Friday, August 05, 2005

அரங்கேற்ற அலம்பல் - 2

சிலப்பதிகாரத்தில் மாதவியின் வரலாற்றுப் புகழ் பெற்ற அரங்கேற்றத்தில் தொடங்கி, இன்று graduation party போல் கொண்டாடப்படும் நவீன அரங்கேற்றங்கள் வரை கொஞ்சம் அலசிப் பார்க்கவேண்டும் என்று ஒரு ஆசை!

சிலப்பதிகாரத்தில் 12 வயது மாதவியின் அரங்கேற்றத்தைப் பற்றி 'அரங்கேறு கதை' என்கிற தனி அத்தியாயத்தில் இளங்கோவடிகள் சொல்லியிருக்கிறார். நான் படித்ததில்லை, கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போதைய மேடை அலங்காரங்கள், உடை அலங்காரங்கள், நாட்டியம் தொடங்கும் முன் செய்யப்படும் சம்பிரதாயங்கள் பற்றியெல்லாம் அந்த அத்தியாயத்தில் விலாவரியாக சொல்லப்பட்டிருக்கிறதாம். அதிலிருந்து புராண காலத்தில் ஒரு புதிதாக பயிற்சி அளிக்கப்பட்ட நாட்டிய கலைஞரை முதன் முதலாக மன்னரின் முன் நாட்டியமாட வைத்து அவரது ஆசியைப் பெறுவது என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக இருந்தது என்பது தெரிய வருகிறது. இப்போது பரத நாட்டியம் என்று அழக்கப்படுகிற இந்த நாட்டியக் கலை அன்று 'தாசி ஆட்டம்' அல்லது 'சதிர்' என்று அழைக்கப்ப்ட்டது. அன்றைய தேவதாசி கலாசாரத்தில், ஒரு புதிய நாட்டியப் பெண்னின் முறையான அறிமுகத்திற்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று, அவளது நாட்டியத் திறமையை மற்றவர்களுக்கு முன் நிரூபிப்பது, இரண்டாவது, நாட்டியத்தையே தொழிலாகக் கொண்டிருக்கும் வம்சம் என்பதால், மன்னர் மட்டும் அன்றி, பிற ஆதரவாளர்களையும் திரட்டும் பொருளாதார ரீதியான முயற்சியாகவும் அரங்கேற்றங்கள் இருந்தன.

பின் வந்த காலங்களில் 'தாசி ஆட்டம்' ஒடுக்கப்பட்டு பரதநாட்டியமாக உருப்பெற்று சமுதாய ரீதியாக பெரும் மாற்றத்தைக் கண்டது. அரங்கேற்றங்கள் கோவில்களில் இருந்து சபாக்களுக்கு இடம் மாறின. தாழ்ந்த சாதியைச் சார்ந்த தேவதாசிகள் மட்டுமே ஆடிக்கொண்டிருந்த நாட்டியத்தை, நடுத்தர வர்க்கத்தினர் - பெரும்பான்மையாக பிராமணர்கள் ஆடத் தொடங்கியிருந்தனர். அவர்கள் நாட்டியத் தொழிலை நம்பி வாழ்க்கை நடத்துபவர்கள் அல்ல என்பதால், நாட்டியக் கலையின் மீதுள்ள பொருளாதார நோக்கம் நீங்கி, கலையார்வத்தின் அடிப்படையில் அரங்கேற்றங்கள் நடைபெற்றன. அரங்கேற்றங்கள் நாட்டியப் பெண், மற்றும் நாட்டிய ஆசிரியரின் தரத்தையும், திறமையயும் அளவிடும் ஒரு சந்தர்ப்பமாக இருந்தன. அரங்கேற்றதிற்கு வரும் பார்வையாளர்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்றவர்களாக இருந்தார்கள். புகழ் பெற்ற நாட்டியக் கலைஞர்கள், நாட்டிய ஆசிரியர்கள், நாட்டிய ரசிகர்கள், விமர்சகர்கள் பார்வையாளர்களாக இருந்ததால், அவர்களுடைய கருத்துக்களும், விமர்சனங்களும் நாட்டியக் கலைஞர்களின் திறமையை சீரமைத்துக்கொள்ள பெரிதும் உதவியாக கருதப்பட்டது. கலையார்வம் மிக்க ஒரு சமூகத்தின் ஒருங்கிணைப்பாக அரங்கேற்றங்கள் இருந்தன.

காலங்கள் மாற மாற, பார்வையாளர்களும் மாறினார்கள். சமீப காலங்களாக அரங்கேற்றங்கள் ஒரு குடும்ப நிகழ்ச்சியாக மாறிவிட்டன. நண்பர்களும், உறவிணர்களும் மட்டுமே பார்வையாளர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் இந்தியக் கலாசாரத்தின் முக்கிய அம்சமாக பரதநாட்டியம் கருதப்படுகிறது. அமெரிக்காவில் இருக்கும் இந்தியப் பெற்றோர்கள், அதிவேகமாக தமது குழந்தைகளை அடித்துக்கொண்டு போகும் மேலை நாட்டுக் கலாசாரத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றும் கருவியாக பரதநாட்டியத்தை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கேநடத்தப்படும் அரங்கேற்றங்களில் 'எல்லாரும் பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் எங்கள் பெண்ணை நமது கலாசாரத்தின்படிதான் வளர்த்திருக்கிறோம்' என்று மற்றவர்களிடம் பறைசாற்றிக்கொள்ளும் தோனியே தெரிகிறது. அரங்கேற்றங்கள் திருமணத்திற்கு இணையான ஆடம்பரத்துடன் நடத்தப்படுகின்றன. பக்கவாத்தியக் கலைஞர்களுக்கு இது ஒரு நல்ல வியாபாரம். சாதாரணமான இசை நிகழ்ச்சிகளை விட அரங்கேற்றங்களுக்கு அதிகமான ஊதியம் அவர்களுக்குக் கிடைக்கிறது. அது மட்டிமில்லாமல் பளபளக்கும் அழைப்பு அட்டைகள், இசைக் கலைஞர்களுக்கும், நாட்டியக் குருவுக்கும் பரிசுகள், வந்திருப்பவர்களுக்கெல்லாம் பரிசுகள் அடங்கிய பை (gift bag or doggy bag), மாலை சிற்றுண்டி, இரவு உணவு - இப்படி செலவுப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நடனங்களுக்கு நடுவே ஆன்மீக சொற்பொழிவு, முக்கிய பிரமுகர்களின் பேச்சு, மனதை உருக்கும் நன்றி உரை எல்லாம் உண்டு! நான் சென்றிருந்த ஒரு அரங்கேற்றத்தில் அரங்கத்தின் வாசலில் ஒரு மிகப் பெரிய ரங்கோலி கோலம் போட்டு அதை ரோஜாப்பூ இதழ்களால் நிரப்பியிருந்தார்கள். மற்றொரு அரங்கேற்றத்தில் நாட்டியப் பெண்ணின் ஆளுயரப் புகைப்படங்கள் வைத்திருந்தார்கள். சுலபமாக ஒரு அரங்கேற்றத்தின் செலவு $20000 இருக்கும்.

இதில் என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம். பணம் இருப்பவர்கள் தாம் நினைத்ததை செய்கிறார்கள். அதைப் பார்த்து புருவம் உயர்த்தமுடியுமே தவிர, அப்படி செய்வது தவறு என்று சொல்ல எனக்கு உரிமையில்லை. என்னுடைய கவலை என்னவென்றால், இத்தனை கலாட்டாவிற்கும் ஆடம்பரத்திற்கும் நடுவில் அந்த நாட்டியத்தின் கலையுணர்வு (artistic value) தொலைந்து போய்விடுகிறது. நாட்டியம் ஆடும் பெண்ணின் முக பாவத்தையும், அவள் பாதங்களின் லாவகத்தையும் கவனிக்காமல், நிகழ்ச்சிக்கு யார் வந்திருக்கிறார்கள், யார் வரவில்லை, ஏன் வரவில்லை, 5 வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் சித்தி பெண், சென்ற வருடம் மாமா இறந்தபோது நேரில் சென்று விசாரிக்க முடியாத துக்கத்தை அத்தையிடம் அன்று விசாரிக்கும் உறவினர்கள். ஒரு நண்பர் சொன்னார், " நான் என் பெண்ணிடம் சொல்லிவிட்டேன், இந்த வருடம் அரங்கேற்றம் வேண்டுமா, கார் வேண்டுமா, graduation party வேண்டுமா என்று நீயே முடிவுசெய்துகொள் என்று" அப்படியென்று. - இப்படியாக தனது வரலாற்று புகழ் மிக்க பாரம்பரியத்தை இழந்து இன்று பரிதாபமான நிலையில் அரங்கேற்றங்கள் இருக்கின்றன.

அடுத்தப்பதிவில் இன்னும் தொடரும்...

4 comments:

-/சுடலை மாடன்/- said...

இதில் ஒரு மொன்னைத்தனமான, மந்தை அல்லடு செக்குமாடு மனநிலையைத் தான் காண்கிறேன். எதற்காகச் செய்கிறோம் என்பதை விட எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் செய்வது.

மேலும் பரதனாட்டியத்தைத் தவிர தமிழர்களிடம் வேறு எந்தவித பாரம்பரிய நுண்கலைகளும் இல்லை என்பது போல இருகிறது. வேறு வகையான நடனங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறை கூடக் கிடையாது. கேட்டால் கற்றுக் கொடுக்க வசதியில்லை என்ற காரணம். ஒரு பரத நாட்டிய அரங்கேற்றத்துக்கு சுமார் 25000 - 35000 டாலர்கள் செலவழிக்கும் அமெரிக்கத் தமிழர் குடும்பங்கள் ஆளுக்கு 1000 டாலர்கள் போட்டால் ஒரு தமிழ் நுண்கலை மையத்தை ஆரம்பிக்கலாம்.

நான் சொல்ல வருவது பரத நாட்டியம் கூடாது என்பதல்ல. கலை என்ற நிலையில் எல்லாமே ஒன்றுதான். பரதனாட்டியம் மட்டும்தான் கலை வடிவம் என்று நினைப்பதும், அதையும் எந்தவித பிடிப்புமில்லாமல் கும்பலோடு கோவிந்தா என்று செய்வதும்தான் வருத்தத்துக்குரியது. ருக்குமணி அருண்டேல், பாலசரஸ்வதி போல மற்ற நாட்டியக் கலைகளுக்கும் மேல்தட்டு வர்க்க அறிமுகம் தேவை என்று நினைக்கிறேன்.

தாரா, அர்த்தமுள்ள கேள்விகள், அமெரிக்கத் தமிழர்கள் வாசிக்க வேண்டிய தேவையான பதிவு,

நன்றி - சொ. சங்கரபாண்டி

Anonymous said...

தாரா, நீங்கள் தவறாக ஏடுத்துக்கொள்ளமாட்டீர்கள் என்று நம்பி ஓரு கேள்வி.

உங்கள் அக்காவிடம் ஏனிந்த வீண் ஆடம்பரம் என்று கேட்டீர்களா ?

ஆனானிமஸ்-ஆக இந்த கேள்வியை கேட்டதற்கு மன்னிக்கவும்.

தாரா said...

அனானிம்ஸ்,

உங்கள் கேள்வியில் தவறாக எடுத்துக்கொளவதற்கு ஒன்றும் இல்லை. என் அக்காவிடம் நான் அப்படிக் கேட்கவில்லை. உங்கள் கேள்விக்கு விடை என் பதிவிலேயே இருக்கிறது. //பணம் இருப்பவர்கள் தாம் நினைத்ததை செய்கிறார்கள். அதைப் பார்த்து புருவம் உயர்த்தமுடியுமே தவிர, அப்படி செய்வது தவறு என்று சொல்ல எனக்கு உரிமையில்லை//

தாரா.

பிரதீப் said...

தாரா,

அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். உங்களுடைய ஈவ் டீசிங் பதிவு என்னை மனமுருகச் செய்தது. பெண்களுக்குத் தான் எத்தனை கஷ்டம். இத்தனை கஷ்டங்களிலும் தைரியமாக எதிர்கொள்ளும் பெண்ணினம் வாழ்க!