Wednesday, February 16, 2005

விளம்பரங்களில் பெண்கள்

ஊடகங்களில் பெண்களின் நிலைப்பாடு(Media Representation of Women) எப்படி இருக்கிறது என்பதில் சமீப காலமாக எனக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அது சம்பந்தமாக சில இணைய தளங்களையும் புத்தகங்களையும் படித்த போது பல ஆக்க பூர்வமான விசயங்கள் தெரிய வந்தன. ஊடகம் என்பது சினிமா, தொலைக் காட்சி, பத்திரிக்கைகள் என்று பரந்து விரிந்த ஒரு தலைப்பு. அதனால் அதை சிறு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும் போது எழுதலாமென்று இருக்கிறேன்.

இந்தப் பதிவில், தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை விளம்பரங்கள் எப்படி பெண்களை பிரதிபலிக்கின்றன என்பதை கொஞ்சம் அலசுவோம்.
என்னுடையப் பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் தொலைக்காட்சியில் சினிமா, தொடர்கள் இவற்றைவிட விளம்பரங்களைத் தான் நான் மிகவும் விரும்பிப் பார்ப்பேன். காரணம், தேவதைகள் போல் அழகழகானப் பெண்கள், கண்களை ஈர்க்கும் வண்ண உடைகள், ஜொலிக்கும் நகைகள், ஒரு முறை உபயோகித்தவுடனேயே மாய வேலைகள் செய்யும் சோப்புகள், பவுடர்கள் இவற்றால் மனம் ஈர்க்கப்படுவது அந்த வயதில் இயல்பான ஒன்று தானே? அந்த கால கட்டத்தைத் தாண்டி வந்த பிறகு தான் விளம்பரங்களில் பெண்கள் எவ்வளவு சுய நலமாக யதார்த்தத்துக்குச் சம்பந்தமேயில்லாத வகையில் கையாளப் படுகிறார்கள் என்ற வருத்தமான உண்மை தெரிய வருகிறது.

திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுக்கப் படும் பாடம் எப்படி நம் அறிவில் பதிகிறதோ, அதே போல் தான் தினந்தோரும் தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் விளம்பரக் காட்சிகள் பெண்களைப் பற்றிய ஒரு தவறான கருத்துருவத்தை நம் மனதில் வலுவாகப் பதிக்கிறது. ஆனால் இந்தக் கருத்துருவங்கள் சமுதாயத்தின் பெரும்பான்மையான பகுதியை பிரதிபலிப்பது கிடையாது. பெண்களின் யதார்த்த வடிவத்தில் ஒரு சிறிய சதவிகிதத்தைக் கூட பிரதிபலிப்பதில்லை. மீண்டும் மீண்டும் ஒரு பெண் என்றால் அவள் அழகாக, சிவப்பாக, உயரமாக, ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற தவறான கருத்தையே அத்தனை விளம்பரங்களும் வலியுறுத்துகின்றன.


உதாரணமாக தொலைக்காட்சியில் வரும் ஒர் ஜீன்ஸ்(jeans) விளம்பரத்தை ஒரு இளம் பெண் பார்க்கிறாள். அவளுடைய வாய் அந்த விளம்பரப் பாடலை முனு முனுக்கிறது. அவள் மனம் அந்த ஜீன்ஸை அனிந்தால் தான் எப்படி இருப்போம் என்று கற்பனை செய்துப் பார்க்கிறது. அவளது தோழிகளிடம் அந்த ஜீன்ஸைப் பற்றிச் சொல்கிறாள். பிறகு தானே அதை வாங்குகிறாள். அந்த விளம்பரதாரர் எதை எதிர்பார்த்து அந்த விளம்பரத்தை செய்கிறாரோ, அது நடக்கிறது. இது வரை நடந்ததெல்லாம் இயல்பாக நடந்தவை. ஆனால் இந்தப் பெண் எதனால் உந்தப்பட்டாள் என்று சற்று யோசித்தோமென்றால், விளம்பரங்கள் எப்படி மெல்ல மெல்ல பெண்கள் தங்களைப் பற்றி அவர்கள் வைத்திருக்கும் கருத்தையே மாற்றி வடிவமைக்கின்றன என்பது புரிய வரும். அதே ஜீன்ஸை ஒரு குள்ளமான, சற்றுக் கருப்பாக இருக்கும் பெண் அனிந்து விளம்பரத்தில் தோன்றியிருந்தால் அந்த இளம் பெண் உந்தப் பட்டிருப்பாளா? இங்கே அந்த விளம்பரதாரர் தன்னுடைய ஜீன்ஸின் தரத்தை விட ஒரு பெண்ணின் அழகை நம்பியே அதை மார்க்கெட் செய்கிறார் இல்லையா? சென்னை சில்க்ஸ், ப்போதீஸ், ப்ரின்ஸ் ஜுவல்லர்ஸ் விளம்பரங்களில் வரும் பெண்களை கவனியுங்கள்... அந்தப் பெண்கள் கூட்டத்தில் சற்று கருத்த நிறம் கொண்டப் பெண்களோ, சற்று குள்ளமானப் பெண்களோ இருக்க மாட்டார்கள்.

இந்தியப் பெண்களிடம் color complex என்பதை உண்டாக்கியது விளம்பரங்களே. வெள்ளைத் தோலுக்கு அப்படி ஒரு மகிமையை உண்டாக்கியிருக்கிறார்கள்! என்னுடைய தோழி ஒருத்தி சொன்னாள் நம் இந்திய சினிமாவில் சரிதா, கஜோல் போன்ற கருப்பு நடிகைகள் இன்னும் நிறைய பேர் இருந்தால் இந்த color complex குறையும் என்று. நல்ல கருத்து தான். ஆனால் மீண்டும் சினிமா என்றொரு மீடியம் தான் பெண்களின் சிந்தனையை கையாள்கிறது என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.


ஒரு fairness cream விளம்பரம் (Ponds என்று நினைக்கிறேன்) - ஒரு கல்லூரி மாணவிக்கு ஒரு மாணவன் கைரேகைப் பார்த்து "நீ Accounts பரீட்சையில் கோட்டை விட்டுவிடுவாய்" என்கிறான். "No tension" என்கிறாள் அந்தப் பெண். அடுத்து அவன், "உன் சருமத்திற்கு ஏதாவது ஆபத்து வந்துவிடும்" என்கிறான். உடனே அவள் பயந்து போய் "ஐயோ! என் சருமத்திற்கு என்ன ஆகும்?" என்கிறாள். இங்கே ஒரு பெண்ணுக்கு படிப்பை விட அழகுதான் முக்கியம் என்கிற செய்தி வலியுறுத்தப் படுவதை உங்களால் உணர முடிகிறதா? ஹமாம் சோப்பு அல்லாத வேறு சோப்பை உபயோகித்துவிட்டால் தன் பெண்ணுக்குத் திருமணமே நடக்காதே என்று பயப்படும் தாய்.Fairness cream உபயோகித்து விமானப் பணிப் பெண்ணாகவெண்டும் என்ற தன் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் பெண் - இப்படி எதற்கெடுத்தாலும் அழகு...அழகு...அழகுதானா? ஒரு பெண்ணிடமிருந்து எதிர்ப்பார்க்க வேறு எதுவுமே இல்லையா?

ஒரு பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மீடியா ஏற்படுத்தியிருக்கும் ஒரு நிலையான உருப் படிவத்தினுள்ளே(standard model) ஒவ்வொரு பெண்ணும் தன்னைப் பொருத்திக் கொள்ள முயற்சி செய்கிறாள். அதன் விளைவாக தனக்கு இல்லாத அழகை செயற்கை முறையில் வரவழைத்துக் கொள்ள முனைகிறாள். மார்பகங்கள், உதடு, மூக்கு, கண்கள் எல்லாவற்றையும் நவீன மருத்துவத்தின் மூலம் மாற்றி அமைத்துக் கொள்கிறாள். முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென் தனது மார்பகங்களை மாற்றியமைத்துக் கொண்டவர் என்று ஒரு செய்தியில் படித்தேன். அதற்குப் பிறகு உலக அழகிகளின் மேல் எனக்கு நம்பிக்கையில்லாமல் போய்விட்டது.
பெண்களை கவர்ச்சிப் பொருட்களாகக் காட்டி வேறு வகையாக இழிவுப் படுத்தும் விளம்பரங்களும் இருக்கின்றன.

Mint-O-Fresh விளம்பரம் - சிரிப்பே அரியாத ஒரு வயதான சிடுமூஞ்சிக்கு வாழ்க்கைப் பட்டு வாழ்க்கையை வெறுத்துப் போய் இருக்கிறாள் ஒரு அழகான இளம் பெண். Minto-O-Fresh ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு அந்தப் பக்கம் வரும் ஒரு இளைஞ்சனைப் பார்த்து அவனுடன் ஓடிப் போய்விடுகிறாள். கேவலம் ஒரு Minto-O-Fresh க்காக ஒருவனுடன் ஓடிப் போகும் அளவு பெண்கள் தரம் தாழ்ந்து போய்விட்டார்களா?
ஷேவிங் க்ரீம் விளம்பரம் - ஒரு அழகான இளம் பெண் ஒரு அழகான இளைஞ்சனுடன் நடனம் ஆடிக்கொண்டிருக்கிறாள். அவனுடைய தாடை சரியாக ஷேவ் செய்யப் படாமல் சொர சொரப்பாக இருப்பதை கவனித்தவுடன் அவள் முகம் வாடுகிறது. அந்த சமயத்தில் சுத்தமாக ஷேவ் செய்யப்பட்டு மழ மழப்பான தாடையுடன் ஒரு இளைஞ்சன் அந்த அறையில் நுழைகிறான். அந்த இளம் பெண் உடனே சொர சொர இளைஞ்சனைப் புறக்கனித்துவிட்டு மழ மழ இளைஞ்சனுடன் நடனமாடப் போய்விடுகிறாள்! கெவலம் ஒரு ஷேவிங் க்ரீமுக்காக???


இப்படியே பெண்களைத் தேவதைகளாகவும், கவர்ச்சிப் பொருளாகவும் காட்டுவதன் விளைவு பெண்களை மட்டுமன்றி ஆண்களையும் பாதிக்கிறது. ஒரு பெண் தினம் தினம் தொலைக் காட்சியில் தோன்றும் அழகான மாடல்களைப் பார்க்கும் போது அவளுக்குத் தனது தோற்றத்தின் மீதும் தனது கவர்ச்சியின் மீதும் அதிருப்தி ஏற்படுகிறது. ஆண்களும் இந்த விளமபரங்களின் சக்திக்கு அடிமையாகி ஐந்தரை அடி உயரமும் ஒல்லியான தேகமும் கொண்டப் பெண்களையே அவர்கள் மனம் நாடுகிறது. இந்த நாட்டம், எதிர்ப்பார்ப்புகள் எல்லாமே யதார்த்தமற்ற, பெரும்பாலும் நிறைவேறாத ஆசைகளாகவே போய்விடுகின்றன. வாழ்க்கையில் பாதிப் பிரச்சினை ஆசைகள் நிறைவேறாமல் போவதால் தானே ஏற்படுகின்றது?

சரி. இப்போது சற்று கீழே இறங்கி வந்து உஜாலா, ஹார்லிக்ஸ், சக்தி மசாலா போன்ற விளம்பரங்களை அலசுவோம். இதில் வரும் பெண்கள் சற்றுக் குடும்பப் பாங்கான பெண்கள். புடவை அல்லது சுரிதார் அணிந்திருப்பார்கள். ஆனால் இங்கேயும் யதார்த்தம் விலகியே இருக்கிறது. இந்த விளம்பரங்களில் வரும் பெண்கள் பாத் ரூமை சுத்தம் செய்து கொண்டிருந்தாலும் சரி, சமைத்துக் கொண்டிருந்தாலும் சரி, துணி துவைத்துக்கொண்டிருந்தாலும் சரி, முழுமையாக மேக் அப் அனிந்து, கசங்காத உடைகளில் பளிச்சென்றே காணப்படுகிறார்கள். மறுபடியும் விளம்பரங்கள் அழகையும் கவர்ச்சியையும் உயரமாக, ஒல்லியாக, அப்பழுக்கற்ற வெள்ளைத் தோலுடன் தான் தொடர்புப் படுத்துகிறது.

Misrepresentation of women in advertisements என்பதற்கு என்ன தீர்வு? அமெரிக்காவில் Jean Kilbourne என்று ஒரு பெண் media activist இருக்கிறார். விளம்பரங்களில் பெண்களின் நிலைப் பற்றிய தேர்ந்த ஆராய்ச்சியாளர். பெண்களுக்கென்று ஒரு தனித்தன்மை - ஒரு யதார்த்தமான பர்சனாலிடி இருக்கிறது. ஆனால் விளம்பரங்கள் இந்த பர்சனாலிடியை மாற்றி அமைத்து அவர்களுடைய தன்னம்பிக்கையை குறைக்கும் தன்மை வாய்ந்தது. எனவே விளம்பரங்கள் பெண்களுக்கு ஆரோக்கியமானவை அல்ல என்று இவர் சொல்கிறார். பெரும்பாலும் உயர் நிலைப் பள்ளிப் பருவப் பெண்களே விளம்பரங்களினால் பெரிதும் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை தன் ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்த இவருடைய தலையாய வேலையே, ஒவ்வொரு உயர் நிலைப் பள்ளிக் கூடங்களுக்கும் சென்று தான் தயாரித்த வீடியோக்களையும், ஸ்லைடுகளையும் மாணவிகளுக்குக் காண்பித்து விளமபரங்களின் வீரியத்தை அவர்களுடைய வாழ்க்கை பாதிக்காத வகையில் சரியான முறையில் உள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பதே. தமிழ் நாட்டில் media activists என்று யாராவது இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதைப் போலவே தமிழ் நாட்டிலும் இளம் பெண்களுக்கு விளம்பரங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த சில முயற்சிகள் செய்தால் பல பெண்கள் இதனால் பயன் பெருவார்கள் என்று நம்புகிறேன்.

பெண்களைக் குறி வைத்து வியாபாரம் செய்து பணத்தைக் குவிக்கும் விளம்பரதாரர்கள் அதற்காக பெண்களுக்கு என்ன நன்றிக் கடன் சேய்யப் போகிறார்கள்? குறைந்த பட்சம் அழகுக்கு தவறான அர்த்தம் கற்பிக்காமல் இருக்கலாம் இல்லையா?

6 comments:

மு.மயூரன் said...

விளம்பரங்களின் அதிதீவிர வருகைகளுக்கு மாற்றாக, இந்த கருத்தினை அடிக்கடி மீண்டும் மீண்டும் வலியுறுத்தவேண்டிய பணி, முற்போக்காளர்களுக்குண்டு.

அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை.

இத்தகைய விளம்பரங்களும், பெண்ணை அழகுப்பொம்மையாய், போகப்பொருளாய், உடலாய் காட்டும் கருத்துருவாக்கங்களும் சமூக மனநிலையை வெகுவாக பாதிக்கின்றன.

இக்கருத்துருவாக்கங்கள் ஆண்களின் உளவியலில் ந்னவிதமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது, அவர்களுக்கு எவ்வாறான தாழ்வு சிக்கல்களைகளை உருவாக்குகிறது, அவர்களது பெண்கள் பற்றிய பார்வையில் எவ்வாறெல்லாம்ம் தாக்கம்செலுத்தி அவர்களை குற்றவாளிகளாக்குகிறது என்பது ஆராயப்படவேண்டியதுதான்.

பெண்களை சீண்டு, அவர்களோடு சேட்டைவிடும், பாலியல் தாக்குதல்களை மேற்கொள்ளும் ஆண்களை, அக்குற்றங்களை புரியத்தூண்டுவது இவ்வாறான புறநிலை காரணிகள் தானே?

அம்புகளுக்கு மட்டும் சட்டரீதியான தண்டனைகளை கொடுக்காமல் அதனை எய்த இவ்வாறான விளம்பரதாரர்களையும் தண்டித்தாகவேண்டும். விளம்பரதாரர்கள் நாட்டை கட்டியெழுப்பும் முலதனவாளர்கள் அல்லவா? அவர்களை சட்டம் தண்டிக்கப்போவதில்லை..

ஒரு பொடிச்சி said...

இந்தக் கட்டுரையில் உங்களுடைய தேடலும் உழைப்பும் தெரிகிறது. ரொம்ப நன்றி !

நீங்கள் கஜோலைப் பற்றி எழுதும்போதுதான் நந்திதா தாஸ் ஒருமுறை ஒரு பேட்டியில் சொன்னது ஞாபகம் வந்தது. '..அபூர்வமாய், கஜோல் போன்ற பெண்கள் வரும்போது அவர்களை 'whitewash' பண்ணிவிடுகிறார்கள்.'' என்று. அது உண்மைதானே? அப்புறம் கஜோல்தான் கறுப்பின் கடைசி வரையறை என்றால் 'கறுப்பு' ஏது?!
அம்பை சொல்லுவா இந்த fair concept வந்து ஒரு Brahmin view என்று.

Anonymous said...

Hi,

This is an excellent article. The basic thing is, every girl should understand herself that inner beauty is the main thing that matters. External beauty comes and goes.

Anonymous said...

this is not a inner and outer beuty. it's about the Advertisers, who made females body as a investment.

Anonymous said...

Yes, this issue has to be discussed further. I do not know whether we will have the solutions and results any time soon. However, it would be worth discussing so that we may get some realizable solutions.
A month ago, I believe, I came across a talk in the news about an Ad acted by Paris Hilton. In the news they mentioned that she had gone little too far in the Ad. I think she is rich enough. Then, why did she act that way in that Ad? Why do the women do things to themselves?
Any constructive thoughts?

ஜெஸிலா said...

நீங்கள் சுட்டிக் கொடுத்த பின்பே இதை வாசித்தேன். மிகவும் தெளிவான கட்டுரை. என் உள்ளக்கிடங்கின் பிரதிபலிப்பு. நிறைய எழுதுங்கள்.