Thursday, January 08, 2009

பெரியண்ணன்

துளசியக்கா தன் அக்காவைப் பற்றி கிட்டத்தட்ட 15 பகுதிகள் எழுதியிருந்ததை படித்ததிலிருந்து என் அக்காவைப் பற்றியும் அண்ணன்களைப் பற்றியும் சுவையான நினைவுகளை எழுதவேண்டுமென்கிற ஆவல் எழுந்தது. முதலில் என் பெரியண்ணன் பற்றி.

பெரியண்ணன் என்னைவிட 15 வருடங்கள் மூத்தவர். எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து அவர் வீட்டிலேயே இல்லை. அதனால் அவரது இளமைக் காலத்தைப் பற்றி பின்னால் மற்றவர்கள் சொல்லித் தான் எனக்குத் தெரியும். எங்க குடும்பத்தோட பெருமை அவர் என்று சொல்லலாம். படிப்பில் புலியாம். பரீட்சை சமையங்களில் மொட்டை மாடியில் தன் வகுப்பு மாணவர்களுக்கெல்லாம் பாடம் சொல்லிக்கொடுப்பாராம். பள்ளிக்கூடத்தில் நாடகம், நடனம் என்று எல்லாவற்றிலும் வெளுத்து வாங்குவாராம். 'Come September' ('அன்பே வா' என்ற தமிழ்ப் படம் இதனை தழுவி எடுக்கப்பட்டது) என்று அருபதுகளில் வெளிவந்த ஒரு புகழ் பெற்ற ஆங்கிலப்படம் இருக்கிறது. அதன் theme இசைக்கு அண்ணன் பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடி அசத்தியதாக பெருமையாக அம்மா சொல்லுவார். PUC இல் கடலூர் மாவட்டத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். இந்தச் செய்தி வந்த மக்கிப் போன செய்தித்தாளை இன்னமும் என் அம்மா தன் பீரோவில் புடவைகளுக்கு அடியில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.

எனக்கு 3 அல்லது 4 வயதிருக்கும்போதே பெரியண்ணன் சென்னை ஐ.ஐ.டியில் பி.டெக் படிக்கச் சென்றுவிட்டார். எப்போதாவது விடுமுறைக்கு சிதம்பரம் வருவார். கூடவே தனது zimbabwe, Iran நாட்டு நண்பர்களை அழைத்து வருவார். தஸ்புஸ் என்று ஆங்கிலத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை நான் வியப்பாக வேடிக்கைப் பார்த்தது நினைவிருக்கிறது . அண்ணன் விடுமுறைக்கு வருவதில் எனக்குப் பிடித்ததே அவர் சென்னையிலிருந்து வாங்கிக்கொண்டு வரும் இனிப்புகள்! இப்போது 'க்ருஷ்ணா ஸ்வீட்ஸ்' போல் அப்போதெல்லாம் 'இம்ப்பாலா'(Impala) என்று ஒரு இனிப்புக்கடை சென்னையில் மிகவும் பிரசித்தி. அந்தக் கடையிலிருந்து குலாப் ஜாமூன், பால்கோவா வாங்கிவருவார்.

நான் +1 படிக்கையில், பெரியண்ணன் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இரண்டு வருடங்கள் வேலை செய்தார். நான் அதே பொறியியல் கல்லூரியில் செரும் போது, அவர் பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரிக்குச் சென்றுவிட்டார். நல்லவேளை! அண்ணனிடமிருந்து தப்பித்தோம் என்று நிம்மதியாக இருந்தால், அதில் மண் விழுந்தது!! முதல் வருடத்தில் முதன் முதலில் ஒரு தேர்வு எழுதி முடித்தேன். தேர்வுத் தாளை திருத்தி என் கையில் கொடுத்த ஆசிரியர், "ரவியின் தங்கை தானே நீங்கள்? இவ்வளவு கம்மியா மார்க் எடுத்திருக்கீங்களே?! அடுத்தமுறையாவது அவர் பெயரை காப்பாற்றுங்கள்" என்றார். எனக்கு ரொம்ப அவமானமாகப் போயிற்று :-(
மற்றொரு முறை ஒரு பயிற்சியில், ஒரு கணக்கை போடுவதற்கு calculator உபயோகித்த என்னைப் பார்த்து ஒரு ஆசிரியர், "ரவியின் தங்கைக்கு calculator தேவையா?" என்றார் நக்கலாக! என் அண்ணன் அந்தக் கல்லூரியில் இல்லாதபோதும், நான் அங்கிருந்த நான்கு வருடங்களும் 'ரவியின் தங்கை' என்கிற பாரத்தைச் சுமக்கவேண்டியிருந்தது. நான் அவருடைய தங்கை என்பதற்காக அதிகப்படியான மதிப்பெண் போன்ற ஸ்பெஷல் சலுகையெல்லாம் ஒன்றும் கிடைக்கவில்லை!! அண்ணனின் அறிவைப் பற்றி நான் எப்போதுமே பெருமை கொண்டிருந்தாலும், அவரைப் போலவே நானும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்புகள் என் மீது தினிக்கப்படும்போது எரிச்சலாக இருந்தது. என் பெற்றோர்கள் கூட என்னையோ, என் அக்காவையோ, சின்ன அண்ணனையோ பெரியண்ணனுடன் ஒருபோதும் ஒப்பிட்டுப் பெசியதில்லை!

கடைசியில் அண்ணனின் பெயரை காப்பாற்றாமலேயே கல்லூரிப் படிப்பை முடித்தேன் :-)

இந்த 'ரவி' எதிர்பார்ப்பு என்னோடு நிற்கவில்லை. எனக்குப் பின் 10 வருடங்களுக்குப் பிறகு அதே கல்லூரியில் சேர்ந்த பெரியண்ணனின் மகனும் நன்றாக மாட்டிக்கொண்டான். அவனுடைய தேர்வுத் தாள்களைப் பார்த்து, "புலிக்குப் பிறந்தது பூனையாகிவிட்டதே" என்று ஆசிரியர்கள் வருத்தப்பட்டார்களாம்!!

சிறு வயதிலிருந்தே நாங்கள் சேர்ந்து இல்லாததால் பெரியண்ணனுக்கும் எனக்கும்மிடையே இருந்த ஒரு நீண்ட இடைவெளி அண்ணனின் திருமணத்திற்கு பின் அண்ணியால் குறைந்தது. அடிக்கடி பாண்டிச்சேரி போய் அண்ணன் வீட்டில் தங்குவேன். அப்போது தான் அண்ணனிடம் பேசிப் பழக சந்தர்ப்பம் கிடைத்தது. அண்ணன் ஆங்கிலப் பாடல்கள் நிறைய கேட்பார். அவருடைய அபிமான குழு CSNY. Crosby, Stills, Nash, Young என்ற நான்கு இசைக்கலைஞர்களை கொண்ட குழு இது. எனக்கு அப்போது அந்த பாடல்களில் ஆங்கில உச்சரிப்புகள் புரியாது. எனக்காக அண்ணன் அந்த வார்த்தைகளை விளக்குவார். அர்த்தமும், பின்னனியும் புலப்படும் போது, அந்தப் பாடல்களைக் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். இன்னும் அந்தப் பாடல்கள் என் நினைவில் நீங்காமல் இருக்கின்றன. "Thinking to myself today", "Our House", "Oh Cameal", Beatles இன் "I once had a girl", Eagles இன் 'Hotel California' - இவற்றையெல்லாம் என் அண்ணன்கள் கிட்டாரும் கையுமாக பலமுறை பாடிக்கேட்டிருக்கிறேன்.

மேலும், பொறியியல் கல்லூரிப் படிப்பின் போது நான் திண்டாடியபோதெல்லாம், கடினமான பாடங்களை அவர் எனக்கு பல முறை லாவகமாக, எளிதாக விளக்கியிருக்கிறார். கல்லூரி இறுதி ஆண்டில் என்னுடைய ப்ராஜக்ட் வொர்க்கை(project work) திறமையாக செய்து முடிக்க முழு உதவி செய்தார். அவர் மூளையில் கால் வாசியாவது எனக்கு இருக்கக்கூடாதா என்று நான் பல முறை ஏங்கியிருக்கிறேன். அண்ணன் தன் படிப்பறிவை எனக்குத் தந்து என்னை வளர்த்தார்... என்னால் அவருக்கு நான் என்ன செய்துவிட முடியும்? ஏதோ அவருக்குப் பிடித்த மட்டன் குழம்பு, மோர்குழம்பு, பருப்புத் துவையல் என்று அவர் வாசிங்டன் டிசி வரும்போதெல்லாம் இப்போது சமைத்துப் போடுகிறேன் :-)

அடுத்தப் பதிவில் சின்ன அண்ணன் பற்றி...

7 comments:

Anonymous said...

ஏதோ அவருக்குப் பிடித்த மட்டன் குழம்பு, மோர்குழம்பு, பருப்புத் துவையல் என்று அவர் வாசிங்டன் டிசி வரும்போதெல்லாம் இப்போது சமைத்துப் போடுகிறேன்.

நன்றி கடனோ !!!

நாஞ்சில் மகி

Anonymous said...

அண்ணன் தங்கை என்று "பாச மலர்" போல் கதை விடுவீர்கள் என்று நினைத்து தான் படிக்க ஆரம்பித்தேன். இயல்பாக அவரை பற்றிய தங்கள் நினைவுகளை வெளிப்படுத்தி இருந்தீர்கள்.

அண்ணன் படித்த பள்ளி/கல்லூரியில் சேரும் அனைத்து தம்பி/தங்கைகளுக்கும இந்த அனுபவம் கண்டிப்பாக இருக்கும். எனக்கும் உண்டு. : )

யாத்ரீகன் said...

:-) .. பெரியண்ணனாய் பிறப்பதும், அடுத்து வரும் தம்பி/தங்கைகள் மிகப்பெரும் வயது வித்தியாசத்தில் இருப்பது ஒரு விதத்தில் கொடுமை :-) , அடுத்தடுத்த தம்பி/தங்கைகளுக்கு வீட்டில் அவரவர் வயதில் விளையாடுவதில் ஆரம்பித்து, எண்ணங்களை பகிர்ந்து கொள்வது, அடித்துக்கொள்வது என அத்தனை இன்பங்களையும் பகிர்ந்துகொள்ள ஆள் உண்டு.. ஆனால் இந்த பெரியண்ணனிடம் எல்லொரும் ஒருவித தூரம் காப்பது செம கடி.. விளையாடும் வயதில் யாருமில்லாமல் இருப்பது.. அடித்துக்கொள்ளும் வயதில் பொடிசுகளாய் இருப்பது, எண்ணங்களை பகிர்ந்துகொள்ள இருக்கையில் சிற்வர்களாய் மற்றவர்கள் இருப்பது.. எல்லோரும் பெரியவர்களாயும் .. அந்த சிறு வயதில் உருவான distance இன்னும் இருப்பது.. ஹிம்ம்ம்ம்.. அது பெரியண்ணங்களுக்கே உள்ளிருக்கும் ஒருவித வருத்தம் :-(

ஆளவந்தான் said...

//
என் பெற்றோர்கள் கூட என்னையோ, என் அக்காவையோ, சின்ன அண்ணனையோ பெரியண்ணனுடன் ஒருபோதும் ஒப்பிட்டுப் பெசியதில்லை!
//

என்னோட கிராமத்திலும் இதே பிரச்னை தான், நாளுக்கு ஒரு தடவையாவது, “இங்க பாரு, படிச்சா தான் அந்த அண்ணன் மாதிரி பெரியாளா வர முடியும் இல்ல மாடு தான் மேய்க்கணும்” என்ற பேச்சு என்னைக் க்டந்து எதாவது ஒரு சிறுவனை சென்றடையும்..

பெரும்பாலும் இந்த மாதிரி பேச்சு அந்த பையனுக்கு என் மேல் ஒரு கோபத்தையே ஏற்படுத்தும்..

ஒரு வெற்று புன்னகையை வீணாக்கிவிட்டு வருவேன். வேறு வழி?

Anonymous said...

மிகவும் வேலை பளுவோ? தங்கள் சின்ன அண்ணன் திவா பற்றி எழுதுகிறேன் என்று சொன்னீர்களே?

குடந்தை அன்புமணி said...

ரவி அண்ணனை பற்றி, அவர் படிப்பை முடித்து பலவருடங்கள் கழித்தும் பேசப்படுகின்றது என்றபோதே அவரின் பெருமை விளங்குகிறது. இருந்தாலும் யாரையும் யாருடனும் ஒப்பிட்டு பேசப்படுவதில் எனக்கும் உடன்பாடு இல்லை.

Sinthu said...

ஐயோ கடைசியா சாப்பாட்டைச் சொல்லி என்னைக் குழப்பி விட்டிட்டீங்களே...
இங்க நல்ல சாப்பாடும் தர மாட்டாங்க, நல்ல சாப்பாட்டை சமைள்ள நேரமும் தர மாட்டாங்க...
அருமையான பதிவு...