Monday, October 17, 2011

வாசிங்டன் நகரில் செய்தி ஊடகங்களுக்கான அருங்காட்சியகம் - பாகம் ஒன்று

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதுவதற்கு ஒரு உருப்படியான விசயம் கிடைத்தது.

வாசிங்டன் மாநகரம் என்பது  அருங்காட்சியகங்களின் குவியல் என்று அனைவரும் அறிந்ததே.   பல வருடங்களாக வாசிங்டன் டிசி பகுதியில் நான் வசித்தாலும்,  ஒரு அருங்காட்சியகத்தைக்கூட முழுமையாகப் பார்க்கவில்லை.  ஒரு மணி நேரத்திற்குப் பின் சலிப்புத் தட்டி விடுகிறது.  ஆனால் ஒரு நாள் முழுவதும் இருந்தும் நேரமே பற்றவில்லை ஒரு அருங்காட்சியகத்தில் மட்டும்.  2007 ஆம் ஆண்டு "Newseum" என்றொரு அருங்காட்சியகம் தொட ங்ககப்பட்டது.  அதாவது ஊடகச் செய்திகளுக்கான பிரத்தியேகமான ஒரு அருங்காட்சியகம்.  இத்தனை ஆண்டுகளாக அதனைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், போய் பார்க்கும் சந்தர்ப்பம் சென்ற வாரம் தான் கிடைத்தது.  கட்டிட அமைப்பு, காட்சிப் பொருட்களின் வடிவமைப்பு, விவரங்கள், ஆங்காங்கே பெரிய தொலைக்காட்சித் திரைகளில் சிறப்புப் பேட்டிகள், குறும்படங்கள், என்று பிரமிப்பூட்டும் வகையில் இருந்தது இந்த அருங்காட்சியக அனுபவம்.

குறைந்தது 5 மணி நேரங்கள் ஆகும் சாவகாசமாக 6 தளங்களையும் பார்த்து முடிக்க.  பத்திரிக்கை/ஊடகம் போன்ற துறை களில் ஈடுபாடு உடையவர்கள் அங்கேயே இரவு ஓரமாகத் தூங்கிவிடலாம். அவ்வளவு விசயங்கள் இருக்கின்றன படித்தும் பார்த்தும் தெரிந்துகொள்ள.  அதில் சிலவற்றை பற்றி மட்டும் இங்கே எழுதுகிறேன்.

நேரில் காணக் கிடைக்காத, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு அரிய காட்சிப் பொருட்களை அங்கே கண்டேன்.

1. பெர்லின் சுவற்றின்(Berlin Wall) சில பகுதிகள்:

ஆம்! உண்மையான இடிக்கப்பட்ட பெர்லின் சுவற்றிலிருந்து  சில பகுதிகளைக் கொண்டு வந்து இங்கே காட்சியாக வைத்திருக்கிறார்கள்.  காரணம், செய்தி ஊடகங்களுக்கு பெர்லின் சுவர் கட்டப்பட்ட காலகட்டம் மிக முக்கியமான ஒன்று.  கம்யூனிச கிழக்கு ஜெர்மனியில் ஊடகங்கள் அரசு கட்டுப்பாட்டுக்குள் இருந்தன.  அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதைத்தான் நிருபர்கள் பத்திரிகைகளில் எழுத முடிந்தது.  ஜனநாயக மேற்கு ஜெர்மனியில் ஊடகங்களுக்குக் சுதந்திரம் இருந்தது.  யாரும் எளிதில் கடந்து செல்ல முடியாத இந்த கொடிய சுவற்றைத் தாண்டி தகவல்கள் கடந்து சென்றதில் செய்தி ஊடகங்களுக்கு முக்கிய பங்கு இருந்தது.  பெர்லினுக்குச் சென்று இந்தச் சுவற்றைப் பார்க்கவா முடியும்?  ஒரு நாட்டை இரண்டு கருத்தியல்கள் கொண்ட இரு பகுதிகளாக 28 வருடங்களாகப் பிரித்து வைத்திருந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுவற்றை இப்படி  தொட்டு விடும் தூரத்தில் பார்த்தது பிரமிப்பாக இருந்தது.

2. நியூயார்க் உலக வர்த்தக கோபுரத்தின் உச்சியில் இருந்த "antena" வின் உடைந்த பகுதி: 


செப்டம்பர் 11, 2001 அன்று நியூயார்க் உலக வர்த்தக கோபுரங்களின் மீதான பயங்கரவாதிகளின் விமானத் தாக்குதலின் போது உடைந்து விழுந்த இந்த antenna வினால் பல தொலைகாட்சி மற்றும் வானொலி ஒளிபரப்புகள் தடைபட்டன.  செய்தித் துறையைச் சேர்ந்த பல நிருபர்கள், புகைப்பட நிபுணர்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த பயங்கரவாத நிகழ்வைப் பதிவு செய்தார்கள் என்பதை நாம் அறிவோம்.  மேலும் கோபுரங்களிம் மீது மோதிய ஒரு விமானத்தில் உள்ள சில கருவிகள், பயணிகளின் செல் தொலைபேசிகள் போன்றவற்றையும் காட்சிப் பொருளாகப் பார்த்தபோது மனதிற்குச் சங்கடமாக இருந்தது.  9-11 நிகழ்வைப் பற்றிய ஒரு குறும்படம் ஒரு சின்ன அறையில் ஓடிக்கொண்டிருந்தது.  கோபுரங்கள் இடிந்து விழுவது, பொது மக்கள் பயந்து ஓடுவது, இறந்தவர்களின் உறவிணர் பேட்டி போன்றவை திரையில் ஓடிக்கொண்டிருன்தது.  பார்வையாளர்கள் பக்கமிருந்து ஒன்றிரண்டு விசும்பல் சத்தம் காதில் கேட்டது.

3.  ஒரு குற்றவாளியின் மிரட்டல் கடிதம்:

FBI க்கென்று தனியாக ஒரு பகுதி இருக்கிறது.  FBI நிறுவனம் கொடுத்து வைத்த ஒன்று.  அமெரிக்கச் செய்தி ஊடகங்களின் மொத்த ஆதரவும் அதற்கு இருந்தது.  தேசத்தை தீய சக்திகளிடமிருந்து காக்க வந்த காவல் தெய்வங்களாக FBI அதிகாரிகளை ஊடகங்கள் கொண்டாடின.  ஹாலிவுட் திரைப்படங்களில் கறுப்பு கோட் சூட், கறுப்புக் கண்ணாடி சகிதம் கம்பீரமாக வந்து, மிகச் சாதுர்யமாக குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் இந்த FBI  அதிகாரிகளின் மீது எனக்கும் ஒரு தனி ஈர்ப்பு உண்டு.  FBI  கையாண்ட பல முக்கியமான வழக்குகளின் செய்திக் குறிப்புகள் இங்கே உள்ளன.  என்னை மிகவும் கவர்ந்த ஒரு காட்சிப்பொருள், ஒரு குற்றவாளி பணம் கேட்டு மிரட்டி எழுதிய ஒரு கடிதம்!!!  கதைகளிலும் திரைப்படங்களிலுமே இதுவரை நான் இப்படிப்பட்ட கடிதங்களை பார்த்திருக்கிறேன்.  ஒரு குற்றவாளி பெண்ணைக் கடத்தி வைத்துக்கொண்டு, தன் சகாக்களை சிறையிலிருந்து விடுதலை செய்யவில்லையேன்றால் அந்தப் பெண்ணைக் கொன்றுவிடுவேன் என்று தன் கைப்பட எழுதிய அந்தக் கடிதத்தைப் பார்த்ததும் எனக்கு உடல் சில்லிட்டது!!!

அடுத்து நான் பார்த்தது புலிட்சர் விருது பெற்ற புகைப்படங்கள் பகுதி.  Eddie Adams என்ற புலிட்சர் விருது பெற்ற ஒரு பத்திரிக்கையாளர், "If it makes you laugh, if it makes you cry, if it rips out your heart , that's a good picture" என்று சொல்லியிருக்கிறார்.  உண்மைதான்!  அங்கிருக்கும் சில புகைப்படங்கள் என் மனதைக் குத்திக் கிழித்தன.  அந்தப் புகப்படங்கள் பற்றி அடுத்தப் பதிவில்.

தொடரும்...







Wednesday, August 24, 2011

முப்பது வினாடி திகில்! - நேற்று நடந்தது...

திகிலான ஆங்கிலத் திரைப்படங்கள் எனக்குப் பிடிக்கும்.  அதிலும், இயற்கை பேரழிவு பற்றிய "Volcano", "Earthquake", "Airport", "Day After Tomorrow" போன்ற படங்கள் ரொம்பவே பிடிக்கும்.  இதுவரை திரையில் பார்த்து அனுபவித்த அந்த "திகில்" உணர்வை நேற்று நேரிலேயே அனுபவித்து விட்டேன்!!!

என்ன நடந்தது?

நீண்ட நாட்களாக எதுவும் வலைப்பதிவில் எழுதவில்லை.  ஏதாவது எழுதலாம் என்று தினமும் நினைப்பேன், ஆனால் எழுதுவதற்கான  உந்துதலோ ஊக்கமோ ஏற்பட்டல்தானே?!.  என்னுடைய ஒன்றரை வயது மகளைத் தாண்டி எதுவுமே என்னால் யோசிக்க முடியவில்லை.

இயற்கைக்கே எனது இந்த தேக்க நிலை பொறுக்கவில்லை போலும்!  ஒரு நில நடுக்கத்தின் மூலம் என்னை அசைத்துப் பார்த்துவிட்டது!  அதனால் தான் இந்தப் பதிவை இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.

நேற்று மதியம் இரண்டு மணியளவில் மதிய உணவு முடிந்து பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தேன்.  லேசாக தரை அதிர்வது போல் இருந்தது.  ஏதோ ஒரு பெரிய வாகனம் வேகமாக வீட்டை தாண்டிப் போகிறது என்று நினைத்துக்கொண்டிருந்த போதே, வீட்டின் கூரை மேலே திடு திடு என்று யாரோ ஓடுவது போல் ஓசை கேட்டது.  அதே சமையத்தில் வீடு பலமாக அதிர்ந்தது!  அப்போது  தான் அது நில நடுக்கம் என்று எனக்கு உரைத்தது.  அடுத்து என்ன செய்வதென்றே எனக்குப் புரியவில்லை.  என் மகள் இதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாமல் பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.  அவளை முதலில் தூக்கிக்கொண்டேன்.  பிறகு மாடிக்குச் சென்று பணம், லைசன்ஸ், பாஸ்போர்ட் போன்ற முக்கியமானவற்றை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஒடிவிடலாம் என்று தோன்றியது.  வீடு இடிந்துவிட்டால் என்ன செய்வது?  ஆங்கிலத் திரைப்படங்களில் வருவது போல் பூமி பிளந்து பாதாளத்தில் விழுந்துவிடுவோமோ? என்று மனதில் பல காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது.  ஆனால் எதுவுமே செய்யாமல் அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தேன்.  முப்பதே வினாடிகள் தான் இந்தக் கூத்து.  நில நடுக்கம் நின்று விட்டது!!!  அதற்குபின் நான் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர சில நிமிடங்கள் பிடித்தது!  என்னால் நம்பவே முடியவில்லை ஒரு நில நடுக்கத்தை என் வாழ்நாளில் சந்தித்தேன் என்பதை!

தொலைகாட்சியிலும், இணையத்திலும் "5.8 magnitude earth quake rocks Virginia, Washington DC area" என்று உடனே போடுவிட்டார்கள்.  அதைப் பார்த்துவிட்டு உறவிணர்கள், நண்பர்களெல்லாம் தொலைபேசியில் அழைத்து விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.  ஒவ்வொருவரிடமும் என் அனுபவத்தைச் சொல்லி சொல்லி நான் சோர்ந்துவிட்டேன்.

5.8 என்பது மிகப் பெரிய நில நடுக்கம் இல்லை என்றாலும் கூட, முதல் அனுபவம் என்பதால் எங்களை மிகவும் பயமுறுத்திவிட்டது.  மேலும் இதன் "after shock" வேறு எந்த நேரத்திலும் மீண்டும் வரலாம் என்கிறார்கள்.  இப்போதும் மனம் திக் திக் என்று திகிலாகவே இருக்கிறது.

இனிமேல் வாழ்க்கையில் இந்த இயற்கை பேரழிவு படங்களைப் பார்க்கவே கூடாது!

Friday, March 25, 2011

அப்பாவின் கனவுக் கன்னி


நேற்று முன் தினம், பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லரின் மறைவுச் செய்தி படித்தேன்.  அப்பா இருந்திருந்தால் மிகவும் வருந்தப்பட்டிருப்பார்.  ஏனென்றால் எலிசபெத் டெய்லர் அப்பாவின் கனவுக் கன்னி!

இவரின் திரைப்படங்களை அப்பா அந்த காலங்களில் மிகுந்த ஆர்வத்துடன் பார்ப்பார்.  அந்தத் திரைப்படங்களை எங்களிடம் அப்படியே சுவையாக விவரிப்பார்.  நேரில் பார்த்தது போலவே இருக்கும்.  முக்கியமாக, 60 களில் எலிசபெத் நடித்துக் கலக்கிய 'க்ளியோபாட்ரா' என்ற திரைப்படத்தைப் பற்றி அப்பா மிகவும் சிலாகித்துப் பேசியது நினைவில் இருக்கிறது.  அப்போதே ஒரு மில்லியன் டாலர் சம்பளம் கேட்டாராம் எலிசபெத் டெய்லர்!!!  நான் சமீபத்தில் தான் அந்தப் படத்தைப் பார்த்தேன்.  அப்பா மட்டுமல்ல, எலிசபெத் அந்தக் காலக் கட்டங்களில் பல ஆண்களின் கனவுக் கன்னியாக இருதிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

அப்பா இறந்துபோவதற்கு முன் அமெரிக்கா வந்திருந்த போது அவரை 'லாஸ் வேகாஸ்' அழைத்துச் சென்றிருந்தோம்.  அங்கிருந்த 'wax museum' சென்ற போது, அங்கே எலிசபெத் டெய்லரின் மெழுகுச் சிலை இருந்தது.  அப்பா ஆர்வத்துடன் அந்தச் சிலையின் அருகே நின்றுகொண்டு தன்னை புகைப்படம் எடுக்கச் சொன்னார்.  "உங்கள் கனவுக் கன்னி அல்லவா அவர்?  சும்மா தோளில் கைப்போட்டு போஸ் கொடுங்கள்" என்று நான் சொன்னேன்.  "சே சே அதெல்லாம் வேண்டாம்" என்று சொல்லி கூச்சத்துடன் எலிசபெத் டெய்லரின் சிலைக்கருகே நின்று போஸ் கொடுத்தார் அப்பா.

எலிசபெத் டெய்லரின் மறைவு, அப்பாவைப் பற்றிய இனிய நினைவுகளை கிளறிவிட்டது...