Thursday, July 12, 2012

FeTNA 2012 வெள்ளி விழா: உள்ளே - வெளியே

வெள்ளி விழா முடிந்து பால்டிமோரில் இருந்து எங்கள் வீட்டிற்கு வந்து நான்கு நாட்கள் ஆகின்றன.  ஆனால் மனமும் நினைவும் மட்டும் இன்னும் பால்டிமோரிலேயே சுற்றிக்கொண்டு இருக்கிறது.   மூன்று நாட்களாக எங்கு திரும்பினாலும் தமிழ் நண்பர்கள், உறவுகள், கலைஞர்கள், அறிஞர்கள் என்று இருந்துவிட்டு, இப்போது தனிமையாக உணர்கிறேன்.

வெள்ளி விழா நிகழ்ச்சிகளைப் பற்றி எழுத நிறைய பேர் இருக்கிறார்கள்.  நான் எழுதப் போவது மேடையில் நிகழாத சில காட்சிகளைப் பற்றி மட்டுமே.  இந்தக் காட்சிகள் என் கண்களில் பட்டதற்கு காரணம், என் மகள் புகழ்மதி.  அவள் அரைமணி நேரத்திற்கு மேல் அரங்கில் உட்கார மறுத்ததால், நான் அவளை மேய்த்துக்கொண்டு பாதி நேரம் அரங்கின் வெளியில் தான் சுற்றிக்கொண்டிருந்தேன்.  அவ்வப்போது அரங்கினுள் எட்டிப் பார்த்து சில நிமிடங்கள் உள்ளே நடந்த நிகழ்ச்சிகளையும் காண முடிந்தது.

உள்ளே -  நடனங்கள், பாடல்கள், பட்டிமன்றம், விவாதம், உரை வீச்சு...

வெளியே - உழைப்பு, வியர்வை, பதட்டம், பொறுப்பு, கவனம், கண்டிப்பு...

அரங்கின் வாசலில் கண்ணாடிக் கதவுகளுக்கு அப்பால் தகிக்கும் வெயிலில் வியர்வையை அவ்வப்போது துடைத்துக்கொண்டே ஒரு தன்னார்வலர் நின்று கொண்டிருந்தார்.  அரங்கிலிருந்து வெளியேறுபவர்களிடம் ஓடிச் சென்று "நீங்கள் விடுதிக்குச் செல்கிறீர்களா?" என்று கேட்டு அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் அவர்களை ஏற்றி அனுப்புவார்.  சில சமையம் விடுதியின் வாசலில் நின்று அங்கிருந்து அரங்கிற்கு வருபவர்களை பேருந்தில் ஏற்றி அனுப்பிக்கொண்டிருப்பார்.  ஆக இந்த மூன்று நாட்களுமே, பிற்பகல் 12 மணியாக இருந்தாலும் சரி, இரவு 12 மணியாக இருந்தாலும் சரி, இந்த போக்குவரத்துக் குழுவைச் சேர்ந்தவருக்கு வெள்ளி விழா என்பது அந்த வாசலிலேயே முடிந்துவிட்டது.

வந்திருக்கும் பிரபலங்களை கவனிப்பதற்காக அரக்கப் பரக்க அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள் வரவேற்புக் குழுவினர்.  பிரபலங்கள் எங்கு போனாலும் அவர்கள் கூடவே போவது, காபி வாங்கிக்கொடுப்பது, சாப்பாடு தட்டில் போட்டு கொடுப்பது, அவர்கள் தொலைபேச விரும்பினால், தொலைபேசியில் எண்களைப் போட்டு அவர்கள் கையில் கொடுப்பது, அவர்களுக்குத் தேவைப்படக்கூடும் மருந்து மாத்திரைகளை தம் கைப்பைகளில் சுமந்து கொண்டு திரிந்தார்கள்.  .  அவர்களில் பலர் முனைவர்கள் மற்றும் பொறியாளர்கள்.  ஆனால் அந்த மூன்று நாட்களுமே சுய கெளரவம் பார்க்காமல் கிட்டத்தட்ட பணிப்பெண்களாக மாறியிருந்தார்கள்.  நான் இரவு 12 மணிக்கு விடுதி அறைக்கு தூங்கச் செல்லும்போது, பின்னிரவு விமானத்தில் வந்திறங்கிய சின்னத்திரை சிவகார்த்திகேயனை வரவேற்க, கையில் பூங்கொத்துடனும், தூக்கம் விரட்டிய கண்களுடனும் விடுதி வாசலில் கால் கடுக்க நின்று கொண்டிருந்தார்கள் இந்த வரவேற்புக் குழுவினர்.

சாரை சாரையாக விழாவிற்கு வந்திறங்கும் மக்கள் கூட்டம் நேராகச் சென்றது பதிவு மேசைக்குத்(Registration desk) தான்.  ஒவ்வொருவரின் பெயரையும், பதிவையும் கணிணியில் சரிபார்த்து அவர்களுக்குச் சேரவேண்டிய விழா மலர், அடையாள அட்டை மற்றும் இத்யாதிகளை அவர்களிடம் கொடுத்து அனுப்பிக்கொண்டே இருந்தார்கள் பதிவுக் குழுவினர்.  இரண்டாம் நாள் பிற்பகல் வரை இந்த மக்கள் கூட்டம் குறையவேயில்லை.  மொத்தப் பதிவின் எண்ணிக்கை 2000, 2100, 2200 என்று கூடிக்கொண்டே வந்தது   பரபரப்பாகவும், உற்சாகமாகவும் இருந்தது.

சாப்பிடலாமென்று உணவுக்கொட்டகைக்குச் சென்றேன்.  மின் விசிறிகளையும் மீறி வெப்பம் முகத்தில் அறைந்தது.  அதிலும், பட்டுப்புடவைக்கும், பட்டு வேட்டி-சட்டைக்கும் மேல் "apron" கட்டி, கையுறை அணிந்த உணவுக் குழு பெண்களும் ஆண்களும் பதட்டத்துடன் காணப்பட்டார்கள்.  உணவு வர தாமதமாகிறது...வெளியே வரிசையில் பசியுடன் உணவுக்காக காத்த்துக்கொண்டிர்ந்தவர்கள் பொறுமையிழந்துகொண்டிருந்தார்கள்...அவர்களை சமாளிக்கவேண்டும், வந்திறங்கும் உணவுவகைகளை  ஆறு உணவு மேசைகளில் துரிதமாக அடுக்கி, உணவு பறிமாற வந்த தன்னார்வளர்களை வரிசையாக, தயாராக நிறுத்தி வைக்கவேண்டும்.  கதவைத் திறந்தவுடன் உள்ளே நுழையும் இரண்டாயிரம் பேரை ஒன்றரை மணி நேரத்திற்குள் சாப்பிட வைத்து அங்கிருந்து வெளியே அனுப்ப வேண்டும்.  அபரிமிதமான உழைப்பு அங்கே தேவைப்பட்டது.  அங்கே நடந்த "team co-ordination" பார்த்து நான் அசந்து போனேன்.  ஒருவர் "சட்னி தீர்ந்துவிட்டது" என்று குரல் கொடுப்பார்.  உடனே மற்றொருவர் ஓடி வந்து சட்னி பாத்திரத்தை நிறைப்பார்.  ஒருவருக்கு வியர்வை ஊற்றினால் மற்றொருவர் துண்டை எடுத்து துடைத்துவிடுவார்.  எங்கிருந்தோ சில தன்னார்வத் தொண்டர்கள் வந்து "இங்கு யாராவது களைப்பாக இருந்தால் சொல்லுங்கள், உங்களிடத்தில் நாங்கள் பறிமாறுகிறோம்" என்பார்கள்.  வயதான பெண்மனி ஒருவர் இரண்டு நாட்களுமே அங்கே நின்று சாப்பிட வருபவர்களுக்கு தட்டு எடுத்து கொடுத்துக்கொண்டிருந்தார்.  அவரிடம் நான் தட்டு வாங்கும் போது  கூனிக் குறுகிப் போனேன்.  என் வயதென்ன...அவர் வயதென்ன?  நான் உட்கார்ந்து சாப்பிடுகிறேன்...அவர் கால் கடுக்க நின்று சேவை செய்துகொண்டிருக்கிறார்!  எனக்கு சாப்பாடு தொண்டைக் குழியில் இறங்க மறுத்தது.

சில குழுக்களைச் சேர்ந்த தன்னார்வலர்கள் என் கண்களுக்குத் அந்த இரண்டு நாட்களுமே தென்படவில்லை. ஆனால் அந்த பிரமாண்டமான அரங்க மேடையின் திரைச் சீலைக்குப் பின் ஒரு சிறு உலகமே இயங்கிக்கொண்டிருந்ததை உணர முடிந்தது.  நிகழ்ச்சிக்குழு, மேடை நிர்வாகக் குழு, மற்றும் அரங்க குழுவைச் சேர்ந்தவர்கள் அங்கே நிகழ்ச்சிகள் சரியான நேரத்திற்கு தொடக்கி சரியான நேரத்திற்கு முடித்து வைக்க அயராது உழைத்துக்கொண்டிருந்தார்கள்.  உணவுக் கொட்டகைக்கு கடைசியாக களைப்பாக சாப்பிட வருபவர்கள் இவர்கள் தான்.  அடுத்த நிகழ்ச்சி தொடங்குமுன் அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு பின் மீண்டும் அந்த திரைச் சீலைக்கு பின் சென்று மறைந்துவிடுவார்கள் இவர்கள்.

இன்னும் பல குழுக்கள் இரவு பகல் பாராது இந்த பேரவை வெள்ளி விழாவிற்கு கடினமாக உழைத்திருக்கிறார்கள், ஆனால் என் கண்முன் தென்பட்ட காட்சிகளை மட்டுமே இங்கே என்னால் விவரிக்க முடிந்தது.  தமிழ் சங்கம், தமிழ்ச் சங்கப் பேரவை என்றாலே தமிழர்களெல்லாம் ஒன்று கூடி கும்மி அடிக்கும் இடம் என்று நெஞ்சில் ஈரம் இல்லாமல் குறை கூறுபவர்களையெல்லாம் தாண்டிச் சென்றுவிட்டார்கள் இந்தச் தமிழ் சமூகத்தினர்.

உள்ளே நடந்த பல்சுவை நிகழ்ச்சிகள் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் "புறம்" என்றால், வெளியே நடந்த இந்த நெகிழ்வான நிகழ்ச்சிகள் பேரவையின் "அகம்" என்று சொல்லலாம்.

அடுத்த ஆண்டு விழா - வேறொரு நகரில், வேறொரு அரங்கில், வேறு பல தன்னார்வலர்களால் நடத்தப்படும்.  ஆனால் நான் இங்கே விவரித்த காட்சிகள் மட்டும் மாறாது.  அது ஒவ்வொரு ஆண்டும் தொடரும்.

எந்த வேலையும் செய்யாமல், மகளின் பின் ஓடியே கால் வலித்து களைத்து போனேன் நான். ஆனால் ஒரு மிகப் பெரிய விழாவை நடத்தி முடித்துவிட்டு அமைதியாக அடுத்த நாள் வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் நம் தமிழ்க் குடும்பங்களை நினைத்தால் மிகப் பெருமையாக இருக்கிறது.

நான் பார்த்து இரசித்த சில நிகழ்ச்சிகளைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
4 comments:

விமலன் said...

நல்ல அனுபவப்பதிவு.வாழ்த்துக்கள்.

Arasu said...

மிக அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள். படிக்கும்போது நேரில் அக்காட்சிகளைப் பார்ப்பது போன்று தோன்றுகிறது. பேரவை வெள்ளிவிழா பற்றி பல பதிவுகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

- அரசு

Thamizhan said...

உங்கள் வாழ்விணையரின் வேத்த விறு விறுத்த காட்சி கண் முன்னே நிற்கிறது.
நான் என்ன செய்ய அவருக்கும் சேர்த்துச் சாப்பிட்டேன்.
கடைசியில் அவர்க்கு ஏதாவது கிடைத்ததோ இல்லையோ !
அனைவரின் உழைப்பும் போற்றிப் பாராட்ட வேண்டியது.
வாழ்விணையர்களின் பங்களிப்புக்கும் நன்றி.

krish said...

ரசித்தேன்,தன்னார்வலர்களுக்கு உளங்கனிந்த பாராட்டுக்கள்.