சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வெளிநாட்டு உதவியை இந்தியா மறுத்துவிட்டது சரியான முடிவா என்று யோசனையாக இருந்தது. ஆனால் பிரதமர் மன் மோகன் சிங் பழுத்த அனுபவசாலி, படித்தவர். அவர் தவறாக முடிவெடுக்க மாட்டார்தான். உதவிகள் கொடுக்கப்படுவதால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை...தேவைப்படுவதால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதை அவர் புரிந்துகொண்டிருக்கிறார். மேலும் அவர் வெளிநாட்டு உதவிகளை மறுத்ததற்கான
காரணங்கள் வலுவானதாக உள்ளன. அதாவது, குஜராத் நில நடுக்கத்தின் போதும் ஒரிசா சூறாவளியின் போதும் வந்த வெளி நாட்டு உதவிகள் இந்தியாவுக்கு கசப்பான அனுபவமாக அமைந்துவிட்டன. உதவ வந்த வெளிநாட்டவர்கள், நிவாரணப் பணி செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், ஐம்பது வருடங்களாகியும்
இந்தியா பின் தங்கிய நிலையில் இருக்கிறதென்று தங்கள் பத்திரிக்கைகளில் எழுதத் தொடங்கி விட்டார்கள். மிகப் பெரிய இயற்கை சீற்றத்தால் ஒரு நாடு மோசமான முறையில் பாதிக்கப்படுவது ஒரு கொடூரமான அனுபவம், அந்த நிலைமையிலும் அந்த நாட்டின் இயலாமையையும், பற்றாக்குறையையும் சுட்டிக் காட்டி விமர்சிப்பது இன்னும் கொடுமை.
பல தன்னார்வ அமைப்புகள் நிதியாகவும், உடல் உழைப்பாகவும் தற்போது உதவிகளை அயராமல் வழங்கி வருகின்றன. இந்த அமைப்புகளை இந்திய அரசும் தமிழக அரசும் அடையாளம் கண்டு தொடர்ந்து ஊக்குவித்தாலே போதும். கூடிய சீக்கிரம் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள் நிவாரணம் காணும் என்று நினைக்கிறேன். ஆனால் மனதிற்குள் ஒரு சின்ன ஆதங்கம். இவ்வளவு தான் நமக்குத் தேவைப்படும் என்று சொல்லும் நிலைமையிலா நாம் இருக்கிறோம்? ஒவ்வொரு டாலரும் எத்தனையோ பேரின் வாழ்க்கையை சீர்படுத்த பயன்படுமே? இப்போதைக்கு அளவுக்கு மேல் உதவிகள் வந்து குவிந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான எதிர்காலத் திட்டங்களுக்காக நிறைய உதவிகள் தேவைப்படுமே என்றும் நினைக்கத் தோன்றுகிறது. இந்தியாவின் வெளிநாட்டு உதவி மறுப்பு பற்றி மற்றவர்களின் அபிப்ராயத்தை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.
1 comment:
இந்தியா கையேந்தும் நிலையில் இனிமேலும் இல்லை என்று இந்த செய்கை உணர்த்துமானால் அது போதும். அடுத்தவரிடம் எதையாவது எதிர்பார்க்கும் இந்திய மனோபாவம் குறைகிறதென்றால் மகிழ்ச்சியே. சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூட அரசை எதிர்பார்க்காமல் தன்னார்வலர்களே உதவிப் பணிகளை முன்னின்று நடத்துகிறார்கள். (இன்னமும் எல்லாவற்றிற்கும் அரசை எதிர்பார்க்கும் சிலரும் இருக்கத் தான் செய்கிறர்கள்)
வெளிநாட்டு டாலர்களும் அரசியல்வாதியின் சட்டைப் பைக்கு தான் போகுமென்றால், பின்னர் எதற்கு அந்த உதவி?
Post a Comment