Tuesday, June 27, 2017

மாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்




எழுத்தாளர் பெருமாள் முருகனை எழுதுலகத்திலிருந்தே விலகிக்கொள்கிறேன் என்றும், என் படைப்புகள் அனைத்தையும் திரும்பப் பெறுகிறேன் என்றும் மனம் நொந்து சொல்ல வைக்கும் அளவு சர்ச்சையில் இழுத்துவிட்ட இந்தப் புத்தகத்தில் என்ன தான் அப்படி சர்ச்சை இருக்கிறது என்று படித்துப் பார்த்தேன். எனது கண்ணோட்டத்தையும் இங்கே பதிவு செய்கிறேன்.
மாதொருபாகன் கதைச் சுருக்கம்:
பொன்னாவும் காளியும் ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்திருக்கும் தம்பதியர். திருமணமாகி 12 வருடங்களாகியும் குழந்தை இல்லை என்பதைத் தவிர அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை. ஊர் வாயும், சமுதாயத்தின் ஈவிரக்கமற்ற எதிர்பார்ப்புகளும் அவர்களின் நிம்மதியைக் குலைக்கிறது. குழந்தை பெறுவதற்காக தன் மேல் திணிக்கப்பட்ட அத்தனை பரிகாரங்களையும் செய்கிறாள் பொன்னா. கசப்பான திரவியங்களைக் குடிக்கிறாள், அறுபது படி விளக்கு பூசை செய்கிறாள், ஆபத்தான மலைப்பாறையைச் சுற்றி வருகிறாள், எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொள்கிறாள்….அப்படியும் நல்லது நடக்கவில்லை. கடைசியாக எஞ்சி இருக்கும் ஒரே ஒரு தீர்வை நோக்கி அவள் தள்ளப்படுகிறாள். கணவன் காளி வேண்டாம் என்று பதறுகிறான். அம்மா, மாமியார், பாட்டி, மச்சினன் என்று எல்லோரும் அதே தீர்வையே வழிமொழிகிறார்கள். தன் மனைவி அதனை ஒத்துக்கொள்ள மாட்டாள் என்று காளி நம்புகிறான். ஆனால் விரக்தியின் எல்லையில் இருக்கும் அவளோ, “நீ சரின்னு சொன்னா, நான் செய்யிறேன்என்று சொல்ல, அவன் அதை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியாகிறான்.
அது என்ன அப்படி ஒரு தீர்வு என்பது தான் கதையின் உச்சகட்டம்! திருச்செங்கோட்டில் நடக்கும் கோவில் திருவிழாவின் 14 ஆம் நாளன்று சாமி மலையேறும் நாள். அன்று இரவு மட்டும் ஊரின் அத்தனைக் கட்டுபாடுகளும் தளர்த்தப்பட்டு ஆண்கள் எல்லாரும் சாமிகளாகக் கருதப்படுகிறார்கள். குழந்தை இல்லாத பெண்கள் அந்த இரவில் எந்த ஒரு ஆணுடனும் சேரலாம். அதன் மூலம் கிடைக்கும் குழந்தைகள் சாமி குழந்தையாக கருதப்படுகிறார்கள். பொன்னா இந்தத் திருவிழாவிற்குச் செல்கிறாள். தனக்கான சாமியைத் தேர்ந்தெடுக்கவும் செய்கிறாள். காளி அதை அறிந்து மனம் உடைந்து போகிறான். அந்த இரவின் மூலம் பொன்னாவிற்கு வேண்டுமானால் சாமி குழந்தை கிடைக்கலாம், ஆனால் காளியுடன் அவள் வாழ்ந்த அந்த பழைய மகிழ்ச்சியான வாழ்க்கையின் முடிவும் அந்த ஒரு இரவாகவே இருக்கக்கூடும்! கதை முடிவதும் அந்த இரவோடு தான்! அதற்குப் பின் என்ன நடக்கும் என்பதை வாசகர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறார் பெருமாள் முருகன்.
எனக்குப் பிடித்தவை:
1. ஒரு பூவரச மரத்தின் அடியில் தொடங்கும் கதை, அதே பூவரச மரத்தின் அடியிலே முடிகிறது.
2. திருச்செங்கோடு கிராமம், அதன் சுற்றுப்புறம், மலைக் கோவில்கள், அங்கு நடக்கும் திருவிழா, திருவிழாவிற்கு வண்டி கட்டிக்கொண்டு வரும் மக்கள்….இவற்றைப் பற்றி மிகச்
சுவாரசியமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. மலையின், உச்சி, அங்கிருக்கும் பாறை அமைப்புகள், மலை மண்டபங்களில் விற்கப்படும் கெட்டித் தயிரில் கலந்த கம்மஞ்சோறு….இவற்றைப் பற்றியெல்லாம் படிக்கப் படிக்க, அங்கே திருச்செங்கோட்டிற்கே நேரில் செல்லவேண்டுமென ஆர்வம் எழுகிறது.
3. ஊர்க்கிழவிகள் எல்லாம் காளி பொன்னா தம்பதிக்கு குழந்தை பிறக்காததற்கான காரணங்களாக அவர்களது முன்னோர்கள் செய்த பாவத்தை கதை கதையாகச் சொல்வது வேடிக்கை!
4. குழந்தையின்மை அல்லது மலட்டுத்தன்மையை ஒரு ஆணின் பார்வையில் நான் இதுவரை படித்ததோ கேட்டறிந்ததோ இல்லை. மாதொருபாகன் முழுவதும் காளிஎன்கிற கணவன் கதாபாத்திரத்தின் புலம்பலும் உணர்ச்சி வெளிப்பாடுமே! மனைவி பொன்னாஎந்த அளவு குழந்தை பெறாததற்கு வசவும் கிண்டலும் எதிர்கொள்கிறாளோ, அதே அளவு கணவனும்
எதிர்கொள்கிறான். ஊர் வாயிலிருந்து என்னைக் காப்பாற்றுஎன்று கடவுளிடம் மன்றாடும் ஒரு ஆண் கதாப்பாத்திரம் எனக்குப் புதிது. இப்படி ஒரு புதிய கோணத்தில் கதைச் சொல்லியிருக்கும் பெருமாள் முருகனுக்கு பாராட்டுக்கள்.
5. ”மலடிஎன்று குழந்தைப் பெறாத பெண்களை குறிக்கும் இந்தச் சொல் நமது தமிழ் சமுதாயத்தில் மிகப் பிரசித்தம். இந்த வார்த்தை வராத கதைகள் இல்லை, திரைப்படங்கள்
இல்லை, நிஜ வாழ்க்கையிலும் இந்த வார்த்தையை கேட்டுக் கேட்டு மனம் நொந்த பெண்கள் ஏராளம். ஆனால் குழந்தை பெற தகுதியற்ற ஆணுக்கான சொல் எதுவும் இருக்கிறதா? எனக்கு மாதொருபாகன் படிக்கும் வரை அது தெரியாது. காளிகதாபாத்திரம் வறடன்என்று ஊராரால் கேலி செய்யப்படுகிறான். தமிழ் அகராதியைப் பார்த்தபோது தான் தெரிந்தது, அப்படி ஒரு வார்த்தை உண்மையிலேயே இருக்கிறதென்று. வீரியமற்றவன்என்று பொருள். அடப்பாவிகளா! இப்படி ஒரு வார்த்தை இருப்பதையே இருட்டடிப்பு செய்துவிட்டார்களே, என்று தான் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. மீண்டும் ஒரு துணிச்சலான வெளிப்பாட்டிற்கு பெருமாள் முருகனுக்கு நன்றி!

என்ன சர்ச்சை?
இந்தக் கதையில் என் அறிவுக்குப் புலப்பட்ட ஒரே ஒரு நெருடல், திருமணமான பெண் கணவன் அல்லாத வேறொரு ஆணுடன் உறவு கொள்வது. என்னதான் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக ஒரு பெண் அப்படி செய்தாலும் கூட, அந்த ஊரில் அது வழக்கம் என்றாலும் கூட, என்ன ஒரு முற்போக்குப் பார்வையில் இதனை அனுகினாலும் கூட, ஒரு கணவனின் பார்வையில் தன் மனைவி வேறொரு ஆணுடன் உறவு கொள்வது என்பது மிகப் பெரும் மன வேதனை தான்.

கதையில் காளிக்கும் அவனது மச்சினன் முத்துவுக்கும் இது பற்றி நடக்கும் உரையாடல் மிக
முக்கியமானது. நீ உன் பெண்டாட்டியை யாரோ ஒருவனிடம் அனுப்புவியாஎன்று கேட்கும் காளியிடம், ”யாரோ ஒருவன் இல்லைடா, சாமிகிட்டதானே அனுப்புறோம், அது தப்பு இல்லைஎன்கிறான் முத்து. அதற்கு காளி, “என்னடா சாமி? நீயும் நானும் கூட தான் வயசுப் பசங்களா இருக்கும்போது அந்த ராத்திரியில சாமியா போயிருக்கோம். அப்ப நம்மளை சாமியாவா நினைச்சிகிட்டோம்? எந்த அழகான பொண்ணு கிடைப்பான்னு தானே அலஞ்சிக்கிட்டு இருந்தோம்?” என்பான். காளியின் இந்த வார்த்தைகள் சாமியின் பெயரால் நடக்கும் அந்த ஊர் வழக்கத்தின் பின் உள்ள போலித்தனத்தையும், மூட நம்பிக்கையையும் கிழித்துத் தொங்கவிடுகிறது!
ஒரு ஆபத்தான விளிம்பில் பெருமாள் முருகன் மிகக் கவனமாக நடந்திருக்கிறார். கொஞ்சம் தவறினாலும் கதை விரசமாகியிருக்கும். பாராட்டுக்குறிய எழுத்துத் திறமை! கதையில் சில கொச்சையான வார்த்தைகள் கூட, படிப்பதற்கு சற்று சங்கடமாக இருந்தாலும், அவை வட்டார வழக்கில் இருப்பவை தான். அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டு நாள் தோறும் ஒரு முறையாவது அந்த “F” வார்த்தையை கேட்டுக்கொண்டிருக்கும் எனக்கு, இந்தக் கதையில் வரும் சொல்லாடல் பெரும் அதிர்ச்சியைத் தரவில்லை.
சில அறநெறி சார்ந்த நெருடல்கள் இந்தக் கதையில் இருக்கின்றனவே ஒழிய சாதி மதம் சார்ந்த சர்ச்சை எழுந்தது எனக்கு வியப்பாகவே இருக்கிறது. என்னைப்பொறுத்த வரையில், ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன் ஒரு ஊரில் வாழ்ந்த மக்களைப் பற்றிய வாழ்க்கையை எட்டிப் பார்க்கும் ஒரு சாளரம் தான் இந்த மாதொருபாகன்கதை!