அரவாணிகளை நான் பெரும்பாலும் சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறேன். ஒரு தலை ராகம் படத்தில் 'கூடையில கருவாடு' பாடலுக்கு கும்பலாக வருவார்களே அந்த அரவாணிகள், 'அப்பு' வில் அரவாணியாக நடித்த பிரகாஷ் ராஜ், சில பெயர் நினைவில்லாத படங்களில் வக்கிரமாகத் தோன்றிய அலிகள் - அரவாணிகள் என்றாலே, எனக்கு இந்தக் காட்சிப் பதிவுகள் தான் கண் முன் தோன்றும். தமிழ் நாட்டில் இருந்த போது நேரிலும் அவர்களை நான் பார்த்திருக்கலாம், ஆனால் அவர்களை எத்தனை எளிதாகக் கடந்து சென்றிருக்கிறேன்? அவர்கள் ஏன் என்னை பாதிக்கவேயில்லை? அவர்களின் உலகம் எப்படி இருக்கும், என்னென்ன பிரச்சினைகளை அவர்கள் தினம் எதிர்கொள்கிறார்கள் என்றெல்லாம் ஏன் அப்போது நான் சிந்திக்கவேயில்லை? நம்ம ஊர் சினிமாவும் சமூகமும் அவர்களைப் பற்றி எனக்குள் ஒரு சிறு ஏளனத்தை ஏற்படுத்தியிருந்தது. என் அறியாமைக்கு மன்னியுங்கள், ஆனால் அதுதான் உண்மை. அந்த ஏளனத்தைக் கரிசனமாக புரட்டிப் போட்டது ஒரு சந்திப்பு.
கடந்த வருடம் பால்டிமோரில் FeTNA(வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை) 2004 விழாவை வாசிங்டன் பகுதித் தமிழ்ச் சங்கம் நடத்தியது. பல மாதங்கள் முன்பிருந்தே நடந்துகொண்டிருந்த விழா ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் நர்த்தகி நடராஜன் என்கிற சென்னையைச் சேர்ந்த பரத
நாட்டியக் கலைஞரின் வருகை பெரிதாகப் பேசப்பட்டது. அழிந்து போய்க் கொண்டிருக்கும் நாட்டுப் புறக் கலைகளைத் தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கும் நலிவுற்ற கலைஞர்களைத் தேடிக் கண்டுபிடித்து வரவழைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்த FeTNA, பரத நாட்டியக் கலைஞர் ஒருவரை தமிழ் நாட்டில் இருந்து வரவழைப்பது பலருக்கு சற்று வியப்பாக இருந்தது. பிறகு தான் தெரிந்தது நர்த்தகி நடராஜன் ஒரு அரவாணி என்பது. ஒரு அரவாணி, அதுவும் பரத நாட்டிய கலைஞசர் வருகிறார் என்றதும், எல்லாரையும் போலவே எனக்கும் அவரைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இப்படிப்பட்ட கலைஞர்களைத் தேடிக் கண்டுபிடித்து வரவழைக்கும் வேலையை அமைதியாக செய்து கொண்டிருப்பவர் சாக்ரடீஸ் என்கிற தமிழ் உணர்வாளர். கனெக்டிகட்டில் வசிக்கிறார். இவரைப் பற்றி ஒரு தனி வலைப் பதிவை பிறகு எழுதுகிறேன்.
விழாவிற்கு முதல் நாள் மாலை அரங்கத்தில் நாங்களெல்லாம் வேலை செய்துகொண்டிருந்தோம். அப்போது நர்த்தகி நடராஜனின் குழு ஒரு அறையில் நடன ஒத்திகை செய்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு குடிக்க காபி கொண்டு போய் கொடுக்கும் சாக்கில் அந்த ஒத்திகை அறையில் நானும், என் நண்பியும் நுழைந்தோம். ஒத்திகைக்குத் தயாராகிக் கொண்டிருந்த நர்த்தகி எங்களுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். புன்முறுவலுடன் வணக்கம் சொன்ன நர்த்தகியை வியப்புடன் பார்த்தேன். சற்றே ஆண்மையின் சாயல் படர்ந்த முகம். சற்றே ஆண்மை கலந்த குரல். "நீங்கள் இருந்து ஒத்திகையைப் பார்த்து எப்படி இருக்கிறது என்று சொல்லிவிட்டு தான் போகனும்" என்று அன்புக் கட்டளையிட்டார். நாங்களும் முன் வரிசை இருக்கைகளில் அமர்ந்தோம். என்ன பாடலுக்கு ஆடினார் என்று மறந்துவிட்டது. ஒரு தாசிப் பெண் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை அழைத்து வந்து உறங்க வைப்பது தான் நடனத்தின் கரு. நட்டுவாங்கம் செய்த நர்த்தகியின் தோழி சக்தியும் ஒரு அரவாணி. பாரம்பரியம் மிக்க தஞ்சாவூர் பானியில் அமைந்த நடனம். அவர் ஆட ஆட அங்கே நர்த்தகி ஒரு அரவாணி என்கிற பிம்பம் மறைந்தது. ஒரு சிறந்த நாட்டியக் கலைஞர் தான் என் கண்களுக்குத் தெரிந்தார். அடுத்த நாள் விழா அன்று 'தமிழர் திருநாளாம்' என்ற பாடலுக்கு கம்பீரமாக ஆடினார். அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்தது. நர்த்தகியை இரண்டு நாட்களாக கவனித்து வந்தேன். நிமிர்ந்த நடை. எந்த வித தயக்கமும் தாழ்வு
மனப்பான்மையும் இல்லாமல் சர்வ சாதாரணமாகவே எல்லாருடனும் பழகினார். அவரைத் துளைத்த பார்வைகளனைத்தையும் சட்டை செய்யாமல் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
விழா முடிந்த மறு நாள் காலை வந்திருந்த எல்லா கலைஞர்களுடனும் ஒரு சிறிய கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் நர்த்தகியை பேச அழைத்தார்கள். தன்னை மதித்து விழாவுக்கு அழைத்ததற்கு மனதார நன்றி சொன்ன நர்த்தகி, தனது வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றிப் பேசினார். சற்றும் உணர்ச்சி வசப்படாமல் தெளிவான அழகான தமிழில் பேசினார். சிறு வயதில் தன் உடலில் வினோத மாற்றங்கள் உண்டாகத் தொடங்கியபோது தனக்கு எதுவும் புரியவில்லை என்றும், அவரை வெளியில் விட்டால் குடும்ப மானம் போய்விடுமே என்று அவரது அண்ணன் அவரை ஒரு அறையில் அடைத்து அடித்துச் சித்திரவதை செய்ததாகவும், தன்னைப் பெற்ற தாயாரே தன்னை வெறுத்து உதறித் தள்ளியதாகவும் சொன்னார். ஒரு தாயின் அரவணைப்பும், தாய்ப்பாசமும் எப்படி இருக்கும் என்றே தனக்குத் தெரியாது என்று அவர் சொன்னபோது. எனக்கு நெஞ்சில் ஏதோ அடைத்தது. உங்கள் அனுதாபம் எங்களுக்குத் தேவையில்லை, நீங்கள் எங்களைப் புரிந்து கொண்டு சக மனிதராகப் பழகினாலே போதும் என்றார். சுற்றியிருந்தவர்களின் கண்களில் கண்ணீர். தொடர்ந்து அவர், தனது பக்கத்து வீட்டுத் தோழியான சக்தியின் ஆதரவுடன், தனது ஊரில் இருந்த ஒரு கோவிலில் ரகசியமாக நடனமாடக் கற்றுக்கொள்ளத் தொடங்கியதாகவும், பின்னர் வீட்டை விட்டு வெளியேறி தஞ்சாவூர் கிட்டப்பா பிள்ளையிடம்
சீடராகச் சேர்ந்ததாகவும், அதன் பிறகே தன் வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்பம் ஏற்பட்டு முன்னேறி வந்ததாகவும் சொன்னார். அவர் பேசப் பேச என் மனதில் முன்பிருந்த பொய்யான, தவறான அபிப்பிராயங்கள் எல்லாம் சட சடவென்று உடைந்து நொருங்கின. சட சட சத்தம் வெளியே கேட்கவில்லையே தவிர, அங்கே இருந்தவர்களின் மனதிற்குள்ளும் அபிப்பிராயங்கள் உடைந்து நொருங்கியதை என்னால் உணர முடிந்தது.
என் அறிவில் சினிமா உண்டாக்கிய இருட்டை நினைத்து வெட்கப்பட்டேன். நர்த்தகியின் சந்திப்பினால் இந்த இருட்டில் வெளிச்சம் விழுந்தது. ஆனால் நான் சந்தித்தது வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒரு அரவாணியைத்தான். நர்த்தகியிடம் ஒரு கலை இருந்தததால் அவர் தப்பித்துக் கொண்டார். ஆனால் மற்ற அரவாணிகளின் நிலைமை என்ன? பள்ளிகளிலும், வேலை வாய்ப்புகளிலும் அவர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள். பெரும்பான்மையான அரவாணிகள் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டு அரவாணிகள் சங்கத்தில் சேர்கிறார்கள். பலர் வேறு வழியின்றி பாலியல் சேவைகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு ஓட்டுரிமைக் கூட நான்கு வருடங்களுக்கு முன் தான் கிடைத்தது என்று அறிந்தேன். அரவாணிகளுக்கு பெரும்பாலும் தலித்துகள் தங்க இடம் கொடுத்து ஆதரவு காட்டுகிறார்கள் என்றும் கேள்விப்பட்டேன். இவர்களுக்கு என்ன விமோசனம்? தலித்துகளுக்கும், பிற்படுத்தப்பட்டொருக்கும் சில சலுகைகளை அரசாங்கம் கொடுத்திருக்கிறது. அரவாணிகளுக்கு அது போல் சலுகைகள் இருக்கிறதா? இவர்களின் நலனுக்காக ஏதாவது திட்டங்கள் இருக்கிறதா? உடல் ஊனமுற்ற குழந்தைகளையும், மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் கூட எப்படியாவது போராடி வளர்த்துவரும் பெற்றோர்கள் ஏன் தங்கள் குழந்தைகள் அரவாணிகளானால் மட்டும் புறக்கணிக்கிறார்கள்? அரவாணிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்? இப்படி பல கேள்விகள் மனதில் எழுகிறது. இனிமேல் அவர்களைப் பற்றி நான் நிறைய சிந்திப்பேன்.
13 comments:
Nice post. Thanks!
தமிழ்சினிமாவால் நகைச்சுவைக்காக பயன்படுத்தப்படுகிற இன்னொரு சிறுபான்மை குழு.
மிகவும் உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள். நன்றாக வந்திருக்கிறது.
Excellent Thara!
You have written this so nicely
that it would become today's the-blog-of-the-day.
Valavan
சமூக அக்கறையுடன் எழுதப்பட்டிருக்கும் சிறந்த பதிவு.
- சத்யராஜ்குமார்
சமுத்திரம் எழுதி விகடனில் வாரா வாரம் வெளி வந்த "ஜாதி மல்லி" என்னும் கதையைப் படியுங்கள். அரவாணிகளைப் பற்றிய மிக அற்புதமானப் புத்தகம். அதை படித்ததும்தான் அவர்களைப் பற்றியத் தவறான எண்ணம் என் உள்ளத்திலிருந்து அகன்றது.
Dear Jsri,
Please see:
The Eunuch Archive
The Eunuch Archive is a friendly support site for the Eunuch Community. This site
contains content that might be considered offensive. ... Enter The Eunuch Archive.
www.eunuch.org/ - 4k - Cached - Similar pages
அன்புடன்,
டோண்டு ராகவன்
Nice Post.
I am from Chidamabram too (Well...Kattumannarkoil actually) and I live in Pittsburgh.
Sorry for posting anonymously as I don't have a blogger account.
- M Kannan
murugs@gmail.com
Jsri, "ஒளஒளங்காட்டிக்கு" என்றால் என்னங்க???
நல்லா எழுதியிருக்கீங்க!!!
//ஒரு தாயின் அரவணைப்பும், தாய்ப்பாசமும் எப்படி இருக்கும் என்றே தனக்குத் தெரியாது என்று அவர் சொன்னபோது...
படிக்கும் பொழுது கண்ணீரி வரப் பார்த்தது!.
அற்புதமான , ஆக்கபூர்வமான பதிவு இது!
நிஜமாவே தெரியாதுங்க. மிக்க நன்றி.
Tara,
Hats off! Nice article. As someone who interacted with Nartaki during her visit to DC, I am very glad you wrote about her. It's a shame that very few people write about this issue sensitively. Keep up the good work!
Anbudan,
Kumaran
நன்றி சிறகுகள் முடிந்தால் எனது வலைப்பூவைப் பார்க்கவும்..
http://livingsmile.blogspot.com
நல்ல தகவல்களை ஏந்தி வருகிறது உங்கள் வலைப்பூ!
உஙகள் வலைப்பூ மனம் வீச வாழ்த்துக்கள்.
அன்புடன் ஜோதிபாரதி
Post a Comment