நேற்று முன் தினம், பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லரின் மறைவுச் செய்தி படித்தேன். அப்பா இருந்திருந்தால் மிகவும் வருந்தப்பட்டிருப்பார். ஏனென்றால் எலிசபெத் டெய்லர் அப்பாவின் கனவுக் கன்னி!
இவரின் திரைப்படங்களை அப்பா அந்த காலங்களில் மிகுந்த ஆர்வத்துடன் பார்ப்பார். அந்தத் திரைப்படங்களை எங்களிடம் அப்படியே சுவையாக விவரிப்பார். நேரில் பார்த்தது போலவே இருக்கும். முக்கியமாக, 60 களில் எலிசபெத் நடித்துக் கலக்கிய 'க்ளியோபாட்ரா' என்ற திரைப்படத்தைப் பற்றி அப்பா மிகவும் சிலாகித்துப் பேசியது நினைவில் இருக்கிறது. அப்போதே ஒரு மில்லியன் டாலர் சம்பளம் கேட்டாராம் எலிசபெத் டெய்லர்!!! நான் சமீபத்தில் தான் அந்தப் படத்தைப் பார்த்தேன். அப்பா மட்டுமல்ல, எலிசபெத் அந்தக் காலக் கட்டங்களில் பல ஆண்களின் கனவுக் கன்னியாக இருதிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
அப்பா இறந்துபோவதற்கு முன் அமெரிக்கா வந்திருந்த போது அவரை 'லாஸ் வேகாஸ்' அழைத்துச் சென்றிருந்தோம். அங்கிருந்த 'wax museum' சென்ற போது, அங்கே எலிசபெத் டெய்லரின் மெழுகுச் சிலை இருந்தது. அப்பா ஆர்வத்துடன் அந்தச் சிலையின் அருகே நின்றுகொண்டு தன்னை புகைப்படம் எடுக்கச் சொன்னார். "உங்கள் கனவுக் கன்னி அல்லவா அவர்? சும்மா தோளில் கைப்போட்டு போஸ் கொடுங்கள்" என்று நான் சொன்னேன். "சே சே அதெல்லாம் வேண்டாம்" என்று சொல்லி கூச்சத்துடன் எலிசபெத் டெய்லரின் சிலைக்கருகே நின்று போஸ் கொடுத்தார் அப்பா.
எலிசபெத் டெய்லரின் மறைவு, அப்பாவைப் பற்றிய இனிய நினைவுகளை கிளறிவிட்டது...