Wednesday, March 10, 2010

மற்றொரு பயணம்...வேறொரு திருப்புமுனை 3 (நவீனத் தமிழ்ப் பெயர்கள்)

இந்தப் பதிவினை நான் எழுதும்போது, எனக்குக் குழந்தைப் பிறந்து 3 மாதங்கள் ஆகிவிட்டது. நல்லத் தமிழ்ப் பெயரும் வைத்தாகிவிட்டது. தொடர்ச்சியை விடவேண்டாமென்று விட்ட இடத்திலிருந்து மீண்டும் எழுதத் தொடங்குகிறேன்.

பிறக்கப் போகும் எங்கள் மகளுக்கு ஒரு நல்ல தமிழ்ப் பெயரை தேர்வு செய்ய நானும் கணவரும் முயன்று வந்தோம். அந்தத் தேடல் சற்றுக் கடினமாக இருந்தது வியப்பாக இருக்கிறது.

தமிழில் இல்லாத பெயர்களா? ஏன் எளிதாக ஒரு நல்ல பெயர் கிடைக்கவில்லை?

இணையத்தில் தேடுகிறோம். ‘இனிய தமிழ்ப் பெயர்கள்’ போன்ற புத்தகங்களில் தேடுகிறோம். இவற்றில் நிறைய அருமையான தமிழ்ப் பெயர்கள் கிடைக்கின்றன. ஆனால் அவையெல்லாம் பழைய பெயர்கள். நிறைய அவற்றைக் கேட்டுக் கேட்டுச் சலித்துவிட்டது. இணையத்தில் ’தமிழ்ப் பெயர்கள்’ என்று தேடினாலே, வடமொழிப்பெயர்கள் தான் கிடைக்கின்றன. ‘தூய தமிழ்ப் பெயர்கள்’ என்கிற புத்தகங்களைப் பார்த்தால், ஒரே மாதிரியான பழைய பெயர்கள் தான் இருக்கின்றன. ‘அறிவுச் செல்வி’, ’நிறைமதி’ போன்ற பெயர்கள் அருமையான தமிழ்ப் பெயர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் ஏன் நம் தமிழ் நண்பர்கள் இவற்றைத் தேர்ந்தெடுக்காமல் வடமொழிப் பெயர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்?

நான் உட்பட பலர் இன்று நவீனமான, சுருக்கமான தமிழ்ப் பெயர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் அமெரிக்காவில் வளர்க்கப்படுவதால், உச்சரிப்பதற்கு எளிதான பெயர்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அப்படிப்பட்ட தமிழ்ப் பெயர்கள் இணையத்திலோ புத்தகங்களிலோ கிடைப்பதில்லை.

இதைப்பற்றி நண்பர்களிடம் பேசியபோது சில சுவாரசியமான கருத்துப் பறிமாற்றங்கள் நடந்தன. அவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

நண்பர் 1: பழமையான தமிழ்ப் பெயர்களை வைத்துத்தான் நம் தமிழ் உணர்வை நிரூபிக்கவேண்டுமென்று அவசியமில்லை. நல்ல அர்த்தமுள்ள தமிழ்ச் சொற்களை சற்று நவீனப்படுத்தி, தூய தமிழ்ப் பெயர்களை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும். என்றார். சில உதாரணங்களையும் சொன்னார்.

மெல்லினா (மெல்லினம் என்கிற சொல்லில் இருந்து)
அன்றில் (அன்றில் பறவை)
தென்னகி (தென் தமிழ் நாட்டைச் செர்ந்தவள் என்று நினைக்கிறேன்!)


இவருடைய நண்பர் ஒருவர் ஒரு பட்டியல் தயார் செய்திருக்கிறார். அவற்றில் இருந்து சில உதாரணங்கள்...

ஆழியா (கடல்)
தளிர்
மாட்சி

இவை அல்லாமல் எங்கள் நண்பர்களிடையே சிலர் அருமையான புதுமையான தமிழ்ப் பெயர்களை தம் குழந்தைகளுக்கு வைத்திருக்கிறார்கள்.

சால்பன்
மெய்
அனிச்சம்
கணியன்

இவையெல்லாம் பெருமபலும் எந்த புத்தகங்களிலும் இணையதளத்திலும் இல்லாதவை. சம்மந்தப்பட்டவர்களின் கற்பனா சக்தியின் மூலம் உருவானவை இப்பெயர்கள். இவையெல்லாம் பழைய தமிழ் வார்த்தைகள் தான், ஆனால் அவற்றை சுருக்கி, சற்று திரித்து வைக்கும்போது அவை புதுமையாகத் தோன்றுகின்றன.

இதைக்கேட்ட நண்பர் 2 என்ன சொன்னார் தெரியுமா? “இந்த மாதிரி அழகிய தமிழ்ப் பெயர்கள் ஒரு பொதுவான தளத்தில் இல்லாததனால் தான் நம் தமிழர்களெல்லாம் வட மொழிப் பெயர்களை நாடிச் செல்கிறார்கள். நாம் இப்படி புதுமையான எளிய தமிழ்ப் பெயர்களின் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டால் தமிழ்ப் பெற்றோர்களுக்கு உபயோகமாக இருக்கும், வட மொழிப் பெயர்களும் குறையும்” என்றார்.

புதிய தமிழ்ப் பெயர்களை பட்டியலிட்டு பொதுத் தளங்களில் வெளியிட வேண்டும் என்கிற திட்டம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது ஒரு சிறந்த தமிழ்ச் சேவையும் கூட. இதனால் தமிழ்ப் பெயர்களுக்கு சரியான வெளிச்சமும் ஆதரவும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

நண்பர் 1 மீண்டும் இதைப் பற்றி விரிவாகச் சொன்னார் - “நவீன தமிழனுக்கு நவீன தமிழ் வாழ்க்கைமுறை ஒன்றை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை. அது பெயர் வைப்பதிலும் சரி சினிமா பார்ப்பதிலும் சரி. வேட்டி கட்டி உழவு செய்தால் மட்டுமே தமிழன் என்ற அடையாளம் மாறி Levi Strauss pant and Aeropostale Shirt உடுத்தியிருக்கும் இன்றைய நவநாகரீக தமிழருக்கும் தமிழை கொண்டு சேர்க்கவெண்டும். இல்லயேன்றால் Levi Strauss pantஉம் தமிழ் வாழ்க்கை முறையும் வேறுபட்டு நின்றுவிடும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து!. அதே சமயத்தில் தமிழின் தரம் மாராமல், தூய்மை கெடாமல் கவனமாக செயல்படவேண்டும். ஆகையால் அது ஒரு கடினமான கூட்டு முயற்சியாய்தான் இருக்க வேண்டும். ஆனால் பலனோ பன்மடங்கு!

இந்த நவீன தமிழ் எல்லாருக்கும் அல்லவே! விரும்புவர்களுக்கு மட்டுமே. தமிழ் அப்படியே இருக்கும். காலம் மாறினாலும் தோற்றம் மாறாது என்கின்ற நிலைபாட்டைக் கடைபிடிப்பவர்க்கு என்றென்றும் classic tamil இருக்கின்றத்து! இப்படியாக நிரைய versions of Tamil (culture) நாம் ஏற்படுத்தினால் (நாம் முந்திக்கொள்ளவேண்டும், ஏனென்றால், அது எப்படியிருந்தாலும் ஏற்பட போகிறது, நாம் இப்பொழுதே நுழைந்தால் அதனை திட்டமிட்டு முறைபடுத்தலாம்) யாரையும் உள்வாங்கி ஒரு Inclusive Tamil Culture உருவாகி தமிழ் வெவ்வேறு வடிவங்களில் பரிமானங்களில் நிலைக்கும். பைபிள் எப்படி எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பல மூலைகளில் இன்று கிறுத்துவத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றதோ அது போல!

நண்பர் 2:
இன்றைய பெற்றோர்கள் வடமொழி பெயர் வேண்டும், இந்தி பெயர் வேண்டும் என அதனை நாடிச் செல்வதில்லை. ஆனால் பெயர் கொஞ்சம் ஆக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவ்வாறு அவர்கள் நினைக்கும் பொழுது ஒரு அந்நிய மொழி பெயர் தான் அவர்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. உதாரணமாக என்னுடைய ஒரு நண்பரின் மகன் பெயர் தர்ஷன். தரிசனம் என்று தமிழில் இந்தப் பெயர் இருந்திருந்தால் வைத்திருக்க மாட்டார். தர்ஷன் என்றால் ஸ்டைலாக உள்ளது.

அதுவும் தற்பொழுது சோதிடம் பார்த்து இந்த தமிழ் எழுத்தில் தொடங்கும் பெயரை தான் வைக்க வேண்டும் என முடிவு செய்கிறார்கள். தமிழ் முதல் எழுத்தாக இருக்க வேண்டும் என நினைத்து ஒரு வடமொழி பெயரை பிடிக்கிறார்கள். என்னுடைய உறவினர் ஒருவருக்கு தற்பொழுது பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தைக்கு
வி என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை வைக்க வேண்டும் என சோதிடம் பார்த்திருக்கிறார்கள். வி என்ற எழுத்தில் பெயர் கிடைக்கவே இல்லை என அலுத்துக் கொண்டார். கடைசியில் அவர் வைத்த பெயர் விபுஷா. "ஷா", "ஷ" போட்டு பெயர் வைப்பது இப்பொழுது அதிகரித்து விட்டது.

நான் என்னுடைய குழந்தைகளுக்கு பெயர் வைக்க நினைக்கும் பொழுது நானும் மற்ற பெற்றோர்களின் மனநிலையில் தான் இருந்தேன். பெயர் கொஞ்சம் ஸ்டைலாக தற்போதைய தலைமுறைக்கு ஏற்றது போல இருக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் கூடுதலாக தமிழ்ப் பெயராகவும் இருக்க வேண்டும் என நினைத்தேன். அது தான் பிரச்சனையாகி விட்டது. தற்போதைய தலைமுறைக்கு ஏற்ற நல்ல, சுருக்கமான தமிழ்ப் பெயர்கள் கிடைக்கவே இல்லை.

தமிழிப் பெயர்கள் என்றால் இணையத்தில் மணிமேகலை, மங்கையற்கரசி என்ற ரீதியில் தான் பெயர்கள் உள்ளன. என்னுடைய காலத்திற்கு ஏற்ற பெயர்கள் இணையத்தில் கிடைப்பதே இல்லை. மாறாக வடமொழிப் பெயர்கள் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன. தவிரவும் நம்மைப் போன்று சமுதாயத்தில் இருந்து விலகி இருப்போர் தான் தமிழ்ப் பெயரை தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். தற்போதைய பெற்றோர்கள் இணையத்தில் தேடுவது - Indian Baby names. அதில் கிடைக்கும் நல்ல பெயர்களை வைத்து கொண்டு போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

இந்தத் தருணத்தில் நண்பர் 3 உரையாடலில் நுழைந்தார். அவரது கருத்துக்களின் உண்மை உரைத்தாலும், எளிதில் ஒத்துக்கொள்ள சற்றுக் கடினமானதாக இருந்தன. அவை அடுத்தப் பதிவில்...

5 comments:

ஆயில்யன் said...

இணையத்தில் தமிழ் பெயர் பட்டியல் - உண்மைதான் இணையத்தில் தேட முனைப்பாக செல்லும் பெற்றோர்களுக்கு சற்றே ஏமாற்றம் அளிக்கும் நிலைமைதான்!

என் உறவினரில் ஒருவர் தன் மகனுக்கு தேவார பாடல்களிலிருந்து பெயரினை கண்டெடுத்தார்!

பழமைபேசி said...

நல்ல சிந்தனைக்குரிய இடுகை!

//இந்தத் தருணத்தில் நண்பர் 3 உரையாடலில் நுழைந்தார். அவரது கருத்துக்களின் உண்மை உரைத்தாலும், எளிதில் ஒத்துக்கொள்ள சற்றுக் கடினமானதாக இருந்தன. அவை அடுத்தப் பதிவில்..//

ச்சே... அடுத்த இடுகை எப்பங்க வரும்?

Yazhini said...

சகோதரி தாரா,

வாழ்த்துக்கள். பெயர் - குழந்தையின் காலம் முழுவது உள்ள அடையாளம். தமிழ் இலக்கியங்களில் அழகிய, புதுமையான பெயர்கள் பல உள்ளன. மேலும் உங்கள் முயற்சி போன்று, புதிய சொற்களையும் நாம் கண்டெடுக்கலாம். ஒலிப்பு, உயர்வு, அழகு பொருந்திய எந்த பெயர்களும் சிறப்பே !

பழமைபேசி said...

என்னுடைய நண்பர் வீட்டில், அவர் குழந்தைகளுக்கான பெயர்கள்:

வானொலி
பேரணி

http://maniyinpakkam.blogspot.com/2008/08/blog-post_16.html

தாரா said...

ஆயில்யன், யாழினி - கருத்துக்களுக்கு நன்றி.

யாழினி - அழகான தமிழ்ப் பெயர்!

பழமைபேசி - இன்னும் இரண்டொரு நாட்களில் அடுத்த இடுகை வரும் :-)

தாரா.