Saturday, January 19, 2013

தமிழகப் பயணம் 2013 - மதுரை


மிக நீண்ட இடைவெளிக்குப் பின் சுறுசுறுப்பாக பதிவு எழுத வந்திருக்கிறேன்.  தற்போது திருச்சியில் இருக்கிறேன்.  இந்தத் தமிழகப் பயணத்தில் எனது அனுபவங்களை உடனுக்குடன் பதிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  ஆனால் முகநூலில் தினம் இரண்டு வரி குறுஞ்செய்தி இடுவதில் அதிக ஆர்வம் இருந்ததால் நீண்ட பதிவுகள் எழுத முடியவில்லை.  என்னை மீண்டும் பதிவு எழுத வைத்தது மதுரை பயணம்!  

திருச்சியில் ஒரு வாரம் எந்த வேலையுமின்றி சும்மா சாப்பிடுவதும் தூங்குவதுமாக பொழுதைக் கழித்துவிட்டு, கணவரின் குடும்பத்துடன் மதுரை சென்றேன்.  கோவிலும், கோவில் சார்ந்த நகரம் என்பதாலும், அது பொங்கல் சமையம் என்பதாலும், மதுரை ஆர்ப்பாட்டமும் கலகலப்புமாக இருந்தது. கோவில் சார்ந்த ஊரான சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு, மதுரை பழைய நினைவுகளை மீட்டுத் தந்தது.  அலங்கநல்லூர் ஜல்லிகட்டு பார்ப்பதற்காகவே நிறைய வெளிநாட்டவர் வந்திருந்தனர்.  மூன்று வயது புகழ்மதியை பயணிக்கும் போது சமாளிக்க பல விதங்களில் திட்டமிட்டு, பல பொருட்களை வாங்கி, பல பைகளில் போட்டு, அவள் எந்த நேரத்தில் எதைக் கேட்பாளோ என்று நான் கவலைப்பட்டுக்கொண்டே மதுரை வீதிகளில் நடந்தபோது, ஒரு வெளிநாட்டுத் தம்பதியைப் பார்த்து அசந்து போனேன்.  அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் - 4 முதல் பத்து வயது வரையில்!  கணவனும் மனைவியும் ஆளுக்கொரு மிகப் பெரிய மூட்டையை முதுகில் சுமந்துகொண்டு நான்கு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு அலட்டிக்கொள்ளாமல் சென்றுகொண்டிருந்தார்கள்.  எனக்கு உண்மையில் மிக வியப்பாக இருந்தது! 

நாங்கள் தங்கியிருந்தது மதுரை ரெசிடென்சி (Madurai Residency) என்கிற விடுதியில்.  மதுரைக்குச் செல்லுபவர்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த விடுதியில் தங்கலாம்.  மிக அற்புதமான விடுதி அது. வரவேற்பு பகுதியில், பொங்கல் முன்னிட்டு பொங்கல் பானைகள், கரும்பு, மாடு பொம்மைகள், மாட்டு வண்டி என்று அலங்காரம் அபாரமாக இருந்தது.  அமெரிக்காவில் ஒரு நல்ல விடுதியில் தங்கினால் ஒரு இரவுக்கு 100 டாலர்கள் வரும். இந்த விடுதி கிட்டத்தட்ட அமெரிக்கத் தரம் என்று சொல்லலாம்.  ஒரு இரவுக்கு 60 டாலர்கள் ஆனது. காலையில் "Complimentary breakfast " இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் கூட்டம் அதிகப்படியாக இருந்ததால், கோவிலுக்குச் சற்று தொலைவிலேயே வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.  கோவிலைச் சுற்றி இருந்த வீதிக்கு வந்தபோது, அங்கே கோலப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது!  வீதியின் இரண்டு பக்கமும் பெண்கள் வண்ணமயமான ரங்கோலி கோலங்களை போட்டுக்கொண்டிருந்தார்கள்.  நீண்ட நேரம் வெயிலில் நிற்க வேண்டியிருந்ததால், சிறு கொடை போன்ற தொப்பியை தலையில் அணிந்திருந்தார்கள்.  கோலங்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கையில், புகழ்மதி திடீரென்று "அம்மா மிக்கி மவுஸ் பாரு" என்று குதூகலத்துடன் கத்தினாள்.  மதுரையில் எங்கே மிக்கி மவுஸ் வந்தது என்று பார்த்தால், அங்கே ஒரு பெண் மிக்கி மவுஸ் கோலம் போட்டிருந்தார்! எனக்கு அருகில் இருந்த பார்வையாளர் ஒருவர், "கோலத்தைப் போடச் சொன்னால், கார்ட்டூன் பொம்மையை வரைந்து வைத்திருக்கிறார்கள்" என்று அலுத்துக்கொண்டார். மற்றொரு பெண் "வின்னி த பூ" கோலம் போட்டிருந்தார்.  இந்த பெண்கள் எல்லாம் கல்லூரிப் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
ஏன் இவர்கள் மற்றவர்கள் போல் பாரம்பரிய கோலங்களைப் போடவில்லை?  இளம் வயதினர் புதுமையையும் மாற்றத்தையும் விரும்புவார்கள் என்பது தெரிந்ததே, ஆனால், மிக்கி மவுசுக்கும் புதுமைக்கும் என்ன சம்மந்தம் என்று தெரியவில்லை.

அந்தக் கோவிலைச் சுற்றி இருக்கும் வீதிகளில் தான் எத்தனை உயிரோட்டம்!  அல்வா கடைகள், இட்லி கடைகள், பொம்மை கடைகள், துணிக்கடைகள், இன்னும் பல!   

கோவில் வாசலில் பாதுகாப்பு பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டோம்.  மீனாட்சி அம்மன் தரிசனத்திற்கு மிக நீண்ட வரிசை நின்றது.  அந்தக் கூட்டத்தில் குழந்தைகளை வைத்துக்கொண்டு சமாளிப்பது சிரமம் என்பதால் கோவிலை ஒரு சுற்று நிதானமாக சுற்றி வந்து அங்கிருந்த குளத்தின் படிகட்டுகளில் அமர்ந்தோம். கோவில் கோவில் தான்! கடவுள் நம்பிக்கை என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த பூசை மணிச் சத்தம், மந்திரம் ஓதுவது, விபூதி வாசனை, எரியும் நெய் விளக்குகள், கோபுரங்களின் கம்பீரம், எல்லாமே ஒரு பரவசத்தை ஏற்படுத்துகிறது! 




4 comments:

Unknown said...

சிவா மதுரைக்காரரா? இதுநாள் வரை மாயவரம் என நினைத்தேன். சிதம்பரம் மதுரை காம்போ ரொம்ப அரிதான ஒன்று. நானும் அண்ணியும் உங்களைப்போல காம்பினேஷன் தான். இப்போ மதுரையில் எங்களுக்கு சில நண்பர்களைத்தவிர சுற்றம் என்று யாரும் கிடையாது. மார்ச் மாசம் ஒரு Ph D வைவா விஷயமாக போகக்கூடும் அப்போ கோனார் மெஸ் சான்ஸ் கிடைக்குமா பார்க்கலாம்

ஆத்மா said...

ஓஓஓ....
பெரிய இடைவெளியின் பின் வருகிறீங்கள்...
நல்வரவாகட்டும்....

vimalanperali said...

நல்ல அனுபவம்,வாழ்த்துக்கள்.

யாத்ரீகன் said...

சட்டென ஊருக்கு போய்வந்த உணர்வு...


என்னதான் mall-க்கு கூட்டிகிட்டு போனாலும் , புதுமண்டபத்தில் கிடைக்கும் அனுபவத்தையே விரும்பும் மனைவி கிடைத்தது என் அதிர்ஷ்டம் என்பதை இங்க மகிழ்வோடு பகிற்கிறேன்.. :-)