
கல்லூரிப் படிபெல்லாம் முடிந்து பச்சை அட்டை கிடைத்து, ஒரு வழியாக அமெரிக்கா வந்து சேர்ந்தபோது(அப்போது எனக்குத் திருமணம் ஆகவில்லை), மேலே படிப்பதா வேலைக்குப் போவதா என்று குழப்பமாக இருந்தது. ஒரு முடிவுக்கு வரும் வரை அக்கா வீட்டில் வெட்டியாக உட்கார்ந்திருக்க வேண்டாமென்று பகுதி நேர வேலைக்கு, McDonalds, Pizza Hut, Walmart, K-mart போன்ற இடங்களில் விண்ணப்பம் செய்தேன். ஒரே வாரத்தில் K-mart இல் வேலை கிடைத்தது. எனக்கு ஒரே சந்தோஷம். எனக்குக் கிடைத்த முதல் வேலை அது! சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு $5.25!!! அக்காவும் மாமாவும் "இந்த வேலை உனக்கு நல்ல அனுபவத்தைத் தரும். அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்கினால் தான் பிற்காலத்தில் எந்தக் கஷ்டத்தையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை கிடைக்கும்" என்றுச் சொல்லி உற்சாகப்படுத்தினார்கள்.
முதல் நாள் சாமி கும்பிட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பினேன். அப்போது என்னிடம் கார் இல்லாததால், அக்கா தான் என்னை K-mart அழைத்துச் சென்றாள். நான் அமெரிக்கா வந்து ஒரு மாதம் தான் ஆகியிருந்ததால், இன்னும் அமெரிக்கர்களின் பேச்சு வழக்கு சரிவர புரியாத நிலையில் தான் அப்போது இருந்தேன். எனக்குப் பயிற்சி அளிக்கும் மானேஜர், ஒரு சிகப்பு நிற மேலங்கியை எனக்குக் கொடுத்து போட்டுக்கொள்ளச் சொன்னார். அந்தச் சட்டையில் இருந்த ஒரு அடையாள அட்டையில் என்னுடைய பெயரும், "Dedicated to Customer Service" என்ற வாக்கியமும் இருந்தது. 'Sporting Goods' என்ற பகுதியில் எனக்கு வேலை என்று சொல்லி அங்கே கூட்டிக் கொண்டு போனார் மானேஜர். "இந்தப் பகுதிக்கு வருபவர்களுக்குத் தேவையான உதவியை நீ செய்ய வேண்டும்" என்றார். அந்தப் பகுதியிலிருக்கும் பொருட்களைப் பார்த்தேன். மீன் பிடிப்பதற்காக உபயோகப் படுத்தும் பொருட்கள், camping பொருட்கள், உடற் பயிற்சி சாதனங்கள் - இவற்றில் பெரும்பான்மையானவற்றை நான் முன்பு பார்த்தது கூட இல்லை! குழம்பிப்போய் நின்ற என்னைப் பார்த்துப் ஆறுதலாகப் புன்னகைத்த மானேஜர், "கவலைப்படாதே, உனக்குப் பயிற்சி அளிப்பது எங்கள் கடமை" என்று சொல்லிவிட்டு, அந்தப் பகுதியிலிருக்கும் பொருட்களின் பட்டியலை என்னிடம் கொடுத்துவிட்டு, ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கம் கொடுத்தார். அதன் பிறகே எனக்கு உயிர் வந்தது. பல அமெரிக்க வழக்கவார்த்தைகள் எனக்கு முதலில் புரியவே இல்லை. உதாரணத்திற்கு ஒரு முறை மானேஜர், "Can you bring a buggy?" என்றார். "buggy" என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அங்கே வேலை செய்யும் ஒருவரிடம் கேட்டபோதுதான் தெரிய வந்தது அது தள்ளு வண்டி(shopping cart) என்று! இப்படி தட்டுத் தடுமாறி வேலைகளையும் பேச்சு வழக்கையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டேன். K-mart மூடும் நேரம் இரவு 10 மணி. 9:45 மணிக்கு கடை மூட இன்னும் 15 நிமிடங்களே இருக்கிறதென்று ஒலிபெருக்கியில் அறிவிக்க வேண்டும். ஒரு முறை என்னை அறிவிக்கச் சொன்னார்கள். நான் ஒலிபெருக்கியிலெல்லாம் பேசியதே இல்லை! எனக்கு பயத்தில் நாக்கு ஒட்டிக்கொண்டது!! அறிவிப்பை ஒரு பேப்பரில் எழுதிவைத்துக்கொண்டு, பல முறை பேசிப்பார்த்துகொண்டு ஒரு வழியாக ஒலிபெருக்கியில் அறிவிப்பைச் செய்தேன்! "Your Attention K-mart shoppers! K-mart will be closed in about 15 minutes. Please bring your final purchases to the cash register. Thankyou for shopping at K-mart" - இதுதான் நான் முதல் முதலில் ஒலிபெருக்கியில் பெசியது. நான் பேசி முடித்த அடுத்த நிமிடம் மானேஜர் அங்கு வந்து என்னைப் பாராட்டி உற்சாகப்படுத்தினார்.
எனக்குப் பிடிக்காத வேலை காஷ் ரெஜிஸ்டர்(Cash Register). நீண்ட வரிசையாக நிற்கும் கஸ்டமர்களைப் பார்த்தாலே எனக்கு பயமாக இருக்கும். எல்லாரும் அவசரத்தில் இருப்பார்கள். அப்போது விலை போடுவதில் ஏதாவது பிழை செய்துவிட்டால் அவ்வளவுதான்...தோலைந்தேன்! பிலு பிலு என்று சண்டைக்கு வந்துவிடுவார்கள். கிருஸ்துமஸ், தாங்ஸ் கிவிங் போன்ற விடுமுறை காலங்களில் அலைமோதும் கூட்டங்களைப் பார்த்தாலே எனக்கு மூச்சு முட்டும். நல்ல வேலையாக என் பயத்தை புரிந்துகொண்ட மானேஜர், பெரும்பாலும் என்னை காஷ் ரெஜிஸ்டருக்கு அழைப்பதில்லை. ஷெல்பில் இருக்கும் பொருட்களை ஒழுங்குப் படுத்துவது, கஸ்டமர்கள் கேட்கும் பொருட்களை எடுத்துக்கொடுப்பது, தொலைபேசியில் அழைத்து விவரம் கேட்பவர்களுக்கு விளக்கம் தருவது போன்ற வேலைகளைச் செய்துகொண்டிருந்தேன். ஒரே ஒரு சிரமம் என்னவென்றால், எப்பொழுதும் நின்று கொண்டே, நடந்து கொண்டே இருக்க வேண்டும்.நடுவில் 10 நிமிடங்கள் இடைவேளை இருக்கும். அப்போதுதான் சிறிது நேரம் உட்காரமுடியும். இரவு 10 மணிக்கு K-mart மூடியவுடன் களைப்பாக வெளியே வரும்போது அக்காவும் அம்மாவும் காரில் காத்துக்கொண்டிருப்பார்கள். நான் பசியுடன் இருப்பேனென்று சாப்பாடும் கொண்டுவந்திருப்பார்கள்! நானாவது பரவாயில்லை பகுதி நேரமாக 5 மணி நேரங்கள் தான் வேலை செய்தேன். சிலர் முழு நேரமாக 10 மணி நேரங்கள் வேலை செய்தார்கள். ஒரு பெண்மனி காலை 5 மணி நேரம் K-mart இல் வேலை செய்துவிட்டு, அடுத்து 5 மணி நேரங்கள் ஒரு உணவகத்தில் வேலை செய்தார். ஏன் இப்படி சிரமப்படுகிறீர்கள் என்று கேட்டபோது, "என்னுடைய குழந்தைகளும் அவர்களுடைய பள்ளித் தோழர்களைப் போல நூறு டாலர் ஷ¥க்கள் அணிய வேண்டும். அதனால்தான் இந்த சிரமமெல்லாம்" என்று சொன்னார். இப்படி நலிவுற்றவர்கள், பொழுது போவதற்காக வேலைக்கு வரும் வசதியானவர்கள், பள்ளி, கல்லூரி விடுமுறைகளின் போது அடுத்த செமெஸ்டருக்கு பணம் சேமிக்கும் இளைஞர்கள் - இப்படி பலதரப்பட்டவர்கள் அங்கே வேலை செய்தார்கள். எந்தவித வேலையையும் தரம் தாழ்த்திப் பார்க்காத அமெரிக்கர்களின் நோக்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நம்ம ஊரில் தான் எத்தனை பாகுபாடு! ஒரு முறை கடையில் ஒரு குழந்தை ஏதோ ஒரு கண்ணாடிப் பொருளை உடைத்துவிட, தரையில் சிதறிக்கிடந்த கண்ணாடித்துண்டுகளைக் நான் கூட்டி அள்ளிக்கொண்டிருந்ததை என் அம்மா பார்த்துவிட்டார். அவ்வளவுதான்! 'நான் என் பொண்ணை எப்படியெல்லாம் வளர்த்தேன், இப்படி தரையைக் கூட்டி அள்ளுவதைப் பார்க்கவா?' என்று புலம்பித் தள்ளிவிட்டார்கள்! மற்றோரு உறவினர், 'இன்ஜினீரிங்கெல்லாம் படிச்சிட்டு இங்க போய் எதுக்கு வெலை செய்யற?' என்று இளக்காரமாகக் கேட்டார். உண்மையிலேயே அங்கே ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து வேலை செய்துகொண்டிருந்தேன் என்பது அவர்களுக்கு புரிய வாய்ப்பிருக்கவில்லை.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் சம்பள நாள்! என்னுடைய முதல் வாரச் சம்பளம் $115.00!!! அந்தக் காசோலையைக் கையில் வாங்கியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! அந்தக் காசொலையின் நகலை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் நான் சம்பாதித்த பணத்தை வங்கியில் போட்டு ஆசை ஆசையாக அடைகாத்து வந்தேன். அப்போது என் பெற்றோர்கள் அமெரிக்காவில் இருந்தார்கள். அவர்களை கடைக்கு அழைத்துச் சென்று வேண்டியப் பொருட்களையெல்லாம் வாங்கிக்கொடுத்தபோது ரொமபப் பெருமையாக இருந்தது. இரண்டு மாதங்கள் K-mart இல் வேலை செய்தேன். பிறகு ஒரு மென்பொருள் கம்பெனியில் வேலைக்கிடைத்ததால் K-mart வேலையை விட்டுவிட்டேன். அந்த மென்பொருள் கம்பெனியின் நேர்முகத்தேர்வின் போது, ஒரு மானேஜர் என்னை "கஸ்டமர் சர்வீசில் உங்களின் அனுபவத்தை எப்படி மதிப்பிடுவீர்கள் 1 to 10 என்ற அளவு கோளில்?" என்று கேட்டார். நான் சற்று யோசித்து "7" என்றேன். "எப்படிப்பட்ட அனுபவம் அது?" என்று மறுபடியும் அவர் கேட்டபோது, "நான் K-mart இல் இரண்டு மாதங்கள் வேலை செய்தேன். பல கஸ்டமர்களுடன் பழகும் வாய்ப்பும் அனுபவமும் கிடைத்தது. கஸ்டமர்களின் எதிர்பார்ப்புகள், நாம் அவர்களிடம் நடந்துகொள்ளும் முறை ஆகியவைகளை நன்றாகக் கற்றுக்கொண்டேன். நான் அணிந்திருந்த மேலங்கியில் உள்ள பாட்ஜில் 'Dedicated to Customer Service' என்று எழுதியிருந்தது. அதற்கு உண்மையாக நடந்துகொண்டேன்" என்று சொல்ல, அந்த மானேஜர் "K-mart இல் வேலை செய்தீர்களா? அப்படியென்றால் பத்துக்கு பத்து மதிப்பெண்களே கொடுக்கலாமே!" என்று சொன்னார். தினமும் கஸ்டமர்களிடம் பேசி அவர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதன்படி மென்பொருள் உருவாக்கும் அந்தக் கம்பெனியில் எனக்கு வேலைக் கிடைத்ததற்கு என்னுடைய K-mart அனுபவம் ஒரு முக்கிய காரணம் என்று நான் வலுவாக நம்புகிறேன். அதன் பிறகு மென்பொருள் பொறியியல் என் career ஆனது.
2001, 2002 ஆண்டுகளில் அமெரிக்கப் பொருளாதாரம் தடாலடியாக கீழிறங்கியபோது, ஆறு மாதங்கள் நானும் என் கணவரும் வேலையில்லாமல் இருந்தோம். முதல் மூன்று மாதங்கள் நம்பிக்கையுடன் வேலைத்தேடினேன். கிடைக்கவேயில்லை. பிறகு சேமிப்பில் இருந்த பணமெல்லாம் வெகு விரைவாகக் கரையத் தொடங்கியதும், மறுபடியும் K-mart, Walmart, McDonalds போன்றவற்றில் விண்ணப்பிக்கலாம் என்றால் ஏனோ அப்போது மனம் கேட்கவில்லை. நம்ம ஊர் ரத்தம் நண்பர்களெல்லாம் இளக்காரமாக நினைப்பார்களோ என்று யோசிக்க வைத்தது. அப்போது என்னுடைய மாமா "உன்னுடைய நண்பர்கள் உன்னைத் தரம் தாழ்த்திப் பார்ப்பார்களென்றால், அவர்கள் உன் நண்பர்களாக இருக்கத் தகுதியில்லாதவர்கள்" என்று சொன்னார். அந்த வார்த்தைகள் என்னை உலுக்கி நிமிர்ந்து உட்காரவைத்தன. இனி எதற்கும் கவலைப்படக்கூடாதென்று விண்ணப்பங்களை தயார் செய்துகொண்டிருக்கையில் மீண்டும் ஒரு மென்பொருள் கம்பெனியிலேயே வேலைக்கிடைத்தது.
என் வாழ்க்கையில் மறக்கமுடியாத அந்த K-mart அலபாமாவில் உள்ளது. சென்ற மாதம் அலபாமா சென்றிருந்தபோது, வலைப்பதிவில் போட புகைப்படம் எடுக்கலாம் என்று K-mart பக்கம் கிளம்பியபோதுதான் அக்கா சொன்னாள், அந்த K-mart மூடப்பட்டு 6 மாதங்கள் ஆகிவிட்டதென்று! வருத்தமாக இருந்தது.