கடந்த சனிக்கிழமை எங்க ஊர் தமிழ்ச் சங்கத்தில் தேர்தல் நடந்தது. என் கணவர் துணைத் தலைவராக போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
ஏகப்பட்ட வாழ்த்துக்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. நண்பர்கள் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி வெற்றியைக் கொண்டாடிவிட்டு நேற்று தான் வீடு திரும்பினோம். ஒரு காபி போடலாம் என்று சமையலறைக்குச் சென்று விளக்கைப் போட்டேன். அந்த ட்யூப் லைட், டிஸ்கோ லைட் போல் அனைந்து அனைந்து எறிந்து கொண்டிருந்தது. ஹம்ம்...மூன்று மாதங்களாக என் கணவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அந்த விளக்கை சரி செய்து கொடுக்கச் சொல்லி. ஹோம் டிப்போ(Home Depot) சென்று விளக்கை வாங்கி வந்து மாட்ட வேண்டும், அவ்வளவு தான். ஒவ்வொரு வார இறுதியிலும், நான் அவருக்கு ஞாபகப்படுத்தும் போதெல்லாம், "அதைவிட வேறு என்ன வேலை எனக்கு? உடனடியாக செய்துவிடுகிறேன்" என்பார். அப்பறம் தொலைபேசி, இன்டர்னெட்,
நண்பர்கள் என்று அந்த வார இறுதியும் சென்றுவிடும். சரி, அவரிடம் மீண்டும் ஞாபகப் படுத்தலாம் என்று முன்னறைக்கு வந்த போது, அவர் தொலைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.
"வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி"
"..."
"ஆமாம் கொஞ்சம் சிரமமான தேர்தல் தான், ஆனால் மக்கள் நம்ம பக்கம் தான் இருந்தார்கள்"
"..."
"அதைவிட வேறு என்ன வேலை எனக்கு? உடனடியாக செய்துவிடுகிறேன்"
மறு முனையில் இருப்பவர் யாரென்று என்னால் யூகிக்க முடியவில்லை, ஆனால், அவர் காதில் பூ இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று ரொம்ப ஆவலாக இருந்தது.