Thursday, August 06, 2009

தமிழகப் பயணம் 2009 - 3

வாசலில் எனக்காகக் காத்திருந்த அப்பாவைப் பார்த்ததும் தூக்கிவாரிப்போட்டது! புற்று நோய் பரவிய தேகம் சுருங்கி...எலும்பும் தோலுமாக, பலவீனமாக, இடுப்பில் சதை இல்லாததால், மார்பு வரை தூக்கிக் கட்டிய லுங்கியுடன்...என் நெஞ்சில் ரத்தம் வழிந்தது. ஜம்மென்று டிப் டாப்பாக உடை அணிந்து தனது ஸ்கூட்டரில் தான் நேசித்த பல்கலைக்கழகத்திற்கு ஆர்வத்துடன் தினம் சென்ற அப்பாவா இது?? அதை விட பரிதாபமாக இருந்தது அப்பாவிற்கு நர்ஸ் வேலை பார்த்துப் பார்த்து சோர்ந்து போயிருந்த அம்மாவைப் பார்த்தால்! ஒரு கணம் யோசித்தேன், இங்கிருந்தபடியே எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இவர்களுடனேயே இருந்துவிடலாமா என்று. முடியவில்லையே?! இப்படி திண்டாடும் பல சூழ்நிலைக் கைதிகளில் நானும் ஒருத்தி :-(

நிலமையின் இறுக்கத்தை மாற்ற, "அப்படியே கல்லாப்பெட்டி சிங்காரம் மாதிரியே இருக்கிறீர்கள்" என்றேன் அப்பாவிடம். அடுத்து வந்த நாட்களிலும், முடிந்த வரை இயல்பாக, கலகலப்பாக இருக்க எல்லாருமே முயற்சி செய்தோம்.

திருச்சியில் வெயில் அனலாகத் தகித்தது. காலை 8 மணி முதல் 10 மணி வரை மின்சார நிறுத்தம் வேறு! ஆனால் அந்த 2 மணி நேரம் நான், அப்பா, அம்மா, அக்கா நால்வரும் வாசலில் அமர்ந்து விசிறிக்கொண்டே எதாவது குடும்பக் கதை பேசிக்கொண்டிருப்போம். அப்படி ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது, வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து எங்கள் அத்தை இறங்கினார். கையில் நிறைய பைகள். "வாங்க எல்லாரும் காலை சிற்றுண்டி சாப்பிடலாம்" என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார். பையில் இருந்த உணவு பாக்கெட்டுகளை பிரித்து அடுக்கினார். இட்லி, பொங்கல், வடை, சட்னி, சாம்பார், கேசரி என்று வகையாக வகையாக வாங்கிவந்து அசத்திவிட்டார். திருச்சி பஸ் நிலையம் அருகில் உள்ள சங்கீதாஸ் உணவகத்தில் வாங்கினாராம். ஆகா, என்ன அருமையான சுவை! நன்றாக வளைத்துக் கட்டினோம்.

நம்ம ஊரில் சமையல், சாப்பாடு என்பது இப்போது மிகவும் சுலபமாகிவிட்டது. வேண்டும் என்கிற போதெல்லாம் பார்சல் வாங்கிக்கொள்கிறார்கள். எல்லாவற்றிற்கும் 'ரெடிமேட் மிக்ஸ்' இருக்கிறது - பஜ்ஜி மிக்ஸ், பக்கோடா மிக்ஸ், வடை மிக்ஸ் இதெல்லாம் 'சக்தி', 'ஜானகிராம்' போன்ற நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அதேபோல் இனிப்பு, கார பதார்த்தங்கள் எதுவாக இருந்தாலும் சுவை குன்றாமல் கடைகளிலேயே கிடைக்கின்றன. சென்னையில் அடையார் க்ராண்ட் ஸ்வீட்ஸில், "abroad package" செய்து தாருங்கள் என்று சொன்னால் அருமையாக, நேர்த்தியாக சிந்தாமல் சிதறாமல் பாக் செய்து தருகிறார்கள்!! ஆனால் எது எப்படி இருந்தாலும், இங்கே அமெரிக்காவில் வந்திறங்கும் போது, "Do you have any food items?" என்று அதிகாரிகள் கேட்கும் போது 'பக்' கென்று தான் இருக்கிறது.

அத்தை கொண்டு வந்த அருமையான காலை உணவைப் பற்றி சிலாகித்து முடிக்கு முன்பே, மற்றுமொரு பம்பர் பரிசு அடித்தது! எனக்கு நான்கு மாதங்கள் முடிந்திருந்ததால், ஐந்தாவது மாதம் செய்யும் 'கட்டு சாதம்' நிகழ்வை முறைப்படி செய்யவேண்டும் என்று சொல்லி அதற்கு நாளும் குறித்தார் அத்தை. அன்றைக்கும் வீட்டிற்கு வந்திறங்கியது வரிசையாக சாத வகைகள். கல்கண்டு சாதம்(அக்கார வடிசல்), மாங்காய் சாதம், சாம்பார் சாதம், கொத்தமல்லி சாதம், தயிர் சாதம், உருளைக்கிழங்கு வறுவல், வாழைக்காய் சிப்ஸ் - இவற்றை உறவினர்கள் செய்து எடுத்து வந்திருந்தார்கள். அம்மாவின் பங்கிற்கு தயிர் சாதம், வடை, பாயசம் செய்திருந்தார். நான் எத்தனையோ 'pot luck' களை அமெரிக்காவில் பார்த்திருந்தாலும், எனக்கே எனக்கென்று அன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த pot luck என் மனதை நெகிழ வைத்தது. இந்த கவனிப்பு கொடுத்த மிதப்பில் இருந்த நான், சற்று அப்பாவை மறந்திருந்தேன். அப்பாவும், இந்த கலகலப்பான சூழ்நிலையால் தன் வலிகளையும் கவலைகளையும் மறந்திருந்தார். ஒரு நாள் தனக்கு இரண்டே ஆசைகள் தான் எஞ்சி இருக்கின்றன என்றார். ஒன்று, எனக்குப் பிறக்கப் போகும் குழந்தையைப் பார்த்துவிட வேண்டும். இரண்டாவது, அக்கா திருச்சியில் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டில் சில நாட்களாவது குடியிருக்கவேண்டும் என்பதே அவருடையா இரண்டு ஆசைகள். திசம்பர் மாதம் பிறக்கப்போகும் என் குழந்தையை அப்பா பார்த்துவிவிட வேண்டுமென்று என்னல் பிரார்த்தனை தான் செய்ய முடியும். குழந்தைப் பிறப்பதை துரிதப்படுத்த முடியாது. ஆனால் அந்த புது வீடு கட்டும் வேலையை துரிதப்படுத்தாலாம் என்று முடிவு செய்து அக்கா களத்தில் இறங்கினாள். நானும் அக்காவுடன் இணைந்தேன்.

திருச்சியில் யாராவது வீடு கட்டவேண்டுமா? எங்களிடம் ஆலோசனைக் கேளுங்கள் என்று சொல்லுமளவு நானும் அக்காவும் அதில் அவ்வளவு அனுபவங்களைப் பெற்றோம்.

அடுத்தப் பதிவில் அந்த அனுபவங்கள்...

3 comments:

ரவியா said...

பல வருடங்கள் முன் அம்மாவை பார்க்க போயறிந்தேன். அதனால் "பக பக்"

Boston Bala said...

நெகிழ்வாக இருக்கிறது.

நாகு (Nagu) said...

உங்கள் அப்பாவின் இரண்டு ஆசைகளும் நிறைவேற என் பிரார்த்தனைகள்.