங்களையும் காட்டிய முகவரி இது. அமெரிக்கா வருவதற்கு முன் சென்னையில் தங்கி ஒரு நிறுவனத்தில் சில பயிற்சிகள் எடுத்துக் கொண்டேன். என் குணத்திற்கு சென்னை வாழ்க்கை சரிவராது என்றும், சென்னைக்கு போன வேகத்தில் நான் திரும்பி வந்துவிடுவேன் என்றும் என் பெற்றோர்கள் எதிர்ப்பார்த்தார்கள். அதற்கு மாறாக சென்னை வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்த சுறுசுறுப்பான மனிதர்கள், பல்லவன் பேருந்தில் ஓடிச் சென்று ஏறும் லாவகம், மவுண்ட் ரோடின் பிரம்மாண்டம் எல்லாமே என்னை வெகுவாக ஈர்த்தது. முதலில் ஹாஸ்டலில் தங்கியிருந்த நான், நல்ல தோழிகள் கிடைத்தவுடன், அவர்களுடன் மைலாப்பூரில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தேன். அந்த வீட்டின் முகவரி தான் 4A, சிதம்பரசாமி கொவில் தெரு, மைலாப்பூர், சென்னை.
அது ஒரு மிகக் குறுகிய சந்து. கார்கள் நுழைவது கடினம். அங்கிருக்கும் வீடுகள் எல்லாம் பழைய காலத்து வீடுகள். ஒரு மிகச் சிறிய முன் அறை, ஒருவர் மட்டுமே நிற்கும் அளவு ஒரு சமையல் அறை, ஒரு சிறிய குளியல் அறை. இதுதான் நாங்கள் தங்கியிருந்த வீடு. படுக்கை அறை என்று தனியே எதுவும் கிடையாது. அந்த முன் அறையில் தான் தூங்குவது, படிப்பது, சாப்பிடுவது எல்லாம். மாலை நேரங்களில் சிதம்பரசாமி கொவில் தெரு களை கட்டியிருக்கும். எல்லா குழந்தைகளும் தெருவில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். எதிர் வீட்டுச் குட்டிப் பையன் தமீமை இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அவனை எப்பவுமே நிர்வாணமாக தான் தெருவில் விளையாட விட்டிருப்பார்கள். கொழுக் மொழுக்கென்று அழகாக இருப்பான். பெண்கள் வாசல் படிக்கட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். ஆண்கள் சைக்கிளையோ, மோட்டார் பைக்கையோ துடைத்துக் கொண்டு, அல்லது பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்கள். ஆகமொத்தம் ஒட்டுமொத்த மக்களும் தெருவில் தான் இருப்பார்கள். எல்லாரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் சுவாரஸ்யமாக இருக்கும். இந்தத் தெருவில் இருக்கும் "liveliness" நான் வேறு எங்கேயும் பார்த்ததில்லை. தெரு முனையில் ஒரு மிகச் சிறிய பெட்டிக் கடை இருந்தது. அந்தக் கடையில் கிடைக்காத பொருட்களே இல்லை. கிட்டத் தட்ட ஒரு குட்டி Walmart என்று சொல்லலாம். அந்த பெட்டிக் கடைக்காரர், அந்தத் தெருவின் மற்றொரு முனையில் இருந்த டெலிபோன் பூத்காரர், பக்கத்துத் தெருவில் இருந்த எண்ணைக் கடைக்காரர், அரிசி கடைகாரர் என்று எல்லாருமே எங்களுக்கு நண்பர்களாக இருந்தார்கள். அமெரிக்காவில், அதுவும் குளிர் காலங்களில் வெறிச்சோடியிருக்கும் தெருக்களையும், மூடிய கதவுகளையும் பார்க்கும் போது எனக்கு சிதம்பரசாமி கோவில் தெருவின் நினைவு வரும். அந்த நினைவுத் துளிகளில் சிலவற்றை இங்கே சிந்துகின்றேன்...போர் அடித்தால் மன்னிக்கவும்.
********************
வீட்டுச் சொந்தக்காரர் மாடியில் குடியிருந்தார். அவருடைய மனைவி சரஸ்வதி ஆண்ட்டி எங்களிடம் ரொம்பப் அன்பாக இருப்பார். அவ்வப்போது குழம்பு,
பொரியல், பலகாரங்கள் என்று ஏதாவது எங்களுக்குக் கொண்டுவந்து கொடுப்பார். அங்கிள் ஒரு 'ஜொல்லு பார்ட்டி'. ஆண்ட்டி எங்களைப் பார்க்க
வரும்போதெல்லாம் கூடவே அவரும் வந்து எங்களிடம் சம்பந்தமே இல்லாமல் எதையோ எதையோ பேசுவார். ஆண்ட்டி கடுப்பாகி "உன்னை யாரு இங்க வரச் சொன்னா? முதல்ல நீ கிளம்பு" என்று விரட்டி விடுவார். அவ்வப்போது இரவு நேரங்களில் அங்கிள் உரத்த குரலில் கத்துவதும், ஆண்ட்டி அழுவதும்
காதில் கேட்கும். ஒரு நாள் திடீரென்று ஆண்ட்டியை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகக் கேள்விப்பட்டு நாங்கள் ஓடிப் போய் பார்த்தோம். அங்கிள் எங்களிடம் "திடீர்ன்னு மயக்கமாகி விழுந்துட்டா. எதுவும் சாப்பிடாம இருந்தா போலருக்கு" என்று சொன்னார். ஏனோ அதை நம்பத் தோன்றவில்லை. பின்னர் ஒரு நாள் அங்கிளுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்றும், அதைத் தெரிந்துகொண்ட போது தான் தூக்க மாத்திரை சாப்பிட்டுவிட்டதாகவும் சொல்லி ஆண்ட்டி அழுதார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் பார்த்த முதல் துரோகம் இது. அந்த சம்பவம் நடந்து சில நாட்களிலேயே சென்னையில் என் பயிற்சி முடிந்துவிட்டதால், நான் ஊருக்குச் சென்றுவிட்டேன். பிறகு சில மாதங்களில் அமெரிக்காவும் வந்துவிட்டேன். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல், தீபாவளிக்கு தவறாமல் வாழ்த்து அட்டையும் கடிதமும் ஆண்ட்டியிடம் இருந்து வரும். சென்ற வருடம் எழுதியிருந்த கடிதத்தில் அங்கிள் அந்தப் பெண்ணுடனேயே சென்று தங்கியிருப்பதாகவும் தான் யாருமற்ற அனாதையாகிவிட்டதாகவும் எழுதியிருந்தார். அவரை தேற்ற திராணியற்று இன்னும் பதில் எழுதாமல் இருக்கிறேன்.
********************
ஒரு நாள் என் தோழியின் பெற்றோர்கள் எங்கள் சிதம்பரசாமி கொவில் தெரு வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்களுக்கெல்லாம் டீ போடுவதற்காக சமையலறைக்குச் சென்ற நான் அங்கே சர்க்கரை டப்பா காலியாக இருந்ததைப் பார்த்து திகைத்தேன். பிறகு ஒரு யோசனைத் தோன்றவே, நைஸாக மாடிக்குச் சென்று ஆண்ட்டியிடம் தயங்கி தயங்கி கொஞ்சம் சர்க்கரை கடனாகத் தர முடியுமா என்று கேட்டேன். அவர் உடனே கொஞ்சம் சர்க்கரையை பொட்டலம் கட்டிக் கொடுத்தார். வாங்க என் கை கூசியது, ஆனால் வேறு வழி இருக்கவில்லை. நான் வாங்கிய முதல் கடன் அது. புதிதாக நாங்கள் சர்க்கரை வாங்கியவுடன், முதல் வேலையாக கொஞ்சம் பொட்டலம் கட்டி ஆண்ட்டியிடம் கொடுத்தப் பிறகுதான் மனம் நிம்மதியாக இருந்தது. இனிமேல் வாழ்க்கையில் கடனே வாங்கக் கூடாது என்று அன்று நினைத்தேன். ஆனால் இந்தக் கொடுத்தலும் வாங்குதலும் பிறகும் தொடர்ந்தது..சர்க்கரை, காபிப் பொடி, பால், எண்ணை என்று தொடங்கியது... இன்றும் தொடர்கிறது...கார் கடன், வீட்டுக் கடன், க்ரெடிட் கார்ட் கடன் என்று.
********************
மாதா மாதம் அப்பா அனுப்பும் பணம் போதியதாக இருந்தாலும், சில சமயம் சில எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டுவிட்டால், மாதக் கடைசியில் கையில் பணம் இருக்காது. ஒரு முறை என்னுடன் தங்கியிருந்த தோழிக்கு திடீரென்று தாங்கமுடியாத வயிற்று வலி ஏற்பட்டு அவளை அருகில் உள்ள இஸபெல் மருத்துவமனையில் சேர்த்தோம். உடனே ஸ்கேன், எக்ஸ் ரே என்று எங்கள் கையிலிருந்த பணமெல்லாம் செலவாகிவிட்டது. அந்த நேரம் பார்த்து என்னுடைய பெற்றோர்கள் வெளியூர் சென்றிருந்ததால் அவர்களிடம் பணம் கேட்க முடியவில்லை. அடுத்த சில நாட்களுக்கு பணம் இல்லாமல் கையைக் கட்டி, வாயைக் கட்டி நாட்களைத் தள்ளியது நான் அனுபவித்த முதல் ஏழ்மை.
********************
அந்தக் குறுகியத் தெருவில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கும். தெரு முனையில் ஒரு சிறிய கோவில் இருக்கிறது. மார்கழி மாதத்தில் அந்தக் கோவிலில் ஒலிபெருக்கியை வைத்து சத்தமாகப் பாட்டு போட்டு விடுவார்கள். வீட்டுக் கதவையும் ஜன்னலையும் எப்படி மூடினாலும், அந்தச் சத்தம் பிடிவாதமாக உள்ளே நுழைந்து எங்கள் நிம்மதியைக் கெடுக்கும். அவ்வப்போது அந்தக் கோவிலில் ஏதோ பூஜைகள் நடக்கும். அப்போது கொழியை அறுத்து சாமிக்கு பலி கொடுப்பார்கள். அந்தக் கோழி இரத்தம் அப்படியே தெருவில் சிதறிக் கிடக்கும். அதை யாரும் சுத்தம் செய்ய மாட்டார்கள். மூக்கை மூடிக் கொண்டு, குமட்டும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு பல முறை அந்த இடத்தைத் தாண்டிப் போயிருக்கிறேன். இப்போது பண்பட்ட என் மனம் நினைக்கிறது 'ஒரு வாலி தண்ணீர் ஊற்றி அந்த இரத்தம் சிதறிய இடத்தை நானே சுத்தம் செய்திருக்கலாமே' என்று. அந்தத் தெருவில் இரவு 10 மணிக்கு மேல் சாமி ஊர்வலம் வரும். மேல தாளத்துடன் வரும் சாமியை பார்க்க தெருவே வெளியில் பயபகிதியுடன் குழுமியிருக்கும். ஒரு மாறு பட்ட ஊர்வலத்தையும் நான் பார்த்திருக்கிறேன். மு.க.ஸ்டாலின் ஒரு தேர்தல் நாளில் ஒரு திறந்த ஜீப்பில் தொண்டர்கள் சூழ கூப்பிய கரங்களுடனும் முகத்தில் ஒட்டப் பட்ட புன்னகையுடனும் ஓட்டுக் கேட்டு ஊர்வலம் வந்தார்.
********************
நான் சமைக்கக் கற்றுக் கொண்டதும் இந்த வீட்டில் தான். ஒரு முறை ரசம் வைத்துக் கொண்டிருந்தேன். அப்போது உள்ளே வந்த மாடி வீட்டு ஆண்ட்டி, "வாசனை மூக்கைத் துளைக்கிறதே, என்ன சமைக்கிற?" என்று கேட்டார். "ரசம் வைக்கிறேன் ஆண்ட்டி" என்று பெருமையாகச் சொன்னேன். "இப்படி ஒரு வாசனையான ரசத்தை நான் சாப்பிட்டதே இல்லையே!" என்று சொல்லி சிறிது ரசத்தை கரண்டியில் எடுத்து சுவைத்தவர், அடுத்த கணம் முகம் மாறினார். பிறகு தான் தெரிய வந்தது நான் ரசப் பொடிக்கு பதில் கரம் மசாலா பொடியை உபயோகித்திருக்கிறேன் என்று. அந்த வாசனைக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று தோழிகள் கிண்டலடித்தார்கள். இந்த சொதப்பல் வேறு வகையிலும் தொடர்ந்தது - துவரம் பருப்புக்கு பதில் கடலைப் பருப்பு, சீரகத்திற்கு பதில் சோம்பு என்று!
********************
இப்படி பல அனுபவங்களைக் கொடுத்த அந்த வீட்டிற்கு என் மனதில் என்றுமே தனி இடம் உண்டு. என்னுடன் தங்கியிருந்த தோழிகளும் அப்படியே. ஒருத்தி இப்போது நியூ ஜெர்சியில் இருக்கிறாள். இன்னொருத்தி அட்லாண்டாவில். இன்னொருத்தி சென்னையில். இன்றும் நாங்கள் தொலைபேசியில் பேசும்போது, சிதம்பரசாமி கோவில் தெரு வீட்டைப் பற்றி பேசாமல் இருக்கமாட்டோம். எங்களுடைய கணவன்மார்கள், நாங்கள் "4A..." என்று பேச ஆரம்பித்தாலே "ஐய்யோ...ஆரம்பிச்சிட்டாங்கடா" என்று ஓடிவிடுவார்கள். 'Learning the hard way' என்று சொல்வார்களே, அப்படித்தான் நான் வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொண்டேன் 4A சிதம்பரசாமி கோவில் தெருவில்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
kalkkiputta poo!!!!!!!!!!
4A சிதம்பரசாமி கோவில் தெரு
--
இதை படித்ததும் எனக்கும் ஐதராபாத்தில் நாங்கள் ஐந்து பேர் ஒன்றாக தங்கி வேலைக்கு சென்றதும், மற்றும் பல சுவையான நிகழ்ச்சிகளும் ஞாபகத்திற்கு வருகிறது
Post a Comment