அப்பா இல்லாத ஒரு வாழ்க்கையை வாழக் கற்றுக்கொண்டிருக்கிறேன். சிரமமாக இருக்கிறது.
அவர் இன்னமும் திருச்சியில் அவர் வீட்டில் இருப்பது போலவே உணர்கிறேன். இன்னமும் சில மின் அஞ்சல்களில் அவரது முகவரியையும் என்னை அறியாமல் சேர்த்துவிடுகிறேன். வார இறுதி வந்தால் திருச்சிக்கு தொலைபேச வேண்டும் என்கிற பழக்கத்தை மறக்கமுடியவில்லை.
என் மகளைப் பார்க்கும் போதெல்லாம் ஆதங்கமாக இருக்கிறது. அவளைத் தூக்கி வளர்க்க, கதைகள் சொல்ல, விளையாட என் அப்பா போல் வேறு ஒருவர் கிடைப்பாரா? அவரை இனி புகைப்படத்தில் மட்டும் தானே அவளுக்குக் காட்ட முடியும்?!
இதுவரை நான் சாதாரணமாகப் பழகிய சித்தப்பாவின்(அப்பாவின் தம்பி) மேல் இப்போது எனக்குப் பாசம் அதிகரித்திருக்கிறது...அவர் அப்பாவின் எஞ்சியிருக்கும் உயிர் அல்லவா?
சிறு வயதில் அப்பா பயணம் சென்றாரென்றால் எனக்கு ஒரே சந்தோசமாக இருக்கும். ஏனென்றால் திரும்பி வரும்போது எனக்கு நிறைய உடைகள், விளையாட்டுப் பொருட்களெல்லாம் வாங்கிவருவார். எப்போது அடுத்தப் பயணம் போவார் என்று நான் ஆவலாகக் காத்திருப்பேன்.
ஆனால் இப்போது அவரது பயணங்கள் முடிவடைந்துவிட்டன. அவர் மிகவும் நேசித்த திருச்சி வீட்டை விட்டு, எங்களையெல்லாம் விட்டு அருகில் உள்ள மின் தகனம் செய்யப்பட்ட இடத்திற்கு அவர் எடுத்துச்செல்லப்பட்டதே அவரது இறுதிப் பயணம்!
இனி வரும் நாட்களில் அவரது நினைவுகளிலும், ஆசீர்வாதத்தோடும் எனது வாழ்க்கைத் தொடரும்...