Tuesday, December 14, 2004

நான் இன்று என் இனத்திற்கு என்ன செய்தேன்?

தெரிந்தவர் ஒருவரின் மின் அஞ்சல்களின் கீழ்ப் பகுதியில், "நான் இன்று என் இனத்திற்கு என்ன செய்தேன்?" என்ற வாசகம் இருக்கும். இந்தக் கேள்வியை முதல் முதலில் பார்த்தவுடனேயே, அது என் மனதில் ஒட்டிக்கொண்டுவிட்டது. இங்கே "இனம்" என்பதற்கு பல எல்லைகள் இருக்கிறது. அது உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களாக இருக்கலாம், மனித இனமாக இருக்கலாம், அல்லது அவர் அவர்களின் தேசத்தைச் சேர்ந்த மக்களினமாக இருக்கலாம். என்னுடையை எல்லை "தமிழ் இனம்". ஆனால் இந்த எல்லை மிகவும் flexible. தேவையானபோது பெரிதாக்கிக் கொள்வேன், தேவையான போது குறுக்கிக் கொள்வேன்.
இப்போது, தினம் இரவு படுக்கையில் விழுந்து கண்களை மூடியவுடன், "நான் இன்று என் இனத்திற்கு என்ன செய்தேன்?" என்ற கேள்வி சிந்தனையில் எட்டிப் பார்க்கிறது. நானும் அன்று காலையிலிருந்து நான் செய்ததில், ஏதாவது என் இனத்திற்கு செய்தமாதிரி இருக்கிறதா என்று யோசித்துப் பார்ப்பேன். ஏதாவது ஒன்று கிடைக்கும். பிறகு நிம்மதியாகத் தூங்குவேன். இந்த "ஏதாவது" என்பதில் நிறைய சில்லரை சமாசாரங்கள்(தமிழ் நண்பர் ஒருவருக்கு சாப்பாடு போடுவது, வலைப்பதிவில் எழுதுவது), தான் பெரும்பாலும் கிடைக்கும். இதெல்லாம் சேவை என்று சொல்லிவிட முடியாது.
எனக்கு வாசிங்டன், டிசியில் மிகச் சிறந்த உதாரணங்கள் இருக்கிறார்கள். பல உயர்ந்த சேவைகளை தங்கள் இனத்திற்காக செய்துகொண்டிருக்கிறார்கள். அடுத்த வருடம் இங்கே திருக்குறள் மாநாடு நடத்தப் போகிறார்கள், தமிழ்நாட்டில் இருக்கும் தாய்த் தமிழ் பள்ளிகளுக்கு உதவி செய்ய அயராமல் உழைக்கிறார்கள், தமிழ் மையம் ஒன்றை அமைப்பதற்காக முயற்சி செய்கிறார்கள், இலங்கைத் தமிழரான மருத்துவர் ஒருவர், இலங்கையில் மருத்துவமனைகள் கட்டுகிறார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் மத்தியில் வாழ்வதைப் பெருமையாக நான் நினைக்கிறேன்.
நெற்று இரவு படுத்தவுடன் அந்தக் கேள்விக்கு மீண்டும் விடை தேடத் தொடங்கியபோது, எதுவும் கிடைக்கவில்லை. நெற்றுக் காலை எழுந்து வேலைக்கு சென்றேன், மாலை வீட்டுக்கு வந்து சமைத்து, நானும் கணவரும் சாப்பிட்ட பின் களைப்பாக இருந்ததால் படுக்கச் சென்று விட்டேன். இதில் தமிழ் இனத்திற்காக என்ன செய்தேன்? வேகு நேரமாக தூக்கம் வராமல் தவித்தேன். பிறகு சடாரென்று ஒரு விடை மூளையில் உதித்தது. நான் வழக்கமாக பார்க்கும் 'மெட்டி ஒலி' தொடரை நேற்றைக்கு களைப்பு மிகுதியால் பார்க்கவில்லை. அந்தப் பாழாய்ப் போன தொடரை பார்க்காமல், நான் எனக்கு ஓய்வு கொடுத்தது எனக்கு நான் செய்துக் கொண்ட சேவை தானே? விடை கிடைத்து விட்ட நிம்மதியில் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிப் போனேன். மனதின் ஒரு மூலையில், இந்த சேவையை தினமும் எனக்கு நான் செய்துக் கொள்ள வெண்டும் என்ற தீர்மானமும் உதித்தது.

2 comments:

Anonymous said...

I wish one day you get 12 hours of uninterrupted sleep.That would really be big 'savai' for your mind, soul and rest of the mankind. Ungal 'mahaththana savai' valara en vazhthugal.

nanri
vasagan

Anonymous said...

Hi Thara| Today only I got chance to read your creations. It's really worth to sit and read. I am a sai devotee lives in Canada who is very interested to read about the social,spiritual and philosophy articles. Keep writing I will appreciate it.

Thanks.Mrs.Thurai(Srilankan Tamil)