
ஒன்பதாவது மாதத்தில் தான் எல்லாச் சிரமங்களும் வந்து சேர்கிறது! படுக்கையில் சரியாகப் படுக்க முடியவில்லை. பக்கவாட்டில் புரண்டு படுப்பது சிரமமாக இருக்கிறது. பாதங்கள் சற்றே வீங்கிக்கொண்டன. நடை தளர்ந்தது. மூச்சு வாங்கியது. எப்படா இந்தப் பாரத்தை இறக்கி வைப்போம் என்று ஒரு சலிப்பு ஏற்பட்டது. இருந்தாலும், இன்னும் சில நாட்களில் இந்தப் பூசிய வயிறு இருக்காதே என்று ஒரு வருத்தமும் ஏற்பட்டது. இந்த வயிற்றை வைத்து எத்தனை காரியம் சாதித்துக்கொள்ள முடிந்தது?
நன்றாகக் காலை நீட்டி உட்கார்ந்த இடத்திலிருந்தே கணவரை தேநீர் போடவும், சாப்பாடு எடுத்து வைக்கவும் ஏவ முடிந்தது. அலுவலகத்தில் கைத் தவறி பேனாவைக் கீழே போட்டுவிட்டால் ஓடி வந்து மற்றவர்கள் எடுத்துக்கொடுப்பார்கள். முன் பின் தெரியாதவர்கள் கூட 'ஓ! எத்தனாவது மாதம்?' என்றும் 'எப்போது பிரசவம்?' என்றும் அன்போடு விசாரிப்பார்கள். நகர ரயிலில் அல்லது பேருந்தில் சென்றால் எழுந்து உட்கார இடம் கொடுப்பார்கள்! தோழிகளெல்லாம் உணவு தயாரித்து எடுத்து வந்து கொடுத்தார்கள்...இந்தச் சலுகைகளெல்லாம் இன்னும் சில நாட்கள் தான்!
நாட்கள் நகர நகர கணவரின் கண்களில் ஒரு கலவரம் தெரிந்தது. நண்பர்களெல்லாம் அவரைப் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். "அவ்வளவுதான். இனிமே உங்க ஆட்டம் க்ளோஸ். ஜாலியா உங்க விருப்பப்படி எதுவும் செய்யமுடியாது. நினைத்தபோது எங்கும் கிளம்பமுடியாது. உங்கள் நண்பர்களோடு நேரம் செலவிட முடியாது. சினிமா பார்க்கமுடியாது..." என்றெல்லாம் சொல்லியதில் அவருக்கு கவலை தொற்றிக்கொண்டது. என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. 10 வருடங்களாக இருவராக மட்டுமே இருந்துவிட்டு, இப்பொழுது இன்னொரு ஜீவனை வாழ்க்கையில் இணைப்பதென்றால் அது ஒரு பெரிய சவால் தான். ஆனால் அது ஒரு மிக அவசியமான சுவையான சவாலாக இருக்கப்போகிறது. போகப் போக என் கணவரும் அதனை உணர்வார் என்று நான் நம்புகிறேன்.
குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீகள் என்று சிலர் கேட்டதும் 'பக்' கென்று இருந்தது. ஆர்வத்துடன் நல்ல தூய தமிழ்ப் பெயர் வைக்கவேண்டும் என்று சில நாட்கள் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தோம். ஒன்றும் கிட்டாமல் போகவே நடுவில் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இப்போது இன்னும் 10 நாட்களே பிரசவத்திற்கு இருக்கும் தருவாயில் மீண்டும் பெயர் வேட்டை தொடங்கியிருக்கிறது.
தூய தமிழ்ப் பெயர்களை நவீனப்படுத்துவது பற்றி நண்பர்களுடன் சுவையான விவாதங்களும் கருத்துப் பறிமாற்றங்களும் நடந்தன. அதனைத் தொகுத்து அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.