சென்ற பதிவின் தொடர்ச்சி...
என் மகள் பிறந்தவுடன் அவளை தாதிப் பெண்கள் அதே அறையின் மற்றொரு பக்கம் எடுத்துச் சென்று சில பரிசோதனைகள் செய்துகொண்டிருந்தார்கள். என் கணவர் அருகே நின்று பார்த்துக்கொண்டிருந்தார். என் மனம் முழுக்க ஒரே படபடப்பு! குழந்தைக்கு எல்லா பரிசோதனைகளும் நல்ல விதமாக முடியவேண்டுமே என்று. என் கணவர் அங்கிருந்து சைகை மூலம் "குழந்தை நன்றாக இருக்கிறாள்" என்று சொன்னார். பின்னரே என் மனம் அமைதியடைந்தது.
மாலை மணி 6 அகியது. டெபி தன் வேலை நேரம் முடிந்து வீட்டுக்குக் கிளம்புகிறேன் என்றாள். அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு என்னென்னவோ சொல்லவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அசதி மிகுதியால் வெறும் "நன்றி" என்று மட்டுமே சொல்ல முடிந்தது. நான் குழந்தையை நல்லபடியாகப் பெற்றெடுக்க உறுதுணையாக இருந்தவள் அல்லவா அவள்?! டெபி எனக்கு வாழ்த்துக்கள் சொல்லி விடைபெற்றுச் சென்றுவிட்டாள்.இனி அவளை நான் பார்க்கப்போவதில்லை. ஆனால் அவளை நான் என்றென்றும் மறவேன்.
காலையிலிருந்து தண்ணீர் குடிக்காததால் எனக்கு தொண்டை மிகவும் வரண்டிருந்தது. "கொஞ்சம் தண்ணீர் கொடுங்களேன்" என்று தாதிப் பெண்களிடம் கேட்டேன். தண்ணீரென்ன, பழரசமே இனி நீ குடிக்கலாம். என்ன பழரசம் வேண்டும்?" என்று கேட்டார்கள். நான் பொறுமையிழந்து "ஏதாவது கொடுங்கள்" என்றேன். ஆப்பிள் பழரசம் கொடுத்தார்கள். எனக்குப் பொதுவாக ஆப்பிள் பழரசம் பிடிக்காது. ஆனால் அன்று அரக்கப் பரக்க அந்தப் பழரசத்தை ஒரு வினாடியில் குடித்துவிட்டு, "இன்னும் வேண்டும்" என்றேன். அடுத்த பத்து வினாடிகளுக்குள் மேலும் இரண்டு தம்ப்ளர் ஆப்பிள் பழரசத்தைக் குடித்த பின்னரே எனக்கு தாகம் சற்று அடங்கியது.
பழரசம் உள்ளே சென்றபின் சற்று தெம்பு வந்தது. நான் படுத்திருந்த இடத்தில் ஒரே குறுதி மயம். என் உடல் முழுக்க ஈரமாக உணர்ந்தேன். எப்போது குளித்து உடைமாற்றி சுத்தமாகப் போகிறோம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது, தாதிப்பெண் உருவில் "ஜீனா"(Gina) என்று மற்றொரு தேவதை வந்தாள். "I am going to clean you up" என்றாள். சத்தியமாகச் சொல்கிறேன். என் தாய் கூட என்னை இந்த அளவு சிரத்தை எடுத்து அறுவெறுப்பு பார்க்காமல் சுத்தம் செய்திருக்க மாட்டார்.
அடுத்த அரைமணி நேரத்தில் நான் சுத்தமாக, வெறு புதிய உடை அணிந்து படுக்கையில் படுத்திருந்தேன். அதற்குள் குழந்தையையும் சுத்தம் செய்து கம்பளியில் பொட்டலம் போல் சுற்றி என் கணவரிடம் கொடுத்திருந்தார்கள். என் கணவர் அந்தப் பொட்டலத்தை என்னிடம் கொடுத்தார். "Little Bundle of Joy" என்பது அதுதானோ?!
அவள் முகம் மட்டும் தான் கம்பளிக்கு வெளியே தெரிந்தது. கண்களை விழித்து என்னைப் பார்த்தாள். நான் அவளைப் பார்த்தேன். அந்த கணத்தில் எனக்குத் தாய்ப்பாசம் பொங்கி வரவில்லை...அவளைக் கட்டி அணைத்து உச்சிமுகரத் தோன்றவில்லை...ஒரு வித பயம் தான் என் மனதில் தோன்றியது. திடீரென்று ஒரு புத்தம் புதிய உயிரைத் தூக்கி கையில் கொடுத்துவிட்டார்களே...எப்படி பார்த்துக்கொள்து? எப்படி வளர்ப்பது? என்று மனம் அடித்துக்கொண்டது. அந்த பயமெல்லாம் மாறி ஒரு பொறுப்பான தாயாக மாற எனக்கு சில நாட்கள் ஆனது.
இந்தப் பதிவை எழுதிமுடிக்கும் போது என் மகள் 5 மாதக் குழந்தை. சென்ற வருடம் இதே சமையம் எனக்கு முதல் ultra sound scan செய்து பார்த்தபோது அந்தத் திரையில் ஒரு சிறிய கரும்புள்ளி போல் தெரிந்த இவள், இன்று கை கால்களை ஆட்டிக்கொண்டு பொக்கை வாய் திறந்து என்னைப் பார்த்துச் சிரிப்பதைப் பார்த்தாள் பிரமிப்பாக இருக்கிறது.
பெண்மை வெல்க! தாய்மை வாழ்க!
வரும் மே 9ஆம் தேதி அன்னையர் தினம். அனைத்துத் தாய்மார்களுக்கும், தாய்குலத்திற்கும் எனது வாழ்த்துக்கள்!