பதிவு எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டது. கொஞ்சம் "warm up" செய்து கொண்டு 2011 ஆம் ஆண்டில் இருந்து மீண்டும் முழு மூச்சாக எழுதத் தொடங்கலாம் என்று திட்டம்.
நவம்பர் இறுதியில் "தாங்ஸ் கிவிங்' முதல் இன்று வரை விருந்து, சாப்பாடு என்று சுவையாக, அதே சமையம் சற்று மந்தமாகப் போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை. சென்ற வாரம் சில நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்த நேரத்தில் 'மன்மதன் அம்பு' வெளியாக, எல்லாரும் கும்பலாகச் சென்றோம். என்னால் அரை மணி நேரம் கூட உட்கார முடியவில்லை! படம் முழுக்க த்ரிஷாவையும், சங்கீதாவையும் பின் தொடர்ந்து, செல் போன் மூலம் மாதவனுக்கு செய்தி சொல்லுகிறார் கமல்....அறுத்துக் கொட்டிவிட்டார்.
சமீபத்தில் ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தோம். தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த மணமகள் இல்வாழ்க்கைத் தொடர்பான திருக்குறள்களைத் தமிழில் படிக்க, அமெரிக்க மணமகன் அந்தக் குறள்களை ஆங்கிலத்தில் படித்தது வித்தியாசமான முயற்சியாக இருந்தது. திருமண வரவேற்பு மேசையில், சரம் சரமாக மல்லிகை பூக்களைப் பார்த்து வியப்பாக இருந்தது. மதுரையில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்தார்களாம்!!
வேறு ஒன்றும் இப்போதைக்கு செய்தி இல்லை. கூடிய விரைவில் ஒரு சுவையான பதிவில் சந்திக்கிறேன்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
Wednesday, December 29, 2010
Tuesday, September 14, 2010
அப்பாவின் இறுதிப் பயணம்
அப்பா இறந்து போய் மூன்று மாதங்கள் ஆகிறது! அவர் புற்று நோயினால் அவதிபட்டது, அதற்காக சிகிச்சைகள் எடுத்துக்கொண்டது, நான் அவரைச் சென்று பார்த்தது பற்றியெல்லாம் முன்பு பதிவுகள் எழுதியிருக்கிறேன். முகம் தெரியாத பல வாசகர்கள் என் அப்பாவுக்காக பிரார்தனை செய்வதாகச் சொல்லியிருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்!
அப்பா இல்லாத ஒரு வாழ்க்கையை வாழக் கற்றுக்கொண்டிருக்கிறேன். சிரமமாக இருக்கிறது.
அவர் இன்னமும் திருச்சியில் அவர் வீட்டில் இருப்பது போலவே உணர்கிறேன். இன்னமும் சில மின் அஞ்சல்களில் அவரது முகவரியையும் என்னை அறியாமல் சேர்த்துவிடுகிறேன். வார இறுதி வந்தால் திருச்சிக்கு தொலைபேச வேண்டும் என்கிற பழக்கத்தை மறக்கமுடியவில்லை.
என் மகளைப் பார்க்கும் போதெல்லாம் ஆதங்கமாக இருக்கிறது. அவளைத் தூக்கி வளர்க்க, கதைகள் சொல்ல, விளையாட என் அப்பா போல் வேறு ஒருவர் கிடைப்பாரா? அவரை இனி புகைப்படத்தில் மட்டும் தானே அவளுக்குக் காட்ட முடியும்?!
இதுவரை நான் சாதாரணமாகப் பழகிய சித்தப்பாவின்(அப்பாவின் தம்பி) மேல் இப்போது எனக்குப் பாசம் அதிகரித்திருக்கிறது...அவர் அப்பாவின் எஞ்சியிருக்கும் உயிர் அல்லவா?
சிறு வயதில் அப்பா பயணம் சென்றாரென்றால் எனக்கு ஒரே சந்தோசமாக இருக்கும். ஏனென்றால் திரும்பி வரும்போது எனக்கு நிறைய உடைகள், விளையாட்டுப் பொருட்களெல்லாம் வாங்கிவருவார். எப்போது அடுத்தப் பயணம் போவார் என்று நான் ஆவலாகக் காத்திருப்பேன்.
ஆனால் இப்போது அவரது பயணங்கள் முடிவடைந்துவிட்டன. அவர் மிகவும் நேசித்த திருச்சி வீட்டை விட்டு, எங்களையெல்லாம் விட்டு அருகில் உள்ள மின் தகனம் செய்யப்பட்ட இடத்திற்கு அவர் எடுத்துச்செல்லப்பட்டதே அவரது இறுதிப் பயணம்!
இனி வரும் நாட்களில் அவரது நினைவுகளிலும், ஆசீர்வாதத்தோடும் எனது வாழ்க்கைத் தொடரும்...
Sunday, May 02, 2010
என் பிரசவ அறையில் - 2
சென்ற பதிவின் தொடர்ச்சி...
என் மகள் பிறந்தவுடன் அவளை தாதிப் பெண்கள் அதே அறையின் மற்றொரு பக்கம் எடுத்துச் சென்று சில பரிசோதனைகள் செய்துகொண்டிருந்தார்கள். என் கணவர் அருகே நின்று பார்த்துக்கொண்டிருந்தார். என் மனம் முழுக்க ஒரே படபடப்பு! குழந்தைக்கு எல்லா பரிசோதனைகளும் நல்ல விதமாக முடியவேண்டுமே என்று. என் கணவர் அங்கிருந்து சைகை மூலம் "குழந்தை நன்றாக இருக்கிறாள்" என்று சொன்னார். பின்னரே என் மனம் அமைதியடைந்தது.
மாலை மணி 6 அகியது. டெபி தன் வேலை நேரம் முடிந்து வீட்டுக்குக் கிளம்புகிறேன் என்றாள். அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு என்னென்னவோ சொல்லவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அசதி மிகுதியால் வெறும் "நன்றி" என்று மட்டுமே சொல்ல முடிந்தது. நான் குழந்தையை நல்லபடியாகப் பெற்றெடுக்க உறுதுணையாக இருந்தவள் அல்லவா அவள்?! டெபி எனக்கு வாழ்த்துக்கள் சொல்லி விடைபெற்றுச் சென்றுவிட்டாள்.இனி அவளை நான் பார்க்கப்போவதில்லை. ஆனால் அவளை நான் என்றென்றும் மறவேன்.
காலையிலிருந்து தண்ணீர் குடிக்காததால் எனக்கு தொண்டை மிகவும் வரண்டிருந்தது. "கொஞ்சம் தண்ணீர் கொடுங்களேன்" என்று தாதிப் பெண்களிடம் கேட்டேன். தண்ணீரென்ன, பழரசமே இனி நீ குடிக்கலாம். என்ன பழரசம் வேண்டும்?" என்று கேட்டார்கள். நான் பொறுமையிழந்து "ஏதாவது கொடுங்கள்" என்றேன். ஆப்பிள் பழரசம் கொடுத்தார்கள். எனக்குப் பொதுவாக ஆப்பிள் பழரசம் பிடிக்காது. ஆனால் அன்று அரக்கப் பரக்க அந்தப் பழரசத்தை ஒரு வினாடியில் குடித்துவிட்டு, "இன்னும் வேண்டும்" என்றேன். அடுத்த பத்து வினாடிகளுக்குள் மேலும் இரண்டு தம்ப்ளர் ஆப்பிள் பழரசத்தைக் குடித்த பின்னரே எனக்கு தாகம் சற்று அடங்கியது.
பழரசம் உள்ளே சென்றபின் சற்று தெம்பு வந்தது. நான் படுத்திருந்த இடத்தில் ஒரே குறுதி மயம். என் உடல் முழுக்க ஈரமாக உணர்ந்தேன். எப்போது குளித்து உடைமாற்றி சுத்தமாகப் போகிறோம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது, தாதிப்பெண் உருவில் "ஜீனா"(Gina) என்று மற்றொரு தேவதை வந்தாள். "I am going to clean you up" என்றாள். சத்தியமாகச் சொல்கிறேன். என் தாய் கூட என்னை இந்த அளவு சிரத்தை எடுத்து அறுவெறுப்பு பார்க்காமல் சுத்தம் செய்திருக்க மாட்டார்.
அடுத்த அரைமணி நேரத்தில் நான் சுத்தமாக, வெறு புதிய உடை அணிந்து படுக்கையில் படுத்திருந்தேன். அதற்குள் குழந்தையையும் சுத்தம் செய்து கம்பளியில் பொட்டலம் போல் சுற்றி என் கணவரிடம் கொடுத்திருந்தார்கள். என் கணவர் அந்தப் பொட்டலத்தை என்னிடம் கொடுத்தார். "Little Bundle of Joy" என்பது அதுதானோ?!
அவள் முகம் மட்டும் தான் கம்பளிக்கு வெளியே தெரிந்தது. கண்களை விழித்து என்னைப் பார்த்தாள். நான் அவளைப் பார்த்தேன். அந்த கணத்தில் எனக்குத் தாய்ப்பாசம் பொங்கி வரவில்லை...அவளைக் கட்டி அணைத்து உச்சிமுகரத் தோன்றவில்லை...ஒரு வித பயம் தான் என் மனதில் தோன்றியது. திடீரென்று ஒரு புத்தம் புதிய உயிரைத் தூக்கி கையில் கொடுத்துவிட்டார்களே...எப்படி பார்த்துக்கொள்து? எப்படி வளர்ப்பது? என்று மனம் அடித்துக்கொண்டது. அந்த பயமெல்லாம் மாறி ஒரு பொறுப்பான தாயாக மாற எனக்கு சில நாட்கள் ஆனது.
இந்தப் பதிவை எழுதிமுடிக்கும் போது என் மகள் 5 மாதக் குழந்தை. சென்ற வருடம் இதே சமையம் எனக்கு முதல் ultra sound scan செய்து பார்த்தபோது அந்தத் திரையில் ஒரு சிறிய கரும்புள்ளி போல் தெரிந்த இவள், இன்று கை கால்களை ஆட்டிக்கொண்டு பொக்கை வாய் திறந்து என்னைப் பார்த்துச் சிரிப்பதைப் பார்த்தாள் பிரமிப்பாக இருக்கிறது.
பெண்மை வெல்க! தாய்மை வாழ்க!
வரும் மே 9ஆம் தேதி அன்னையர் தினம். அனைத்துத் தாய்மார்களுக்கும், தாய்குலத்திற்கும் எனது வாழ்த்துக்கள்!
Monday, April 19, 2010
என் பிரசவ அறையில்
எல்லார் வீட்டிலும் தான் குழந்தைப் பிறக்கிறது. இதைப் பற்றி புதிதாக எழுத ஒன்றும் இல்லை. இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது குழந்தையின் பிரசவம் ஒரு தனித்துவம் வாய்ந்த அனுபவமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் "Birth Stories" என்று நிறைய பெண்கள் எழுதுவார்கள். அதுபோல் முயற்சி செய்யலாம் என்று தோன்றியது. என்னைத் தவிர வேறு யாரும் இதனைப் படிக்கவில்லையென்றாலும் கூட, எனது நினைவுகளைப் பதியவைக்கும் ஒரு வாய்ப்பாக இது இருக்கட்டுமே!
ஆனால் நான் நினைத்ததற்கு எதிர்மாறாக இருந்தது அந்த ஒரு வாரம்! புத்தகத்தில் கவனம் பதியவில்லை...தொலைக்காட்சி பார்க்க பிடிக்கவில்லை...படுத்தால் தூக்கம் வரவில்லை...மனம் இருப்புக்கொள்ளாமல் மிக அழுத்தமாக இருந்தது. கெட்ட நினைவுகள் வந்து அலைக்கழித்தன. எந்த நேரமும் பிரசவ வலி வரலாம் என்று ஒருவித திகிலான எதிர்பார்ப்புடனே நாட்கள் சென்றன. பிரசவத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு எனக்கு உதவுவதற்காக அக்கா வந்தாள். அதற்குப் பிறகு தான் சற்று நிம்மதியாக இருந்தது. பிரசவதிற்கு முன் தினம் இரவு ஒரு இந்திய உணவகத்திற்கு நான், கணவர், அக்கா மூவரும் சென்றோம். மறுநாள் குழந்தை எப்போது பிறக்கப்போகிறதோ தெரியவில்லை. குழந்தைப் பிறக்கும் வரை சாப்பாடு கொடுக்கமாட்டார்களாம்! அதனால் அடுத்த நாளுக்கும் சேர்த்து நன்றாக வளைத்துக்கட்டினேன்! அன்று வாசிங்டன் டிசியில் சறுக்குப்பணி வேறு. என் கையைப் பிடித்து சாக்கிரதையாக அழைத்துவந்த அக்கா, "இருந்தாலும் உனக்கு தைரியம் அதிகம்" என்று கடிந்துகொண்டாள்.
பிரசவ நாளும் வந்தது...டிசம்பர் 7, 2009!!!
காலை 7 மணி...
பிரசவ நாள் வரை எனக்கு வலி ஏற்படவில்லை என்பதால் அன்று காலை மருத்துவமனைக்கு வந்து சேரச்சொல்லிட்டார் மருத்துவர். காலை ஏழு மணிக்கு நான், கணவர், அக்கா மூவரும் மருத்துவமணைக்குச் சென்றோம். எனக்கான பிரசவ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அது ஒரு விடுதி அறை போல் அழகாக வசதியாக இருந்தது. இங்கேயா குழந்தைப் பிறக்கப் போகிறது? அதற்கான அறிகுறியே இல்லையே? என்று சந்தேகத்துடன் சுற்றி முற்றிப் பார்த்துக்கொண்டிருந்த போது என் கையில் ஒரு அங்கியைக் கொடுத்த அதனை போட்டுக்கொள்ளச் சொன்னாள் தாதிப் பெண். குளியலறைக்குச் சென்று என் உடைகளை மாற்றி, அந்த மருத்துவமனை அங்கியை அனிந்துகொண்டு வெளியே வந்தேன். என்ன ஆச்சரியம்!! அதற்குள் அந்த விடுதி அறை பிரசவ அறையாக மாறியிருந்தது! அந்த சொகுசுக் கட்டிலும் படுக்கையும் மடக்கி கீழிறக்கப்பட்டு, மருத்துமனைக் கட்டில் அங்கே இருந்தது. பக்கவாட்டில் ஏகப்பட்ட இயந்திரங்கள், ஒயர்கள் எல்லாம் இருந்தன. எனக்கு லேசாக வயிற்றைக் கலக்கியது. கட்டிலில் சென்று படுத்தேன். அங்கிருக்கும் சோபாவில் கணவரும் அக்காவும் உட்கார்ந்து என்னை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
எனக்கு அன்று உதவிய தாதிப் பெண்ணின் பெயர் "டெபி"(Debbie). அவளை என் வாழ்க்கையில் மறக்கவேமுடியாது. சிரித்த முகம், அன்பான பேச்சு. கலவரமாகிப் போயிருந்த எனக்கு "எல்லாம் நன்றாக நடக்கும், உனக்கு உதவ நான் கூடவே இருக்கிறேன்" என்று சொல்லி தைரியமூட்டினாள். அவளுக்கு ஐந்து குழந்தைகளாம்!
மூன்று வகையான மானிட்டர்கள் என் உடலில் பொருத்தப்பட்டன. ஒன்று எனது இரத்த அழுத்தத்தை 15 நிமிடங்களுக்கொருமுறை அளவிடும் மானிட்டர். இரண்டாவது குழந்தையின் இதயத்துடிப்பைக் காட்டும் மானிட்டர். மூன்றாவது எனது கருப்பையின் அதிர்வுகளை (uterine contractions) வரைபடமாகக் (graph) காட்டும் மானிட்டர். அந்த இரத்த அழுத்த மானிட்டர் தானாகவே 15 நிமிடங்களுக்கு ஒரு முறை என் கையைப் பிடித்து இறுக்கி இரத்த அழுத்தத்தை கணக்கிட்டது. ஒவ்வொரு முறையும் இரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. தாதிப் பெண் டெபி யின் முகத்தில் கவலைத் தோன்றியது. "மனதை இலேசாக வைத்துக்கொள். உனது இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது குழந்தைக்கு நல்லதல்ல" என்றாள்.
சிரமப்பட்டு என்னை அசுவாசப்படுத்திக்கொண்டேன். சில நிமிடங்கள் அறையில் அமைதி நிலவியது. குழந்தையின் இதயத்துடிப்பு சீராக இருந்தது. எனது இரத்த அழுத்தம் சற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
காலை 9 மணி...
9 மணியளவில் எனக்கு IV மூலம் Pitocin என்கிற வலி ஏற்படுத்தும் மருந்து செலுத்தப்பட்டது. வலி ஏற்பட ஒரு மணி நேரம் ஆகும் என்றார்கள். நான் கண்களை மூடிப் படுத்திருந்தேன். சில நிமிடங்களில் அப்படியே தூங்கியும் போனேன்.
காலை 11 மணி
எவ்வளவு நேரம் ஆனதோ தெரியவில்லை. சட்டென்று விழித்துக்கொண்டேன். இலேசாக இடுப்பு வலித்தது. வயிற்றினுள் யாரோ அழுத்துவது போல் உணர்ந்தேன். இதுதான் பிரசவ வலியோ?! மணியடித்ததும் டெபி வந்தாள். நிலமையைச் சொன்னேன். என்னை பரிசோதித்து விட்டு, மகிழ்ச்சியுடன், "கருப்பையின் வாயில் 5cm விரிவடைந்திருக்கிறது. பாதி தூரம் கடந்துவிட்டாய்!" என்றாள். நான் பரபரப்பானேன். கருப்பையின் வாயில் 10cm வரை விரிவடைந்த பின்னரே குழந்தை வெளியே வரமுடியும் என்று மருத்துவர் முன்பே விளக்கியிருக்கிறார்.
இன்னும் சில நிமிடங்கள் சென்றபின், என் பனிக்குடம் உடைந்து. ஈரமாக உணர்ந்தேன். மீண்டும் டெபி என்னை பரிசோதித்துவிட்டு "6cm" என்று சொல்லிவிட்டுப் போனாள். பனிக்குடம் உடையும் போது எப்படி இருக்கும் என்றெல்லாம் நான் படித்தும், என் தோழிகளிடம் கேட்டும் வைத்திருந்தேன். நான் அலுவலகத்தில் இருக்கும் போது பனிக்குடனம் உடையாமல் இருக்கவேண்டுமே என்று ஒவ்வொரு நாளும் பிரார்தித்து வந்தேன். நல்லவேளை மருத்துவமனைப் படுக்கையில் அது நடந்தது குறித்து எனக்கு மகிழ்ச்சி!!
மதியம் 1 மணி...
இந்தச் சமையத்தில் வலி அதிகரித்தது. பிரசவ வலி எப்படி இருக்குமென்று நிறைய படித்தேன். தோழிகளின் அனுபவத்தையும் கேட்டிருக்கிறேன். அனால் அதை நானே உணரும் போது அது எங்குமே படிக்காத, யாருமே இது வரை விவரிக்காத ஒரு வித வலியாக இருந்தது!! என்னால் கூட அதனை சரியான வார்த்தைகளைக்கொண்டு விவரிக்க முடியாது. அதை அனுபவித்தால் தான் தெரியும். இருந்தாலும், விவரிக்க முயற்சிக்கிறேன். இடுப்பையும் வயிற்றையும் சுற்றி உள்ளிருந்து யாரோ அழுத்துவது போல் இருந்தது. அந்த அழுத்தம் சின்னதாகத் தொடங்கி பின் அதிகரித்தது. ஒரு உச்சத்திற்கு வந்தபின் மீண்டும் குறைந்தது. சில வினாடிகளுக்குப் பின் மீண்டும் தொடங்கி, அதிகரித்து, குறைந்தது. இப்படி ஒரு அலை போல் வந்து வந்து போனது. அந்த அழுத்ததின் அளவிற்குத் தகுந்தார்ப்போல் வலியும் லேசாகத் தொடங்கி, அதிகரித்து, ஒரு உச்சத்திற்குப் போய், பின் குறைந்தது. இப்படி அலை அலையாக பிரசவ வலி தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.
டெபி என்னிடம் "Epidural எடுத்துக்கொள்கிறாயா?" என்று கேட்டாள். Epidural என்கிற அற்புதத்தைப் பற்றி மருத்துவர் ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்தார். அது ஒரு வலி நிவாரண மருந்து. அமெரிக்காவில் பெரும்பாலான பெண்கள் பிரசவத்தின் போது இந்த மருந்தை எடுத்துக்கொள்வார்கள். சிலர் வலி நிவாரணம் இல்லாமலேயே வலியுடன் குழந்தைப் பெற்றுக்கொள்வார்களாம்.
நான் டெபியிடம், "Epidural இப்போது வேண்டாம். என்னால் எவ்வளவு நேரம் வலியை பொறுத்துக்கொள்ள முடிகிறது என்று பார்க்கிறேன்". என்றேன். வலி அலை அலையாக வந்து போய்க்கொண்டிருந்தது. அக்கா தன் கையைக் கொடுத்தாள். பிடித்து இறுக்கிக்கொண்டேன். அவளுக்கு கை வலிக்கத் தொடங்கியபோது, கணவர் கைகொடுத்தார். ஒரு கட்டத்தில் எனக்கு மூச்சுத் திணறியது. கண்களில் கண்ணீர் வந்தது. வலி பொறுக்கவில்லை. "Epidural கொடுத்துவிடுங்கள்" என்றேன். டெபி சட்டென்று பேஜரின் மூலம் anesthesiologist ஐ அழைத்தாள். அவர் வந்து எனது முதுகுத்தண்டின் அருகில் ஊசி மூலம் அந்த மருந்தைப் போடுவதற்கு 15 நிமிடங்கள் ஆனது. அந்த 15 நிமிடங்களும் வலியால் துடித்துக்கொண்டிருந்த என்னை டெபி அணைத்துப் பிடித்துக்கொண்டாள். என் முதுகை வருடிக்கொண்டே என்னுடன் பேசிக்கொண்டிருன்தாள். மருந்தை செலித்திய பின் என்னை சாய்வாகப் படுக்கையில் படுக்கவைத்தாள். என்ன ஆச்சரியம்!! ஐந்தே நிமிடத்தில் என்னை வாட்டியெடுத்த வலி கானாமல் போய்விட்டது. ஆனால் அந்த அழுத்தம் தொடர்ச்சியாக அலை அலையாக வந்தபடி இருந்தது. கர்ப்பப் பையிலிருந்து குழந்தையை மெதுவாக வெளியே தள்ளுவதற்கான ஏற்பாடு தான் அந்த அழுத்தமும் அதிர்வும்.
மதியம் 4 மணி...
மீண்டும் என்னை பரிசோதித்த டெபி, "9cm ஆகிவிட்டது! இனிமேல் தான் நமக்கு நிறைய வேலை இருக்கிறது. குழந்தையை வெளியே தள்ளத் தயாரா?" என்றாள். அந்த நிமிடம் வரை எனக்கு சுகப் பிரசவம் ஆகும் என நம்பிக்கை இல்லை. கடைசியில் சிசேரியனில் தான் முடியும் என்று அதற்கும் தயாராக இருந்தேன். நான் பல மாதங்கள் புத்தகங்களிலும், இணையதளங்களிலும் மகப்பேற்றைப் பற்றிப் படித்திருந்தவையெல்லாம், என் பிரசவ அறையில் எனக்கு மறந்துவிட்டிருந்தது...ஏழு பவுண்டு எடையுள்ள ஒரு குழந்தையை என் உடலில் இருந்து வெளியே கொண்டுவர நான் எந்த விதத்திலும் தயாராக இல்லை, அனால் டெபி யிடம், "நான் தயார்" என்றேன். டெபி மீண்டும், "Lamaze வகுப்பில் நீ கற்றுக்கொண்ட மூச்சுப் பயிற்சி நினைவிருக்கிறதா?" என்று கேட்டாள். என் மூலை மரத்துப்போயிருந்தது! "நினைவில்லை" என்று பதிலளித்தேன்.
டெபி எனக்கு அந்த மூச்சுப் பயிற்சியை நினைவூட்டினாள். "ஒரு அலை வரும்வரை காத்திரு. பின் நன்றாக மூச்சை உள்ளிழுத்துக்கொள். நான் 1, 2, 3 என்று எண்ணுவேன். 10 சொல்லும் வரை நன்றாக கடுமையாக முக்கி குழந்தையை வெளியே தள்ளு. 10 சொன்னபின் மூச்சை விடு. அடுத்த அலை வரும்போது மீண்டும் இது போல் செய்யவேண்டும்".
மாலை 5 மணி
அதுவரை என் பிரசவ அறைக்கு டெபி மட்டுமே வந்து போய்க்கொண்டிருந்தாள். குழந்தை வெளியே வரும் நேரம் வந்துவிட்டதால், என்னுடைய மகப்பேரு மருத்துவரும், இன்னும் இரண்டு தாதிப் பெண்களும் அறைக்குள் வந்தனர். என் பிரசவ அறை கலை கட்டியது!
முதல் சில நிமிடங்கள் எனக்குச் சரியாக மூச்சை இழுத்து குழந்தையைத் தள்ளத் தெரியவில்லை. டெபி பொறுமை இழக்காமல் மீண்டும் எனக்குப் பயிற்சி அளித்தாள். பின்னர் எனக்கே அந்த உத்தி பிடிபட்டது. கணவர் என் பக்கவாட்டில் நின்று என் கைகளைப் பிடித்துக்கொண்டார். டெபி, மருத்துவர், மற்ற இரண்டு தாதிப் பெண்கள் எல்லாரும் சேர்ந்து "மூச்சை பிடி...தள்ளு...முச்சை விடு...ம்ம்ம்ம் அடுத்து மூச்சை பிடி..." என்று விடாமல் சொல்லிக்கொண்டிருந்தனர். எனக்கு வியர்த்து ஊத்தியது. தொண்டை வரண்டது. "தண்ணீர் வேண்டும்" என்றேன். ஒரு சிறிய ஐஸ் கட்டியை வாயில் வைத்தாள் டெபி.
30 நிமிடங்கள் சென்றன. எனக்கு உடலில் உள்ள சத்தெல்லாம் இறங்கிவிட்டது. குழந்தை நன்றாகக் கீழே இறங்கி இருந்தது தெரிந்த து, ஏனென்றால் என் மேல் வயிற்றைத் தொட்டுப் பார்த்த மருத்துவர், அந்த இடம் காலியாக இருப்பதை உணர்ந்து, "குழந்தை நன்றாகக் கீழே இறங்கியிரு க்கிறது. இன்னும் கடுமையாக தள்ளுவதற்கு நீ முயற்சி செய்யவேண்டும். உனக்கு சிசேரியன் செய்ய நான் விரும்பவில்லை" என்றார்.
மாலை மணி 5:30...
மீண்டும் 15 நிமிடங்கள் கடுமையான முயற்சி தொடர்ந்தது. இந்தக் குழந்தை இப்போதைக்கு வெளியே வராது. இது ஒரு மிக நீண்ட நாளாக இருக்கப்போகிறது என்று நான் நொந்து போய் மற்றவர்கள் முகத்தைப் பார்த்தபோது, எல்லோரும் சட்டென்று பரபரப்பானார்கள்! கணவரின் முகத்தைப் பார்த்தேன். அவர் முகத்தில் ஆர்வம் கலந்த கலவரம் தெரிந்தது. இடுப்புக்கு கீழ் எனக்கு மரத்துவிட்டதால் எனக்கு என்ன நடக்கிறதென்று உணரமுடியவில்லை. "என்ன ஆச்சு?" என்று கணவரிடம் கேட்டேன். "குழந்தையின் தலை தெரிகிறது" என்றார் அவர். "இன்னும் 2 அல்லது 3 முறை கடுமையாகத் தள்ளு. குழந்தை வெளியே வந்துவிடும்" என்றார் மருத்துவர்.
அவ்வளவுதான்! எனக்குள் என்னப் புகுந்தது என்று தெரியாது. உடலில் மிஞ்சியிருந்த அத்தனை சத்தையும் கூட்டி வெறி வந்தது போல் மூச்சைப் பிடித்து தள்ளினேன். மாலை 5:49 க்கு என் மகள் என் கருவறையிலிருந்து என் பிரசவ அறைக்கு வந்தாள்!!! அவள் வெளியே வந்தவுடன் என்னால் அவளைப் பார்க்க முடியவில்லை. தாதிப் பெண்கள் அவளை எடுத்துச் சென்றுவிட்டார்கள். அசதியால் சொருகிய என் கண்களின் ஓரத்தில் அவளது பாதங்கள் தான் தென்பட்டன!
"புத்தம் புதிய ரத்த ரோஜா...பூமி தொடா பிள்ளையின் பாதம்" என்கிற பாடல் வரிகள் என் மனதிற்குள் ஓடியது!
நானும் என் மகளும் இன்னும் சில நிமிடங்களில் நேருக்கு நேர் சந்திக்கப் போகிறோம்! அந்தச் சந்திப்பைப் பற்றி அடுத்தப் பதிவில்...
Friday, March 12, 2010
மற்றொரு பயணம், வேறொரு திருப்புமுனை 4 (பெயர் வைப்பதில் கலகம்)
நண்பர் 3 யிடம் கருத்து கேட்டபோது, "ஏன் நவீனமாகப் பெயர் வைக்கவேண்டும்? “முனியம்மா” அல்லது “முனி” என்று பெயர் வைத்தால் என்னவாம்?” என்று கேட்டார்.
இது சற்று இடக்காக இருந்தது எனக்கு.
நான்: ”முனியம்மா என்று பெயர் வைப்பதில் தவறொன்றுமில்லைதான். ஆனால் நவீனத்தை நோக்கி, தமிழை விட்டு விலகி ஓடிக்கொண்டிருப்பவர்களிடம் எப்படி இதனை எதிர்பார்ப்பது? அதற்காகத்தான் நவீனம் என்கிற பெயரில் குழந்தைக்கு மிட்டாய் கொடுப்பது போல் சில புதிய தமிழ்ப் பெயர்களை எடுத்துக் காட்டி அவர்களை திசை திருப்ப வேண்டும் என்கிறேன் நான். தமிழிலும் நவீனம் இருக்கிறது என்பதை அவர்கள் உணரவேண்டும். குறைந்தபட்சம் வடமொழிப் பெயர்களின் ஊடுருவலையாவது தடுக்கலாம்.”
நண்பர் 3:
முனியம்மா என்று நான் சொன்னது ஒரு கருத்துதான்.
1. நான் கண்டிப்பாக இதுமாதிரியான பெயர்களைத்தான் வைக்க வேண்டுமென்று வரையறுக்கப் பட்ட கொள்கையைக் கொண்டிருக்கவில்லை.
பெயரிடுவதில் என்னுடைய கொள்கையே வெறுமனே ஒருவகையான கலகம் அல்லது எதிர்ப்புரட்சியே. இன்னும் சொல்லப் போனால், என்னுடைய சொந்தப் பெயரை நான் விரும்பியபடி வைத்துப் புரட்சி செய்தால் பெருமை கொள்வேனே தவிர, என்னுடைய குழந்தையின் பெயரை வைத்தல்ல. குழந்தை பெரியவளா(னா)னதும் நம் அப்பன்/அம்மை நமக்கு இப்படியொரு பெயரை வைத்தார்கள் என்றெண்ணினால் எல்லாப் புரட்சியும் நில்லாது விழும்.
தமிழ்ப் பெயர் வைப்பதில் திருமாவளவன் ஒரு புதிய பரிமாணத்தைத் தொட்டார். அதாவது, தலித்துகள் எத்தனையோ பேர், காந்தி, அண்ணா, கருணாநிதி, ஜீவா, காமராஜ், இந்திரா, அம்பேத்கார் என்று தலைவர்களின் பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் தலித்தல்லாத சாதியினர் அம்பேத்கார் மற்றும் தலித் தலைவர்கள் பெயர்களைத் தவிர்க்கிறார்கள் என்று அவர் சொன்ன உண்மை என்னை உரைத்தது. முனியம்மா என்ற பெயரை வைக்க வேண்டுமென்று நினைத்ததும் அந்த அடிப்படையில்தான். சமஸ்கிருதப் பெயரிலோ அல்லது ஆங்கிலப் பெயரிலோ கூட எனக்கு வெறுப்பெல்லாமில்லை. ஆனால் தமிழ்ப் பெயர்களை இழிவு படுத்துவது போல் சிறிதும் பகுத்தறிவின்றி சமஸ்கிருதப் பெயர்கள் அளவுக்கு அதிகமாகச் சூட்டப் படுவதையே விமர்சிக்கிறேன். பெரியார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இதைப் பற்றிக் கலகம் செய்திருக்கிறார். அக்கால கட்டத்தில் காசி, பழனி, வேளாங்கண்ணி என்று திருத்தலங்களைப் பெயர்களாக வைக்கும் மூடநம்பிக்கை இருந்தது. குழந்தைகளுக்குப் பெயர் வைக்கச் சொல்வதெல்லாம் அவருக்குப் பிடிக்காது. நீங்கள் பெற்றெடுக்கிற பிள்ளைக்குப் பெயர் வைக்க என்னை ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டார். தொண்டர் ஒருவர் வற்புறுத்தவே இலண்டன் என்று பெயர் வைத்தாராம். தொண்டர் தயங்கியபோது பெரியார் சொன்னாராம் - காசி, வேளாங்கண்ணி என உள்ளூர்ப் பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கும் பொழுது செல்வம் கொழிக்கும் உலக மாநகராமான இலண்டன் என்ற பெயரை வைத்தால் இன்னும் மேன்மையல்லவா என்றாராம். பிடிக்க வில்லையென்றால் நீங்கள் பேரை மாற்றிக் கொள்ளுங்கள் என்றாராம். கருணாநிதி நல்ல தமிழை முன்னெடுக்கும் பொழுது அவர் மகனுக்கு ஸ்டாலின் என்ற பெயரை வைத்தபொழுது விமர்சித்தார்களாம். நான் அவரை பலமுறை மனதாரப் பாராட்டியிருக்கிறேன். கருணாநிதி தமிழை முன்வைத்தது தமிழ் வெறியினால் அல்ல. சமற்கிருதம் பெரிதும் உயர்வாகக் கருதப் பட்டு தமிழ் இழிவுபடுத்தப் பட்டதால்தான். அதற்காக ஸ்டாலின் என்ற ஒரு பெரும் தலைவனைப் பெருமையாகக் கருதுவதற்கு மொழி தடையாக இருக்கக் கூடாதென அவர் நினைத்ததால் ஸ்டாலின் என்றே வைத்தார். எனவே ஒரு பெயர் உண்மையிலேயே நாம் உயர்வாக மதிக்கும் ஒன்றைக் குறிப்பதானால் அந்தப் பெயர் சமஸ்கிருதமே என்றாலும் வைப்பதில் தடையில்லை. வரலாறும், சிந்தனையும் மழுங்கடிக்கப் பட்ட வணிகமய சமுதாயத்தில் இளைஞரைக் கவர்ந்திழுக்க வேண்டுமானால் அவர்கள் வழிக்குச் செல்ல வேண்டும்தான். அதனால் எளிமையாக்கப் பட்ட எழில் போன்ற *பழமையான* பெயர்களை விட சமஸ்கிருதம் போலவே பொருள் புரியாத தமிழ்ப் பெயர்களைத் தேர்ந்தெடுப்பதும் காலத்தின் அவசியமே, எனவே நான் எதிர்க்கவில்லை. ஆனால் சிந்திக்கத் தெரிந்த இளைஞர்களுக்கு அது தேவையில்லை, கலகம் செய்து பகுத்தறிவைத் தூண்டக் கூடிய பெயர்களை வைக்க வேண்டும்.
நான் திருமணமாகாமல், குடும்பமில்லாமல் இருந்து அமெரிக்கக் குடியுரிமை வாங்கக் கூடிய சந்தர்ப்பமிருந்திருப்பின் என்னுடைய கடைசிப் பெயரைப் 'பறையன்' என்றே வைக்கலாமென்று பலமுறை தோன்றியது. (எனக்கு வேண்டுமானால் கடைசிப் பெயரை பறையன் என்று இட்டுக் கொள்வது சரியெனப்படும், என் மனைவியும், குழந்தையும் பயன்படுத்தும் எங்கள் குடும்பப் பெயரை நானொருவன் தன்னிச்சையாக மாற்றிக்கொள்ள முடியாதுதானே.) ஆனால் பலபேர் இப்படிச் செய்யும் பொழுது அதன் பின்னாலுள்ள சமூக அரசியல் நொறுங்கிப் போய் விடும். எண்ணிப் பாருங்கள் தி.க./திமுக தோன்றும் முன்பெல்லாம் அன்பழகன், மதியழகன், கனிமொழி என்ற பெயர்களெல்லாம் வைக்கப் பட்டிருக்குமா? அன்று தலைவர்களே அவற்றை வைத்து முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அதனால் அப்பெயர்கள் பிரபலப்பட்டன. மற்றவர்களும் வைக்க ஆரம்பித்தனர். நூறு பேர் அமெரிக்காவில் பறையன் என்று கடைசிப் பெயரை வைத்துக் கொண்டால் பறையன் உயர்மரியாதைப் பெயராகி விடும்.
எனவே சிந்திக்கத் தெரியாத இளைஞர்களுக்காக மட்டுமே ஒரு புதிய பெயர்ப்பட்டியல் தேவை. ஆனால் சிந்திக்கத் தெரிந்தவர்களுக்குத் தேவை கலகம் செய்யும் மனத்திடமே.
எல்லாருடைய கருத்துக்களையும் உள்வாங்கிக்கொண்டோம் நானும் கணவரும். ரொம்ப நவீனமாகவும் இல்லாமல், ரொம்ப முனியம்மா மாதிரியும் இல்லாமல் நடுத்தரமாக “புகழ்மதி” என்று குழைந்தைக்கு பெயர்சூட்டினோம். மிகவும் திருப்தியாக இருக்கிறது. ஆனால் அமெரிக்கர்களுக்கு “ழ்” உச்சரிக்க வராதே என்றார்கள் பலர். ஏன் நம்ம தமிழ் மக்களுக்கே பல பேருக்கு “ழ்” உச்சரிக்க வராதே! குழந்தையின் பெயருக்கான அர்த்தத்தை சில அமெரிக்கர்களுக்கு விளக்கியபோது, அவர்கள் “ஓ! இப்படிப்பட்ட அழகிய அர்த்தமுள்ள பெயர்கள் எங்கள் கலாச்சாரத்தில் இல்லையே” என்று சொன்னார்கள்.
ஒருவேளை எங்கள் மகள் பிற்காலத்தில் இந்தப் பெயர் பழமையாக இருக்கிறது என்று நினைத்தால் அவள் வேறு பெயர் மாற்றிக்கொள்ளட்டும். எங்களுக்குத் தடையேதும் இல்லை.

Wednesday, March 10, 2010
மற்றொரு பயணம்...வேறொரு திருப்புமுனை 3 (நவீனத் தமிழ்ப் பெயர்கள்)
இந்தப் பதிவினை நான் எழுதும்போது, எனக்குக் குழந்தைப் பிறந்து 3 மாதங்கள் ஆகிவிட்டது. நல்லத் தமிழ்ப் பெயரும் வைத்தாகிவிட்டது. தொடர்ச்சியை விடவேண்டாமென்று விட்ட இடத்திலிருந்து மீண்டும் எழுதத் தொடங்குகிறேன்.
பிறக்கப் போகும் எங்கள் மகளுக்கு ஒரு நல்ல தமிழ்ப் பெயரை தேர்வு செய்ய நானும் கணவரும் முயன்று வந்தோம். அந்தத் தேடல் சற்றுக் கடினமாக இருந்தது வியப்பாக இருக்கிறது.
தமிழில் இல்லாத பெயர்களா? ஏன் எளிதாக ஒரு நல்ல பெயர் கிடைக்கவில்லை?
இணையத்தில் தேடுகிறோம். ‘இனிய தமிழ்ப் பெயர்கள்’ போன்ற புத்தகங்களில் தேடுகிறோம். இவற்றில் நிறைய அருமையான தமிழ்ப் பெயர்கள் கிடைக்கின்றன. ஆனால் அவையெல்லாம் பழைய பெயர்கள். நிறைய அவற்றைக் கேட்டுக் கேட்டுச் சலித்துவிட்டது. இணையத்தில் ’தமிழ்ப் பெயர்கள்’ என்று தேடினாலே, வடமொழிப்பெயர்கள் தான் கிடைக்கின்றன. ‘தூய தமிழ்ப் பெயர்கள்’ என்கிற புத்தகங்களைப் பார்த்தால், ஒரே மாதிரியான பழைய பெயர்கள் தான் இருக்கின்றன. ‘அறிவுச் செல்வி’, ’நிறைமதி’ போன்ற பெயர்கள் அருமையான தமிழ்ப் பெயர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் ஏன் நம் தமிழ் நண்பர்கள் இவற்றைத் தேர்ந்தெடுக்காமல் வடமொழிப் பெயர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்?
நான் உட்பட பலர் இன்று நவீனமான, சுருக்கமான தமிழ்ப் பெயர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் அமெரிக்காவில் வளர்க்கப்படுவதால், உச்சரிப்பதற்கு எளிதான பெயர்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அப்படிப்பட்ட தமிழ்ப் பெயர்கள் இணையத்திலோ புத்தகங்களிலோ கிடைப்பதில்லை.
இதைப்பற்றி நண்பர்களிடம் பேசியபோது சில சுவாரசியமான கருத்துப் பறிமாற்றங்கள் நடந்தன. அவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
நண்பர் 1: பழமையான தமிழ்ப் பெயர்களை வைத்துத்தான் நம் தமிழ் உணர்வை நிரூபிக்கவேண்டுமென்று அவசியமில்லை. நல்ல அர்த்தமுள்ள தமிழ்ச் சொற்களை சற்று நவீனப்படுத்தி, தூய தமிழ்ப் பெயர்களை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும். என்றார். சில உதாரணங்களையும் சொன்னார்.
மெல்லினா (மெல்லினம் என்கிற சொல்லில் இருந்து)
அன்றில் (அன்றில் பறவை)
தென்னகி (தென் தமிழ் நாட்டைச் செர்ந்தவள் என்று நினைக்கிறேன்!)
இவருடைய நண்பர் ஒருவர் ஒரு பட்டியல் தயார் செய்திருக்கிறார். அவற்றில் இருந்து சில உதாரணங்கள்...
ஆழியா (கடல்)
தளிர்
மாட்சி
இவை அல்லாமல் எங்கள் நண்பர்களிடையே சிலர் அருமையான புதுமையான தமிழ்ப் பெயர்களை தம் குழந்தைகளுக்கு வைத்திருக்கிறார்கள்.
சால்பன்
மெய்
அனிச்சம்
கணியன்
இவையெல்லாம் பெருமபலும் எந்த புத்தகங்களிலும் இணையதளத்திலும் இல்லாதவை. சம்மந்தப்பட்டவர்களின் கற்பனா சக்தியின் மூலம் உருவானவை இப்பெயர்கள். இவையெல்லாம் பழைய தமிழ் வார்த்தைகள் தான், ஆனால் அவற்றை சுருக்கி, சற்று திரித்து வைக்கும்போது அவை புதுமையாகத் தோன்றுகின்றன.
இதைக்கேட்ட நண்பர் 2 என்ன சொன்னார் தெரியுமா? “இந்த மாதிரி அழகிய தமிழ்ப் பெயர்கள் ஒரு பொதுவான தளத்தில் இல்லாததனால் தான் நம் தமிழர்களெல்லாம் வட மொழிப் பெயர்களை நாடிச் செல்கிறார்கள். நாம் இப்படி புதுமையான எளிய தமிழ்ப் பெயர்களின் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டால் தமிழ்ப் பெற்றோர்களுக்கு உபயோகமாக இருக்கும், வட மொழிப் பெயர்களும் குறையும்” என்றார்.
புதிய தமிழ்ப் பெயர்களை பட்டியலிட்டு பொதுத் தளங்களில் வெளியிட வேண்டும் என்கிற திட்டம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது ஒரு சிறந்த தமிழ்ச் சேவையும் கூட. இதனால் தமிழ்ப் பெயர்களுக்கு சரியான வெளிச்சமும் ஆதரவும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
நண்பர் 1 மீண்டும் இதைப் பற்றி விரிவாகச் சொன்னார் - “நவீன தமிழனுக்கு நவீன தமிழ் வாழ்க்கைமுறை ஒன்றை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை. அது பெயர் வைப்பதிலும் சரி சினிமா பார்ப்பதிலும் சரி. வேட்டி கட்டி உழவு செய்தால் மட்டுமே தமிழன் என்ற அடையாளம் மாறி Levi Strauss pant and Aeropostale Shirt உடுத்தியிருக்கும் இன்றைய நவநாகரீக தமிழருக்கும் தமிழை கொண்டு சேர்க்கவெண்டும். இல்லயேன்றால் Levi Strauss pantஉம் தமிழ் வாழ்க்கை முறையும் வேறுபட்டு நின்றுவிடும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து!. அதே சமயத்தில் தமிழின் தரம் மாராமல், தூய்மை கெடாமல் கவனமாக செயல்படவேண்டும். ஆகையால் அது ஒரு கடினமான கூட்டு முயற்சியாய்தான் இருக்க வேண்டும். ஆனால் பலனோ பன்மடங்கு!
இந்த நவீன தமிழ் எல்லாருக்கும் அல்லவே! விரும்புவர்களுக்கு மட்டுமே. தமிழ் அப்படியே இருக்கும். காலம் மாறினாலும் தோற்றம் மாறாது என்கின்ற நிலைபாட்டைக் கடைபிடிப்பவர்க்கு என்றென்றும் classic tamil இருக்கின்றத்து! இப்படியாக நிரைய versions of Tamil (culture) நாம் ஏற்படுத்தினால் (நாம் முந்திக்கொள்ளவேண்டும், ஏனென்றால், அது எப்படியிருந்தாலும் ஏற்பட போகிறது, நாம் இப்பொழுதே நுழைந்தால் அதனை திட்டமிட்டு முறைபடுத்தலாம்) யாரையும் உள்வாங்கி ஒரு Inclusive Tamil Culture உருவாகி தமிழ் வெவ்வேறு வடிவங்களில் பரிமானங்களில் நிலைக்கும். பைபிள் எப்படி எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பல மூலைகளில் இன்று கிறுத்துவத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றதோ அது போல!
நண்பர் 2: இன்றைய பெற்றோர்கள் வடமொழி பெயர் வேண்டும், இந்தி பெயர் வேண்டும் என அதனை நாடிச் செல்வதில்லை. ஆனால் பெயர் கொஞ்சம் ஆக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவ்வாறு அவர்கள் நினைக்கும் பொழுது ஒரு அந்நிய மொழி பெயர் தான் அவர்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. உதாரணமாக என்னுடைய ஒரு நண்பரின் மகன் பெயர் தர்ஷன். தரிசனம் என்று தமிழில் இந்தப் பெயர் இருந்திருந்தால் வைத்திருக்க மாட்டார். தர்ஷன் என்றால் ஸ்டைலாக உள்ளது.
அதுவும் தற்பொழுது சோதிடம் பார்த்து இந்த தமிழ் எழுத்தில் தொடங்கும் பெயரை தான் வைக்க வேண்டும் என முடிவு செய்கிறார்கள். தமிழ் முதல் எழுத்தாக இருக்க வேண்டும் என நினைத்து ஒரு வடமொழி பெயரை பிடிக்கிறார்கள். என்னுடைய உறவினர் ஒருவருக்கு தற்பொழுது பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தைக்கு
வி என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை வைக்க வேண்டும் என சோதிடம் பார்த்திருக்கிறார்கள். வி என்ற எழுத்தில் பெயர் கிடைக்கவே இல்லை என அலுத்துக் கொண்டார். கடைசியில் அவர் வைத்த பெயர் விபுஷா. "ஷா", "ஷ" போட்டு பெயர் வைப்பது இப்பொழுது அதிகரித்து விட்டது.
நான் என்னுடைய குழந்தைகளுக்கு பெயர் வைக்க நினைக்கும் பொழுது நானும் மற்ற பெற்றோர்களின் மனநிலையில் தான் இருந்தேன். பெயர் கொஞ்சம் ஸ்டைலாக தற்போதைய தலைமுறைக்கு ஏற்றது போல இருக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் கூடுதலாக தமிழ்ப் பெயராகவும் இருக்க வேண்டும் என நினைத்தேன். அது தான் பிரச்சனையாகி விட்டது. தற்போதைய தலைமுறைக்கு ஏற்ற நல்ல, சுருக்கமான தமிழ்ப் பெயர்கள் கிடைக்கவே இல்லை.
தமிழிப் பெயர்கள் என்றால் இணையத்தில் மணிமேகலை, மங்கையற்கரசி என்ற ரீதியில் தான் பெயர்கள் உள்ளன. என்னுடைய காலத்திற்கு ஏற்ற பெயர்கள் இணையத்தில் கிடைப்பதே இல்லை. மாறாக வடமொழிப் பெயர்கள் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன. தவிரவும் நம்மைப் போன்று சமுதாயத்தில் இருந்து விலகி இருப்போர் தான் தமிழ்ப் பெயரை தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். தற்போதைய பெற்றோர்கள் இணையத்தில் தேடுவது - Indian Baby names. அதில் கிடைக்கும் நல்ல பெயர்களை வைத்து கொண்டு போய்க் கொண்டே இருக்கிறார்கள்.
இந்தத் தருணத்தில் நண்பர் 3 உரையாடலில் நுழைந்தார். அவரது கருத்துக்களின் உண்மை உரைத்தாலும், எளிதில் ஒத்துக்கொள்ள சற்றுக் கடினமானதாக இருந்தன. அவை அடுத்தப் பதிவில்...

Subscribe to:
Posts (Atom)