பதிவு எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டது. கொஞ்சம் "warm up" செய்து கொண்டு 2011 ஆம் ஆண்டில் இருந்து மீண்டும் முழு மூச்சாக எழுதத் தொடங்கலாம் என்று திட்டம்.
நவம்பர் இறுதியில் "தாங்ஸ் கிவிங்' முதல் இன்று வரை விருந்து, சாப்பாடு என்று சுவையாக, அதே சமையம் சற்று மந்தமாகப் போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை. சென்ற வாரம் சில நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்த நேரத்தில் 'மன்மதன் அம்பு' வெளியாக, எல்லாரும் கும்பலாகச் சென்றோம். என்னால் அரை மணி நேரம் கூட உட்கார முடியவில்லை! படம் முழுக்க த்ரிஷாவையும், சங்கீதாவையும் பின் தொடர்ந்து, செல் போன் மூலம் மாதவனுக்கு செய்தி சொல்லுகிறார் கமல்....அறுத்துக் கொட்டிவிட்டார்.
சமீபத்தில் ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தோம். தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த மணமகள் இல்வாழ்க்கைத் தொடர்பான திருக்குறள்களைத் தமிழில் படிக்க, அமெரிக்க மணமகன் அந்தக் குறள்களை ஆங்கிலத்தில் படித்தது வித்தியாசமான முயற்சியாக இருந்தது. திருமண வரவேற்பு மேசையில், சரம் சரமாக மல்லிகை பூக்களைப் பார்த்து வியப்பாக இருந்தது. மதுரையில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்தார்களாம்!!
வேறு ஒன்றும் இப்போதைக்கு செய்தி இல்லை. கூடிய விரைவில் ஒரு சுவையான பதிவில் சந்திக்கிறேன்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!