Tuesday, January 03, 2006

நியூஜெர்சியில் நியூ இயர்!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நான் புத்தாண்டு வார இறுதியை நியூ ஜெர்சியில் வசிக்கும் என்னுடைய சினேகிதியின் குடும்பத்துடன் கழித்துவிட்டு நேற்று வீடு திரும்பினேன். சில சுவையான அனுபவங்கள்...

சென்ற சனிக்கிழமை மாலை நுவர்க் விமான நிலையத்தில் என்னை அழைத்துக்கொண்டார்கள் வினியும் (சினேகிதியின் பெயர் சுருக்கம்) அவள் கணவரும். வாசிங்டன் டிசியை விட்டு வெளியே வந்ததில் ஒரு புறம் மகிழ்ச்சி, வெகு நாட்களுக்குப் பிறகு வினியைப் பார்த்ததில் ஒருபுறம் மகிழ்ச்சி. குதூகலத்துடன் பேசியபடி கார் பயணம் தொடர்ந்தது. வீட்டை நெருங்குகையில், வினியின் கணவர்,
"அவன் வீட்டில் தனியா என்ன செய்யறானோ! பாவம்!" என்றார்.
"இன்னேரம் தூங்கியிருப்பான்" என்றாள் வினி.
"அவனுக்கு சாப்பாடு ரைட் எய்ட்(RiteAid) டில் வாங்கிட்டு போய்டலாம்"
"ஐயோ! இந்த சாப்பாடு அவனுக்கு பிடிக்காது. நாளைக்கு Costco லயே வாங்கிக்கலாம்"

எனக்குத் தெரிந்து வினிக்கு ஒரே ஒரு பெண் பிள்ளை தான். யாரை "அவன்" என்று குறிப்பிடுகிறார்கள் என்று நான் குழம்ப, அது "நீமோ" என்கிற அவர்களது செல்ல பூனைக்குட்டி என்று தெரிய வந்தது.
Image Hosted by ImageShack.us

"செல்ல" என்பது அவர்கள் அந்தப் பூணை மேல் வைத்திருக்கும் அன்பை குறைவாக மதிப்பிடும் வார்த்தை என்பது வினியின் வீட்டுக்குப் போன பின்பு புரிந்துகொண்டேன். வீட்டிற்குள் நுழைந்தவுடன் வினியும் அவள் கணவரும் நீமோவை விட்டு இரண்டு மணி நேரம் பிரிந்திருந்ததற்காக புலம்பி, நீமோவைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்து கொஞ்சத்தொடங்கிவிட்டார்கள். பல நாட்கள் கழித்து அவர்களைப் பார்க்க வந்திருந்த நான் வாசலில் பெட்டியுடன் தனித்து விடப்பட்டவளாய் நின்றுகொண்டிருந்தேன்! நான் அங்கிருந்த இரண்டு நாட்களும் ஒரே நீமோ புராணம் தான்! வீட்டிற்குள் ஒரே ஜில்லென்று குளிராக இருந்தது. ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு, போர்வையைப் போர்த்திக்கொண்டு நான் தடுமாறிக்கொண்டிருந்தேன். என்னை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. நீமோ தூங்கிக்கொண்டிருந்த போது, அதனருகில் ஒரு சின்ன ஹீட்டரைக் கொண்டுவந்து வைத்தாள் வினி! அடிப் பாவி, இந்த ஹீட்டரை என் கண்ணில் காட்டவேயில்லையே என்று நான் கோபத்துடன் சொல்ல, "பாவம்டி, வாயில்லா ஜீவன், குளிர் தாங்கமாட்டான்" என்றாள்.

நான் வினி வீட்டிற்கு வந்த அன்று சமையலைறையில் ஒரு பாத்திரத்தில் பாதாம் பருப்பை ஊற வைத்திருந்தாள். எனக்காக ஸ்பெஷலாக பாதாம் கீர் செய்வதற்கு என்று சொன்னாள். சரி, அன்று இரவு உணவின் போது பாதாம் கீர் குடிக்கலாம் என்று ஆவலாக இருந்தேன். ஆனால் பாதாம் ஊறிக்கொண்டேதான் இருந்தது. மறு நாள் காலையும் பாதாம் ஊறிக்கொண்டிருந்தது. மதியம், மாலை, இரவு...ஊறிக்கொண்டேயிருந்தது. அடுத்த நாள் காலையும் பாதாம் அப்படியே இருந்ததால், பொறுமையிழந்து, "இதை எப்பதான் அரைக்கப்போற?" என்று கேட்டேன். "நேற்றே அரைக்கலாமென்று நினைத்தேன். ஆனால் நான் மிக்ஸி போட்டால் அந்தச் சத்தத்தில் நீமோ ரொம்ப பயந்துவிடுவான். அதனால் தான் இன்னும் அரைக்காமல் வச்சிருக்கேன்" என்றாளே பார்க்கனும்! என் இதயத்தையே மிக்ஸியில் போட்டு அரைத்ததைப் போல் உணர்ந்தேன்.

நீமோவின் மேல் பொறாமையும், வினியின் மேல் வருத்தமுமாக இருந்த எனக்கு திங்களன்று ஒரு காலை நேர சந்திப்பு மனத் திருப்தியை அளித்தது. பத்மா அரவிந்தை அவருடைய வீட்டில் சந்தித்தேன். முன்பே அவரிடம் மின் அஞ்சல் மூலம் பேசி காலை 10 மணிக்கு சந்திப்பதாகச் சொல்லியிருந்தேன். வினியும் உடன் வந்தாள். அழகான வீடு, எளிமையாக பத்மா. அன்புடன் வரவேற்றார். எங்களிருவரில் யார் தாரா என்று சற்று தயங்கி பின் நீங்கள் தான் தாராவாக இருக்கவேண்டும் என்று என்னைச் சரியாக அடையாளம் கண்டுகொண்டார். சூடான டீயுடன் சுவாரஸ்யமாக அலவலாவிக்கொண்டிருந்தோம். போத்தீஸ்வரியின் கேஸ் விவகாரத்தைப் பற்றி விரிவாக விளக்கினார். இந்தக் கேஸ¤க்குகாக முன்பே நான் எழுதி வைத்திருந்த காசொலையை பர்ஸில் இருந்து எடுத்துக்கொண்டிருக்கும் போதே, வினியும் தன் பர்ஸிலிருந்து காசோலையை எடுத்து எழுதி பத்மாவிடம் கொடுத்தாள். நன்றியுடன் பெற்றுக்கொண்டார் பத்மா. வினி ஒரு படி மேலே போய், போத்தீஸ்வரி கார் லைசன்ஸ் வாங்கிய பிறகு தன்னுடைய பழைய காரை தற்காலிக உபயோகத்திற்கு தருகிறேன் என்றும் பத்மாவிடம் சொல்ல, எனக்கு என் சினேகிதியை நினைத்துப் பெருமையாக இருந்தது. நீமோ என்கிற பூணையினால் எனக்குக் கிடைக்காத பாதாம் கீருக்காக வினியை மன்னிக்கவும் முடிந்தது.

சுமார் ஒன்றரை மணி நேரம் பத்மாவின் நேரத்தைப் போட்டுத்தள்ளிவிட்டு விடைபெற்றோம். பேசியதில் பல ஆக்கபூர்வமான தகவல்கள் கிடைத்தன. அவற்றின் அடிப்படையில் அடுத்தப் பதிவு எழுதுகிறேன்.

5 comments:

KARTHIKRAMAS said...

பேசாமால் வீட்டுக்குள் நான்கு கால்களில் நடந்திருந்தால் ஒருவேளை ஹீட்டர் கிடைத்திருக்கும் :-)

துளசி கோபால் said...

நீமோவின் 'பெற்றோருக்கு' வாழ்த்துக்கள்.

எப்பவுமே இந்த 4 கால்களுக்குத்தான் மரியாதையும் அன்பும் கலந்து கொடுக்க வேணும்.
இப்படிக்கு

ஜிகே என்ற கோபாலகிருஷ்ணனின் அம்மா
மியாவ்

Thara said...

You too Thulasi??? :(

Thara

துளசி கோபால் said...

தாரா,

நம்ம வீட்டிலும் முதலிடம் இந்தப் பசங்களுக்குத்தான்.
குழம்புக்கு அரைக்கக் கொஞ்சம் யோசிக்கத்தான் வேணும்.

லிவிங் ரூம் நடுவில் படுத்திருக்கும் ஜிகே யைச் சுத்திச்சுத்தித்தான் போகணும்:-)

சரி, போனாப்போகட்டும். நீங்க நம்மூட்டுக்கு வாங்க. உங்களுக்கு முன்னுரிமை கொடுக்க முயற்சிக்கிறேன்:-)

michelwilliams1163 said...

I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. My blog is just about my day to day life, as a park ranger. So please Click Here To Read My Blog

http://www.juicyfruiter.blogspot.com