சென்னை வந்தாகிவிட்டது. வயதான உடல் நிலை சரியில்லாத அப்பா, அம்மா, இரண்டு விவரம் தெரியாத பெண்கள். இவர்கள் சென்னையில் இருந்தால் எப்படி இருக்கும் :-) தெரிந்தவர்கள் சென்னையில் நிறைய பேர் இருந்தாலும், நம்மால் முடிந்தவரை நம் தேவைகளை நாமே கவனித்துக்கொள்ளவேண்டும் என்பது எங்கள் குடும்பத்தில் அப்பா விதைத்த கொள்கை.
மறுநாள் மலர் மருத்துவமனையில் அப்பாவுக்கு இரண்டாவது chemo சிகிச்சை. நேரத்திற்கு மலர் மருத்துவமனை சென்றுவிட்டொம். சில நிமிடங்களில் அப்பாவுக்கான அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கே சென்ற சில நிமிடங்களில் தொலைபேசி அடித்தது. எடுத்தால் மருத்துவமனையின் டயட்டிஷியன் பேசினார். அப்பாவுக்கு என்ன வகையான உணவு தேவை என்பதைக் கேட்டுக்கொண்டார். அடுத்த 30 நிமிடங்களில் சூடான ஹாட் பாக்கில் உணவு வந்தது. அப்பா சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் கழித்து மருத்துவர் வந்து IV ஏற்றிவிட்டுப் போனார். அப்பா அப்படியே கண் மூடித்தூங்க, நான், அக்கா, அம்மா மூவரும் பேசிக்கொண்டிருந்தோம். மூன்று மணி நேரங்கள் சென்றபின் அப்பாவை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டோம். அயர்ச்சி தவிர வேறு எந்தப் பிரச்சினையும் அன்று இருக்கவில்லை அவருக்கு. மறுநாள் காலை அவர்களைக் காரில் ஏற்றி திருச்சிக்கு அனுப்பி வைத்தோம். அப்பாவின் முகத்தில் எங்களை மறுபடியும் பார்ப்போமா என்கிற ஏக்கமும் சோகமும் தெரிந்தது.
அன்றிரவு எனக்கும் அக்காவுக்கும் அமெரிக்கா செல்ல விமானம். அக்கா ஏர் இந்தியா, நான் துபாய் வரை இந்தியன் ஏர்லைன்ஸ். விமான நிலையத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் கெளண்டரில் கூட்டமே இல்லை. சந்தேகத்துடன் அங்கே உட்கார்ந்திருந்த அதிகாரிகளை அனுகினேன்.
"எங்கே போகிறீர்கள்?"
"துபாய் சென்று அங்கிருந்து வாசிங்டன் டி.சி"
"துபாயில் உங்கள் இணைப்பு விமானம்?"
"யுனைட்டட் ஏர்லைன்ஸ்"
"இந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நீங்கள் சென்றால் அந்த யுனைட்டட் விமானத்தை பிடிக்க முடியாது. நீங்கள் இந்தியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் சென்று பேசுங்கள். உங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வார்கள்" என்றார்.
நான் குழம்பிப் போய் அங்கிருக்கும் இந்தியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கே ஒரு அதிகாரியைச் சுற்றி பல பயணிகள் நின்று படபடப்பாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் தொலைபேசியில் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார்கள். நான் சற்று காத்திருந்து கூட்டம் கலைந்தபின் அந்த அதிகாரியிடம் போய் நின்றேன். அவர் என்னைப் பரிதாபமாகப் பார்த்து "இந்தியன் ஏர்லைன்ஸ் - யுனைட்டட் ஏர்லைன்ஸ் இணைப்பா? Makemytrip.com மூலம் டிக்கட் வாங்கினீங்களா? அவர்கள் ஒரு பெரிய தவறு செய்துவிட்டார்கள். உங்களுக்கு தவறான இணைப்பு விமானத்தை கொடுத்திருக்கிறார்கள். நீங்க உங்க ஏஜண்ட்டைக் கூப்பிட்டு எமிரேட்ஸ் விமானத்தில் டிக்கட் போடச்சொல்லுங்க. நாளை காலை விமானம் இருக்கு" என்றார்.
நான் இடிந்து போனேன். "இன்று நான் துபாய் செல்ல வழி இல்லையா" என்றேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்தார்.
"மேடம், இந்த இந்தியன் ஏர்லைன்ஸில் நீங்க துபாய் போனால், யுனைட்டட் ஏர்லைன்ஸைப் பிடிக்க முடியாது. மறுநாள் இரவு செல்லும் அடுத்த யுனைட்டட் ஏர்லைன்ஸில் தான் நீங்கள் செல்ல முடியும். நீங்க ஒரு பெண், மாசமா இருக்கீங்க போல தெரியுது. இரவு நேரத்தில் துபாயில் தனியா போய் எப்படி இருப்பீங்க? அதனால் இன்று இரவு சென்னையில் தங்கிவிட்டு, நாளை காலையில் புறப்படும் எமிரேட்ஸ் விமானத்தில் டிக்கட் வாங்கித்தரச் சொல்லி உங்க ஏஜண்ட்டிடம் பெசுங்கள்" என்றார்.
வெளியில் வந்து Makemytrip.com ஏஜண்ட்டை தொலைபேசியில் அழைத்து அழாத குறையாக என் நிலமையை விளக்கினேன். அவர்களும் உடனே எனக்கு எமிரேட்ஸில் டிக்கட் போட்டார்கள். மறுநாள் காலை 9 மணிக்கு விமானம். வேறு வழியில்லாமல் அன்றிரவு உறவினர் வீட்டில் தங்கிவிட்டு, மறுநாள் விமானம் ஏறி ஒரு நாள் தாமதமாக வாசிங்டன் டிசி வந்து சேர்ந்தேன்!
அன்று எனக்கு Makemytrip.com முடன் சண்டை போட சக்தியில்லை. ஆனால் ஒரு நாள் இருக்கிறது அவர்களுக்கு என்று நினைத்துக்கொண்டிருந்தேன். சில நாட்களூக்கு முன் தான் காட்டமாக ஒரு கடிதம் அவர்களூக்கு எழுதி அனுப்பினேன். இப்படியா கவனக் குறைவாக இருப்பார்கள்?!
எப்படியோ, அப்பாவைப் பார்த்துவிட்டு வந்தது மனதிற்கு திருப்தியாக இருந்தது. இந்தப் பதிவை நான் எழுதி முடிக்கும்போது, அப்பா தனது ஆறாவது கீமோவையும் முடித்துவிட்டார். வயிற்றுப் போக்கு, உடம்பில் வலி போன்ற பக்க விளைவுகள் இருப்பதாகச் சொன்னார். கீமோவினால் ஓரளவு முன்னேற்றம் தெரிவதாகவும், புற்று நோய் செல்கள் சற்று கரைந்திருப்பதாகவும் மருத்துவர் சொன்னார். அப்பாவின் ஆயுளில் சில நாட்களேனும் கூடியிருந்தால் அது எங்களுகெல்லாம் மகிழ்ச்சியே.
முற்றும்.