Wednesday, August 24, 2011

முப்பது வினாடி திகில்! - நேற்று நடந்தது...

திகிலான ஆங்கிலத் திரைப்படங்கள் எனக்குப் பிடிக்கும்.  அதிலும், இயற்கை பேரழிவு பற்றிய "Volcano", "Earthquake", "Airport", "Day After Tomorrow" போன்ற படங்கள் ரொம்பவே பிடிக்கும்.  இதுவரை திரையில் பார்த்து அனுபவித்த அந்த "திகில்" உணர்வை நேற்று நேரிலேயே அனுபவித்து விட்டேன்!!!

என்ன நடந்தது?

நீண்ட நாட்களாக எதுவும் வலைப்பதிவில் எழுதவில்லை.  ஏதாவது எழுதலாம் என்று தினமும் நினைப்பேன், ஆனால் எழுதுவதற்கான  உந்துதலோ ஊக்கமோ ஏற்பட்டல்தானே?!.  என்னுடைய ஒன்றரை வயது மகளைத் தாண்டி எதுவுமே என்னால் யோசிக்க முடியவில்லை.

இயற்கைக்கே எனது இந்த தேக்க நிலை பொறுக்கவில்லை போலும்!  ஒரு நில நடுக்கத்தின் மூலம் என்னை அசைத்துப் பார்த்துவிட்டது!  அதனால் தான் இந்தப் பதிவை இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.

நேற்று மதியம் இரண்டு மணியளவில் மதிய உணவு முடிந்து பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தேன்.  லேசாக தரை அதிர்வது போல் இருந்தது.  ஏதோ ஒரு பெரிய வாகனம் வேகமாக வீட்டை தாண்டிப் போகிறது என்று நினைத்துக்கொண்டிருந்த போதே, வீட்டின் கூரை மேலே திடு திடு என்று யாரோ ஓடுவது போல் ஓசை கேட்டது.  அதே சமையத்தில் வீடு பலமாக அதிர்ந்தது!  அப்போது  தான் அது நில நடுக்கம் என்று எனக்கு உரைத்தது.  அடுத்து என்ன செய்வதென்றே எனக்குப் புரியவில்லை.  என் மகள் இதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாமல் பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.  அவளை முதலில் தூக்கிக்கொண்டேன்.  பிறகு மாடிக்குச் சென்று பணம், லைசன்ஸ், பாஸ்போர்ட் போன்ற முக்கியமானவற்றை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஒடிவிடலாம் என்று தோன்றியது.  வீடு இடிந்துவிட்டால் என்ன செய்வது?  ஆங்கிலத் திரைப்படங்களில் வருவது போல் பூமி பிளந்து பாதாளத்தில் விழுந்துவிடுவோமோ? என்று மனதில் பல காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது.  ஆனால் எதுவுமே செய்யாமல் அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தேன்.  முப்பதே வினாடிகள் தான் இந்தக் கூத்து.  நில நடுக்கம் நின்று விட்டது!!!  அதற்குபின் நான் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர சில நிமிடங்கள் பிடித்தது!  என்னால் நம்பவே முடியவில்லை ஒரு நில நடுக்கத்தை என் வாழ்நாளில் சந்தித்தேன் என்பதை!

தொலைகாட்சியிலும், இணையத்திலும் "5.8 magnitude earth quake rocks Virginia, Washington DC area" என்று உடனே போடுவிட்டார்கள்.  அதைப் பார்த்துவிட்டு உறவிணர்கள், நண்பர்களெல்லாம் தொலைபேசியில் அழைத்து விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.  ஒவ்வொருவரிடமும் என் அனுபவத்தைச் சொல்லி சொல்லி நான் சோர்ந்துவிட்டேன்.

5.8 என்பது மிகப் பெரிய நில நடுக்கம் இல்லை என்றாலும் கூட, முதல் அனுபவம் என்பதால் எங்களை மிகவும் பயமுறுத்திவிட்டது.  மேலும் இதன் "after shock" வேறு எந்த நேரத்திலும் மீண்டும் வரலாம் என்கிறார்கள்.  இப்போதும் மனம் திக் திக் என்று திகிலாகவே இருக்கிறது.

இனிமேல் வாழ்க்கையில் இந்த இயற்கை பேரழிவு படங்களைப் பார்க்கவே கூடாது!

7 comments:

senthil said...

"இயற்கைக்கே எனது இந்த தேக்க நிலை பொறுக்கவில்லை போலும்! ஒரு நில நடுக்கத்தின் மூலம் என்னை அசைத்துப் பார்த்துவிட்டது! அதனால் தான் இந்தப் பதிவை இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்."

இது உண்மை தான்... எதுவும் எழுதக் கூடாது என்ற நேர்த்திக் கடன் என்று நினைத்துக் கொண்டேன்...

"என் மகள் இதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாமல் பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். அவளை முதலில் தூக்கிக்கொண்டேன். பிறகு மாடிக்குச் சென்று பணம், லைசன்ஸ், பாஸ்போர்ட் போன்ற முக்கியமானவற்றை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஒடிவிடலாம் என்று தோன்றியது. வீடு இடிந்துவிட்டால் என்ன செய்வது? "

குழந்தைக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் இது தான். நாம் உலகத்தைப் பொருளாகப் பார்க்கிறோம். குழந்தை உலகத்தை இயல்பாகப் பார்க்கிறது...

வழக்கம் போல் நிகழ்ச்சியினை நன்றாகப் பதிவு செய்துள்ளீர்கள்...
நேர்த்திக் கடன் தான் முடிவுற்றதே, இனி தங்களிடமிருந்து பதிவுகளை எதிர்பார்க்கலாம் தானே...

Ram said...

சகோதரி,
இறைவன் அருளால் எதுவும் நேராது .
கவலை வேண்டாம்....

தாரா said...

Senthil & Ram: Thanks!

Thara.

ரவியா said...

உணர்வு பூர்வமான பாத்தத சம்பவங்களையே எழுதிகிறிர்கள்.: அப்பா பிரசவம் மற்றும் இதைப்போல் ...

MANIKANDAN said...

Hi sister, Fortunately i redirect to your blog and in last days i had long free time in my office and slowly read your most of articles.All is good ( Particularly your experiences in the time of pregnancy),Honestly saying that This article really help me to understand my wife better.

Keep writing.

Good work

Regards
Mani

தாரா said...

Manikandan,

Thanks a lot for reading my posts. And I cannot say how much happy I feel that one of my article helped you understand your wife better. This is a great honour for me. Thanks again.

Thara.

MANIKANDAN said...

Keep writing ... & i will wait for your next share...

Regards
Mani