Monday, December 10, 2007

Rain Coat - பொய்களால் பின்னப்பட்ட ஒரு காதல் கதை

அஜய் தேவ்கன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்த இந்தத் திரைப்படம் வெகுஜன சினிமா ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருக்கும். சராசரி சினிமாவைத் தாண்டி கதையையும் கருத்தையும் தேடுபவர்கள் இந்தப் படத்தைக் கட்டாயம் பாராட்டுவார்கள். என் மனதைப் பிழிந்த திரைப்படங்களில் இதும் ஒன்று. பல திரைப்படங்கள் மூன்று மணி நேரங்கள் ஓடிய பிறகும் மனதில் பதியாது...ஆனால் இந்தத் திரைப்படத்தின் தொடக்கமே நம்மைக் கட்டிப்போடுகிறது...அந்த அடாது பெய்யும் கல்கத்தாவின் மழை, அஜய் தேவ்கனின் வேதனை தோய்ந்த முகம், அந்த ரயில் பயணம், "மதுரா நகரத்து ராஜாவே, நீ ஏன் கோகுலத்துக்குத்தை விட்டுப் போகிறாய்?" என்கிற பாட்டு...இது எல்லாமே அஜய் தேவ்கனின் அந்தப் பயணத்தின் முடிவைப் பார்த்துவிடவேண்டும் என்கிற ஆவலைத் தூண்டும் விதமாக இருக்கிறது. பொய்களினூடே ஆங்காங்கே பொதிந்திருக்கும் உண்மைகளைப் பொருக்கி எடுத்து நீங்களே கதையப் புரிந்துகொள்ளுங்கள் என்று நமக்கு ஒரு சுவையான சவாலை அளித்திருக்கிறார் இயக்குனர் ரித்துபர்னோ கோஷ்.

ஆறு வருடங்களுக்கு முன் உயிருக்குயிராக நேசித்து, திருமணம் செய்துகொள்ள முடியாமல் பிரிந்த இரு காதலர்கள் ஒரு மாலை நேரத்தில் சந்திக்கிக்கும் போது அவர்களிடையே நடக்கும் உரையாடல் தான் முழு திரைப்படமும்! படத்தில் பெரும்பான்மையான காட்சிகள் ஒரே வீட்டின் முன்னறையில் தான் நடக்கின்றன. இரண்டு பேர் ஒரே அறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதை எப்படி இரண்டு மணி நேரம் பார்ப்பது என்று யோசித்தேன்...ஆனால் அந்த ஒரு அறையில் பேசப்படும் வார்த்தைகளிலிருந்து தான் கதாநாயகன், கதாநாயகி இருவரின் வாழ்க்கை சரித்திரத்தையே நாம் தெரிந்துகொள்கிறோம். உலக அழகி ஐஸ்வர்யாவைத் எப்படித் தேடினாலும் இந்தப் படத்தில் கண்டுபிடிக்கமுடியாது! அவருடைய கவர்ச்சி அத்தனையும் மறைத்து "நீரு" என்கிற கதாப்பாத்திரத்தில் ஒரு புதிய அவதாரமாகத் தெரிகிறார் ஐஸ்வர்யா ராய். தான் வசதியான வாழ்க்கை வாழ்கிறேன் என்று தன் பழைய காதலனை கற்பனைக் கதைகள் சொல்லி நம்பவைக்கும் காட்சிகளில் அவருடைய நடிப்புத் திறமை அபாரம்.

மனோஜ் என்கிற வேலையில்லா இளைஞன்(அஜய் தெவ்கன்), நண்பர்களிடம் பண உதவி நாடி தன் கிராமத்திலிருந்து கல்கத்தா வருகிறான். ஒரு மழைகொட்டும் மதிய வேளையில் தன் நண்பனின் ரெயின் கோட்டை அனிந்துகொண்டு, கல்கத்தாவில் கணவனுடன் வசிக்கும் தன் பழைய காதலி நீரூவைப் (ஐஸ்வர்யா ராய்) பார்க்க அவள் வீட்டிற்குச் செல்கிறான். ஆறு வருடங்களுக்கு முன் அவனை மனதாரக் காதலித்து, பின் பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி, அவனை ஒதுக்கிவிட்டு, வசதியான ஒருவனைத் திருமணம் செய்துகொண்டவள் நீரு என்கிற நீரஜா. பல வருடங்களுக்குப் பின் சந்திக்கும் நீருவும் மனோஜும் மணிக்கனக்காகப் பேசுகிறார்கள். இருவருமே தத்தம் சுய கெளரவத்தை விட்டுக்கொடுக்காமல், தம் வாழ்க்கையின் சோகமான நிஜங்களை மறைத்து எதுவுமே நடவாதது போல தாம் வசதியாக வாழ்கிறோம் என்பதைக் கான்பிக்க ஒருவருக்கொருவர் போட்டிப்போட்டுக்கொண்டு நடிக்கிறார்கள். படத்தின் முடிவில், இருவரின் நடிப்பும் ஒரு திடுக்கிடும் முடிவுக்கு வந்து உண்மை வெளிப்படுகிறது. காலம் மாறினாலும் மாறாத அவர்களின் ஆழ்ந்த அன்பும் அழகாய் வெளிப்படும்.

நீரு, தன் கணவன் பெரிய வேலையில் இருக்கிறான், தினமும் ஜப்பான் ஜெர்மனி என்று ஊர் சுற்றிக்கொண்டே இருப்பான், வீட்டில் இரண்டு வேலைகாரர்கள் இருக்கிறார்கள். எனக்கு எந்த வேலையும் இல்லை. நாள் முழுவதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருக்கிறேன் என்கிறாள். "நீரு நீ ஏன் நம் கிராமத்துப் பக்கம் வருவதேயில்லை? ஒரு முறை வந்துபோயேன்?" என்று கேட்கும் மனோஜிடம், "அய்யோ நான் எப்படி அங்கே வருவேன்? AC இல்லை, சுத்தமான attached பாத்ரூம் இல்லை, TV கூட இல்லை" என்கிறாள். நடுநடுவே மனோஜின் வேலையைப் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும் நீரு கேட்கிறாள். அவனும் தன் பங்கிற்கு, தான் வேலையில்லாமல் சிரமப்படுவதை மறைத்து, தொலைக்காட்சித் தொடர், மற்றும் விளம்பரங்கள் தயாரிக்கும் தொழிலில் இருப்பதாகவும், சொந்த நிறுவனம் வைத்திருப்பதாகவும், வசதியாக இருப்பதாகவும், தன் திருமணத்திற்கும் பெண் பார்த்துவிட்டதாகவும் அவளிடம் சொல்கிறான்.

நீரு மனோஜிற்கு சாப்பாடு வாங்குவதற்காக அவனுடைய ரெயின் கொட்டை அனிந்துகொண்டு வெளியே செல்கிறாள். மழை நிற்கிறது. மனோஜ் நீருவின் வீட்டு ஜன்னல்களைத் திறக்கிறான். இருட்டு வெளியேருகிறது. ஆனால் அதுவரை மறைந்திருந்த உண்மைகள் உள்ளே வருகின்றது! வீட்டின் வெளியே காத்திருக்கும் ஒருவர், "அவசரமாக கழிப்பறையை உபயோகிக்கவேண்டும் எனக்கு. ஒரு நிமிடம் என்னை உள்ளே அனுமதியுங்களேன்" என்று கெஞ்சுகிறார். மனோஜும் அவர் மேல் பரிதாபப்பட்டு வாசல் கதவைத் திறந்து உள்ளே அனுமதிக்கிறான். கழிப்பறையை உபயோகித்தபின் அவர் வெளியே சென்றுவிடுவார் என்று நினைத்த மனோஜ், அவர் நிதானமாக நாற்காலியில் உட்கார்ந்து சிகரெட் பிடிப்பதைப் பார்த்து திகைத்து "உங்கள் வேலை தான் முடிந்து விட்டதே? வெளியே செல்லுங்கள்" என்கிறான். "நான் எதற்கு வெளியே செல்ல வேண்டும்? நான் தான் இந்த வீட்டின் சொந்தக்காரன்" என்கிறார் அவர். மனோஜ் அதிர்ச்சி அடைகிறான். படிப்படியாக பல உண்மைகள் கட்டவிழ்கின்றன. நீருவின் கணவன் ஒரு ஏமாற்றுக்காரன். பல பேரிடம் கடன் வாங்கி திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியிருக்கிறான். அந்த வீட்டுக்காரருக்கு பல மாதங்களாக வாடகையும் தரவில்லை. அவனுக்கு உத்தியோகமும் கிடையாது. கடன்காரர்களுக்குப் பயந்து இரவில் மட்டுமே அவன் வீட்டுக்கு வருகிறான். அதனாலேயே நீரு விட்டுக்கதவையும் ஜன்னலையும் அடைத்துக்கொண்டு வீட்டினுள்ளேயே தன் நாட்களைக் கழிக்கிறாள். அதுவரை அந்த வீட்டின் முன் அறையிலே உட்கார்ந்திருந்த மனோஜ் எழுந்து வீட்டின் உள் அறைகளை திறந்து பார்க்கிறான். பாழடந்த அறைகள், பழைய பொருட்கள்...சுத்தமான attached பாத்ரூம் இல்லாததால் தன் சொந்த ஊருக்கே போகத் தயங்குவதாகச் சொன்ன நீருவின் பாத்ரூம், சிறியதாக, பழுதடைந்ததாக பார்க்கவே சகிக்காமல் இருக்கிறது! நீரு எதுவுமே தன்னிடம் சொல்லவில்லையே என்று கலங்கும் மனோஜிடம், "அவள் எப்படிச் சொல்லுவாள்? சொந்த ஊரில் இருந்து அவளை பார்க்க வந்திருக்கும் உன் முன்னே தன் அவமானமான வாழ்க்கையை எப்படி காட்டிக்கொள்வாள்?" என்று சொல்கிறார் வீட்டுக்காரர். தான் நீருவின் கணவன் மேல் கேஸ் போட்டிருப்பதாகவும், இன்னும் இரண்டு தினங்களில் கோர்ட் வலுக்கட்டாயமாக இந்த வீட்டிலிருந்து அவர்களை வெளியேற்றிவிடும் என்றும் சொல்கிறார் அவர். மனோஜ் சட்டென்று தான் அன்று காலை நண்பர்களிடமிருந்து தான் தொழில் தொடங்குவதற்காக கடன் வாங்கிய பணத்திலிருந்து நான்கு மாதத்திற்கான வாடகைப் பணத்தை வீட்டுக்காரரிடம் கொடுத்து, நான்கு மாதத்திற்கு அவர்களை இந்த வீட்டில் இருந்து வெளியேற்றாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறான். வீட்டுக்காரரும் சம்மதித்து வெளியே செல்கிறார். மனோஜ் நீருவுக்கு ஒரு கடிதம் எழுதி, நான்கு மாத வாடகை கட்டியதற்கான ரசீதையும் சேர்த்து படுக்கைக்குக் கீழே வைக்கிறான்.

கடைக்குச் சென்ற நீரு வீட்டுக்குத் திரும்புகிறாள். மனோஜ் எதுவுமே காட்டிக்கொள்ளாமல் விடைபெறுகிறான். இரவு ஒரு நண்பனின் வீட்டில் தங்கியிருக்கிறான். மனோஜின் ரெயின் கோட்டை வாங்கிக்கொண்டு போகும் நண்பனின் மனைவி, திரும்பவும் வந்து "ரெயின் கோட் பாக்கெட்டில் இந்தப் பொட்டலம் இருந்தது" என்று அவனிடம் அந்தப் பொட்டலத்தை கொடுக்கிறாள். பொட்டலத்தைப் பிரிக்கிறான் மனோஜ். அதில் சில நகைகளும், ஒரு கடிதமும் இருக்கிறது. நீரு எழுதிய அந்தக் கடிதத்தில், "மனோஜ், இன்று நீ மட்டும் இந்த ரெயின் கோட்டை அனிந்து கொண்டு வரவில்லையென்றால், உன் நண்பர்களிடம் கடன் கேட்டு நீ எழுதியிருந்த அந்தக் கடிதத்தை நான் படித்திருக்கமாட்டேன். உன் உண்மையான நிலைமை எனக்குத் தெரிந்திருக்காது. என் கணவர் ஊரில் இருந்திருந்தால், அவரே உன் தொழிலுக்கு வேண்டிய மொத்தப் பணத்தையும் கொடுத்திருப்பார். என்னுடைய பணப்பெட்டியின் சாவியையும் அவர் தவறுதலாக எடுத்துச்சென்றுவிட்டார். அதனால் என்னுடைய நகைகள் சிலவற்றை உனக்குக் கொடுத்திருக்கிறேன். உன் தொழில் தொடங்குவதற்காக அவற்றை உபயோகித்துக்கொள். உன் தொழிலிலாவது உன்னுடைய கூட்டாளியாக நான் இருக்கிறேனே" என்று எழுதியிருக்கிறாள்! திரைப்படம் இத்துடன் முடிகிறது.

7 comments:

பனிமலர் said...

காதல் படுத்தும் பாடும், அதில் நடக்கும் கண்ணாமூச்சும் காதுலுக்கே வெளிச்சம். படத்தையே பார்த்தது போல் இருக்கிறது உங்களது விமர்சனம். செய்திக்கும் நன்றி.

TBCD said...

இது த கிஃப்ட் ஆப் மேகி சாயல் தெரிந்தாலும், கதை படிக்கும் போது நன்றாகவே இருக்கிறது...

http://www.auburn.edu/~vestmon/Gift_of_the_Magi.html

யாத்திரீகன் said...

ஹ்ம்ம்.. சுவாரசியமாய் இருக்கும் போல இருக்கே... தேடி பார்த்திருவோம்.. நன்றி தாரா

& yeah as tbcd said.. read it 9th std.. but i guess this should be having an Indianized touch :-)

Kavitha said...

Nice work Thara...You have very good flow....reader is able to follow your narration...

தாரா said...

பனிமலர், டிபிசிடி, யாத்ரீகன், கவிதா,

வருகைக்கு மிக்க நன்றி.

தாரா.

அறிவன் /#11802717200764379909/ said...

I had also seen this movie recently through vasnatham singapore channel...
I also had apprehensions on my patience on watching the boring dialogue between Neeru & manoj till the house owner comes in..
Actual movie picks up only in last 45 minutes with cliches of Neeru & manoj' love and present reality.
A nice movie.

அய்யனார் said...

நன்றி